Tuesday, 30 January 2018

உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்...!!!

இப்படி ஒரு அருமையான தொடர்பதிவை உருவாக்கிய ‘அவர்கள் உண்மைகள்’ மதுரைத்தமிழனுக்கும் இந்தத் தொடர்பதிவில் இணைவதற்கு அழைப்பு விடுத்த திருமதி. பானுமதி வெங்கடேஸ்வரனுக்கும் என் அன்பு நன்றி!!




இந்தப்படத்தின் வரிகளை கவனித்தீர்களா? எந்த ஒரு நல்ல ஆலோசனையும் அது நம்மிடமே தங்கினால் அதில் எந்தவிதப்பயனுமில்லை. அது அடுத்தவரைச் சென்றடையும்போது தான் அர்த்தமாகிறது!
உண்மை தான்! நம் அனுபவம் அடுத்தவருக்குப் பயன்பட வேண்டும்.

காமாட்சி அம்மா சொன்னது போல இது வயதானவர்களின் நினைவலைகள் தான்! ஆனாலும் கடந்து சென்ற காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் அடுத்தவர்கள் நமக்குச் சொன்ன ஆலோசனைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளும்போது இவைகள் கூட ஒரு விதத்தில் அடுத்தவருக்கான ஆலோசனைகள் தானோ என்று தோன்றுகிறது.




என் தந்தை காவல் அதிகாரியாக வேலை பார்த்ததால் கண்டிப்பாகவும் அவ்வப்போது பாசம் காட்டுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். திரைப்படப்பாடல்களையெல்லாம் அத்தனை சுலபமாக ரேடியோவில் கேட்டு ரசித்து விட முடியாது. அதே சமயம் புத்தகங்கள் படிக்கவும் நூலகம் செல்லவும் சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். புத்தகங்கள் தான் என்னை 15 வயதிலிருந்து நெறிப்படுத்தியவை, பதப்படுத்தியவை, விசாலப்படுத்தியவை என்று சொல்ல வேண்டும். நா.பார்த்தசாரதியும் அகிலனும் ஷெல்லியும் கீட்ஸும் கூடவே வாழ்க்கையில் வந்தார்கள். உண்மை, நேர்மை, கருணை, தூய்மையான அன்பு, விசால மனப்பான்மை, அழகான கற்பனைகள், எழுத்தில் நேசம் என்று நிறைய கற்றுத்தந்தார்கள்.

11 வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்க ஆரம்பித்த போது அதன் அருமை தெரியவில்லை. சிறு வயது காரணமாக இருக்கலாம். அல்லது அதன் அருமை பெருமைகளை யாரும் சொல்லிக்கொடுத்து புரிய வைக்காமலிருந்திருக்கலாம். அதன் பின் வெகு நாட்கள் கழித்து, கல்லூரிப் பருவத்தில் சீனியர் மாணவி ஒருவர் என்னைப்பாட அழைத்த போது ‘ காகித ஓடம், கடலலை மேலே’ பாட்டைப் பாடச்சொல்ல, நானும் பாடினேன். மிகவும் அவலமான சோகப்பாடல் அது. உடனேயே அந்தப்பெண் அழ ஆரம்பித்தார்கள். நான் உடனேயே பாடலை நிறுத்த, “ வேண்டாம், தொடர்ந்து பாடு..’ என்று சொல்லி பாடல் முடியும் வரை கண்ணீர் வழிய கண் மூடி ரசித்தவாறே பாடலைக் கேட்டார்கள். அப்போது தான் சங்கீதத்தின் மகத்துவம் எனக்குப்புரிய ஆரம்பித்தது. இப்போதும்கூட ராக ஆலாபனைகளையும்  அருமையான பாடல்களையும் ரசித்து மெய் மறக்கும் சமயங்களில் என் பெற்றோருக்கும் என் திறமைகளை அனைத்தையும் ஊக்குவித்து வழி நெடுக வளர்த்த என் கணவருக்கும் மானசீகமாக மனதில் அவ்வப்போது நன்றி சொல்லிக்கொள்வேன்.

