Monday 6 May 2013

காலங்கள் வரைந்த கோலங்கள்!!!!




வெளியே சென்று திரும்பிய என் கணவரின் கைகளில் இரண்டு திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. ' தபால் பெட்டியில் கிடந்தன. எடுத்து வந்தேன்' என்றார்கள். யாரென்று கவனித்ததில் இரண்டுமே தூரத்து உறவினர்களின் பெண்களின் திருமணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தகவலுமில்லை. எந்தக் கடிதமோ, அழைப்போ எதுவுமேயில்லை. உலகம் தான் எத்தனை சுருங்கி விட்டது!

அந்தக் காலத்தின் திருமணங்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை குதூகலம்! இரன்டு நாட்களுக்கு முன்னரேயே விருந்தினர்கள் வருகையாலும் வீடெங்கும் புன்னகைக்கும் மாக்கோலத்தாலும் உற்சாகம் ஆரம்பமாகி விடும். பலகாரங்களின் சுவையும் வெல்லப்பாகின் மணமும் குழந்தைகளின் கூக்குரலும் விளையாட்டுமாக கல்யாண வீடே களை கட்டும். மாமன் பத்திரிக்கை எப்படி வைப்பது, அழைப்பிதழுடன் என்னென்ன வரிசைப்பொருள்கள் வைத்து அழைப்பது என்று பார்த்துப் பார்த்து செய்வார்கள். இப்போதோ, கோலம் போடக்கூட காண்ட்ராக்ட் வந்து விட்டது. உறவினர்களெல்லோரும் கூடி மகிழும் விசேடமாக இல்லாமல் மொய் எழுதி கணக்குப்பார்க்கும் சம்பவமாகவே மாறி விட்டது இன்றைய திருமணங்கள். அதுவும் அவை ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, போகக்கூடிய குறைந்த அளவு தூரமாக இருந்தால் மட்டுமே குடும்பத்தோடு போவது இன்றைய வழக்கமாகி விட்டது. அழைப்பிதழ் கவரின் மேலே பெயர் கூட எழுதாது கொண்டு வந்து கொடுத்து விட்டு, ‘ இந்த அழைப்பிதழுக்கு மட்டும் எத்தனை செலவு செய்திருக்கிறேன் ’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளுபவர்கள் தான் இன்று அதிகம்!  ' இது என் வீட்டு கல்யாணம். நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது எனக்கு மிகவும் நிறைவையளிக்கும் விஷயம்' என்று சொல்வது இன்றைக்கு மிகவும் அரிதாகி விட்டது.

சமீபத்தில் படித்த வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

‘ஒரு காக்கை இறந்து விட்டால்கூட மற்ற காக்கைகள் கத்தியபடி கூட்டமாய் வட்டமிடும். பறவையைக் கண்டு விமானம் கண்டு பிடித்த நம்மால் பறவைக்கு இருக்கும் உணர்வை. பின்பற்றக்கூட தோன்றுவதில்லையே!

கூட்டுக்குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லாமலில்லை. பெரியவர்களிடையே அவ்வப்போது நீரு பூத்த நெருப்பாய் பிரச்சினைகளும் கோபதாபங்களும் வந்து போய்க்கொண்டு தானிருக்கும். ஆனால் குழந்தைகள் பகிர்ந்துண்ணவும் மரியாதை கொடுத்து வளரவும் பணிவையும் அன்பையும் புரிந்தும் தெரிந்தும் வளர்ந்தார்கள் அன்று!

