Tuesday, 27 January 2015

முத்துக்குவியல்-34!!

அதிசய‌ முத்து:

பொதுவாகவே சனி பகவானின் பார்வை நம் மீது பட்டு விட்டால் எண்ண‌னற்ற துன்பங்களை அடைய நேரிடும், செல்வங்களை இழக்க நேரிடும் என்பது தான் நம் மக்களீன் கருத்தாக உள்ளது. ஆனால் மராட்டிய மாநிலத்தில் சிங்னாபூர் என்ற பகுதி மக்கள் சனி பகவானுக்கு ஈடு இணையான கடவுள் வேறு இல்லை என்கிறார்கள். ஒட்டு மொத்த கிராமமும் அதிலுள்ள ஹோட்டல், க‌டைகள் எல்லாமே கதவுகள் அகற்றப்பட்டு திறந்த நிலையிலேயே வைத்திருக்கிறார்கள். சனீஸ்வரரின் கடைக்கண் பார்வை இருக்க திருட்டு பயமில்லை என்கிறார்கள் இவர்கள். திறந்திருக்கும் வீடுகள், கடைகளினுள் கெட்ட எண்ணத்துடன் யாராவது நுழைந்தால் அவர்கள் ரத்த வாந்தி எடுத்து உயிர் விடுவார்கள் என்பது இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

கதவுகள் அமைக்க முனைவோருக்கு சனீஸ்வரன் கடுமையான சோதனைகளை அளித்துள்ளாராம். அன்றைய காலத்தில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு கல்லை தன் குச்சியால குத்த ரத்தம் பீரிட்டு எழுந்ததாம். அன்று இரவே சிறுவனின் கனவில் சனீஸவ்ரர் வந்து தான் சுயம்புவாக எழுந்தருளிப்பதாகவும் இனி நோய், திருட்டு என்ற எந்த கவலையுமின்றி மக்கள் வாழ்லாம் என்று கூறி, ' என்னை ஒரு கட்டுமானத்துக்குள் அடைக்க வேண்டாமென்றும் வானமே கூரையாகவும் பூமியில் எங்கும் தன் பார்வை படுமாறும் இருக்க வேண்டும்' என்றாராம். அதன்படியே அவரை ஐந்தரையடி சுயம்புவாக வெட்ட வெளியில் வைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். சனி பகவானே பாதுகாவல் தருவதால் இந்த ஊர் சனி சிங்னாபூர் என்று அழைக்கப்படுகிறது.

வருத்த வைத்த முத்து:

கடல் கடந்து பல வருடங்கள் கணவன் தொடர்ந்து வேலை செய்யும் நிலை ஏற்படும்போது, இக்கரையில் சில சமயங்களில் குடும்பத்தின் அல்லது மனைவியின் போக்கு மாறி விடுகிறது. சில சமயம் மனைவிக்கு தேவைகளே பேராசையாகும்போது, அல்லது பாதை மாறி விடும்போது அதன் விளைவுகள் சகிக்க முடியாததாகி விடுகின்றன. இந்த மாதிரி நிகழ்வுகளை நாங்கள் கடந்த 40 வருடங்களில் நிறைய பேரிடம் பார்த்திருக்கிறோம். ஏமாந்து நின்ற அந்த ஆண்மகனை பார்க்க நேரும்போது நமக்கு மனது கனமாகி விடும்.

எங்கள் உணவகத்தில் ஒரு தமிழர் பல வருடங்களாக சாப்பிட்டு வந்தார். மாலையில் வந்தால் தமிழ்ப்பேப்பரை ஒரு வரி கூட விடாமல் படித்து முடித்து விட்டு, அதன் பின் என் கணவரிடம் அரசியல் கதைகள் பேசி விட்டு அப்புறமாகத்தான் சாப்பிட உட்காருவார். சம்பாத்தித்ததையெல்லாம் மனைவி பேரில் தான் சொத்துக்கள் வாங்கினார். நண்பர்கள் பலர் ' உன் பேரிலும் கொஞ்சம் சொத்துக்கள் வாங்கிப்போடு' என்று உபதேசித்தும் அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அவருக்கும் அறுபதுக்கும் மேல் வயதாகி விட்டதால்  சமீபத்தில் தான் வேலையை விட்டு ஊருக்கு வந்தார். வந்த பின் செலவுக்குக் கூட மனைவி பணம் தர மறுத்ததால் தினசரி சண்டை என்று வாழ்க்கை ரணகளமாகியிருக்கிற‌து.  திருமணம் செய்து கொடுத்த பெண் வீட்டில் அடைக்கலமாகியிருக்கிரார். அங்கும் அவரின் மனைவி சென்று தகராறு செய்யவே, மனம் நொந்து விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். இரன்டு நாட்களுக்கு முன் இந்த செய்தியைக் கேள்விப்பட்டு எங்கள் இருவருக்கும் மனமே சரியில்லாமல் போய் விட்டது. இன்னும் இந்த அதிர்ச்சி சரியாகவில்லை. வளைகுடா நாடுகளில் வாழும் எத்தனையோ தமிழர்களீன் வாழ்க்கை இப்படித்தான் திசைமாறிப்போகிறது.