சின்ன வயதில் மழைத்தூரலில் வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, சற்று தூரத்தில் தீக்கங்குகளுடன் இடி விழுவதைப்பார்த்து விட்டேன். வீட்டில் உடனே கொழுமோர் காய்ச்சிக் கொடுத்தும் தைரியம் சொல்லியும் என் பயம் அடங்கவேயில்லை. எதற்கெடுத்தாலும் பயப்பட ஆரம்பித்தேன். மழை பெய்ய ஆரம்பித்தால் போதும், உடனேயே ஒரு போர்வையினுள் புகுந்து படுத்துக்கொள்வேன். போலீஸ் அதிகாரியான என் தந்தைக்கு இந்த விஷயத்தில் மனத்தாங்கல் அதிகம். ஆனால் இளம் வயதில் ஒரு கிராமத்தில் அரசு ஆசிரியையாக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். பஸ் வசதி, டாய்லட் வசதி எதுவுமே இல்லாத அந்த கிராமத்தில் இரவு நேரங்களில் மின்னல், மழை நடுவே ஒரு பெரிய தோப்புப்பக்கமாகத்தான் போக வேண்டும். பயத்தை அனுபவம் தைரியமாக மாற்றியது. போகப்போக, சுடுகாடு வழியே, உயிரற்ற உடல்கள் எரியும் அந்தி மயங்கிய நேரத்தில் கூட அந்த வழியே மாட்டு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தும் கூட பயமோ, வேறெந்த உணர்வுமோ வந்ததில்லை.

என் பாட்டியின் தகப்பனார் என் பாட்டிக்குத் திருமணம் செய்வித்தபோது ஒரு நான்கு பக்க கடிதம் எழுதி தன் மகளுக்குக் கொடுத்தார். அதில் எப்படியெல்லாம் மாமியார், மாமியாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், கணவரிடம் எப்படியெல்லாம் கடமையுணர்வுடன் நடந்து கொள்ள‌ வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எழுதி, ' இதுவரை இவர்களின் மகள் என்று சொன்ன காலம் போய் இவளின் பெற்றோரா இவர்கள் என்று அனைவரும் பெருமிதப்படும்படி நீ நடந்து கொள்வதில் தான் எனக்குப் பெருமை இருக்கிறது!' என்று முடித்திருந்தார்கள்.

அதில் ஒரு வாசகம் என்னை மலைக்க வைத்தது. " உனக்கு நான் போட்டிருக்கும் நகைகள் என் கெளரவத்திற்காகவும் உன் மதிப்பிற்காகவும் போட்டவை. அவ்வளவு தான். ஆனால் அவை என்றும் உன் புகுந்த வீட்டிற்கு உன் கணவருக்குச் சொந்தமானவை. உன் கணவர் உன்னை ஏதாவது ஒரு நகையைக் கழற்றித்தரச்சொன்னால் சிறிது கூட மனச் சலனமோ அல்லது முகச்சுருக்கமோ இல்லாமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும். அது தான் ஒரு நல்ல மனைவிக்கு அழகு!"

என் திருமணத்தின் போது, திருமண மண்டபம் செல்வதற்காக நான் கிளம்பிய சமயத்தில் என் பாட்டி இந்தக்கடிதத்தைக்கொடுத்து படிக்கச் சொன்ன அந்த நாள் எனக்கு அடிக்கடி நினைவில் வரும். அந்தக் கடிதத்தை நான் இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். பிரச்சினைக்குரிய‌ சந்தர்ப்பங்கள் எழுந்த போது அந்த ஆலோசனையும் வழி காட்டலும்தான் என்னை வழிநடத்தின.

மறைந்த எழுத்தாளர் அகிலனின் ‘ சித்திரப்பாவை’ அந்த நாளில் சாகித்ய அகடமி பரிசு பெற்ற புதினம். அதன் நாயகியும் நாயகனும் மானசீகமாக நேசிப்பார்கள். நாயகி  வெறுக்கும் ஒருவன் [ கதையின் வில்லன் ] நாயகியை ஒரு நாள் முத்தமிட்டு விட தன் புனிதம் களங்கம் அடைந்ததாகக் கருதி நாயகி அவனையே திருமணம் செய்து கொள்வாள். அந்தக்கால சிந்தனையும் கற்பு பற்றிய வரையறையும் இதுவாக இருந்தது. கூட்டுக்குடும்பத்தில் மரியாதை, பொறுப்பு, எல்லோரிடமும் அக்கறையும் பயமும் கலந்த அன்பு என்று இருந்தது. எதையுமே சொல்லிக்கொடுக்காமல், புத்திமதிகள் சொல்லப்படாமல் அனைத்தையும் பார்த்தே வளர்ந்தவள் நான். அந்தக்காலங்களில் வீட்டில் எந்த பிரச்சினையானாலும் உறவினர்களினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் என் பெற்றோர் எங்கள் எதிரில் அவற்றைப்பற்றி பேச மாட்டார்கள். அதனால் உறவினர்களிடம் இருந்த பாசப்பிணைப்பில் மாற்றங்கள் இல்லாமலேயே வளர்ந்தோம். வயதாக, வயதாக அனுபவங்கள் பல உண்மைகளை உணர்த்தினாலும் பெரியவர்களிடம் பாசமும் பிணைப்பும் அப்படியே தானிருக்கின்றன. ஏனெனில் பெரியவர்களைப்பார்த்து கற்றுக்கொண்ட அடித்தளம் அப்படிப்பட்டது.



