Thursday 7 December 2017

முத்துக்குவியல்-49!!

கடந்த 15 நாட்களாக என் வலைத்தளத்தை திறக்க முடியவில்லை. டைப் அடிக்க ஆரம்பித்ததும் cursor ஓடிக்கொண்டே இருந்தது. பல சிகிச்சைகளுக்குப்பிறகு இப்போது நிலைமை பரவாயில்லை. CURSOR ஓடுவதன் வேகம் மட்டுப்ப்ட்டிருக்கிறது. அதனால் தான் அது அசந்திருந்த நேரத்தில் என்னால் வலைத்தளத்தில் நுழைய முடிந்தது! இதை சரி செய்ய யாருக்காவது தீர்வுகள் தெரிந்தால் சொல்லுங்கள்! என் மகன் வெளி நாடு சென்றிருப்பதால் அவரின் உதவி கிட்டவில்லை.

அதிர்ச்சி முத்து:

சமீபத்தில்  ஜுனியர் விகடன் மூலம் அறிந்து கொண்ட செய்தி இது.

கொலை செய்யக்கூலிப்படைகள், போதை மற்றும் போலி மருந்துகள் மார்க்கெட்டிங், சூதாட்டம், திருட்டு மற்றும் கடத்தல் பொருள்கள் விற்பனை, ஆயுத‌ பிசினஸ், சிலைகள் மற்றும் அரிய விலங்குகளின் வியாபாரம், சட்ட விரோதப் பண மாற்றம் இப்படி எத்தனை குற்றங்கள் உண்டோ அவை அத்த்னைக்கும் ஒரு இருட்டு இணையம் இயங்கி வருகிறது. இன்டர்போல் மற்றும் பல நாட்டு காவல்துறைக்கும் தலைவலி தந்து கொண்டிருக்கும் விஷயம் இது.
இந்த மாதிரி இணைய தளங்களுக்கு GOOGLE CHROME , INTERNET EXPLORER வழியாக செல்ல முடியாது. இந்த மாதிரி இணையங்களுக்கு வருபவர்கள் எல்லோருமே அட்ரஸ் இல்லாதவர்கள். விற்பவர்களையோ வாங்குபவர்களையோ அடையாளம் காண முடியாதவர்கள்.

இங்கும் ஈ காமர்ஸ் போன்ற விற்பனைத்தளங்கள் இயங்குகின்றன.
சுமார் 21 நாடுகளைச் சேர்ந்த க்ரைம் போலீஸார் இணைந்து நடத்திய ரகசிய ரெய்டில் 600’க்கும் மேற்பட்ட  திருட்டு இணையங்கள் முடக்கப்பட்டு ஏராளமான போதை மருந்துகள், தங்கம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் திருட்டு இணையங்கள் புதியதாய் வேறு வேறு பெயரில் கிளம்புவதை தடுக்க முடியவில்லை. 

கூலிப்படைகளின் சேவைகளுக்காகவே இணைய தளம் உண்டு. திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்காகவும் அதன் விபரங்களுங்களுக்காகவுமே தனியாக இருட்டு இணைய தளம் உண்டு.

இன்டர்போல், அமெரிக்காவின் FBI, ஐரோப்பாவின் EUROPOLE போன்ற அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளினால் ஓரளவுக்கு இருட்டு இணையங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பயங்கர உலகமாக உலகெங்கும் இயங்கி வருகிறது இது.

அதிசய முத்து:

கன்னியாகுமரி மாவட்டம்திருவிதாங்கோட்டிற்கும் தக்கலைக்கும் இடையே கேரளபுரம் என்னும் சிற்றூரில் உள்ள விநாயகர் கோவில் பல அதிசயங்களும் அற்புதங்களும் நிரம்பப்பெற்றது. இந்தக் கோவிலில் குடி கொண்டிருக்கும் விநாயகர் வருடத்தில் ஆறு மாதம் ஆடி முதல் மார்கழி வரை கருப்பாகவும் மீதமுள்ள ஆறு மாதம் தை மாதத்திலிருந்து ஆனி வரை  வெள்ளையாகவும் நிறம் மாறுகிறார். 

