Tuesday, 30 January 2018

உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்...!!!

இப்படி ஒரு அருமையான தொடர்பதிவை உருவாக்கிய ‘அவர்கள் உண்மைகள்’ மதுரைத்தமிழனுக்கும் இந்தத் தொடர்பதிவில் இணைவதற்கு அழைப்பு விடுத்த திருமதி. பானுமதி வெங்கடேஸ்வரனுக்கும் என் அன்பு நன்றி!!




இந்தப்படத்தின் வரிகளை கவனித்தீர்களா? எந்த ஒரு நல்ல ஆலோசனையும் அது நம்மிடமே தங்கினால் அதில் எந்தவிதப்பயனுமில்லை. அது அடுத்தவரைச் சென்றடையும்போது தான் அர்த்தமாகிறது!
உண்மை தான்! நம் அனுபவம் அடுத்தவருக்குப் பயன்பட வேண்டும்.

காமாட்சி அம்மா சொன்னது போல இது வயதானவர்களின் நினைவலைகள் தான்! ஆனாலும் கடந்து சென்ற காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் அடுத்தவர்கள் நமக்குச் சொன்ன ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளும்போது இவைகள் கூட ஒரு விதத்தில் அடுத்தவருக்கான ஆலோசனைகள் தானோ என்று தோன்றுகிறது.




என் தந்தை காவல் அதிகாரியாக வேலை பார்த்ததால் கண்டிப்பாகவும் அவ்வப்போது பாசம் காட்டுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். திரைப்படப்பாடல்களையெல்லாம் அத்தனை சுலபமாக ரேடியோவில் கேட்டு ரசித்து விட முடியாது. அதே சமயம் புத்தகங்கள் படிக்கவும் நூலகம் செல்லவும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். புத்தகங்கள் தான் என்னை 15 வயதிலிருந்து நெறிப்படுத்தியவை, பதப்படுத்தியவை, விசாலப்படுத்தியவை என்று சொல்ல வேண்டும். நா.பார்த்தசாரதியும் அகிலனும் ஷெல்லியும் கீட்ஸும் கூடவே வாழ்க்கையில் வந்தார்கள். உண்மை, நேர்மை, கருணை, தூய்மையான அன்பு, விசால மனப்பான்மை, அழகான கற்பனைகள், எழுத்தில் நேசம் என்று நிறைய கற்றுத்தந்தார்கள்.

11 வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்க ஆரம்பித்த போது அதன் அருமை தெரியவில்லை. சிறு வயது காரணமாக இருக்கலாம். அல்லது அதன் அருமை பெருமைகளை யாரும் சொல்லிக்கொடுத்து புரிய வைக்காமலிருந்திருக்கலாம். அதன் பின் வெகு நாட்கள் கழித்து, கல்லூரிப் பருவத்தில் சீனியர் மாணவி ஒருவர் என்னைப்பாட அழைத்த போது ‘ காகித ஓடம், கடலலை மேலே’ பாட்டைப் பாடச்சொல்ல, நானும் பாடினேன். மிகவும் அவலமான சோகப்பாடல் அது. உடனேயே அந்தப்பெண் அழ ஆரம்பித்தார்கள். நான் உடனேயே பாடலை நிறுத்த, “ வேண்டாம், தொடர்ந்து பாடு..’ என்று சொல்லி பாடல் முடியும் வரை கண்ணீர் வழிய கண் மூடி ரசித்தவாறே பாடலைக் கேட்டார்கள். அப்போது தான் சங்கீதத்தின் மகத்துவம் எனக்குப்புரிய ஆரம்பித்தது. இப்போதும்கூட ராக ஆலாபனைகளையும்  அருமையான பாடல்களையும் ரசித்து மெய் மறக்கும் சமயங்களில் என் பெற்றோருக்கும் என் திறமைகளை அனைத்தையும் ஊக்குவித்து வழி நெடுக வளர்த்த என் கணவருக்கும் மானசீகமாக மனதில் அவ்வப்போது நன்றி சொல்லிக்கொள்வேன்.