துக்கத்திலும் சந்தோஷங்களிலும் மனப்பூர்வமான உணர்வுகள் அன்றைக்கு இருந்தன! நிலாவையும் காக்கை குருவியையும் காண்பித்து சோறு ஊட்டும்போது, உணவோடு உணர்வுக்கும் சேர்த்து பல நல்ல செய்திகள் கதைகள் வழியாக புகட்டப்பட்டது. இன்றோ குழந்தைகள் லாப்டாப்பில் விளையாடிக்கொண்டும் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டும் சாப்பிடுகின்றன. என் புகுந்த வீட்டில் யார் வந்தாலும் என் மாமியார், கொழுந்தனார்கள் உடனேயே வெளி வந்து வாருங்கள் என்று வரவேற்று முடிந்ததும் வீட்டுக்குள்ளிருக்கும் பெண்கள் அனைவரும் வெளீயே வந்து ' வாருங்கள்' என்று வரவேற்போம். நாங்கள் முடிப்பதற்குள்ளேயே குழந்தைகள் எல்லோரும் வந்து வரவேற்பார்கள். இப்படி பழகி, எங்களையறியாமலேயே குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கித்தருகிறோம் என்பது வெளியில் மற்றவர் இல்லங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் பாராட்டுக்களில்தான் புரிந்தது. ஒரு நாள் தெரிந்தவர் இல்லத்திற்குச் என்றிருந்தேன். அந்த வீட்டுக்குழந்தைகள் டிவி பார்த்த வண்ணம் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. என்னைப்பார்த்ததும் ஒன்று ' யார் நீ' என்றது. இன்னொன்று ' அம்மா இங்கே வா, யாரோ வந்து நிற்கிறார்கள்' என்றது. குழந்தைகளை நான் என்றுமே தப்பு சொல்வதில்லை. பிரபல பாடல் சொல்வது போல ' எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!' என்ற வரிகள் தான் நிதர்சனமான உண்மை!

என் மகன் பிறந்த போது, இங்கிருந்த என் கணவருக்கு செய்தி தெரிவிக்க தந்தி கொடுத்தார்கள் வீட்டில். அது என் கணவருக்கு கிடைக்க 10 நாட்களாயின. ஆனால் இன்றைக்கு என் மருமகளுக்கு குழந்தை பிறந்த போது, உணர்வு வந்ததுமே மொபைல் ஃபோனிலிருந்து மகனும் மருமகளும் பேசிக்கொள்ள முடிந்தது! மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள் முடிந்தது.

மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை! வாழ்வியலுக்கு சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் விஞ்ஞான வடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தானிருக்கின்றன. ஆனால் எந்த மாற்றங்களால் நல்லவைகள் தடம் மாறுகின்றனவோ, கலாச்சாரம் அழிகின்றதோ, அவை நல்ல மாற்றங்கள் நிச்சயமாக இல்லை!

தொடரும்!
படங்களுக்கு நன்றி: கூகிள்
 

43 comments:

Angel said...

எந்த மாற்றங்களால் நல்லவைகள் தடம் மாறுகின்றனவோ, கலாச்சாரம் அழிகின்றதோ, அவை நல்ல மாற்றங்கள் நிச்சயமாக இல்லை! //

மிக அருமையாக சொன்னீங்க அக்கா .

ப.கந்தசாமி said...

உண்மையான உணர்வுகள். நினைவுகளைத் தூண்டிவிட்டன.

Seeni said...

nalla muficheenga amma...!

கோமதி அரசு said...

அந்தக் காலத்தின் திருமணங்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை குதூகலம்! இரன்டு நாட்களுக்கு முன்னரேயே விருந்தினர்கள் வருகையாலும் வீடெங்கும் புன்னகைக்கும் மாக்கோலத்தாலும் உற்சாகம் ஆரம்பமாகி விடும். பலகாரங்களின் சுவையும் வெல்லப்பாகின் மணமும் குழந்தைகளின் கூக்குரலும் விளையாட்டுமாக கல்யாண வீடே களை கட்டும். //

ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. முன்பு எல்லோரும் நான்கு நாட்களுக்கு முன் வந்து வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு கல்யாண வீட்டுக்காரர்களுக்கு உதவுவார்கள்.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் கதைகள் பேசி மகிழ்வார்கள். ஆனால் இன்று எல்லோருக்கும் வசதி தேவைபடுகிறது, தனிமை தேவைபடுகிறது, கல்யாணத்திற்கோ வேறு விசேடங்களுக்கு வருபவர்கள் எனக்கு ஓட்டலில் அறை போட்டுவிடு என்று முன்பே சொல்லிவிடுகிறார்கள். கேட்டால் தொந்திரவு கூடது அல்லவா என்கிறார்கள்.