நல்லதொரு அனுபவங்களையும் தீயாய் சுட்டுக்கொண்ட அனுபவங்களையும் பயன்படக்கூடிய அனுபவங்களையும் ஆலோசனைகளாய் அடுத்தவருக்கு நான் அவ்வப்போது சொல்வதுண்டு.
அனுபவங்கள் போல படிப்பினைகள் சொல்லிக்கொடுப்பவை உலகில் எதுவுமேயில்ல. இன்னும் அறுபது வயதைத்தாண்டிய பிறகும் அனுபவங்கள் பாடங்களைச் சொல்லிக்கொடுப்பதை நிறுத்தவேயில்லை!!

Sunday, 21 January 2018

குடுமியான்மலை!!!

ரொம்ப நாட்களாக போக வேன்டுமென்று நினைத்த கோவில். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் செல்ல முடிந்தது. ஆனால் உண்மையில் இத்தனை சிறப்பு வாய்ந்ததாக இந்தக்கோவில் இருக்குமென நான் நினைத்ததில்லை. செல்வதற்கு முன் குடுமியான்மலைக் கோவிலைப்பற்றிய குறிப்புகளை எடுத்த பிறகும் சரி, நேரில் அந்தக்கோவிலைப்பார்த்தபோதும் சரி அதன் சிறப்புகள் என்னை பிரமிக்க வைத்தன! மலை மேலுள்ள கோவில்களை மட்டும் பார்க்க இயலவிலை. இப்போது நேராகக் கோவிலுக்குச் செல்லலாம்.

குடுமியான்மலை புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் இருக்கும் ஒரு சிற்றூர். புதுக்கோட்டை திருச்சி சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் விராலி மலை வழியாக இந்த சிற்றூரை சென்றடையலாம்.இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது.மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள்.

கோவிலுக்கு முன் உள்ள நந்தி மண்டபம். தற்போது நந்தியின்றி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி. பெரும்வழுதி காலத்திலிருந்து இந்த சிற்றூர் குடுமி என்றழைக்கப்பட்டது. பின் பாண்டிய மன்னர்கள் அரசாண்ட காலத்தில் இந்த ஊர் திருநாலக்குன்றம் என்றழைக்கப்பட்டது. இரண்டாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் சிகை நல்லூர் என்று இவ்வூரின் பெயர் மாற்றியமைக்கப்பட்டது. நவக்கிர‌கங்களின் அடிப்படையில் சனி ஸ்தலமாக கொள்ளப்பட்டுள்ள தலம்.  தற்போது குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

நுழைவாயில்
சனீஸ்வரனால் சோதனை மிகுந்து காணப்பட்ட காலத்தில் நளன் இத்தலம் வந்து சிகாநாதரை வணங்கி அருள் பெற்றான் என்பது புராண காலக் கதை.



இத்திருக்கோயில், குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குன்றின் மேல், அதன் அருகில் என மொத்தம் நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். இம்மலைமீது குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன்கோயில் ஒன்று உள்ளது. இது எழுநூறு ஆண்டுகள் பழமையானது.



குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன.



சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் குடுமியான்மலை நிறைய மக்களுக்கு சென்றடைந்துள்ளதா என்று தெரியவில்லை. இத்திருக்கோயிலின் பழமையினால், சிற்பங்களின் செழுமையினால் இந்திய தொல்பொருள்துறையின் கீழ் கொண்டுவந்துள்ளனர். தற்போது இங்கு திருக்கோயிலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



திருக்கோயில் கோபுர வாசலை தாண்டி, உள்ளே உள்ள மண்டபத்தில் அத்தனைவிதமான சிற்பங்களின் அணிவகுப்பு. அத்தனை சிலைகளிலும் அப்படி ஒரு தத்ரூபம். குதிரை மேல் அமர்ந்த வண்ணம் உள்ள வீரனின் சிலை கல்கி அவதாரமாகவே எண்ணப்படுகிறது



மயில் மேல் அமர்ந்த ஆறுமுகனின் சிற்பம்.