ஆச்சரிய முத்து:

சீனாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் தன் தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக இரவும் பகலும் ஒரு வார காலம் சரியாக உறங்கக்கூட இல்லாமல்  இணையத்திலேயே இருந்து வந்திருக்கிறார். இது அவரை 2013ல்ல் கோமாவில் தள்ளி விட்டது. ஓராண்டுக்கு மேல் அவர் கண் விழிக்கவில்லை. அவருக்கு சிகிச்சை செய்து வந்த‌ மருத்துவர்கள் அவர் மிகவும் நேசிக்கும் பொருள் என்னவென்று கேட்டிருக்கிறார்கள். உறவினர்கள் 'பணம்' என்றதும் 100 யென் நோட்டை அவர் நாசிக்கு அருகில் சென்று அதன் வாசனையை முகரச் செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நோட்டை அவர் காதுக்கருகில் கொண்டு சென்று அதை க‌சக்கியிருக்கிரார்கள். அந்த சப்தத்தை அவரின் செவி கேட்டது. வாசனையை நாசி உணர்ந்ததும் அவரின் கை அந்த நோட்டை வாங்க அசைந்ததையும். கண்களையும் அவர் திறக்க முயற்சித்ததையும் பார்த்த‌ மருத்துவர்கள் அப்படியே ஸ்தம்பித்துப்போனார்களாம். இப்போது அவரின் உடல்நிலையில் வேகமான முன்னேற்ற‌ம் ஏற்பட்டு வருகிறதாம். பணம் பத்தும் செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்படி கோமாவில் கிடக்கும் மனிதனையே உயிர்ப்பிக்கும் சக்தி கொண்டதா அது?

குறிப்பு முத்து:

பல்லியை ஒழிக்க:

காப்பிப்பொடியில் புகையிலைப்பொடியைக்கலந்து நீர் சேர்த்து உருட்டி அங்கங்கே வைக்கவும். பல்லித்தொல்லை அகன்று விடும்!

Sunday, 18 January 2015

வலைச்சரத்தில் நான்!

இன்று முதல் வலைச்சர ஆசிரியையாய் பணியேற்கவிருக்கிறேன்.

இந்தப் பணி சாதாரணமானதல்ல. நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டி கூடுதல் உழைப்பிற்குத் தயாராக இருக்க வேண்டும். சுவாரசியமாக  எழுதவும் வாசகர்களை ஈர்க்கவும் ரசிக்க வைக்கவும் அருமையான விஷயங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். இதில் பெண்களுக்கு வீட்டுப்பொறுப்புகள் கூடுதலாக இருப்பதால் கூடுதல் சுமைகளைத்தாண்டி கணினி பக்கம் வர வேன்டும். இப்போது கூட ஒரு நிச்சயதார்த்தத்திற்குச் சென்று இரவு 10 மணிக்குத் திரும்பி, 12 மணிக்கு இந்தப்பதிவை எழுதிக்கொன்டிருக்கிறேன்!

இவற்றையெல்லாம் தாண்டி ஒரு வாரம் வலைச்சரத்திற்காக ஒரு வாரம் நம்மை அர்ப்பணித்துக்கொள்வது சுகமாக இருக்கிறது.

என்னை மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியராக பணியேற்க அழைத்த சகோதரர் சீனா அய்யா அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றியை இங்கே என் வலைத்தளத்தில் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வழக்கம்போல் என் அன்புத்தோழமைகள் யாவரும் வலைச்சரம் வந்து என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்!

தினமும் நாம்  வலைச்சரத்தில் சந்திப்போம்!!!


 

Thursday, 15 January 2015

பொங்கலோ பொங்கல்!!

பொங்கல் பற்றிய சில வித்தியாசமான செய்திகள்:

பொங்கல்:

கர்நாடகாவிலுள்ள சிக்மகளூர் அருகே அமைந்துள்லது தர்மசாஸ்தா திருத்தலம். அதன் அருகே அமைந்துள்ளது அண்ணப்ப சுவாமி கோவில். வருடம் ஒரு முறை பொங்கலன்று மட்டுமே இந்தக் கோவில் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இங்குள்ள 140 படிகளில் ஏறிச்சென்று வழிபாடு நடத்த ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனுமதியில்லை.

