Thursday 30 March 2017

முருங்கைக்காய் ரசம்!!!

வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு சமயல் குறிப்பு. ஊரெல்லாம் பச்சைப்பசேலென்று அருமையாக முருங்கைக்காய் கிடைக்கிறது. பொதுவாய் முருங்கைக்காயை வாரம் இருமுறை சமைப்பதால் இரத்தத்திற்கும் சிறுநீருக்கும் சக்தி கிடைக்கின்றன. முருங்கைக்காயை ரசமாகவோ அதன் சாற்றை வைத்தோ சமைத்து உண்பது தோல் சம்பந்தமான பிரச்சினைகளையும் நீக்குகிறது என்றும் சொல்கிறார்கள். சதைப்பற்றான ஒரு முருங்கைக்காயை வைத்து ஒரு சமையல்!மிளகு ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், எலுமிச்சை ரசம் என்று பழைய வகை ரசங்களுக்கு அப்பால் இப்போது வாழைத்தண்டு ரசம், முள்ளங்கி ரசம், கண்டத்திப்பிலி ரசம், முடக்கத்தான் ரசம் என்று பல புதிய வகை ரசங்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இப்போது முருங்கைக்காய் ரசம்!
முருங்கைக்காய் ரசம்!

செய்வதற்கான பொருள்கள்:

சதைப்பற்றான ஒரு நீளமான முருங்கைக்காய்
தக்காளிப்பழம் பெரிதாக ஒன்று
சின்ன வெங்காயம் 4
தேங்காய்த்துருவல் ஒரு மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
துருவிய இஞ்சி அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் ஒன்று
பொடியாக நறுக்கிய மல்லித்தழை 2 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நெய் 1 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
கட்டிப்பெருங்காயம் 1 துண்டு
புளி சிறு எலுமிச்சம்பழ அளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
சாம்பார்ப்பொடி அரை ஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தில் துண்டு துண்டாய் அரிந்த முருங்கைக்காயைப்போட்டு துவரம்பருப்பு, மஞ்சள் தூள், தக்காளித்துண்டுகள் சேர்த்து அவை மூழ்க்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசிலுக்கு வேக வைக்கவும்.
ஆறியதும் முருங்கை, தக்காளி, பருப்பை கையால் நன்கு பிசைந்து, முருங்கைக்காய் தோல்களை அப்புறப்படுத்தவும்.
இந்த முருங்கைக்காய், தக்காளி கலவையுடன் மல்லி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
புளியைக்கரைத்து சேர்க்கவும்.
மொத்தம் நாலைந்து தம்ளர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள‌வும்.
தேங்காய், இஞ்சி, பூண்டு, மிளகு, சேரகம், சின்ன வெங்காயம் இவற்றை ஒன்று பாதியாக தட்டி சேர்க்கவும்.
உப்பு சேர்த்து ருசியையையும் உப்பையும் சரி பார்த்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகும் பெருங்காயமும் போட்டு கடுகு வெடித்ததும் ரசத்தைக் கொட்டவும்.
ரசம் நன்கு நுரைத்து வரும்போது சாம்பார்ப்பொடியைத்தூவி மறுபடியும் ஒரு கொதி வரும்போது தீயை அணத்து ரசத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்!

34 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுவரைசெய்ததுமில்லை
சாப்பிட்டதுமில்லை
இங்கு இந்தியன் ஸ்டோர்களில்
சதைப்பற்றுள்ள் முருங்கைக்காய்கள்
தாரளமாகக் கிடைகின்றன
சனிக்கிழமை ஸ்பெஷல் இதுதான்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமா இருக்கே அம்மா....
ஆஹா...
முருங்கை ரசம்...
செய்து பார்த்துடலாம்ன்னா பட்டியலில் சொல்லியிருக்கும் பொருட்கள்தான் யோசிக்க வைக்குது....

வை.கோபாலகிருஷ்ணன் said...


பொதுவாக முருங்கைக்காயை சாம்பாரிலோ, வற்றல் குழம்பிலோ தான், 2-3” நீளத்திற்குக் கட் செய்து ’தான்’ ஆகப் போடுவோம்.

இருப்பினும் இந்த முருங்கைக்காய் ரசம் என்ற செய்முறையும் நன்றாகவே உள்ளது. புதுமையாகவும் உள்ளது. எப்படியோ ஒருமுறையில் முருங்கைக்காயின் சதைப்பத்து, உடம்புக்குச் செல்கிறது.

’தான்’ என்ற அகந்தையும் இதில் இல்லாமல் மிகச்சிறப்பாகவே உள்ளது. :)

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

முருங்கையில் ரசம்.

புதுசா இருக்கு.

