Wednesday 6 November 2013

மாங்கல்ய பலமருளும் மங்கள நாயகி!!

சென்ற முறை மயிலாடுதுறைக்கு என் சினேகிதியுடன் சென்ற போது, வழியில் இருக்கும் திருமங்கலக்குடியிலுள்ள‌ கோவிலைப்பார்க்க ஆசையாக இருக்கிறது என்றார். அதனால் கும்பகோணத்திலிருந்து கதிராமங்கலம் வழியாக திருமங்கலக்குடி கோவிலுக்குச் சென்றோம். குடைந்தையிலிருந்து ஆடுதுறை சென்று அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சென்றாலும் இக்கோவிலை அடைந்து விடலாம்.இக்கோவிலிலுள் உறைந்திருக்கும் இறைவி மங்களாம்பிகையை வழிபட்டால் மாங்கல்ய பலம் என்றும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

 

இத்தல வரலாறு சுவாரசியமானது. மன்னன் குலோத்துங்க சோழனின் காலத்தில் அலைவாணர் என்னும் அமைச்சர் மன்னனின் வரிப்பணத்தைக்கொன்டு திருமங்கலக்குடியில் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். அதையறிந்த மன்னன் சீற்ற‌மடைந்து அமைச்சரை சிரச்சேதம் செய்யுமாறு உத்தரவிட, அந்த அமைச்சரின் மனைவி திருமங்கலக்குடி இறைவி மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்ல்யக்காப்பு தருமாறு நெஞ்சுருகி அழுதாள். இருப்பினும் மன்னனின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, அமைச்சரின் உயிரற்ற‌ உடல் அவரின் கோரிக்கப்படி திருமங்கலக்குடியில் தகனம் செய்ய வேண்டி அங்கே எடுத்துச் செல்லப்பட்டது. அவர் உடல் திருமங்கலக்குடிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் மீண்டும் உயிர் பெற்றார். அதனால் அன்று முதல் தன்னை வழிபடுவோர்க்கு இறைவி மங்கள நாயகி மாங்கல்ய பலம் அருளுவதாக தல வரலாறு சொல்கிறது.

 

 
நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் அருகிலுள்ள சூரியனார் கோவில். தோஷத்தை நீக்கியதோ திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள  பிராணவரதேஸ்வரர். இதைப்பற்றியும் ஒரு சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது. 

காலவர் என்ற தவத்தில் சிறந்த முனிவர் தனக்கு வரப்போகும் தொழு நோயை அறிந்து அதைப்போக்க‌ முன்வினைப்பயன்களுக்கேற்ப பலன்கள் தரும் நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். நவக்கிரகங்களும் அவரது தவத்தின் பயனாய் நேரில் தோன்றி அவருக்கு குஷ்ட நோய் பீடிக்காதிருக்க வரமருளினார்கள். இதனை அறிந்த பிரம்மா கடும் சினம் கொன்டார். நவக்கிரகங்களை அழைத்து, " சிவனின் ஆணைப்படியும் கால தேவனின் வழிகாட்டுதலின் பேரிலும் அவரவர் வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்கள் மட்டுமே அளிக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கில்லை. எல்லையை மீறி தன்னிச்சையாக நடந்ததால் அதே தொழு நோய் உங்களை பீடிக்கட்டும்' என்று சாபமிட்டார். பிரம்மனின் சாபத்தினால் அவர்களுக்கு தொழு நோய் பற்றியது. பிறகு மன்னிப்பு கேட்டு அரற்றிய நவக்கிரகங்களுக்கு சாப விமோசனமும் தந்தார் பிரம்மன். அதன் படி நவக்கிரகங்கள் திருமங்கலக்குடி வந்து கடும் தவம் இயற்ற‌த்தொடங்கினர். 

