Sunday 28 April 2013

ஹரிதாஸ்- ஒரு பார்வை!

இரு மாதங்களுக்கு முன்பே வெளி வந்திருந்தாலும் இப்போது தான் ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மனதை அங்கங்கே நெகிழ வைக்கிற, கண்கள் கலங்க வைக்கிற, உடலும் மனமும் செயல்களும் நன்றாக இருக்கிற நமக்கெல்லாம் அப்பால் மனம், உடல், செயல்கள் அனைத்திலும் குறைபாடுகள் உள்ள ஒரு உலகத்தைப்பற்றிப் புரிய வைக்கிற ஒரு அருமையான திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்பட்டது.படத்தைப்பற்றி மேலே சொல்லும் முன்னால் ' ஆட்டிஸம்' எனப்படும், இன்னும் பரவலாக அறியப்படாத, விழிப்புணர்வு தேவைப்படுகின்ற ஒரு நரம்பு சம்பந்தமான நோய் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேன்டும். நோக்கம் எதுவுமற்ற பார்வையுடன் எதிலும் சம்பந்தமில்லா செயல்பாடுகளுடன் தன் உணர்வுகளை வெளியே காட்டத்தெரியாது, அதிகம் பேசக்கூட தெரியாத மனிதர்கள் இவர்கள். யதார்த்ததிலிருந்து விலகி இருக்கும் இவர்களைப்புரிந்து கொள்ளாமல் உலகம் சில சமயங்களில் இவர்களை மன நிலை பிறழ்ந்தவர்களக வர்ணிக்கிறது

மன நிலைக்குறைபாடுள்ளவர்கள் கூட சில விஷயங்களை நன்கு புரிந்து கொள்ளுவார்கள். சிலரால் சுவையை கண்டு பிடித்து நன்றாக ருசித்து உண்ன முடியும். சிலர் தன் அறிவுக்குப்புலப்படாதவற்றைக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பார்கள். 37 வயதாகும் என் சகோதரி மகனும் மன நிலை பிறழ்ந்தவர் தான். ஆனால் வீட்டிலுள்ள எல்லோரைக்காட்டிலும் ஞாபக சக்தி அதிகம். சம்பந்தப்பாடாதவர்கள் யார் யாரையோ நினைவு வைத்துக்கொண்டு, திடீரென்று இன்று அவர்களுக்குப் பிறந்த நாள், வாழ்த்து சொல்லவில்லையா என்று கேட்கும் போது ஆச்சரியமாயிருக்கும்.  ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களுக்கோ தன் உணர்வுகளை வெளிப்படுத்தவே தெரியாது! மற்ற குழந்தைகளிடமிருந்து ஒதுங்கியே இருப்பது, வித்தியாசமானவற்றை ரசிப்பது, தான் சொல்ல நினைப்பதை மற்றவர்கள் கைப்பிடித்து எந்த வகையிலாவது உண‌ர்த்த முயல்வது என்று அவர்கள் தனி உலகமாக வாழ்கிறார்கள். அவர்களை நம் உலகத்திற்குள் இழுக்க மிகுந்த முயற்சியும் பொறுமையும் தேவை. இப்போதெல்லாம் இதற்கான பயிற்சிகளே சிகிச்சைகளாக பல இடங்களில் செய்து தருவது ஆறுதலான விஷயம் என்றாலும், ஒவ்வொரு முயற்சியிலும் பயிற்சியிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மட்டுமே முக்கியத் தேவை. இதற்கு வேறு எந்த வித சிகிச்சையோ மருந்து, மருத்துவமோ கிடையாது. தேவைப்படுவதெல்லாம் பெற்றோர்களின் பொறுமை, அன்பு, சகிப்புத்தன்மை மட்டுமே!  பெற்றோர், நண்பர்கள் கொடுத்த பயிற்சி, அன்பு, காண்பித்த அக்கறை இவற்றால் ஆட்டிஸ நிலை மாறி சாதனை செய்தவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அந்த‌ மாதிரி ஒரு சாதனையை தன் மகன் செய்ய வேன்டும் என்று ஆசைப்படுகிறவர் தான் இந்தக் கதையின் கதாநாயகன்.

