Monday, 23 January 2017

வீடு!!

வீடு என்பது எல்லோருக்குமே ஒரு வானவில் கனவு. சிலருக்கு மட்டுமே அந்தக்கனவு வெகு சுலபமாக நிறைவேறுகிறது. நிறைய பேருக்கு அது ஒரு வலி. ஒவ்வொரு செங்கல்லும் ஒரு வலி நிறைந்த கதையைச் சொல்லும். ஒரு போராட்டத்தைச் சொல்லும். ஒரு குதூகலமான நாள், ஒரு மனத்துன்பத்தைக்கொடுத்த நாள், அருமைக்குழந்தை பிறந்த நாள், அன்பிற்கினியவர்கள் இறந்த நாட்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் நினைவுகள் வாழ்கின்றன. சொல்லில் அடக்க முடியாத உணர்வுகள் வாழ்கின்றன.

இன்றைய தலைமுறைக்கு சொந்த வீடென்பது அவ்வளவு பெரிய கஷ்டமில்லை. ஏனெனில் பெரும்பாலான இளந்தலைமுறைக்கு குடும்பத்தைச் சார்ந்த கடமைகளோ அல்லது தோள்களில் அழுத்தும் பாரங்களோ இல்லை. அவரவர் குடும்பத்தை மட்டுமே அவரவர்க‌ள் பார்க்க‌ வேண்டும்.   அதனால் அவரவர் பொருளாதாரத்தை ப்பொறுத்து சிறிய வீடோ அல்லது மாளிகையோ இவர்களுக்கு வெகு சீக்கிரமே சாத்தியமாகிறது. ஆனால் இதற்கு முந்தைய, அதற்கும் முந்தைய தலைமுறைகளுக்கு ஒரு வீடு என்பது அவ்வளவு சுலபமாக கிடைத்ததில்லை. கடமைகள், ஆசாபாசங்களைக் கடந்த பிறகு ஒரு சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது எத்தனை வலிகள்! எத்தனை எத்தனை நிராசைகள்! எழுத்தாளர் திருமதி வித்யா சுப்ரமணியம் அந்த வலியை அப்படியே உள்வாங்கி தன் கூர்மையான எழுத்தில் அருமையாய் வெளிப்படுத்தியிருக்கிறார் தன் 'வீடு' என்ற சிறுகதையில்!



இவரின் புதினங்களில், சிறுகதைகளில் பெரும்பாலும் எல்லாவற்றையுமே படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். ஆனால் இது எப்படியோ விட்டுப்போன சிறுகதை! வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெகுவாக என்னைப்பாதிக்க ஆரம்பித்தது இந்தக்கதை!

பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தினால் விற்க நேரும்போதோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரும்போதோ ஒரு சிலர் திரும்பிக்கூட பார்க்காமல் மன பாரத்துடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த திசையில் கூட செல்வதில்லை. செல்ல மனம் வருவதில்லை. மனதின் ஆழத்தில் அந்த இழப்பின் வலி எங்கேயோ ஒளிந்து கொன்டு இம்சிப்பதன் வெளிப்பாடு அது. இன்னும் சிலர் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கையில் கடந்து சென்ற அந்த வீட்டின் நினைவுகளில் நிமிடங்களில் ஒரு சில கணங்கள் வாழ்ந்து திரும்புவதுண்டு.

இந்த சிறுகதையின் நாயகரும் அப்படிப்பட்ட ஒரு பெரியவர் தான்! இடையில் பல கைகள் மாறிப்போன தன் விட்டை முதலில் வெளியே சற்று தூரத்தில் நின்று அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பதை கவ‌னித்த உரிமையாளர் அவரிடம் விசாரிக்க, இவர் தான் எட்டு வருடங்க‌ளுக்கு முன் விற்ற வீடு அது என்று சொல்கிறார். வீட்டுக்காரர் உள்ளே அழைத்ததும் உள்ளே நுழைகிறார். உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன் வாசற்படியைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்கிறார். ஏதோ கோவிலுக்குள் நுழைவது போன்ற பரவசம் அவர் விழிகளில் தெரிகிறது. 



உள்ளே வந்தவரின் விழிகள் மூலை முடுக்கு விடாமல் சுற்றி சுற்றி பார்க்கிற‌து. கரங்கள் சில்லிட்ட சுவர்களைத் தடவித் தடவி பார்க்கின்றன. 
மனதில் பொங்கிய உணர்வுகள் அவரிடமிருந்து அப்படியே வெளி வந்து விழுகின்றன.