 திருமங்கலக்குடிக்கு வந்த அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி கடும் உண்ணா நோன்பு இருந்து திங்கள் கிழமைகள் மட்டும் வெள்ளெருக்க இலையில் தயிர் சாதம் புசித்து நவக்கிரகங்கள் தவம் புரிந்து வந்தன. 79ம் நாள் இறைவனும் இறைவியும் காட்சி தந்து அவர்களின் தொழு நோயைப்போக்கி, 'அருகில் ஒரு ஆலயம் அமைத்து அங்கு வந்து உங்களை வழிபடுபவர்களுக்கு தோஷங்களைத்தீருங்கள்' என்று உபதேசித்தார்கள். காலவ முனிவரும் தன்னால் இத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருந்தி, நவக்கிரகங்களுக்கு அருகில் ஒரு கல் தொலைவில் ஒரு ஆலயம் அமைத்துத் தந்தார். அதுவே புகழ் பெற்ற சூரியனார் கோவில் ஆயிற்று. அதனால் திருமங்கலக்குடியை வழிபட்ட பிறகே சூரியனார் கோவிலை வழிபட வேன்டும் என்பது தொன்று தொட்டு வந்த‌ மரபாக உள்ளது.
 


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோயில்களில் காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால், இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோத்ச‌வத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. மங்களாம்பிகை என்ற‌ மங்களநாயகி அம்மன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார் 

இறைவன் பிராணவரதேஸ்வரர் என்றும் பிராணநாதேஸ்வரர் என்றும் பிராணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை என்றும் மங்கள நாயகி என்றும்  அழைக்கப்படுகிறார். 

உடலில் நோயுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இறைவனுக்கு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நிவேதனம் செய்து அதை சாப்பிட்டு வந்தால் வியாதிகள் நீங்கப்பெறுவார் என்பது இங்கு தொடர் வரலாறு! 

இத்தலம் அப்பர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். ஊர் மங்கலக்குடி, அம்பாள் மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம், மங்கள விநாயகர் என மங்களமே உருவாக இருப்பதால் இது, பஞ்ச மங்களத்தலம் எனப்படுகிறது.

 

 


16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...


"மாங்கல்ய பலமருளும் மங்கள நாயகி!!"

பற்றிய செய்திகளும், புராண வரலாற்றுக்கதைகளும் கேட்க சுவாரஸ்யமாக உள்ளன.

படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

Menaga Sathia said...

தரிசனத்திற்க்கு மிக்க நன்றிம்மா!! இப்போ தான் இந்த கோவிலைப்பறி கேள்விபடுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

புதிய தகவல்கள்.....

படங்களும் நன்று.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

RajalakshmiParamasivam said...

மாங்கல்யத்திற்கு காப்பளிக்கும் மங்கள் நாயகி பற்றிய செய்திகள் அறிந்து கொண்டேன். மிகவும் அருமையான படங்கள்.
நன்றி பகிர்விற்கு.

கோமதி அரசு said...

பஞ்ச மங்களத்தலம் எனப்படுகிறது.
மாங்கல்யம் காக்கும் மங்கள நாயகி
என்பது உண்மை.
என் வாழ்க்கையில் எனக்கு அருள்புரிந்த தாய்.
அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள்.
எங்கள் வீட்டுக்கு வரும், உறவினர்கள், நண்பர்களுடன் பலமுறை சென்று தரிசனம் செய்து இருக்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஆலய தரிசனம்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே. தங்களிடமிருந்து இது போன்ற பதிவினை முதல் முறையாகக் காணுகின்றேன் என நினைக்கின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

அருமையான பதிவி மனோ.
அதுவும் வெள்ளிக் கிழமை படிக்க நேர்ந்தது என் பாக்கியம்.
விதவிதமான பிரார்த்தனைகள். வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் என்பது புதிதாக இருக்கிறது.
சேங்காலிபுரம் அனந்தராமதீக்ஷிதர் கும்பகோணத்தைச் சுற்றி இருக்கும் கோவில்களுக்கு என்று பரிபூரண ஸ்லோகங்களை வழிபாடு செய்யவே எழுதி இருக்கிறார். அதில் இந்த மங்களாம்பிகை ஸ்தலமும் ஒன்று.

அனைவரும் அன்னையின் அருளால் சுகமே பெறப் பிரார்த்திக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

இந்த ஆலயம் மிக பழமையானது மட்டுமல்லாமல் கூட்டமில்லாமல் அமைதியானதும் கூட! நின்று ரசித்து வரலாம் மேனகா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி ராஜலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கோமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இதயம் நிறைந்த நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! இதற்கு முன் தஞ்சை பெரிய கோவில் மற்றும் வேறு சில கோவில்களைப்பற்றியும் பதிவுகள் எழுதியிருக்கிறேன். ரசனைக்கு எல்லையேது?

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டத்திற்கு அன்பார்ந்த நன்றி வல்லி சிம்ஹன்!