ஒரு வார்த்தைக்கூட பேசத்தெரியாத, எப்போதும் முகத்தை சாய்த்து வைத்துக்கொண்டு, கண்கள் சுழல, எங்கோ மிதக்கும் விழிகளுடன் தன் உலகில் எப்போதுமே மூழ்கியிருக்கும் சிறுவன் ஹரி, மனதில் வலியுடன் தன் மகனின் நிலை மாறாதா என்று தவித்துப்போராடும் அவனின் அப்பா, ஹரியின் பேதமையாலும் அவனின் அப்பாவின் கண்ணியமான நடத்தையாலும் ஈர்க்கப்பட்டு, ஹரிக்கு ஒரு மானசீக தாயாய் கூடவே உதவிகள் செய்யும் டீச்சர் என்று மூன்று கதாபாத்திரங்களிடையே இந்தக் கதை சுழல்கிறது.என்கெளண்டர் அதிகாரியாக வரும் நடிகர் கிஷோர் தன் மகனை எப்படியாவது குணமாக்க வேண்டுமென்று துடிக்கிறார். அதனால் எல்லோரும் படிக்கும் மாநகராட்சிப்பள்ளியில் அவனை சேர்க்கிறார். இந்த மாதிரி தனித்தன்மையுடைய குழந்தைகளை சமாளிப்பதில் சினேகா வல்லவர் என்பதால் தலைமையாசிரியை ஹரியை சினேகாவின் வகுப்பிற்கே அனுப்புகிறார். டீச்சரான சினேகாவிற்கு அவர்கள் பால் கவனம் சற்று அதிகமாக படிகிறது. கிஷோர் நீண்ட விடுப்பில் இருந்தாலும் அவ்வப்போது வேலை விஷயமாக வெளியில் செல்லும் நேரங்களில் ஹரியை தன் வீட்டுக்கு அழைத்து வந்து உணவூட்டுவது, விளையாடுவது என்று ஹரியுடனான அன்பு சினேகாவிற்கு கூடுதல் நெருக்கத்தை அளிக்கிறது.. ஒரு முறை ஹரி காணமல் போய் சினேகா கண்ணீரும் புலம்பலுமாய் தவியாய்த்தவித்து அதன் பின் ஹரி திரும்பக் கிடைத்ததும் மனதளவில் ஹரியையும் கிஷோரையும் மிகவும் நெருங்கி விடுகிறார். ஹரிக்கு அம்மாவாக இருக்க விரும்புவதாய் நேர்மையுடன் கிஷோரிடம் சொல்லவும் செய்கிறார். ஆனால் வழக்கமான தமிழ் சினிமாவாக இல்லாமல், கிஷோர் அவரது விருப்பத்தை மறுத்து விடுகிறார் கண்ணியமாக!