சின்ன வயதில் மழைத்தூரலில் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, சற்று தூரத்தில் தீக்கங்குகளுடன் இடி விழுவதைப்பார்த்து விட்டேன். வீட்டில் உடனே கொழுமோர் காய்ச்சிக் கொடுத்தும் தைரியம் சொல்லியும் என் பயம் அடங்கவேயில்லை. எதற்கெடுத்தாலும் பயப்பட ஆரம்பித்தேன். மழை பெய்ய ஆரம்பித்தால் போதும், உடனேயே ஒரு போர்வையினுள் புகுந்து படுத்துக்கொள்வேன். போலீஸ் அதிகாரியான என் தந்தைக்கு இந்த விஷயத்தில் மனத்தாங்கல் அதிகம். ஆனால் இளம் வயதில் ஒரு கிராமத்தில் அரசு ஆசிரியையாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். பஸ் வசதி, டாய்லட் வசதி எதுவுமே இல்லாத அந்த கிராமத்தில் இரவு நேரங்களில் மின்னல், மழை நடுவே ஒரு பெரிய தோப்புப்பக்கமாகத்தான் போக வேண்டும். பயத்தை அனுபவம் தைரியமாக மாற்றியது. போகப்போக, சுடுகாடு வழியே, உயிரற்ற உடல்கள் எரியும் அந்தி மயங்கிய நேரத்தில் கூட அந்த வழியே மாட்டு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தும் கூட பயமோ, வேறெந்த உணர்வுமோ வந்ததில்லை.

என் பாட்டியின் தகப்பனார் என் பாட்டிக்குத் திருமணம் செய்வித்தபோது ஒரு நான்கு பக்க கடிதம் எழுதி தன் மகளுக்குக் கொடுத்தார். அதில் எப்படியெல்லாம் மாமியார், மாமியாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், கணவரிடம் எப்படியெல்லாம் கடமையுணர்வுடன் நடந்து கொள்ள‌ வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எழுதி, ' இதுவரை இவர்களின் மகள் என்று சொன்ன காலம் போய் இவளின் பெற்றோரா இவர்கள் என்று அனைவரும் பெருமிதப்படும்படி நீ நடந்து கொள்வதில் தான் எனக்குப் பெருமை இருக்கிறது!' என்று முடித்திருந்தார்கள்.

அதில் ஒரு வாசகம் என்னை மலைக்க வைத்தது. " உனக்கு நான் போட்டிருக்கும் நகைகள் என் கெளரவத்திற்காகவும் உன் மதிப்பிற்காகவும் போட்டவை. அவ்வளவு தான். ஆனால் அவை என்றும் உன் புகுந்த வீட்டிற்கு உன் கணவருக்குச் சொந்தமானவை. உன் கணவர் உன்னை ஏதாவது ஒரு நகையைக் கழற்றித்தரச்சொன்னால் சிறிது கூட மனச் சலனமோ அல்லது முகச்சுருக்கமோ இல்லாமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும். அது தான் ஒரு நல்ல மனைவிக்கு அழகு!"

என் திருமணத்தின் போது, திருமண மண்டபம் செல்வதற்காக நான் கிளம்பிய சமயத்தில் என் பாட்டி இந்தக்கடிதத்தைக்கொடுத்து படிக்கச் சொன்ன அந்த நாள் எனக்கு அடிக்கடி நினைவில் வரும். அந்தக் கடிதத்தை நான் இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். பிரச்சினைக்குரிய‌ சந்தர்ப்பங்கள் எழுந்த போது அந்த ஆலோசனையும் வழி காட்டலும்தான் என்னை வழிநடத்தின.