திருமணத்திற்கு சிலர் நேரில் போய் கூப்பிட்டால் தான் வருவார்கள் சிலர் பத்திரிக்கையுடன் தனியாக இது உங்கள் வீட்டுக் கல்யாணம் முன்பே வந்து சிறப்பிக்க வேண்டும் என்றால் தான் வருவார்கள்.

அக்கம் பக்கத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து போய் அழைத்தால் தான் வருவார்கள் பெண் மட்டும் வந்து அழைத்தார்கள், ஆண் மட்டும் வந்து அழைத்தார்கள் என்று குற்றம் சொல்வார்கள்.
நீங்கள் சொல்வது போல் கோலங்கள் போடுவது, வரவேற்பு , பந்தி விசாரிப்பு எல்லாவற்றுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.
வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு பத்திரிக்கை ஸ்கேன் செய்து மெயிலில் அனுப்புதல் நடக்கிறது.
மிக நெருங்கியவர்கள் இணையம் மூலம் நேரடி ஒலிபரப்பு நடக்கிறது. காலம் மாறுது கருத்து மாறுது.
உங்கள் காலங்கள் வரைந்த கோலங்கள் அருமை. கோலம் மிக அழகு. கோலம் என்றவுடன் நினைவுக்கு வருது கல்யாணவீட்டில் போட்ட கோலத்தை ரசித்து பார்த்து யார் போட்டது என்று கேட்டு பாராட்ட நேரம் இருக்கா இப்போது !


திண்டுக்கல் தனபாலன் said...

இன்று எல்லாமே அவரசம் தான்... (போய் செல்வது உட்பட...)

பல மாற்றங்கள் நிகழ்ந்து சீரழ்ந்து விட்டதும் காலத்தின் கொடுமை...

aavee said...

உண்மைதான்.. பத்து வரிக் கடிதம் கொடுத்த சுகத்தை செல்பேசியின் பத்து நிமிடங்கள் கொடுப்பதில்லை தான்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//‘ஒரு காக்கை இறந்து விட்டால்கூட மற்ற காக்கைகள் கத்தியபடி கூட்டமாய் வட்டமிடும். பறவையைக் கண்டு விமானம் கண்டு பிடித்த நம்மால் பறவைக்கு இருக்கும் உணர்வை. பின்பற்றக்கூட தோன்றுவதில்லையே! //

மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். இன்றைய மாற்றங்களில் நிறைய நல்லதும் உள்ளன கெடுதலும் உள்ளன.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் தலைப்புக்கு ஏற்றவாறு காட்டியுள்ள கோலம் மிக அழகு. நல்லதொரு படத்தேர்வு.

அருமையான கட்டுரை. சிந்திக்க வைக்கிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

உஷா அன்பரசு said...

திருமண விழா பற்றிய நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை. எந்திரமயமான கால ஓட்டம்தான் இதற்கு காரணமாயிருக்கும் என்று நினைக்கிறேன். எங்களுக்கே கூட உறவினர்கள் விசேஷம் என்றால் ஞாயிறு விடுமுறையாக இருந்தால்தான் கலந்து கொள்ள வசதியாக இருக்கிறது.காலமாற்றத்தை என்ன செய்வது? வாழ்க்கை சுருங்கிகொண்டுதான் போய்கொண்டிருக்கு..

Radha rani said...

