Thursday 29 June 2017

முத்துக்குவியல்-46!!!

தகவல் முத்து:

திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக்கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக் கின்றன

இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன.
இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர்.

இதன்மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.

லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக் கும் இடம் உள்ளது. திருமலைக் கோயிலின் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. இங்கு பொருட்கள் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் மூன்று கன்வேயர் பெல்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மடப்பள்ளியில் இருந்து விற்பனையகத்துக்கு லட்டுக்களை கொண்டு செல்ல பயன்படுகின்றன. இங்குதான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப்படுகிறது. இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுக்களை நாளொன்றுக்கு தயாரிக்கிறது.ஏறக்குறைய 200 சமையல் பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சமையல் பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கப்படுகின்றனர்.

அசத்தல் முத்து:

'கடத்தநாடன் களரி பயிற்சி மையம்' என்பதை 1949ல்  தொடங்கி 76 வயதிலும் கையில் வாளுடன் 'களரி' எனபப்டும் தற்காப்புக்கலையை கற்றுத்தருகிறார் மீனாட்ஷி அம்மா. இந்த மையம் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. இந்த கேரளப்பெண்மணிக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

ஏழு வயதில் களரியைக்கற்கத்தொடங்கிய இவர் தன் குருநாதர் ராகவனையே பதினேழு வயதில் மணந்தார். இவரின் கணவர் தொடங்கிய இந்த களரி மையத்தில் ஜாதி, மத வித்தியசங்கள் பார்ப்பதில்லை. ஆறு வயதில் தொடங்கி 26 வயது வயது வரை குழந்தைகளும் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த தற்காப்புக்கலையைக் கற்க இங்கே சேர்க்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த மையம் பயிற்சி தருகிறது.
கணவரின் மறைவுக்குப்பிறகு மீனாட்சியே இந்தப்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.  மரபுவழிப்படி குருதட்சிணை மட்டுமே. உடல் வலிவை ஏற்படுவதோடு இந்தக் களரிப்பயிற்சி இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்கிறார் மீனாட்சி.

அருமையான முத்து:

கிரிக்கெட் வீரர் டோனி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களையெல்லாம் தொட்டிருக்கிறார். ஆனாலும் சமீபத்தில் அவரின் விளையாடும் திறன் சற்று குறைந்த போது அவரைக் கிண்டல் செய்யாத ஆட்களே இல்லை. ஏன், அவரை ஒரு வீரராக சேர்த்துக்கொண்ட அவரின் அணியின் உரிமையாளர்களே அவரை பலவாறு பேசி ஏளனம் செய்தார்கள். அந்த சமயத்தில் அவரின் மனைவி வெகுண்டெழுந்து சில வார்த்தைகள் சொன்னார். எவ்வளவு அருமையானவை அவை!
" ஊழ்வினை தெரியுமா? "ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளை சாப்பிடும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை சாப்பிடும். நேரமும், சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்".

28 comments:

துரை செல்வராஜூ said...

திருப்பதி லட்டு பற்றி அரிய செய்திகள்..

மற்ற விஷயங்களும் சிறப்பு..

வாழ்க நலம்!..

வை.கோபாலகிருஷ்ணன் said...

தகவல் முத்து நல்ல இனிப்பாகவும் ருசியாகவும் அமைந்துள்ளது. ’லட்டு’ பற்றியும், அதன் தயாரிப்புப் பக்குவங்கள் பற்றியும், அதன் நீண்ட வரலாறுகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் சொல்லியுள்ளீர்கள்.

அசத்தல் முத்து அருமையாகவும், அருமையான முத்து அசத்தலாகவும் உள்ளன.

கிரிக்கெட் வீரர் டோனி அவர்களின் மனைவி எடுத்துச் சொல்லியுள்ளவை யாவும் மிகவும் நியாயமானவைகளாகவும் + யோசிக்க வைப்பதாகவும் உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

திருப்பதி சென்று இருக்கிறேன்; லட்டும் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் அந்த திருப்பதி லட்டு பற்றிய இனிப்பான விவரங்களை இன்றுதான் தெரிந்து கொண்டேன். லட்டை புட்டு புட்டு வைத்தமைக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

திருப்பதிக்கு நண்பர்களுடன் ஒரு வாரம்
கரசேவாவுக்கெனச்
சென்று தெய்வப்பணி செய்கையில்
மடைப்பள்ளியில் பிரசாத லட்டுபிடிக்கும்
பணியும் ஒரு நாள் இருந்தது
தங்கள் பதிவைப் படிக்க
அந்த நாள் நிகழ்வுகள் மனதுள்
வந்து போனது

களரி குறித்தும் டோனியவர்களின் மனைவியார்
சொன்ன வார்த்தைகளைப் பதிந்ததும்
இதுவரை அறியாதவை.அருமையானவை

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..

கோமதி அரசு said...

முத்துக்குவியலில் இடம் பெற்ற முத்துக்கள் அனைத்தும் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து முத்துக்களும் அருமை...

முடிவில் உள்ள முத்து, அசர வைக்கும் முத்து...

KILLERGEE Devakottai said...

பணம் பெறாமல் கற்றுக்கொடுக்கும் மீனாட்சி அம்மாள் போற்றுதலுக்குறியவர்

ஸ்ரீராம். said...

சுவையான பதிவு
சுவாரஸ்யமான பதிவு
தோனி மனைவியின் ஆவேசம் - சிறப்பு.

ராமலக்ஷ்மி said...

முத்துக்கள் மூன்றும் அருமை.

Thenammai Lakshmanan said...

muthukkal moondrum super

laddula ivlo vishayam irukkaa

kalari payirchi seiyum amma sema fit.

dhoni manaivikku oru shottu. super aa sonnangka. !

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மீனாட்சி அம்மா பற்றிய பதிவினை தி இந்து ஆங்கில இதழில் படித்து என் குடும்பத்தாருடன் பகிர்ந்துகொண்டேன். மற்ற்வை புதியவை. பகிர்வுக்கு நன்றி.

Anuprem said...

அனைத்து தகவல்களும் அருமை...சிறப்பான முத்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

திருப்பதி லட்டு பற்றி அறியாதச் செய்திகள்

மீனாட்சிஅம்மா போற்றுதலுக்கு உரியவர்

Thulasidharan V Thillaiakathu said...

முத்துக்கள் மூன்றும் அருமை. மீனாட்சியம்மா வியக்க வைக்கிறார். லட்டு தகவல்கள் அறியாத தகவல்கள். டோனியின் மனைவியின் வார்த்தைகள் முத்தானவை!!! மிக மிக அருமையான வார்த்தைகள்!

துளசிதரன், கீதா

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

இனிய வருகைக்கும் அனைத்து முத்துக்களையும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு சகோதரர் துளசிதரனுக்கும் கீதாவிற்கும் அன்பு நன்றி!!