Thursday, 13 April 2017

உறவுகளை இணைக்கும் பாலங்கள்!!

பழைய ஃபைல்களை சுத்தம் செய்து கொன்டிருந்த போது முக்கியமான கடிதங்கள் அடங்கிய ஃபைல் கண்ணில் பட்டது. அதை எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடிதமாய் படிக்க ஆரம்பித்த போது மனம் பல வருடங்களுக்குப்பின் போய் விட்டது.
எத்தனை எத்தனை உணர்வுக்கலவைகள்!

அந்த நாட்களில் மன உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த கடிதங்கள் தேவைப்பட்டன‌. கடிதங்கள் தான் உறவுகளை இணைக்கும் பாலங்களாக விளங்கின.



சின்ன வயதில் பொங்கல் திருநாளின் போது நானும் என் தங்கையும் பொங்கல் கரும்பு எல்லாவற்றையும் சுவைத்து விட்டு சீக்கிரமே வெளியில் வந்து விடுவோம். தபால்காரர் பொங்கல் அன்றைக்கு வர வழக்கத்தை விட தாமதம் ஆகும். இருந்தாலும் அவரது வருகைக்காக கடும் தவம் இருப்போம். அவர் அருகே வர வர ஒவ்வொரு படியாய் இறங்கி யார் முன்னால் நிற்பது என்பதில் பெரிய போட்டியே நடக்கும்.

பல வருடங்கள் அவற்றையெல்லாம் சேமித்து ஒரு பெரிய ஆல்பமே வைத்திருந்தேன் நான். வெளி நாட்டில் வாழ்ந்த போதிலும் துணைக்கு ஒரு உறவினர் பையனை அழைத்துக்கொண்டு தமிழ்க்கடைகள் அனைத்திலும் ஏறி இறங்கி பொங்கல் வாழ்த்துக்கள் வாங்குவேன். ஒரு முறை 64 பொங்கல் வாழ்த்துக்கள் வாங்கிய ஞாபகம் இருக்கிறது.

என் மாமாவிற்கு திருமண நிச்சயம் முடிந்து பல மாதங்கள் கழித்துத்தான் திருமணம். அஸ்ஸாமிலிருந்த அவர் கடிதங்கள் அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் ரோஜா இதழ்கள் கூடவே வருமாம்! அக்கா வெட்கத்துடன் சொல்லுவார்!

லண்டன் ஆங்கில மீடியத்தில் வெளிநாட்டில் படித்துக்கொன்டிருந்த என் மகனை ஈராக் போர் காரணமாக ஒரு வருடம் தஞ்சை டான் பாஸ்கோவில் சேர்க்க வேண்டியதாயிற்று. முதல் முதலாய் தமிழ் கற்று 'அம்மா, நான் மனப்பாடமாக திருக்குறளை எழுதியிருக்கிறேன் பாருங்கள்!' என்று என் மகன் சிறு வயதில் மிக சந்தோஷமாக அனுப்பிய கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது!!

முன்பெல்லாம் என் மாமியார் வெளி நாட்டில் வாழும் எங்களுக்கு அனுப்பும் கடிதங்களில் முதல் பக்கம் முழுவதும் நலம் விசாரித்தும் ஊரிலுள்ளவர்களின் நலத்தை அறிவித்தும் நிரம்பியிருக்கும்! அது மாதிரியெல்லாம் இனி யார் கடிதம் எழுதப்போகிறார்கள்?

எத்தனை கடிதங்கள் அப்போதெல்லாம் இனிப்பையும் அதிர்ச்சிகளையும் தாங்கி வந்திருக்கின்றன! அப்போதெல்லாம் காதலுக்கும் இந்தக்கடிதங்கள் தானே தூதுவர்கள்?

எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் அவரின் சித்தப்பா தொண்டையில் புற்று நோய் வந்து சாப்பிட்டதெல்லாம் ஒவ்வொரு முறையும் வெளியே வந்த நிலையில் எங்கள் நண்பர் தன் கஷ்டங்களையெல்லாம் மீறி சித்தப்பாவை காப்பாற்ற எவ்வளவோ பாடுபட்டார். கடைசியில் அவரின் சித்தப்பா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். 'என்னைக் காப்பாற்ற முயற்சித்து உன் சேமிப்பையெல்லாம் செலவழிக்காதே. இனி நான் உயிரோடு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. உன் சின்னமாவை மட்டும் காப்பாற்று' என்று எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.

இப்படி மன உணர்வுகளை வெளிப்படுத்த அன்று கடிதங்கள் தான் அனைவருக்கும் துணையாக இருந்தன. சிவாஜி கூட ஒரு படத்தில் பாடியிருப்பார் ' நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்!
அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல, எண்ணம்!' என்று!!