இராவணனின் பத்து தலை வடிவ சிற்பம்.



திருக்கோயில் பிரகாரத்தினை சுற்றி வரும் போது, மலையின் மேல் ஏறிப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் பிரகாரத்தில் இருந்தே அறுபத்துமூன்று நாயன்மார்களின் வடிவங்கள், ரிஷப வாகனத்தின் மேல் சிவன்,பார்வதி வடிவம் மலையில் செதுக்கப் பட்டுள்ள அற்புதம். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் பிரகாரத்தில்தான் இந்த அறுபத்துமூவர் சிலைகளை காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம் நீண்டு காணப்படும். ஆனால் ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும் ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி, என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோயிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம்.

இணையத்திலிருந்து எடுத்தது.
முகப்பு மண்டபத்தை அடுத்து ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.  இவற்றில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான தூண்களே உள்ளன.  எஞ்சிய தூண்கள் காலத்தில் சிதைந்திருக்கலாம் என அறிய முடிகின்றது.



முகப்பு மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் நாயக்க மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டவை என கருதப்படுகின்றது. திருக்கோயில் முழவதும் அத்தனை சிலைகளும் நிறைய இடங்களில் சிதிலமடைந்துள்ளன.

திருத்தல வரலாறு: [ [இணையத்திலிருந்து ]

முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகராக இருந்த ஒருவர் சிவனுக்கு நாள்தோறும் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அந்நிலையில் ஒருநாள் இரவு இறைவனுக்கு நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு அரசர் வர கால தாமதம் ஏற்படவே, சுவாமிக்கு வைத்திருந்த பூவினை தனது காதலிக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டார். திடீரென அரசர் கோயிலுக்கு வரவே என்ன செய்வதென்று தெரியாமல், அப்பெண்ணிடம் கொடுத்த பூவினை திரும்ப எடுத்து வந்து இறைவனுக்கு சூட்டி பூஜை செய்து மன்னனுக்கு பிரசாதமாகக் கொடுத்தார். அப்போது அந்தப் பூவில் ஒரு முடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அரசர் இது என்ன என்று வினவினார் மன்னர் அர்ச்சகரிடம்.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அர்ச்சகர் அது, சிவனின் குடுமியில் இருந்து வந்த முடிதான் எனவும், இக்கோயில் சிவனுக்கு குடுமி உள்ளது எனவும், அர்ச்சகர் கூறினார். சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும், கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார். தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், முக்கண்ணனின் காலடியினைப் பிடித்து தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், ''நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவனுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவனின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன் இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் அழகிய குடுமியுடன் காணப்படுகிறார் இக்கோயில் சிவபிரான்.

மேலும் கோவிலைப்பற்றிய செய்திகள்:

சங்கீதம் பற்றிய விதிமுறைகள் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளது. அவை கிரந்த எழுத்தில் காணப்படுகின்றன. ருத்ராச்சாரியார் என்பவரின் சீடரான பரம மகேஸ்வரன் என்ற மன்னன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ராகங்களைப் பாடியுள்ளதாக வரலாறு கூறுகிறது.



கற்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள குடைவரைக் கோயில் அமைந்துள்ள நிலப் பகுதியை அப்போது ஆண்ட அரசர் ஏலம் விட நினைத்தார். ஏலம் விட்ட பணத்தில் அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட நினைத்தார் அரசர். இதனைக் கேள்வியுற்ற உமையாள்நாச்சி என்ற தேவதாசி தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் நிலப் பத்திரங்களை அரசரிடம் கொடுத்து கோயில் நிலத்தை ஏலம் விடவேண்டாம் எனவும், தன்னிடம் உள்ள இந்த சொத்துக்களை வைத்து அம்மனுக்கு தனிக் கோயில் கட்ட வேண்டியுள்ளார். இதனை ஏற்ற அரசர் அந்தப் பெண்மணி கொடுத்த செல்வத்திலேயே தாயாருக்கு தனிக் கோயில் அமைத்து அப்பெண்ணின் பெயரிலேயே திருக்காமக் கோட்டத்து அருவுடை மலைமங்கை நாச்சியார் என்ற பெயரிலேயே குடைவரைக் கோயில் தாயாரின் பெயர் விளங்கியது. இப்பெயர் மறைந்து பிற்காலத்தில் சௌந்தரநாயகி என்ற பெயருடன் விளங்குகிறது. குடைவரைகோயில் பெருமான் திருநலத்து நாயனார் திருமேற்றளி என்ற பெயருடன் விளங்குகிறார்.