மறைந்த எழுத்தாளர் அகிலனின் ‘ சித்திரப்பாவை’ அந்த நாளில் சாகித்ய அகடமி பரிசு பெற்ற புதினம். அதன் நாயகியும் நாயகனும் மானசீகமாக நேசிப்பார்கள். நாயகி  வெறுக்கும் ஒருவன் [ கதையின் வில்லன் ] நாயகியை ஒரு நாள் முத்தமிட்டு விட தன் புனிதம் களங்கம் அடைந்ததாகக் கருதி நாயகி அவனையே திருமணம் செய்து கொள்வாள். அந்தக்கால சிந்தனையும் கற்பு பற்றிய வரையறையும் இதுவாக இருந்தது. கூட்டுக்குடும்பத்தில் மரியாதை, பொறுப்பு, எல்லோரிடமும் அக்கறையும் பயமும் கலந்த அன்பு என்று இருந்தது. எதையுமே சொல்லிக்கொடுக்காமல், புத்திமதிகள் சொல்லப்படாமல் அனைத்தையும் பார்த்தே வளர்ந்தவள் நான். அந்தக்காலங்களில் வீட்டில் எந்த பிரச்சினையானாலும் உறவினர்களினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் என் பெற்றோர் எங்கள் எதிரில் அவற்றைப்பற்றி பேச மாட்டார்கள். அதனால் உறவினர்களிடம் இருந்த பாசப்பிணைப்பில் மாற்றங்கள் இல்லாமலேயே வளர்ந்தோம். வயதாக, வயதாக அனுபவங்கள் பல உண்மைகளை உணர்த்தினாலும் பெரியவர்களிடம் பாசமும் பிணைப்பும் அப்படியே தானிருக்கின்றன. ஏனெனில் பெரியவர்களைப்பார்த்து கற்றுக்கொண்ட அடித்தளம் அப்படிப்பட்டது.



நல்லதொரு அனுபவங்களையும் தீயாய் சுட்டுக்கொண்ட அனுபவங்களையும் பயன்படக்கூடிய அனுபவங்களையும் ஆலோசனைகளாய் அடுத்தவருக்கு நான் அவ்வப்போது சொல்வதுண்டு.
அனுபவங்கள் போல படிப்பினைகள் சொல்லிக்கொடுப்பவை உலகில் எதுவுமேயில்ல. இன்னும் அறுபது வயதைத்தாண்டிய பிறகும் அனுபவங்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதை நிறுத்தவேயில்லை!!

34 comments:

இளமதி said...

வணக்கம் அக்கா!

உள்ளம் தொட்டது உங்கள் அனுபவப் பதிவு - பகிர்வு!
அந்தக் காலத்தில் எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள். ஆனாலும் அவையெல்லாம் நம்மைப் புடம்போடத்தான் என்பதை இப்போது உணர அருமையாக இருக்கிறது.
இடிவிழுந்ததைப் பார்த்துப் பயந்திருந்த போதும் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அதற்கு மாறான உறுதிகொண்ட , அஞ்சா நெஞ்சுரம் கொண்டவராக மாற்றிய உங்கள் வாழ்வியலை கண்டு வியந்துபோனேன்…
உங்களின் ஒப்பற்ற எழுத்தே கூறுகிறது உங்கள் அனுபவத்திறனை!
உங்களின் அனுபவப் பதிவில் பகிர்ந்த விடயங்கள் அத்தனையும் நல்ல பாடங்கள்! படிக் கற்கள்அக்கா!.

நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக நல்ல அனுபவங்கள் உங்களுக்கு மனோக்கா. நல்ல பாடங்கள். பாட்டிக்கு அவர் தந்தை எழுதிய கடிதம் அட போட வைத்தது. குறிப்பாக நகை... ஆனால் இக்காலத்தில் இப்படி எல்லாம் அட்வைஸ் சொல்வதற்குப் பெரியோர் இல்லை. நடப்பதற்கும் சாத்தியம் இல்லை.

நல்ல பதிவு அக்கா

கீதா

ஸ்ரீராம். said...

அருமை. கட்டாயத்தின் பேரில் கற்றுக்கொண்டாலும் சங்கீதத்தின் இனிமை பின்னாளில் மனதுக்கு இதமாக இருக்கிறது. நம் இசைத்திறமையால் அடுத்தவரை மயங்க வைப்பது பெரிய விஷயம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவமாகப் பாடங்களாகின்றன.

KILLERGEE Devakottai said...

தங்களது பாட்டிக்கு கிடைத்த அறிவுரைகளையே எங்களுக்கும் வழங்கியது சிறப்பு.

ஆபரணங்களைப்பற்றிய வார்த்தைகள் எவ்வளவு உயர்வான சித்தாந்தம்

சித்திரப்பாவையின் கதை சந்திக்க வைத்தது ஒரு முத்தமே தனது வாழ்வை களங்கப்படுத்தி விட்டதாக நினைத்து வில்லனையே மணந்து முத்தத்தை கண்ணியப்படுத்திய பெண்கள்....

இன்று ???