" நானும் அவளும் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இது. அஸ்திவாரம் போட்டதே அவளுடைய தாலியை வெச்சுத்தான். அதை மீட்க பதினஞ்சு வருஷமாச்சு. அது வரை ஒரு மஞ்சக்கயிறு தான் அவள் கழுத்தில்!

இந்த வாசக்கால் அசல் பர்மா தேக்கு. இதற்கு அவளின் கை வளையல் போனது. இந்த வாசல் திண்ணை இருக்கே, இது கூட அவளின் யோசனை தான்.

'பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு வருகிறவர்கள், வயசானவர்கள், குழந்தைகள் அசதியாய் படுத்துறங்க வசதியாக இருக்கும், கூடவே ஒரு தண்ணீர்ப்பானையும் வெச்சிடலாம். கூடுதல் புண்ணியம்' என்று சொன்னாள் அவள்.



பெரியவர் நடுங்கும் கைகளால் அந்தத்திண்ணையைத் தடவிக்கொடுக்கிறார்.

கடைசியில் இந்தத் திண்ணையில் தான் இறந்து போன அவள் உடல் கிடந்தது!"

பெரியவரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிகிறது. தன்னை சமாளித்துக்கொன்டு மெதுவாய் புன்னகைக்கிறார்.

அவர் மெதுமெதுவாய் கண்ணீர் கசிய தொடர்ந்து சொல்கையில் அவரின் கதை கண்ணெதிரே விரிந்தது.

எப்போதெல்லாம் பணம் கிடைத்ததோ அப்போதெல்லாம் தவணை முறையில் அவர்கள் அந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். வெறும் செங்கல் சுவர் எழுப்பிய நிலையிலும் அதில் வசிக்க நேர்ந்ததில் அவர்கள் மனத்துன்பம் அடைந்ததில்லை. வீடு சிறுகச் சிறுக வளர்ந்த போது மூன்று குழந்தைகளும் வளர்ந்தார்கள். மூன்று மகன்களும் நன்கு படித்து, நல்ல வேலைகள் கிடைத்து, மூத்த மகனுக்கு திருமணமும் ஆகியிருந்த நிலையில் அவர் மனைவிக்கு உடல்நலம் திடீரென பழுதாக, சோதனைகள் செய்ததில் இரத்தப்புற்று எனத்தெரிந்து கதிகலங்கிப்போயிருக்கிறார் அவர். மகன்களிடம் பணம் கேட்டும் அவர்கள் கை விரிக்க, கடைசியில் பணம் வேண்டுமானால் அந்த வீட்டைப்பிரித்துக்கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் அந்த வீட்டை மகன்களிடமே விற்று ஒவ்வொரு மகனும் ஆளுக்கு எண்ணி எண்ணி அவரிடம்  2 லட்சம் தந்து கணக்கை முடிக்கும்போது அவரின் மனைவிக்கு நோய் முற்றிப்போயிருந்தது. சிகிச்சைக்கு பலன் இல்லாமல் அவள் இறந்தே போனாள்.

மேலே அவர் சொல்கிறார்..

" வியாதியுடன் இற‌ந்ததால் பிணம் உள்ளே வரக்கூடாது என்று மருமகள் ஆர்ப்பாட்டம் பண்ணியதால் கடைசியில் என் மனைவிக்கு கிடைத்தது இந்தத் திண்ணை தான். அதற்கப்புறம் இந்த வீட்டில் நுழைய எனக்குப்பிடிக்காமல் மிச்சமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராய் சுற்றினேன். கோவில் கோவிலாய் போனேன். ஏழு வருஷங்களுக்குப்பிறகு திரும்ப வந்த போது பசங்க மூன்று பேரும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுகிட்டு வீட்டை வித்துட்டாங்கன்னு தெரிஞ்சது. என் மனைவி உயிரையே விதையாக்கி எழுப்பின இந்த வீடு அவர்களுக்கு வெறும் செங்கல்லாகத்தான் தெரிஞ்சிருக்கு. ஆனா எனக்கு இது கோயில் மாதிரி. இது வெறும் செங்கல் கட்டிடம் கிடையாது. இதற்கு ஜீவன் இருக்கு. துடிப்பு இருக்கு. நீங்க நல்லவர். அதனால்தான் இந்த ஜீவன் உங்ககிட்ட வந்து சேர்ந்திருக்கு. என் மனைவி இந்த மண்ணில்தான் உறைஞ்சு போயிருக்கிறாள். நீங்க நல்லா இருப்பீங்க. உங்க பசங்களுக்கு வீடுன்னா என்னன்னு இப்போதிலிருந்தே சொல்லிக்கொடுங்க. இதன் மூச்சுத் துடிப்பை கேட்பதற்கு சொல்லிக்கொடுங்க. கடைசிவரை இந்த வீட்டில் நீங்க சந்தோஷமாயிருந்தால்தான் இந்த வீடும் சந்தோஷமாயிருக்குமென்று அவங்க புரிஞ்சிக்கணுமின்னு நான் வாழ்த்தறேன்"

அவர் விடைபெற்று எழுந்த பின் தயக்கத்துடன் வீட்டுக்காரரிடம் கேட்கிறார்.
" நான் இன்றிரவு மட்டும் இந்தத் திண்ணையில் படுத்துக்கட்டுமா?"