முன்பெல்லாம் நல்ல காரியமோ கெட்ட காரியமோ பெரியவர்களில் இருந்து குட்டிகள் வரை அனைவரும் வந்துவிடுவர். இப்பொழுது வீட்டிற்கு ஒருவர் வந்து கலந்து கொள்கிறார்கள். அண்ணன் , தம்பி, அக்கா , தங்கை குழந்தைகளே மாமன் யார் ,அத்தை யார் சித்தப்பா பெரியப்பா யார்,யார்.. என்ற விபரம் புரியாமல் எங்கேயோ போயிட்டிருக்கு காலம்..

Anonymous said...

விஞ்ஞான , மன மாற்றங்கள் எங்கே போய் முடியும் எனத் தெரியவில்லை.
நீங்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைவரின்எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

VijiParthiban said...

திருமண விழா பற்றிய நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை....

நிலாமகள் said...

இன்றைய சூழலை தோலுரித்துக் காட்டுகிறது உங்கள் ஆதங்கம். எல்லாம் தாண்டி அழைத்த மரியாதைக்கும் அன்புக்குமாக போகும் கல்யாணங்களிலும் மேடையை விட்டு நெருங்கிய உறவுகள் இறங்குவதே இல்லை. நாமே உட்கார்ந்து, நாமே சென்று இடம்பிடித்து சாப்பிட்டு,... பரிசளிக்க மேடை செல்லும் போது ஒப்புக்கு விசாரிக்கப் படுவோம். சாப்பிட்டீங்களா... சாப்பிட்டுப் போங்க.

உறவுகளுக்கு ரூம் போடும் செலவு மண்டப செலவையும் விஞ்சிவிடுகிறது.

நிலாமகள் said...

காலத்தின் கோலத்தில் பிசகி விழுந்த புள்ளிகளை புறக்கணித்து நேர்த்தியை தேடி மனசை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு.....

காலத்தின் பிடியில் எல்லா நல்ல பழக்கங்களும் அகப்பட்டு நசுங்கிவிட்டன என்று தான் தோன்றுகிறது.....

மகேந்திரன் said...

நிதர்சனத்தை...
நம் அடையாளத்தை குலைக்கும்
எந்த மாற்றமும் தேவையில்லை என்ற
உங்கள் கருத்தினை நான் வழிமொழிகிறேன் அம்மா...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு ந‌ன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சீனி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி கோமதி! உறவினர்கள் எல்லாம் வேலைகளை இழுத்துப்போட்டுக்கொன்டு பகிர்வதென்பதெல்லாம் இன்றைக்கு அரிய காட்சியாகி விட்டது. வந்து உதவுகிறாயா என்று கேட்டால்கூட சரியான பதில் கிடைப்பதில்லை! நீங்கள் சொன்ன மாதிரி இரவு முழுதும் கதைகள் பேசிய காலமெல்லாம் மலையேறி விட்டது. சம்பந்தப்பட்டவர்கள் வந்து கூப்பிடாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து கூப்பிட்டாலும் கூட வருவதில்லை.

எங்களுக்குத் தெரிந்த ஒரு கல்யாணத்தில் காசு கட்டுபவர்களையெல்லாம் ஒரு பெண் வந்து வந்து எத்தனை கிராம் என்று கேட்டு, ஒரு ஸ்டிக்கர் பின்னே எழுதி அந்த காசுக்களின் பின்னேயே ஒட்டிக்கொண்டே இருந்தது. வருகின்ற வருமான‌த்தில் எத்த்னை கவனம் பாருங்கள்!
வ‌ருகைக்கும் இனிய‌ க‌ருத்துக்க‌ளுக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி கோம‌தி!

கீதமஞ்சரி said...

திருமண வைபவங்கள் பற்றிய தங்கள் ஆதங்கம் எவராலும் மறுக்க முடியாத உண்மை. உலகமும் சுருங்கிவிட்டது. மனங்களும் சுருங்கிவிட்டன.