Tuesday, 16 January 2018

பறவைகள் பலவிதம்!!!

சென்ற வருடம் மலேசியா சென்றிருந்த போது அதன் தலைநகரான‌  கோலாலம்பூரில் பறவைகள் பூங்காவிற்கு சென்றிருந்தோம்.நகருக்குள்ளேயே சுமார் 21 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்தப்பூங்கா 1991ல் உருவாக்கப்பட்டது.  உலகிலேயே சுதந்திரமாக நடமாடும் பறவைகள் பூங்காவான இதில்  ஒன்றிரண்டு பறவை இனங்க‌களை மட்டுமே கூண்டில் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது மழை நசநசவென்று தூறிக்கொண்டிருந்தாலும் உள்ளே அதனால் பெரிய தாக்கமில்லை. பெரிய பெரிய மரங்கள் குடைகளை விரிக்கின்றன. எங்கு பார்த்தாலும் பறவைகள் நம் கூடவே நடந்து வருகின்றன. சுதந்திரமாக நம்மைச் சுற்றிப்பறக்கின்றன. கீழே இறங்கினால் ஒரு நீர்த்தேக்கம். மறுபடியும் மேலே ஏறினால் ஒரு கூண்டில் குட்டி குட்டி பறவைகள்.  மறுபடியும் கீழே இறங்கினால் ஒரு குட்டிக்காடு. அதையொட்டி நடனமிடும் மயில்கள், மறுபடியும் மேலே ஏறினால் வளைந்து செல்லும் சின்னச் சின்ன பாதைகள் நெடுகிலும் பறவைகள். கால்கள் அப்படியே அசந்து போனாலும் அது ஒரு ரம்மியமான அனுபவம்! உங்களின் பார்வைக்கு சில பறவைகள்...




























Monday, 8 January 2018

மாதுளை சூப்!!!!

சமையல் குறிப்பில் இந்த முறை ஒரு சத்தான சூப். அதுவும் மாதுளை சாறு கலந்த சூப்.



பொதுவாய் சூப் வகைகள், மதியம் சாப்பிடுவதற்கு  முன் ஒரு பதினோரு மணி வாக்கில் சூடாகக் குடித்தால் நன்றாக இருக்கும். இந்த சூப் கூட அந்த வகையை சேர்ந்தது தான். அன்னாசிப்பழ சாற்றிலும் இப்படி செய்யலாம். ஆனால் மாதுளையில் இனிப்புடன் துவர்ப்பும் இருப்பதால் சூப் செய்வதற்கு மிகவும் ஏற்றது. மாதுளையின் பயன்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். இந்த செய்முறையில் தினம் ஒரு சூப் குடித்து வந்தால் உடல் நலம் சிறக்கும். ஒரு நாள் மாதுளை, ஒரு நாள் ஒரு கை வாழைப்பூ, ஒரு நாள் முடக்கத்தான், ஒரு நாள் பிஞ்சு முருங்கைக்காய் என்று செய்து அருந்தலாம்.

இப்போது மாதுளை சூப் செய்யும் விதம் பற்றி...

POMEGRANATE SOUP:




தேவையான பொருள்கள்:

மாதுளை முத்துக்கள்‍ ஒரு பழத்திற்கானது
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்-8
பொடியாக அரிந்த தக்காளி- ஒரு கப்
புதினா- ஒரு கை
கறிவேப்பிலை- 2 கொத்து
கொத்தமல்லி இலை- ஒரு கை
நசுக்கிய இஞ்சி- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம் -ஒரு ஸ்பூன்
கிராம்பு- 2
நெய்‍- 2 ஸ்பூன்
தேவையான உப்பு
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கிராம்புகளைப்போடவும்.
அவை பொரிய ஆரம்பித்ததும் 5 கப் நீரை சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது அனைத்துப்பொருள்களையும் மாதுளை முத்துக்களுடன் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும்.
மிளகு, சீரகம் இரண்டையும் கொரகொரப்பாக பொடித்து சேர்க்கவும்.
நன்கு கொதித்து மாதுளை முத்துக்களும் இலைகளும் நிறம் மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூப்பை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
வடிகட்டியில் தங்கும் பொருள்களை MASHERஆல் நசுக்கி அதையும் வடிகட்டி சூப்பில் சேர்க்கவும்.
இப்போது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலக்கவும்.
மாதுளை சூப் இப்போது தயார்!!