ஒரு நாள் மகன் ஒரு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குதிரைகள் ஓடுவதை ரசிப்பதையும் அவற்றின் பின்னாலேயே ஓடுவதும் கண்டு பரவசப்படுகிறார் ஹரியின் தந்தை. அவனை ஒட்டப்பந்தய வீரனாகக்க முடிவு செய்கிறார். இதற்காக ஒரு பயிற்சியாளரிடம் செல்கிறார். அந்த பயிற்சியாளர் ஏளனமாகப் பேசி மறுக்கவே, அந்த அலட்சியமும் ஏளன வார்த்தைகளும் கிஷோருடைய உறுதியை மேலும் பலமாக்குகின்றன. தானே பயிற்சியாளனாகிறார். மகனுக்கு அசுரப்பயிற்சி கொடுக்கிறார்.. மெல்ல அவர் மகன் அந்த நூலைப்பிடித்துக்கொன்டு புரிந்து கொண்டு ஓட முயற்சிக்க அவர் மனதில் மட்டும் பரவசம் வரவில்லை. நம் மனதிலும் அதே பரவசம் எழுகிறது. அசுர வேகமாக அந்த ஓட்டம் மாறுகிற போது அந்த தந்தைக்கு மகிழ்வும் பெருமையும் போட்டி போடுகிறது.  அவனை ஏளனம் செய்த அதே பயிர்சியாளர் அருகே வந்து ' இவன் சாதாரண ஓட்ட பந்தய வீரனில்லை. மராத்தன் ஓட்டம் ஓடக்கூடிய திறமை உடையவன்' என்று சொல்லும்போது நம்மால் கண்கள் கலங்காதிருக்க முடியவில்லை!அந்த இறுதிக்கட்டம் வரும்போது, அவரின் மகன் அவரின் ஆசைப்படியே சினேகா டீச்சரின் துணையுடன் மைதானம் வந்து மராத்தன் ஓட்டத்தில் கலந்து கொள்கிறான். அதே நேரம் கிஷோர் அவரது எதிரிகளால் கொல்லப்படுகிறார். மைதானத்தில் ஹரியை ஓட வைப்பதும் மனப் பின்னணியில் அவரின் 'ஓடு ஓடு' என்ற குரலே! ஓடி முடித்ததும் மெதுவாக ஹரி முதன் முதலாக ' அப்பா' என்று வாய் திறந்து சொல்கிறான்! அதைக் கேட்டு, அவன் முதல் பரிசு வாங்குவதைப்பார்த்து சினேகா விம்மியழுகிறார்! படம் இப்படியே முடிகிறது..கனத்த மனதோடு தான் எழ முடிகிறது! பின்னாளில் சினேகாவின் வளர்ப்புப் பிள்ளையாக, ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக, முழு மனிதனாக அவன் மாறுகிறான்...அந்த நிலைiயில் தன் தந்தையை நினைத்து, அவர் தன்னை ஒரு முழு மனிதனாக ஆக்க பட்ட பாட்டை சொல்ல ஆரம்பிக்கும்போது கதை தொடங்கி அவன் அவரது இலட்சியத்தைப்பூர்த்தி செய்ததைச் சொல்கையில் கதை முடிகிறது!

இந்தக் கதையைத் தேந்தெடுத்து இத்தனை சிறப்பாக இயக்கியதற்கு முதலில் இயக்குனரைத்தான் பாராட்ட வேண்டும். ஹரியாக நடித்த சிறுவனை ஒரு நடிகனாக பார்க்கவே முடியவில்லை. படம் முழுவதும் அவனை ஆட்டிஸம் பாதித்த ஒரு இளங்குருத்தாகவே பார்க்க முடிகிற அளவிற்கு கதையோடு அவன் ஒன்றிப்போனானா அல்லது அப்படி நடிக்க வைத்தது இயக்குனரின் திறமையா என்று நமக்குள் விவாதம் ஏற்படுகிறது. டீச்சராக நடித்த சினேகாவும் தந்தையாக நடித்த கிஷோரும் அருமையாக செய்திருந்தாலும் ஹரி அவர்களுக்கு மேலே ஒரு படி போய் விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

சின்ன சின்ன குறைகள் படத்தில் இல்லாமலில்லை. நகைச்சுவை என்ற பேரில் சூரி போரடிப்பது, என்கவுண்டர் அதிகாரிகள் தண்ணியடித்து உருண்டு கிடப்பது போன்ற காட்சிகள், குத்துப்பாடு இவை எல்லாம் சில கரும்புள்ளிகள். இயக்குனருக்கு வியாபார நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, ‘ ஆட்டிஸம்’ என்று கொடிய பிரச்சினையை கதைக்களனாக வைத்துக்கொண்டு, இந்தப் பிரச்சினைக்ளுடன் போராடி வரும் பெற்றோருக்கு ‘ உங்கள் குழந்தையும் நிச்சயம் சாதனை படைக்கும்; என்ற உறுதியையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருப்பதற்காகவும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் தவிர்த்து அன்பும் சினேகிதமும் கூட அழகாக மலர முடியும் என்பதை மிக அழகாகக் காட்டியிருப்பதற்காகவும் இயக்குனர் குமாரவேலை மனதாரப் பாராட்டலாம்!!
 

 
 

41 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்படம் நான் இதுவரை பார்க்கவில்லை. இப்போது உங்களின் விமர்சனத்தை முழுவதும் படித்தேன்.

மிக அருமையாகப் பாராட்டி எழுதியுள்ளீர்கள்.