நீங்கள் சொல்வது போல் உறவினர் வீடுகளில் வரவேற்பு மட்டுமல்ல, விடைபெறும்போதும் அந்நாளில் ஒட்டுமொத்தக் குடும்பமும் வாசல்வரை வந்து நின்று தெருமுனை திரும்பும்வரை கையசைத்து வழியனுப்பிய காலங்கள் போய் நிலைப்படி தாண்டியதுமே பட்டென்று கதவடைக்கும் வழக்கமாகிவிட்டது. காலத்திற்கேற்ப நாமும் நம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளத்தான் வேண்டும்போலும்.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது போல இந்த அவசர யுகத்தில் அழகை ரசிப்பதற்கும் அர்த்தமுடன் வாழ்க்கையை வாழ்வதற்கும் குழ‌ந்தையை மென்மையாக வளர்ப்பதற்கும், எத‌ற்குமே நேரமில்லாமல்தான் போய்க்கொண்டிருக்கிறது தனபாலன்! வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது உண்மை தான்! இந்த அவசர யுகத்துடன் பழகிப் பழகி, எதற்காவது எழுத பேனாவைக்கையிலெடுத்தால் கூட வலி வருகிறது. நானும் என் மாமியாரும் பத்து பக்கங்களுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டதெல்லாம் நினைவில் எழுகிறது! வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி கோவை ஆவி!

மனோ சாமிநாதன் said...

நல்லனவற்றை ரசிக்கும் சதவிகிதத்தை விட கெட்டதை மகிழ்வாக ஏற்கும் ச‌தவிகிதம்தான் அதிகமாக இருக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த ந்ன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு செலுத்துவ‌திலிருந்து, பகிர்ந்து கொள்வது வரை எல்லாமே சுருங்கிக்கொன்டுதான் இருக்கிற‌து உஷா!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ராதா! இப்போதுள்ள‌ குழந்தைகளுக்கு சித்தப்பா, பெரியப்பா, மாமா உறவுகளைப்பற்றியோ, தன் முக்கியத்துவம் பற்றியோ எதுவுமே தெரிவதில்லை! உறவுகள் சுருங்கிப்போய்க்கொன்டிருக்கின்றன!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி ஸ்ரவாணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் எழுதியிருக்கிறீர்களே நிலா, இடம் பிடித்து சாப்பிடுவதைப்பற்றி, அது நூற்றுக்கு நூறு உண்மை! வெளி நட்டிலேயே வாழ்வதால், இங்கு வந்த புதுசில், நம் ஊரில் ஒரு கல்யாணத்துக்கு வர வாய்ப்பு கிடைத்த போது அத்தனை சந்தோஷம்! இப்படித்தான், கல்யாணம் முடிந்ததும் அவரவர் சாப்பிடப் பறக்கிறார்கள்! எப்படி யாரும் அழைக்காமல் சாப்பிடப்போவது என்று நான் விபரம் புரியாமல் சொல்லிக்கொண்டிருந்தேன் அப்போது!

அழ‌காக பின்னூட்டம் எழுதியிருப்பதற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

//காலத்தின் பிடியில் எல்லா நல்ல பழக்கங்களும் அகப்பட்டு நசுங்கிவிட்டன என்று தான் தோன்றுகிறது//

மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரர் வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வழிமொழிந்ததற்கும் மனம் கனிந்த நன்றி மகேந்திரன்!!

Asiya Omar said...

எத்தனை அருமையான உணர்வுள்ள பகிர்வு. அத்தனையும் ஒவ்வொரு நாளும் அனுபவமாய் வந்து கொண்டு தான் இருக்கிறது..நாம் இது மாதிரி அந்தக் காலத்தில் என்று இந்தக் காலத்தில் ஏதாவது பேசப்போனால் பழமை பேசியாகிடுவோம்.

//மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை! வாழ்வியலுக்கு சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் விஞ்ஞான வடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தானிருக்கின்றன. ஆனால் எந்த மாற்றங்களால் நல்லவைகள் தடம் மாறுகின்றனவோ, கலாச்சாரம் அழிகின்றதோ, அவை நல்ல மாற்றங்கள் நிச்சயமாக இல்லை! //

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அக்கா.இந்தப் பகிர்வை வாசித்ததில் ஒவ்வொரு வரியையும் கோடிட்டு காட்டும் அளவு செய்தி பொதிந்து இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

ஸாதிகா said...

அருமையான பகிர்வு.காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்..இந்த பாடல் நினைவுக்கு வருகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையான உணர்வுகள்

Ranjani Narayanan said...

காலங்கள் வரைந்த கோலங்கள் - தலைப்பே 'நச்'!
//எந்த மாற்றங்களால் நல்லவைகள் தடம் மாறுகின்றனவோ, கலாச்சாரம் அழிகின்றதோ, அவை நல்ல மாற்றங்கள் நிச்சயமாக இல்லை!//
மிகவும் சிறப்பான வரிகள்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

நிறைய மாறுதல்கள் வேதனை தருபவையாகத்தான் இருக்கின்றன. எனினும், ஒரு வாரக் கல்யாணங்கள் இன்று ஒரு நாள் சடங்காக மாறிவிட்டதற்கு விலைவாசியும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. போலவே பல தேவையற்ற சடங்குகள் - பெண்வீட்டினரின் செலவை அதிகரித்ததோடு, அவர்களின் சுயமரியாதையையும் பதம் பார்ப்பனவாக இருந்தன. மேலும், இன்று 90% மக்கள் அலுவலக வேலை பார்ப்பவர்களாக இருக்கும்போது, நாலு நாள் கல்யாணம், போக வர 2 நாள் என்று ஒரு வார லீவெல்லாம் எடுப்பது சாத்தியமில்லையே!!

மற்றபடி, குழந்தைகள் வளர்ப்பு குறித்து நீங்கள் சொல்லியிருப்பதை முழுதும் ஆமோதிக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

நாம் வெளி கேட்டைக்கூட தாண்டியிருக்க மாட்டோம், கதவை பட்டென்று சாத்துவது நம் நெஞ்சில் அடிப்பது போலத்தான் இருக்கும்! அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது சிலர் வீட்டுக்கு போய் விட்டால் அவ்வள‌வு தான்!
நிச்சயம் நீங்கள் சொல்வது போல மனசுகள் தான் ரொம்பவும் சுருங்கிப்போய்விட்டன கீதமஞ்சரி! எதிர்ப்பார்ப்புகளைக் குறைத்துக்கொன்டு வாழ பழகிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு அனுபவமும் இன்னுமே மூச்சை முட்டத்தான் செய்கின்றது!
வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி !

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நீன்ட கருத்துரைக்கும் அன்பு கனிந்த நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு ந‌ன்றி சகோதரி ரஞ்சனி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்களுக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

அன்றைய நாலு நாட்கள் கல்யாணத்துக்குக்கூட இத்தனை செலவு ஏற்பட்டதில்லை! இன்றைய திருமண‌ப்புடவையே 30000க்கு குறைந்து வாங்கினால் கெளரவப்பிரச்சினையாகி விடுகிறது! இன்றைக்கு தங்கம் விற்கிற விலையில் இத்தனை பவுன் வேண்டும் என்கிற நிபந்தனையும் நின்ற‌ பாடில்லை! சீர், செனத்தி விவகாரங்கள் அப்படியே தான் நிற்கின்றன! குறைந்து போனவை பாசமும் பற்றுதலும்தான்! அதைத்தான் நான் சொல்ல முயன்றிருக்கிறேன்!

Anonymous said...

இன்றைய மாற்றங்களில் நிறைய நல்லதும் உள்ளன கெடுதலும் உள்ளன.
Vetha.Elangathilakam.