பெங்களூரிலுள்ள ராமகிருஷ்ண மடம் அருகே உள்ளது கவி கங்காதேஸ்வரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று சூர்யப்பாதையில் மாற்றம் ஏற்படும் நேரமான மாலை 5.45 முதல் 6 மணி வரை ஒரு விந்தையான நிகழ்வு ஏற்படுகிறது. அந்த நேரம் குகைக்கோவிலுள்ளே மூலவரின் மீது சூரிய ஒளி விழுகிறது. அடுத்து சிவ லிங்கத்தின் மீது முழுவதுமாகப் பரவி  பின் மறைகிறது. பொங்கல் நாளில் சூரிய பூஜை காணும் இந்த விக்ரகத்தை வணங்கினால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை!

மாட்டுப்பொங்கல்:

அன்று அதிகாலை திருவண்ணாமலையில்  அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் மூன்று முறை வீதி உலா வருவார்கள். அன்று மாலை ராஜ வீதியிலுள்ள‌ திருவூடல் வீதிக்கு எதிர் எதிராக இருவரும் நிற்பார்கள். பின் அண்ணாமலையார் அம்மனை நோக்கி வர, அம்மன் சுவாமியைக் கடந்து செல்வார். கோயில் கருவறை சென்று அடைந்து கொள்ள, இறைவன் வந்து சமாதானம் செய்வார். இதற்கு 'திருவூடல்' என்று பெயர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்கள் வாக்கை சிறந்து விளங்கும் என்பது ஐதீகம்!!

பொங்கல் நினைவுகள்:

பல வருடங்களுக்குப்பின்பு பொங்கலுக்கு தமிழ்நாட்டில் இருக்கிறேன். இளம் வயதில் பெற்றோருடன் பொங்கல்! அப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்துக்களை தபால்காரரிடமிருந்து வாங்குவதற்கு எனக்கும் என் இளைய சகோதரிக்கும் தனிப்போட்டியே நடக்கும்.

புகுந்த வீடு கிராமத்தில் என்பதால் மாமியாரும் கொழுந்தனார்களும் சேர்ந்து பொங்கல் கொண்டாடியதும் மாட்டுப்பொங்கலை பெரிய விசேஷமாகக் கொண்டாடியதும் கன்னிப்பொங்கலன்று வீட்டுப் பெண்கள், நண்டு சிண்டுகளுடன் மாலையில் கட்டு சாதங்களுடன் ஆற்ற‌ங்கரைக்குச் சென்று  ரசித்து சிரித்து, சாப்பிட்டு வந்ததும் இன்னும் பசுமையாக, இனிமையாக மனதில் நிறைந்திருக்கிறது!

அப்புறம் வெளிநாட்டில், பாலைவன நாட்டில் பொங்கல்! மனைவி, மக்களைப்பிரிந்து தனிமையில் வாடிக்கொண்டிருக்கும் நண்பர்களையெல்லாம் அழைத்து பொங்கல் விருந்து அளிப்பது வாடிக்கையானது. எல்லோருமே பொங்கலன்று அலுவலகம் செல்வார்கள் என்பதால் விடியற்காலை நான்கு மணிக்குக் குளித்து பொங்கல் செய்ய ஆரம்பித்தால் காலை ஏழு மணிக்குள் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு, ஆவி பறக்க இட்லி, சட்னி என்று தயாராகி விடும். ஏழு மணியிலிருந்து நண்பர்கள் சாப்பிட வருவார்கள். இப்படி பல வருடங்கள்! நண்பர்கள் எல்லாம் மறுபடி தமிழ்நாட்டிற்கு திரும்பிய பிறகு, இளைய தலைமுறைகள் அதிகம் பழக்கமில்லாமல் இந்தப் பழக்கமும் மெல்ல மெல்லக் குறைந்தது.

தற்போதைக்கு புதிய இல்லப் பணிகளுக்காக தஞ்சையில் ஒரு சில மாதங்கள் தங்க இருப்பதால் பல வருடங்களுக்குப்பிறகு தஞ்சையில் குடும்ப நண்பர்களுடன் பொங்கலைக் கொண்டாடுகிறோம்!

நீங்களும் தைப்பொங்கலை மனதிற்கு இனியவர்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்!! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!








பொங்கல் வாழ்த்து நன்றி கூகிளுக்கு!
 

Tuesday, 6 January 2015

ராஜராஜனின் 'தாராசுரம்'!

சில தினங்களுக்கு முன் தாராசுரம் சென்றிருந்தேன். ஏழெட்டு வருடங்களுக்கு முன் சினேகிதியருடன் பார்த்த அனுபவம் இருக்கின்றது.  சோழ மன்னர் இரண்டாம் ராஜராஜன் கட்டிய இந்தக்கோவிலின் அழகைக் காண இரண்டு கண்கள் போதாது. நாங்கள் சென்ற முறை சென்ற போது கோவில் தனித்து, யாருடைய வருகையுமற்று நின்றது. இப்போதோ சுற்றிலும் புல்வெளி வளர்க்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, வாகன‌ங்கள் அணிவகுப்பும் மக்கள் திரளுமாய் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் கூடவே இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது. ஒவ்வொருத்தரும் தனித்தனியே சொல்லிச்சொல்லி ரசித்து, ஒவ்வொரு சிற்பத்தையும் வியந்து பார்த்தார்கள். இப்போது நாமும் தாராசுரத்திற்குச் செல்லலாம்.