என் பாட்டியின் தகப்பனார் என் பாட்டிக்குத் திருமணம் செய்வித்தபோது ஒரு நான்கு பக்க கடிதம் எழுதி தன் மகளுக்குக் கொடுத்தார். அதை நான் இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். அதில் எப்படியெல்லாம் மாமியார், மாமியாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேன்டும், கணவரிடம் எப்படியெல்லாம் கடமையுணர்வுடன் நடந்து கொள்ள‌ வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எழுதி, ' இதுவரை இவர்களின் மகள் என்று சொன்ன காலம் போய் இவளின் பெற்றோரா இவர்கள் என்று அனைவரும் பெருமிதப்படும்படி நீ நடந்து கொள்வதில் தான் எனக்குப் பெருமை இருக்கிறது!' என்று முடித்திருந்தார்கள். அதில் ஒரு வாசகம் என்னை மலைக்க வைத்தது. " உனக்கு நான் போட்டிருக்கும் நகைகள் என் கெளரத்திற்காகவும் உன் மதிப்பிற்காகவும் போட்டவை. அவ்வளவு தான். ஆனால் அவை என்றும் உன் புகுந்த வீட்டிற்கு உன் கணவருக்குச் சொந்தமானவை. உன் கணவர் உன்னை ஏதாவது ஒரு நகையைக் கழற்றித்தரச்சொன்னால் சிறிது கூட மன சலனமோ அல்லது முகச்சுருக்கமோ இல்லாமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும். அது தான் ஒரு நல்ல மனைவிக்கு அழகு!" எப்படிப்பட்ட கடிதம் இது!

இப்படிப்பட்ட, அன்பையும் கடமையும் தாங்கி வந்த‌ கடிதங்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியுமா? இத்துடனிருக்கும் கடிதத்தைப்பாருங்கள்.



காலஞ்சென்ற குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி எழுதியிருக்கிறார், ' ஏதேனும் ஒரு காரணத்தினால் தபால் நிலையங்களெல்லாம் இழுத்து மூடப்பட்டு விட்டால் உலகமே நிலை குத்திப்போய் விடும்' என்று! கடிதமென்பது எத்தகைய சிறப்புகளைக்கொண்டது என்று அவர் எப்படியெல்லாம் விவரித்திருக்கிறார் பாருங்கள்!!

கடிதங்கள் என்று நினைக்கும் போதே நிச்சயம் இந்த இரண்டு பாடல்களும் நினைவில் வரும் எல்லோருக்கும்!


விரிவான கடிதங்கள் போய் சுருக்கமான ஈமெயில்கள் வந்தன. அப்புறம் சின்ன சின்ன மெஸேஜ்கள்! அவைகளும் தேய்ந்து போய் மொபைல் ஃபோன் வந்தன! அப்புறம் உலகமும் உள்ளங்களும் சுருங்கியே போய் விட்டன! அப்புறம் மொபைல் ஃபோனில் பேசுவதும் இப்போதும் சுருங்கி விட்டன! சார்ஜ் தீர்ந்து போய் விட்டது, கிரெடிட் இல்லை, கனெக்க்ஷன் இல்லை என்று பல காரணங்கள்! மொத்தத்தில் உறவுகள் எல்லாமே சுருங்கிப்போய் விட்டன! இல்லை, மனங்கள் தான் மிகவும் சுருங்கிப்போய் விட்டன!


25 comments:

KILLERGEE Devakottai said...

அருமை சகோ தங்களது நினைவலைகள் பலரையும் கிளறி விடும் மனங்கள் சுருங்கி விட்டன...

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ' நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்!
அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல, எண்ணம்!' //

மறக்கவே முடியாத மிகவும் இனிமையான பாடல்.

கடிதங்கள் பற்றி, காலஞ்சென்ற குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி எழுதியிருப்பது அருமை.

கடிதங்கள் என்று நினைக்கும்போதே நிச்சயமாக நம் நினைவுக்கு வரும் இரு பாடல்களின் காணொளித் தேர்வுகளும் அருமை.

காலம் மாறிக்கொண்டே வருவதால், பேனா பிடித்து எழுதும் பழக்கமே போய் கை நடுங்க ஆரம்பிக்கின்றது என்பதே இன்றைய உண்மையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... அது ஒரு அழகிய நிலாக்காலம்...!

ஸ்ரீராம். said...