விநாயகரின் நிறத்தைப்பொறுத்து விநாயகர் அமர்ந்துள்ள அரசமர'மும் நிறம் மாறுகிறது! இன்னுமொரு வியப்பான செய்தி. இப்போது ஒன்றரை அடி உயரமுள்ள' விநாயகர் தொடக்கத்தில் அரை அடி உயரம் மட்டுமே இருந்தவர். இவர் நிறம் மாறும் விநாயகர் என்று அழைத்தாலும் நிறம் மாறுவதால் பச்சோந்தி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். 

இந்தச் சிலை உருவாக்கப்பட்ட கல் சந்திரகாந்தக்கல் என்னும் அபூர்வ வகைக்கல் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். 

விநாயகர் கருப்பாக இருக்கையில் அக்கோவிலின் கிணற்று நீர் கலங்கலாக சுவை இழந்து மாறி விடும். விநாயகர் வெள்ளையாக இருக்கும்போது கிணற்று நீர் ஸ்படிகம் போல தெளிவாகவும் சுவையாகவும் மாறி விடுகிறது. 

அசத்தும் முத்து:

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். வட்டார போக்குவரத்து அலுவல கம் தொடர்பான ஆலோசகராக இருக்கிறார். இவரது மகன் சஞ்சய்குமார். பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் இவன் இதுவரை 210 ஏழைகளின் உயிர்காக்க உதவி செய்திருக்கிறான். 11 ஆண்டாக தீபாவளி கொண்டாடுவது இல்லை.

அவனின் தந்தை சொல்கிறார்......

‘’’ சஞ்சய்க்கு அப்போ அஞ்சு வயசு இருக்கும். பேப்பர் படிச்சுட்டு இருந்தேன். அதுல, ஒரு சின்னப் பொண்ணுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு போட்டோவுடன் விளம்பரம் வெளியாகி இருந்துச்சு. அதை பார்த்த சஞ்சய், ‘பேப்பர்ல எதுக்குப்பா இந்த அக்கா படத்தைப் போட்டிருக்காங்க?’ன்னு கேட்டான். ‘இந்த அக்காவோட இதயத்துல கோளாறுப்பா. அறுவை சிகிச்சைக்கு உதவி கேக்குறாங்க’ன்னு சொன்னேன். ‘நாம ஏதாச்சும் உதவி பண்ணலாமே’ன்னான். ‘அதுக்கேத்த வருமானம் நமக்கு இல்லியே’ என்றேன். அவங்க அம்மாகிட்டப் போயி ஏதோ பேசிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தான்.

‘ஏம்பா.. எனக்கு தீபாவளிக்குப் பட்டாசு, புதுத் துணி எடுக்க எவ்வளவு செலவு பண்ணுவே?’ன்னான். ‘2 ஆயிரம் ஆகும்’னு சொன்னேன். ‘அப்படின்னா.. இந்த வருஷம் எனக்கு பட்டாசும் வேண்டாம், புதுத் துணியும் வேண்டாம். அதுக்கு செலவு செய்யுற பணத்தை இந்த அக்காவுக்கு அனுப்பி வைச்சிருப்பா’ன்னு சொல்லிட்டு பதிலுக்குக்கூட காத்திருக்காம வெளிய ஓடிட்டான். அவன் சொன்ன மாதிரியே அந்தப் பொண்ணோட அறுவை சிகிச்சைக்கு 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைச்சோம்.

அந்த வருஷத்துலருந்து சஞ்சய் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கிறதில்லை. புதுத் துணி போடுறது இல்லை. அதுக்கு செலவாகும் பணத்தை கணக்குப் பண்ணி கேட்டு வாங்கி வச்சுக்குவான். அவங்க சித்தி பட்டாசு வாங்கித் தர்றேன்னு சொல்லுவாங்க. அவங்கட்டயும் ரூபாயைக் கேட்டு வாங்கிருவான். சஞ்சய் இந்த முடிவு எடுத்துட்டதால நாங்களும் பதினோரு வருஷமா தீபாவளியை ஏறக்கட்டி வைச்சிட்டோம்.