எவ்வளவு மாற்றம்.

பகிர்வுக்கு நன்றி சகோ.

துரை செல்வராஜூ said...

>>> அனுபவங்கள் போல படிப்பினைகள் சொல்லிக்கொடுப்பவை உலகில் எதுவுமேயில்ல. இன்னும் அறுபது வயதைத்தாண்டிய பிறகும் அனுபவ பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதை நிறுத்தவேயில்லை!.. <<<

மணிமகுடம் போன்ற வார்த்தைகள்...

ஈர நிலத்தில் விழுகின்ற நல்ல விதைகள் தான் பசுமையைப் பரப்புகின்றன..

வாழ்க நலம்..

Avargal Unmaigal said...

முதல் பட கருத்து மிகவும் அருமை,,,,,,,மிக மிக உண்மையும் கூட

Avargal Unmaigal said...

அந்த கால பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரையாக சொல்லி அனுப்பினார்கள் அதை குழந்தைகளும் பின்பற்றி நடந்தால் வாழ்க்கை சந்தோஷமாக சென்றது ஆனால் இந்த காலத்தில் அப்படியில்லை எனபதும் உண்மை

கோமதி அரசு said...

அனுபவங்களை அருமையாக பகிர்ந்து கொண்டீர்கள்.
அம்மாவின் அம்மாவும் இது போல்தான் நகையைப்பற்றி சொல்வார்களாம்.
ஆத்திர அவசியத்திற்கு புகுந்த வீட்டில் கேட்டால் கொடுக்க வேண்டும் என்று.

ஆசிரியர் தொழிலுக்கு போனவுடன் பயம் தெளிந்த அனுபவம் அருமை.

priyasaki said...

அருமையான அனுபவ பகிர்வினை அழகாக எழுதியிருக்கிறீங்க. உங்க அனுபவ பாடங்கள் எங்களுக்கும் ஓர் வழிகாட்டியாக அமைகிறது.

பிலஹரி:) ) அதிரா said...

உங்கள் வாழ்க்கை வரலாற்றையே மிக அருமையாகச் சொலியிருக்கிறீங்க. உண்மைதான் இவைதான் உங்களை பொறுமைசாலியாகவும் அன்பானவராகவும் மாற்றியிருக்கு.

2008/09 காலப்பகுதியில் நடந்த அரட்டை அரங்கத்தில், குழந்தைகளை பெற்றோருடன் தூங்க வைப்பது நல்லதா, இல்லை தனியே படுக்க வைப்பது நல்லதா எனும் தலைப்பில் நீங்க நடுவராக இருந்தீங்க...

அப்போ நான், பெற்றோருடன் படுக்க வைப்பதே நல்லது எனும் கட்சியில் வாதாடினேன், அப்போ உங்களோடு பேச கொஞ்சம் பயமாக இருக்கும் எனக்கு... அந்நேரம் எனக்கு மட்டும் திறமையாக வாதாடினேன் எனப் பூங் கொத்து தருகிறேன் என்றீங்க... அது உண்மையில் அன்று எனக்கு நல்ல ஒரு உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும் தந்தது.. இன்றும் மனதில் நிற்குது..

அருமையான அலசல்..

கரந்தை ஜெயக்குமார் said...

அனுபவப் பகிர்வு அருமை

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

அருமையான அனுபவப்பகிர்வு. சுயமதிப்பீடு செய்யவும் இது நமக்கு உதவி செய்யும்.

Thulasidharan V Thillaiakathu said...

இப்போதுதான் என்னால் வாசிக்க முடிந்தது சகோதரி. நல்ல கருத்துகள் உங்கள் அனுபவங்களினால் எங்களுக்கும் கிடைத்தது.

துளசிதரன்

காமாட்சி said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாட்டிக்கு,அவரப்பா எழுதின கடிதம் மாதிரிதான் புத்திமதிகள் அந்தக்காலத்தில் சொல்வார்கள். பாராட்டுகளம்மா. அன்புடன்

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி இளமதி! நீங்கள் சொல்வது போல அனுபவங்கள் தான் நம்மைப் புடம் போடுகின்றன.

நெல்லைத் தமிழன் said...

சில விஷயங்களே ஆனாலும் அர்த்தமுள்ளவை.