கடிதம் எழுதும் கலை மறந்தே போய்விட்டது! எல்லாம் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்ற பெயரில் மனிதங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாட்டியின் தகப்பனார் சொல்லியிருக்கும் அறிவுரைக் கடிதம் படித்தபோது திருச்சி லோகநாதன் குரலில் "புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே" பாடல் நினைவுக்கு வரவில்லையா?!!

கரந்தை ஜெயக்குமார் said...

கடிதம் எழுதுதல் ஒரு கலை என்பார்கள்
அதெல்லாம் அந்தக்காலம்

Yaathoramani.blogspot.com said...

எங்கள் வீட்டில் எங்கள் தாத்தா
வந்த கடிதங்களையெல்லாம்
கவனமாக ஒரு கம்பியில்
கோர்த்து வைத்திருப்பார்
பின்னாளில் அதைப் படிக்க
நாவலை விட அதிக சுவாரஸ்யம் மட்டுமல்லாது'
ஒட்டுமொத்த உறவினர் சூழலையும்
வெகு அறிந்த முடிந்து இன்றும் பிரமிக்கிறேன்
அற்புதமான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனியத் தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

Angel said...

நான் பல கடிதங்களையும் வாழ்த்து அட்டைகளையும் பத்திரமா வச்சிருக்கேன்கா .மகள் 5 /6 வயசிருக்கும்போது எனக்கும் அவள் அப்பாவுக்கும் கையால் கடிதம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டாம எங்க லெட்டர் பாக்சில் போடுவா :) அவையும் பத்திரமா இருக்கு .லெட்டர் எழுதி அது வரும்வரை தபால்காரருக்கு காத்திருப்பதே தனி அனுபவம் :) அந்த சந்தோசம் குறுந்தகவல்களிலும் இமெயிலிலும் வரவே வராது ..பாட்டிக்கு அவர் தந்தையின் அறிவுரை அருமை

Yarlpavanan said...

தங்களுக்கும்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

இராய செல்லப்பா said...

அருமையான கடிதம் எழுதியிருக்கிறீர்கள். கணினி வந்தபிறகு கையால் எழுதும் பழக்கம் போயே போய்விட்டது. ஜமுனா பாடியது உண்மையாகிறது: "நான் எழுதுவது கடிதம் அல்ல.."

போகிற போக்கில் வலைப்பதிவும் அழிந்துபோய் விடுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது. முகநூலிலும், வாட்சப்பிலும் பக்கம் பக்கமாக cut and paste செய்து விளையாடுபவர்கள் பெருகிவிட்டார்கள்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-இராய செல்லப்பா நியூஜெர்சி

ராமலக்ஷ்மி said...

ஆம், கடிதங்களின் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பது எத்தனை சுகமான உணர்வைத் தருகிறதோ அதே அளவு வருத்தத்தையும் தருகிறது அவற்றை அடியோடு மறந்து போனதும். நினைவலைகளைக் கிளப்பி விட்டது தங்கள் பகிர்வு.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அழகிய பதிவு.. பலபல பழைய நினைவுகள் வந்து போகின்றன. இரு பாடல்களும் சூப்பர்.. பொதுவா எல்லோருக்குமே பிடிக்கும்...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! நீங்கள் சொல்வது சரியே. பேனா பிடித்து எழுதும் பழக்கம் போய் விட்டதால் சில அத்தியாவசிய நேரங்க‌ளில் எழுத நேரும்போது கூட கை வலிக்கிறது!

மனோ சாமிநாதன் said...

ஆமாம், தனபாலன்! மிக அழகான விஷயங்கள் இருந்த அந்தக்காலம் அழகிய நிலாக்காலம் தான்! வருகைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரி தான் சகோதரர் ஸ்ரீராம்! திருச்சி லோகநாதன் பாடிய அந்தப்பாடலும் இந்த மாதிரி கருத்துக்களை ஒட்டியே இருக்கும்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கடிதம் எழுதுதல் போன்ற நல்ல பல கலைகள் மறைந்தே போய் விட்டன சகோதரர் ஜெயக்குமார்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி சகோதரர் ரமணி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்சலின்! உங்கள் பதிவுகளைப்படிக்கும்போதே நீங்கள் கடிதங்களை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ள‌வர் என்று புரிந்து கொண்டேன்!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா யஞ்யசாமி! உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்கும் என் அன்பிற்கினிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா

மனோ சாமிநாதன் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் யாழ்ப்பாவணன்!

Geetha Sambasivam said...

ஒரு பெருமூச்சுத் தான் வருகிறது. இன்றைய நிலை இது தான். :( என்றாலும் மனம் ஏற்க மறுக்கத் தான் செய்கிறது.

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!!