தஞ்சையிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும்போது, கும்பகோணத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு இருக்கும்போது தாராசுரம் வருகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து கட்டிய கோயிலே தாராசுரம் ஆகும். இக்கோவிலும், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலும், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலும் அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.
இரண்டாம் இராசராசன் எடுப்பித்த காரணத்தால் இராசராசேச்சுரம் என்றும் தாரன் என்னும் அரக்கன் வழிபட்டதால் தாராசுரம் என்றும் ஐராவதம் என்னும் இந்திரனுடைய வெள்ளை யானை வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமாதலால் இத்தலம் ஐராவதேச்சுரம் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது.


ஒரு சமயம் யமன் முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தில் இறங்கி நீராடினான். உடன் வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு.


இந்திய சிற்பக் கலைக்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாகத் தாராசுரம் திகழ்கிறது
 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.


இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.


வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலது புறம் அமைந்துள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். கோபுரம் ஐந்து நிலை மாடங்களுடன் 85 அடி உயரம் உள்ளது.தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது.63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.



நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து ஒரு கல்லை உருட்டி விட்டால் அது ஒவ்வொரு படியிலும் உருளும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன. தற்போது சில படிகள் சிதிலமடந்திருப்பதால் படிகளைச் சுற்றி இரும்புக்கதவுகளால் மூடி வைத்திருக்கிறார்கள்.


ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.



குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.



கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவரையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை சோழர்களின் சைவப்பற்றுடையவன் இரண்டாம் இராஜராஜன் என்பதைக் காட்டும்.

கூர்ந்து பார்த்தால் ஒரு முகத்திற்கு மூன்று உடல் இருப்பது தெரியும்!!
கோயிலின் முன் ரத மண்டபத் தூண்கள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கதைச் சொல்லும் கருவூலமாகத் தோன்றுகின்றன. ராமாயண, மகாபாரத கதைகள், ரதி மன்மதன் கதைகள், பரத நாட்டிய கர்ணங்கள், சிவபுராணக் கதைகள் என்று எண்ணிலடங்கா கதைகளை சொல்கின்றன சிற்பங்கள்.
சிரித்த முகத்துடன் அன்னம் பாலிக்கும் அற்புத அன்னபூரணி, கண்ணப்பர், கோர பாவத்துடன் தோன்றும் அகோர வீரபத்திரர், பறவை மிருகம் மனித உடலுடன் சரபேஷ்வரர், தென் புறத்தில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்த கோலத்துடன் பரந்து விரிந்த முக அமைதியுடனும் கிரேக்க சுருள் முடியுடன் கூடிய தெட்சினாமூர்த்தி சிற்பம் போன்ற பெரும் பெரும் சிற்பங்களின் பேரழ்கை இங்கு காணலாம்.


 ஒவ்வொரு தூணின் நான்கு பட்டைகளிலும் சிற்றோவியங்கள் போல் ஆயிரக்கணக்கான புடைப்புச் சிற்பங்கள். பார்த்துப் பார்த்து பிரமிக்கவும் பரவசப்படவும் வைக்கும் சிறு சிறு பிரமாண்டங்கள்! ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒரு அம்சம் அரிதான அற்புதமாகத் திகழும். ஆனால் அரிதும் அழகும் நிரம்பிய சிற்பங்களை இந்த ஒரே ஆலயத்திற்குள் கொட்டி வைத்திருக்கிறார்கள் சிற்பிகள்.
தற்போது தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமான இக்கோயிலைத் தொல்பொருள் துறையினர் அழகு வாய்ந்த இதன் பழமையைப் பாதுகாத்து வருகின்றனர்.



மூன்றாம் குலோத்துங்கச் சோழனும் இந்தக் கோயிலில் புதிதாக பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான். ஆரம்பத்தில் பல கோபுரங்களுடன் கூடிய பிரகாரங்கள் இருந்ததாக தெரிகிறது. ஆனால் இப்பொழுது கோபுரத்துடன் கூடிய ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே இருக்கிறது.



இந்தக் கோயிலுக்கும் இதற்கு முற்பட்ட தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கும் பல பொதுவான ஒற்றுமைகள் உண்டு. ஆனால், இந்தக் கோயில், ஒவ்வொரு பகுதியிலும் கற்சிற்ப வேலையில் உருவங்கள் அமைப்பதிலும் அளவு கடந்த செல்வமும் நேரமும் செலவிடப்பட்டு, கலைஞர்களின் திறமை மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.