அதிலும் உறவினர்களிடையே வளரும் மனஸ்தாபம், அதன் அடுத்த தலைமுறையை பாதிக்கக்கூடாது என்பது மிகுந்த அர்த்தமுள்ளது.

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் கீதா! இந்தக்காலத்தில் நகைகளையெல்லாம் தூக்கி கணவனிடம் மட்டுமல்ல, யாருக்கும் கொடுத்து விடவும் மாட்டார்கள். அதற்காக ஏற்பட்ட தரகுறைவான சண்டைகள், சச்சரவுகள் எத்தனை எத்தனை நான் பார்த்திருக்கிறேன்!

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் சகோதரர் ஸ்ரீராம்! சின்ன வயதில் கட்டாயமாக இசை கற்றுக்கொடுக்கப்பட்டது சில சமயங்களில் விளையாடும் நேரங்களில் தண்டனையாகத் தென்பட்டதுண்டு. ஆனால் அப்போது விழுந்த விடை ஆழமாக இறங்கி இன்று 60 வயதிலும் இசையை ஆத்மார்த்தமாக ரசிக்க முடிகிறது.

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரையை வழங்கிய அன்புச் சகோதரர் கில்லர்ஜிக்கு இனிய நன்றி.

மனோ சாமிநாதன் said...

//ஈர நிலத்தில் விழுகின்ற நல்ல விதைகள் தான் பசுமையைப் பரப்புகின்றன..//

அருமையான வரிகள்!! உண்மை தான்! அனுபவங்கள் நிச்சயம் நம்மைப் பண்ப‌டுத்தி நல்லவைகளை மட்டுமே வெளியில் தர வேன்டும்!

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் அருமையான கருத்துரைக்கும் அன்பு நன்றி மதுரைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான‌ பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி கோமதி அரசு!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!
அதிரா! இந்த அரட்டை அரங்கம் எப்போது நடந்தது? எங்கே நடந்தது?
நான் நடுவராக இருந்தேனா? எனக்கு எதுவும் நினைவில் இல்லயே? நான் உங்களை நேரில் பார்த்திருக்கிறேனா?

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி காமாட்சி அம்மா! உங்களின் பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!

Geetha Sambasivam said...

// உன் கணவர் உன்னை ஏதாவது ஒரு நகையைக் கழற்றித்தரச்சொன்னால் சிறிது கூட மனச் சலனமோ அல்லது முகச்சுருக்கமோ இல்லாமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும். அது தான் ஒரு நல்ல மனைவிக்கு அழகு!"// இந்தக் கருத்தை வைத்துப் பல கதைகள் எழுதலாம். அந்த அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் பெண்கள் கொடுப்பதில்லை. அப்படிக் கொடுக்க நேர்ந்தாலும் பிறந்தகத்தினர் தலையிட்டுச் சண்டை போடுகின்றனர்! கணவனுக்கு உடல்நிலை சரியில்லை, அதற்காகப் பணம் வேண்டும் என்றால் கூட நகையைக் கொடுக்க யோசிக்கும் பெண்கள் (50,60 வயது கடந்தவர்கள்) இருக்கிறார்கள்.

உங்கள் அனுபவங்களும் கிடைத்த புத்திமதிகளும் அனைவரும் பின்பற்ற வேண்டியவை!

நெல்லைத் தமிழன் said...

கீசா மேடம்... சொத்து என்பது இன்னும் பெண்களின் கைக்கு, ஆளுமைக்கு வரவில்லை. அப்படி இருக்கும்போது, நகைகூட இல்லையென்றால் அவர்களது வயதான காலத்தில் அவர்களின் நிலைமை? பெண்களுக்கும் சரிசமமாக எப்போது சொத்துக்கள் இருக்கிறதோ (கணவன் வாங்கும் சொத்து இருவர் பெயரிலும் இருக்கவேண்டும்), அப்போது இருவரிடமும் உள்ளது ஒருவருக்கொருவர் எப்போதும் உபயோகப்படுத்தக்கூடியதாக இருக்கும். யோசித்துப்பாருங்கள்.

Geetha Sambasivam said...