" நீங்கள் உள்ளேயே வந்து படுங்க"

" இல்லை. இந்தத் திண்ணையிலேயே படுத்துக்கொள்கிறேன்"

அவர் மேல்துண்டை விரித்து திண்ணையில் படுத்தார்.
காலையில் வீட்டுக்காரர் வந்து பார்த்தபோது திண்ணை காலியாக இருந்தது. அதன் மீது 'நன்றி' என்று எழுதி சில மலர்களை வைத்து விட்டு அவர் போயிருந்தார். எங்கே போனாரோ?

அந்த வீடு விசும்புவது போலிருந்தது அவருக்கு. 

  

21 comments:

Avargal Unmaigal said...

மனதை நெகிழவைத்த பதிவு.....மனக்கனத்துடன் செல்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

கனவில் கூட இப்படிப்பட்ட நிலை யாருக்கும் வரக்கூடாது...

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் கணத்துப் போய்விட்டது சகோதரியாரே
ஆசை ஆசையாய் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை
விற்பதன் வலியை உணர்ந்தவன் நான்.

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட கதை.....

ஒரு வீடு கட்டுவது எவ்வளவு கடினம்... வீட்டோடு சேர்ந்த உணர்வுகள் என மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்ட கதை.

எழுத்தாளருக்குப் பாராட்டுகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Nagendra Bharathi said...

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

எதார்த்தமான ஆசாபாசமுள்ள அனைவரையும் கண் கலங்கி கண்ணீர் சிந்த வைக்கும் கதை இது.

ஏற்கனவே நான் இந்தக்கதையை படித்துள்ள ஞாபகமும் உள்ளது. மீண்டும் இப்போது படிக்கும்போதும் மெய் சிலிர்த்துப்போனேன்.

மிகவும் உணர்வு பூர்வமான இந்தக்கதையை எழுதியுள்ள, எனக்கு மிகவும் பிடித்தமான, இன்றைய காலக்கட்டத்தில் நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல எழுத்தாளரான திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களுக்கு மீண்டும் என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

அதனைப்பற்றி இங்கு சிலாகித்துச்சொல்லி பகிர்ந்துகொண்டுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

என்னால் முடியவில்லை, இப்பவும் இப்படி சில இடங்களில் நடக்கிறது என சில புரோக்கிராம்கள் மூலம் அறிகிறேன், மிக வேதனையான விஷயம்.. இது கதையல்ல நிஜம்.

ர. சோமேஸ்வரன் said...

நான் இந்த தலைமுறையை சேர்ந்தவன், உங்களின் கதை பற்றிய பார்வை / முன்னுரை இல்லாமல் இந்த கதையை படித்திருந்தால் இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமா? என்று தெரியவில்லை. மிகவும் அருமையாக இருந்தது கதை.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் நெகிழ்ச்சியுடன் பின்னூட்டமிட்டதற்கும் அன்பு நன்றி மதுரை தமிழன்! இந்தப்பதிவை முழுமையாக எடிட் செய்து வெளியிடும் வரை இதைப்படித்த ஒவ்வொரு முறையும் என் கண்கள் கலங்கவே செய்தன!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்! உண்மை தான்! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது!

மனோ சாமிநாதன் said...

வ‌ருகைக்கும் நெகிழ்வான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதர‌ர் ஜெயக்குமார்! உங்களைப்போலவே நானும் இந்த வலியை ஏற்கனவே அனுபவித்திருக்கிறேன். ஆனால் இந்தப்பதிவிலுள்ள‌, இந்த சிறுகதையிலுள்ள‌வரின் மன வேத்னை மிகவும் கொடியது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்! உங்கள் பாராட்டுக்களை நான் திருமதி வித்யாவிற்கு சொல்லி விடுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி நாகேந்திர பாரதி! உங்கள் பாராட்டுக்களை நான் திருமதி வித்யாவிற்கு சேர்ப்பித்து விடுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல மனம் நிறைந்து திருமதி வித்யா சுப்ரமணியத்திற்கு நீங்கள் தெரிவித்த பாராட்டுக்களிற்கும் எனக்களித்த உற்சாக வரிகளுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

எனக்குமே இன்னும் இந்தச் சிறுகதை மனதில் சொல்ல முடியாத வேதனை உண‌ர்வுகளை ஏற்படுத்துகிறது!