செய்து சுவைத்துப் பார்த்து விடுவோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே

Anuprem said...

முருங்கைக்காய் ரசம்....வாசமாய் ..சுவையாய் தெரிகிறதே...

கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ...

மோகன்ஜி said...

இப்போதே கேள்விப் படுகிறேன். செய்யச் சொல்லி பார்க்கிறேன். முருங்கைக்காய் சதைப்பற்றில் சூப் சாப்பிட்டிருக்கிறேன். நன்றாகவே இருந்தது.

இராய செல்லப்பா said...

அவர்களிடம் செய்யச் சொல்லி இருக்கிறேன். பார்க்கலாம். நன்றாக வந்தால் புகழ் எனக்கு! இல்லையேல் பழி உங்களுக்கு! (ஆனால் முருங்கைக்காய் யாரையும் கைவிடாது என்று நம்புகிறேன். எப்படிச் சாப்பிட்டாலும் பயன் தரும் காயன்றோ அது!)

- இராய செல்லப்பா நியூஜெர்சி

Angel said...

வித்யாசமான ரசம் !இதுவரை செய்ததில்லை நேற்றே ரெசிபி படித்து இன்னிக்கு வாங்கிட்டு வந்துட்டேன் நாளை எங்க வீட்ல முருங்கை ரசம் .பகிர்வுக்கு நன்றிக்கா

Yarlpavanan said...

உடல் நலம் பேண உதவும்
முருங்கைக்காய் ரசம்
அருமையான வழிகாட்டல்!

முற்றும் அறிந்த அதிரா said...

நாவுக்கு சுவை தரும் ரெசிப்பி, முருங்கிக்காய் கிடைத்ததும் செய்து பார்த்திடுவேன்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி! ரசம் இன்று செய்து பார்த்திருப்பீர்களென்று நினைக்கிறேன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

"தான் என்ற அகந்தை இல்லாமல்!"
சூப்பராக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

செய்து சுவைத்துப்பாருங்கள் சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள் அனுராதா!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து சுவைத்த பின் சொல்லுங்கள் சகோதரர் மோக‌ன்ஜி!

மனோ சாமிநாதன் said...

ரசம் செய்து பார்த்து விட்டீர்களா சகோதரர் செல்லப்பா? நிச்சயம் உங்களுக்கு புகழ் தான் கிடைத்திருக்கும்!!

மனோ சாமிநாதன் said...

ரசம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் யாழ்ப்பாவணன்!

Angel said...

செய்து ருசித்தாச்சுக்கா .வித்யாசமான சுவை ..வீட்டில் கணவர் மகள் இருவருக்கும் ரொம்ப பிடித்தது

Avargal Unmaigal said...

வித்தியாசமான ரெசிப்பி இதுவரை எங்கும் கேள்விபட்டது இல்லை முயற்சி செய்து பார்க்க வேண்டும் குட்

சாரதா சமையல் said...

வித்தியாசமான ரசம் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மனோக்கா.

Thulasidharan V Thillaiakathu said...

முருங்கை ரசம் செய்திருக்கிறேன் ஆனால் இந்த முறையில் அல்ல. வீட்டில் பெரியவர்கள் பூண்டு, வெங்காயம் சேர்க்கமாட்டார்கள் என்பதால் பிற பொருட்கள் அதே ஆனால் சாம்பார் பொடிக்குப் பதிலாக வீட்டில் செய்யும் ரசப்பொடி சேர்த்து செய்திருக்கிறேன். இந்த முறையும் செய்து பார்த்துவிடுகிறேன்....

ஏஞ்சலுக்கு நன்றி அவரது பதிவிலிருந்து இங்கு வந்து தெரிந்து கொண்டேன்...மிக்க நன்றி மனோ அக்கா...

கீதா

Thenammai Lakshmanan said...

அம்மா தேங்காய் சேர்க்காமல் செய்வார்கள். நான் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன் :)

V Mawley said...
சென்ற ஞாயிறு 02-04-17 அன்று முருங்கைக்காய் ரசம் செய்து , மாதங்கியிடமும்" very good " வாங்கிவிட்டேன் !

மாலி

mera balaji said...

அக்கா,
செய்து பார்கிரேன்.எனக்கு மிகவும் பிடித்த காய்.

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து இனிய பின்னூட்டம் கொடுத்திருப்பதற்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி மதுரை தமிழன்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் சாரதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி கீதா! அவசியம் இந்த ரசத்தை செய்து பார்த்து விட்டு கருத்துரையை எழுதுங்கள்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து எனக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுத்ததற்கு அன்பு நன்றி சகோதரர் மாலி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பார்த்து கருத்து தெரிவியுங்கள் மீரா!