பிறந்த நாளுக்கு புது டிரெஸ் போடுறதோ, கேக் வெட்டிக் கொண்டாடுறதோ இவனுக்குப் பிடிக்காது. அதுக்குப் பதிலா, இவன் படிக்கிற வேலம்மாள் பள்ளியில ஒவ்வொரு வருஷமும் இவனோட வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகள் நடுவான். இவனது சேவையைப் பாராட்டி இதுவரை 8 விருதுகள் கொடுத்திருக்கிறார்கள்.”

இவ்வாறு கூறினார் வேணுகோபால்.

அப்பாவின் தோளைப் பிடித்துத் தொங்கியபடி அருகில் நின்று கொண்டிருந்த சஞ்சய்குமார் நம்மிடம் சொன்னான்..

“யாருக்காச்சும் உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்னா அப்போதைக்கு என் சேமிப்புல எவ்வளவு பணம் இருக்கோ அதை எடுத்து அனுப்பி வைச்சிருவேன். ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை என இதுவரை 210 பேருக்கு ஏதோ என்னால் முடிஞ்ச சிறு உதவியைச் செஞ்சிருக்கிறேன். 
இப்பகூட 2 ஆயிரம் ரூபாய் சேமிச்சு வைச்சிருக்கேன். நாலாம் வகுப்புலருந்து மஞ்சுளா டீச்சர்கிட்ட டியூஷன் படிக்கிறேன். நான் இந்த மாதிரி உதவி செய்றேன்னு தெரிஞ்சு, ‘எனக்கு டீயூஷன் ஃபீஸ் வேண்டாம் சஞ்சய்.. அந்த பணத்தையும் உன் பணத்தோட சேர்த்து, கஷ்டப் படுறவங்க சிகிச்சைக்கு அனுப்பி வைச்சிரு’ன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு நல்ல மனசு.

மருத்துவ உதவிக்காக நான் அனுப்பிய பணம் கிடைச்சதும், அவங்க எல்லாரும் மறக்காம எனக்கு நன்றி தெரிவிச்சு கடிதம் போடுவாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். ‘எங்களைப் போன்ற ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த தம்பி நல்லா படிச்சு டாக்டரா வரணும். அதுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்’ என்றுகூட சிலர் எழுதி இருக் கிறார்கள்.

ஆனால், ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டராகி ஏழைகளுக்குச் சேவை செய்யணும்கிறதுதான் என் விருப்பம், கனவு, ஆசை, லட்சியம் எல்லாம்! “

உறுதிபடச் சொன்னான் சஞ்சய்குமார்.  8 comments:

துரை செல்வராஜூ said...

சஞ்சய் குமாரைப் போன்ற இளம் செல்வங்களால் இந்நாடு மேன்மையுறட்டும்..

வெங்கட் நாகராஜ் said...

சஞ்சய் குமார் - வாழ்த்துகள் அந்த இளம் சிட்டுக்கு.....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முத்துக்கள் அருமை. இளைஞரின் கனவு நனவாகட்டும்.

ராமலக்ஷ்மி said...

வலைப்பக்கம் திறக்காமல் போவதன் காரணம் ஊகிக்க முடியவில்லை.

அதிர்ச்சி, அதிசயம், அசத்தல்.. முத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி. சிறுவன் சஞ்சய் குமாருக்குப் பாராட்டுகள்!

கரந்தை ஜெயக்குமார் said...

இளைகவரின் கனவு பலிக்கட்டும்

Jaleela Kamal said...

இளவயதில் எவ்வளவு நல்ல யோசிச்சி இருக்கிறார் சஞ்சய் குமார்..

Jaleela Kamal said...

மனோ அக்கா எங்க இருக்கீங்க பேசி நாளாச்சு , பேரன் நலமா?

Jaleela Kamal said...

//டைப் அடிக்க ஆரம்பித்ததும் cursor ஓடிக்கொண்டே இருந்தது//
கீ போர்டில் ஏதாவது எழுத்து அழுந்தி இருக்கும் செக் பண்ணி பாருங்கள் மனோ அக்கா