Wednesday 20 December 2017

திரை விமர்சனம்!!!

தீரன் அதிகாரம் ஒன்று. 

வெகு நாட்களுக்குப்பிறகு அநேகமாக எல்லா விமர்சனங்களிலும் நன்மதிப்பைப் பெற்ற திரைப்படம் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன் இந்தப்படத்தைப்பார்க்க நேர்ந்தது. பொதுவாய் த்ரில்லர் ரகப்படங்களை நான் விரும்பிப்பார்ப்பதில்லை. இது ஒரு உண்மைக்கதையை ஒட்டி எடுத்த திரைப்படம் என்பதை அறிய நேர்ந்ததால் தான் இப்படத்தைத் தேர்ந்தெடுத்தேன்.ஒரு உண்மையான, நேர்மையான காவல் அதிகாரியின் கதை. பதினைந்து வருடங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளைக் கும்பல் தமிழகத்தில் கைவரிசை காட்டியது. 2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரியபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் வெறும் காலணி, கைரேகை, ஒரு தோட்டா மட்டுமே போலிசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அப்போது வடக்கு மண்டல ஐஜியாக இருந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் 2005-ல் ‘ஆபரேஷன் பவாரியா’ என்ற தனிப்படை அமைக்கப்பட்டது.

பவாரியா கொள்ளையர்கள் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேசத்தில் வசிக்கும் நாடோடிகள் இனத்தை சேர்ந்தவர்கள். ராஜ்புத் படை வீரர்களான இவர்கள் 1527ம் ஆண்டு முகலாயர்களிடம் தோல்வியடைந்து கனுவா என்னும் காட்டில் ஓடி ஒளிந்துகொண்டு உயிர்பிழைப்பதற்காக கொள்ளையடிக்க துவங்கியவர்கள் என்கிறார் ஜாங்கிட். பவாரியா கொள்ளையர்கள் பிரத்யேக லாரிகள் மூலம் பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை இறக்குவதற்காக தமிழகத்திற்குள் வருவார்கள். அந்த பிரத்யேக லாரியில் ரகசிய அறைகள் அமைத்துக்கொண்டு அதில் மற்ற கொள்ளையர்கள் பதுங்கிக்கொண்டும், ஆயுதங்களை மறைத்து வைத்தும் தமிழகத்திற்கு வருவார்கள். பின்னர் நிறுவனங்களிடம் பொருட்களை சேர்த்த பிறகு நெடுஞ்சாலை அருகே உள்ள குடியிருப்புகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொலை, கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு தப்பிவிடுவர் என்பது தெரியவந்ததாக கூறுகிறார் டிஜிபி ஜாங்கிட்.
ஒராண்டிற்கு மேல் நடைபெற்ற 'பவாரியா ஆப்ரேஷன்' ஏப்ரல் 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 13 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், கொள்ளைக்கூட்டத்தின் முக்கிய தலைவன் ஒமன் உட்பட இருவருக்கு தூக்கு தண்டனையும் கிடைத்தது.

தீரன் அதிகாரம் படத்தை திரையரங்கில் பார்த்ததும், 10வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் கண்முன் வந்தது போன்று உணர்ந்ததாகவும் 10 ஆண்டுகள் கழித்து தமிழக போலீசாரின் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் பவாரியா ஆப்ரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.ஜாங்கிட்.