//கீசா மேடம்... சொத்து என்பது இன்னும் பெண்களின் கைக்கு, ஆளுமைக்கு வரவில்லை. அப்படி இருக்கும்போது, நகைகூட இல்லையென்றால் அவர்களது வயதான காலத்தில் அவர்களின் நிலைமை? //

நெ.த. நிகழ்காலம் குறித்து நீங்கள் எதுவும் அறியவில்லையோ எனத் தோன்றுகிறது. கணவனே சொத்து வாங்கினாலும் அதைத் தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கும் மனைவிகளை அறிவேன். புக்ககத்துக்குத் தெரியாமல் வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதித்து வைப்பு நிதியில் போட்டு வைத்துக் கொள்ளும் பெண்களையும் அறிவேன். அத்தகைய பெண்கள் கணவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூடத் தங்கள் பெயரில் இருக்கும் சொத்தை விற்றோ அல்லது வைப்பு நிதியில் இருக்கும் பணத்தை எடுத்தோ அல்லது தங்கள் நகைகளை விற்றோ கணவனுக்கு வைத்தியம் பார்க்க முன்வருவதில்லை! எங்களிடம் பணம் இல்லை! அலுவலகத்தில் கொடுத்தால் மேலே வைத்தியம் பார்க்கலாம், இல்லை எனில் நீங்கள் எல்லோரும் உதவுங்கள் என்று சொல்லி உறவினர்களிடம் பணம் வாங்கிக் கொண்ட பெண்மணியை நான் அறிவேன். ஆனால் அந்தப் பணம் அவர் கணவருக்குத் தக்க நேரம் கிடைக்காததால் உதவவில்லை. போய்ச் சேர்ந்துட்டார். பின்னால் ஒரு மாதத்திலேயே அந்தப் பெண்மணி 25 லக்ஷம் வைப்பு நிதிக்குச் சொந்தக்காரராக ஆனார். நகைகளும் அப்படியே இருக்கின்றன. தன் பெயரில் வாங்கிக் கொண்டிருக்கும் நிலமும் இருக்கிறது. கணவன் பெயரில் கட்டப்பட்ட வீட்டைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு எல்லாச் சொத்துக்களையும் நிர்வாகம் செய்து வருகிறார். அந்த நகைகளை இப்போது நினைத்தால் அவரால் சந்தோஷமாகப் போட்டுக்கொள்ள முடியுமா? இது நடந்தது!

Geetha Sambasivam said...

என்னைக் கேட்டால் நகை, பணம், சொத்தை விடக் கணவனுக்கே மதிப்பு அதிகம் என்பேன். அவர் கணவர் இருந்திருந்தால் இன்னும் சில, பல ஆண்டுகள் வேலைக்குச் சென்று உரிய வயதில் பணி ஓய்வு பெற்றிருப்பார். அப்போது ஏற்படும் மன நிறைவும், சந்தோஷமும் இப்போது இருக்குமா?

Geetha Sambasivam said...

எங்க வீட்டைப் பொறுத்தவரை நான் வேலைக்குப் போனப்போவும் சரி, அதன் பின்னர் ட்யூஷன், தையல், ஹிந்தி கற்றுக் கொடுத்தல், புடைவை வியாபாரம் எனச் சம்பாதித்த போதும் சரி என்னுடைய வருமானமோ அவருடைய வருமானமோ ஒன்றாகவே வைத்திருப்போம். குடும்பத்துக்குத் தானே சம்பாதிக்கிறோம். எனக்கென நான் எப்போதுமே பிரித்து வைத்துக் கொண்டதில்லை. எங்க பிறந்த வீட்டில் எனக்கு நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளுக்குக் கொடுக்கும் பணமும் குடும்பத்துக்கே கொடுத்துடுவேன். இப்போத் தான் தேவை இல்லை என்பதால் சில வருடங்களாக என்னிடம் கொடுக்கிறார். அதையும் நான் பெரும்பாலும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குச் செலவு செய்யவென வைத்துக் கொள்வேன். அவரைத் தொந்திரவு செய்வதில்லை! என்றாலும் தேவைப்படும்போது அவரும் கொடுப்பார். மற்றபடி எனக்கு எனத் தனிப்பட்ட செலவு ஏதும் வைத்துக்கொள்வதில்லை. பொதுவாகவே வரவு, செலவு இருக்கும்.