மனோ சாமிநாதன் said...

உணர்வுகளை கருத்துரையாக இங்கே பதிவ் செய்ததற்கு அன்பு நன்றி அதிரா!

வை.கோபாலகிருஷ்ணன் said...


//பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தினால் விற்க நேரும்போதோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரும்போதோ ஒரு சிலர் திரும்பிக்கூட பார்க்காமல் மன பாரத்துடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த திசையில் கூட செல்வதில்லை. செல்ல மனம் வருவதில்லை. மனதின் ஆழத்தில் அந்த இழப்பின் வலி எங்கேயோ ஒளிந்து கொண்டு இம்சிப்பதன் வெளிப்பாடு அது. இன்னும் சிலர் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கையில் கடந்து சென்ற அந்த வீட்டின் நினைவுகளில் நிமிடங்களில் ஒரு சில கணங்கள் வாழ்ந்து திரும்புவதுண்டு.//

இதையெல்லாம் நானே என் வாழ்க்கையில் அனுபவித்துள்ளேன். ஆனால் என்னுடையது என்னால் கட்டப்பட்ட வீடு அல்ல. முதன் முதலாக கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை விற்றது. பிறகு வாங்கிய மற்றொரு வீட்டையும் விற்றது. இரண்டு சம்பவங்களுமே கதையில் வருவது போன்ற சோகங்கள் என்று சொல்ல முடியாது.

ஒரு புதிய வீட்டினை வாங்க நினைக்கும் போது, பணப் பற்றாக்குறையினால் பழைய வீட்டினை விற்க நேரிட்டது மட்டுமே. இருப்பினும் அந்தப் பழைய வீட்டினை வாங்க நாம் எத்தனைக் கஷ்டப்பட்டோம் என்று நினைக்கையில், இப்படி அநியாயமாகக் குறைந்த விலைக்குக் கொடுத்து விட்டோமே எனத் தோன்றுவதும் உண்டுதான்.

”எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு .... இன்று உன்னுடையதாக இருப்பது நாளை மற்றொருவருக்கும், அதன்பிறகு வேறொருவருக்கும் சொந்தமாகும்” என்பதே கீதையில் கண்ணன் சொல்லுவது.

அதன் உண்மைத்தன்மையை நினைத்து நான் என் மனதை சமாதானம் செய்து கொள்வதும் உண்டு.

Angel said...

வாசித்து முடிச்சதும் மனசுக்கு வலிச்சது ...அந்த பெரியவர் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் .எப்படித்தான் இந்த மருமகள்களும் மகன்களுக்கும் மனசு வருதோ தெரில :( வயசானவங்களை துக்கப்படுத்த ..

துரை செல்வராஜூ said...

அந்தப் பெரியவர் போலவே தவிப்பவர்கள் அதிகம்... மனம் கனக்கின்றது..

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

அழகாய் பின்னூட்டம் எழுதியிருக்கும் உங்களுக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

//ஒரு புதிய வீட்டினை வாங்க நினைக்கும் போது, பணப் பற்றாக்குறையினால் பழைய வீட்டினை விற்க நேரிட்டது மட்டுமே. இருப்பினும் அந்தப் பழைய வீட்டினை வாங்க நாம் எத்தனைக் கஷ்டப்பட்டோம் என்று நினைக்கையில், இப்படி அநியாயமாகக் குறைந்த விலைக்குக் கொடுத்து விட்டோமே எனத் தோன்றுவதும் உண்டுதான்.

”எதைக் கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு .... இன்று உன்னுடையதாக இருப்பது நாளை மற்றொருவருக்கும், அதன்பிறகு வேறொருவருக்கும் சொந்தமாகும்” என்பதே கீதையில் கண்ணன் சொல்லுவது. //

ஆச்சரியமாக இருக்கிறது! எனக்கும் இதே அனுபவம் நிகழ்ந்திருக்கிறது! உங்களைப்போலவே நானும் கீதையை நினைத்து சமாதானம் செய்து கொள்ளுவேன். அதையும் மீறி 'ஆகா, எமாந்து விட்டோமே' என்ற வேதனை அவ்வப்போது தலை காட்டி வருத்தப்படுத்தத்தான் செய்கிறது!

இனிய கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!