இதை மையமாக வைத்து அசத்தலான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

தமிழ் சினிமாவில் இதற்கு முன் , எத்தனையோ போலீஸ் கதைகள்
வந்துள்ளன.அதில் பெரும்பாலானவை ., ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, அல்லது, தன் குடும்பத்தினரைக்கொன்றவனை பழி வாங்கத் துடிக்கும் போலீஸ் நாயகரைத் தடுக்கும் அரசியல்வாதி, இப்படி பல வில்லன்கள் ..இவர்களின் கடல் போன்ற சாம்ராஜ்யம், அவர்கள் பண்ணும் அட்டூழியங்’கள், இவர்களை ஒரு மாதிரி போராடி ஒரு வழியாக அழித்து பழி தீர்க்கும் போலீஸ் ஹீரோ எனும் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் கூடிய கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, குற்றவாளியைத்’த்’ஏடும் காவல் அதிகாரிகள் படும் அல்லல்கள், அவமானங்களிவை அனைத்தையும் இந்த 'தீரன்அதிகாரம் ஒன்று' படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தின் பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது. காவல் அதிகாரியின் மகனாய்ப்பிறந்து தந்தையின் வீரசாகசங்களை சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்ட காவல் அதிகாரியாய் அருமையாக நடித்திருக்கிறார் கார்த்தி. கதாநாயகியாக வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அதிக வேலையில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருக்கும் கார்த்திக்குமான காதல் காட்சிகள் ஜெட் வேகத்தில் பயணிக்கும் படத்திற்கு வேகத்தடையாகவே உள்ளன! ஓமாவாக நடிக்கும் அபிமன்யு சிங் தன் அபார நடிப்பால் பயமுறுத்துகிறார்! அவரின் கண்கள் நடிக்கின்றன! கழுத்து நரம்புகள் கூட நடிக்கின்றன! விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த போலீஸ் கதைக்கு சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு உயிரூட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையோர அடர்ந்த காடு, பரந்த பாலைவனம், ஆரவல்லி மலைகள் என பகுதியின் தன்மை மாறாமல் அசலாக படம்பிடித்திருக்கிறார். கதாநாயகன் வில்லனைத்தேடி வேறு திசையில் பயணிக்க, வில்லனோ கதாநாகனின் மனைவியை விரட்ட, அப்போது பின்னணியில் படபடக்கும் இசையும் தடதடக்கிற நம் இதயமும்!!  காவல் அதிகாரிகளின் ஒவ்வொரு தாக்குதலும் நெடிய பாலைவன மணலிலும் நீலநிற இரவுப்பின்னணியிலும் ஓடும் ரயிலிலும் ஓநாய்த்தாக்குதலிலும் என்று நம்மை அசத்துகின்றன!!
திரைக்கதையின் வேகத்துக்கு போட்டியாய் அமைந்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை.

உயிரைப்பணயம் வைத்து தீரச்செயல்கள் புரிந்த நம் தமிழக காவல் அதிகாரிகளுக்காக, அவர்களுக்கு பாராட்டுக்கள் சொல்லும் விதமாக 
நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்! மறுமுறை ரசித்துப்பார்க்கலாம்!


24 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல விமர்சனம் மனோ அக்கா...படம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கேன்..பார்ப்போம்...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியான மதிப்பீடு

KILLERGEE Devakottai said...

தங்களது விமர்சனம் திரைப்படத்தை வெறுக்கும் என்னைக்கூட காணும் ஆவல் கொள்கிறது.

Bhanumathy Venkateswaran said...

பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம். வெறும் விமரிசனமக இல்லாமல் படத்தின் பின்னணி, அதை பாராட்டிய போலீஸ் அதிகாரியின் புகைப்படம்(செய்தியோடு) என்று வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள்.

துரை செல்வராஜூ said...

திரைப் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது - தங்களுடைய விமர்சனம்..

முற்றும் அறிந்த அதிரா said...

ஆவ்வ்வ்வ் மனோ அக்காவும் திரை விமர்சனம் எழுதத் தொடங்கிட்டா.. அருமை .. அருமை.. உங்களையே விமர்சனம் எழுதத் தூண்டி விட்டது என்றால், நிட்சயம் இப்படம் நல்லதாகவே இருக்கும்.

Chitra J said...

Just happened to see this movie yesterday and the impact of Hajput Gorilla team was more on me than anything else on the movie. The Glory of India and how it was muddied by the British is still hard to digest.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். பலரும் இப்படம் பற்றி சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். தில்லியில் பார்க்க முடியாது. தமிழகம் சென்றால் பார்க்க முயல்கிறேன்.

ஸ்ரீராம். said...

நானும் பார்த்து விட்டேன். அந்த நேரத்தில் பயந்து க்ரில் கேட் போட்டுக்கொண்டது நினைவுக்கு வந்தது. நல்ல படம்.

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை அம்மா...
படம் அருமை...
இன்னுமொரு முறை பார்க்க வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

படம் பார்த்துவிட்டேன் சகோதரியாரே
அருமையாய் விமர்சித்திருக்கிறீர்கள்
நன்றி

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள் கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் அதிரா..கம்பபாரதி! உங்கள் பாராட்டு என்னை மகிழ்ச்சியிலாழ்த்தி விட்டது!

நெல்லைத் தமிழன் said...

திரைப்பட விமரிசனம் நன்றாகச் செய்துள்ளீர்கள். நானும் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டேன். 'கதா நாயகி' சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தவிர மற்ற எல்லாமே நன்றாக வந்திருந்தது. நல்ல விமர்சனத்துக்குப் பாராட்டு.

மனோ சாமிநாதன் said...

Chithra! your feedback is so good!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

அழகான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!