//‘ ஆட்டிஸம்’ என்று கொடிய பிரச்சினையை கதைக்களனாக வைத்துக்கொண்டு, இந்தப் பிரச்சினைக்ளுடன் போராடி வரும் பெற்றோருக்கு ‘ உங்கள் குழந்தையும் நிச்சயம் சாதனை படைக்கும்; என்ற உறுதியையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருப்பதற்காகவும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் தவிர்த்து அன்பும் சினேகிதமும் கூட அழகாக மலர முடியும் என்பதை மிக அழகாகக் காட்டியிருப்பதற்காகவும் இயக்குனர் குமாரவேலை மனதாரப் பாராட்டலாம்!!//

மிக்க மகிழ்ச்சி

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

படம் நல்லாவே வந்திருக்குன்னுதான் விமர்சனங்களும் வந்தது, உங்கள் பதிவைப் படித்தபின்புதான் படம் பார்க்கும் ஆவலும் மனதில் வருகிறது நன்றி.

கோமதி அரசு said...

ஹரிதாஸ் ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் வரிக்கு வரி அப்படியே நானும் உங்களுடன் வழி மொழிகிறேன்.
கண்களை குளமாக்கிய, மனதை கனக்க வைத்த படம்.
பெற்றோர்களின் பொறுமையும், சகிப்புதனமையும் தான் இந்த மாதிரி குழந்தைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும்.

//ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் தவிர்த்து அன்பும் சினேகிதமும் கூட அழகாக மலர முடியும் என்பதை மிக அழகாகக் காட்டியிருப்பதற்காகவும் இயக்குனர் குமாரவேலை மனதாரப் பாராட்டலாம்!!//

நீங்கள் சொன்னது போல் சில காட்சிகளை தவிர்த்து இது போல் நல்ல நட்பை காட்டிய இயக்ககுனர் குமாரவேலை பாராட்டலாம்.

இது போலவே மற்றொரு படம் பார்த்தேன் ’விண்மீன்கள்’ என்ற படம் இதையும் நீங்கள் பார்த்தால் அழகாய் விமர்சனம் செய்வீர்கள்.
அதுவும் மனதை நெகிழவைத்த படம் முடிந்தால் பாருங்கள்.

ஸ்ரீராம். said...

இது மாதிரி படங்கள் அரிதாகவே வருகின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் இந்நிலையில் இருக்கும் ஒரு பெண் குழந்தையை வளர்க்க அவள் பெற்றோர் - குறிப்பாக அம்மா - படும் பாடுகள் பார்க்கும்போது மனதில் கனம் வரும். சமீபத்தில் இம்மாதிரி நிலையில் இருந்து சற்றே தேறியுள்ள (கிருஷ்ணா என்று ஞாபகம்) எழுதிய y me? என்ற புத்தகத்தை வெளியிட்டு நீதியரசர் திருமதி பிரபா ஸ்ரீதேவன் எழுதியதைப் படித்தேன். அவர்களுக்கு மிக அதிக, அத்தியாவசியத் தேவை அவ்வப்போது ஒரு அன்பான தடவல்கள்தான் , அன்பான ஸ்பரிசம்தான் என்று சொல்லியுள்ளார்.

சமீபத்தில் எஸ். பாலபாரதி அவர்கள் கூட ஆட்டிசம் பற்றிப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

கீதமஞ்சரி said...

ஹரிதாஸ் படத்தைப் பார்த்தபோது எழுந்த உணர்வுகளை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். படத்தின் சிறப்பம்சங்களோடு ஆட்டிஸம் பற்றிய விவரங்களையும் தெளிவாக இணைத்தளித்தமை சிறப்பு. இதனால் இந்தக் குறைபாடு பற்றி இன்னும் பலருக்கு முறையாகத் தெரியவரும். நன்றி மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

இது வரை பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.

ஆட்டிசம் - எனது நண்பரின் மகனுக்கும் இருப்பதால் இதில் உள்ள சவால்கள் புரிகிறது.....

சீனு said...

// இன்று அவர்களுக்குப் பிறந்த நாள், வாழ்த்து சொல்லவில்லையா என்று கேட்கும் போது ஆச்சரியமாயிருக்கும். // உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்

அரங்கில் பார்க்காமல் தவறவிட்ட படம் என்பதை பின்பு தான் புரிந்து கொண்டேன்... எனக்கு மிகவும் பிடித்தது நெகடிவ் கிளைமாக்ஸ் தவிர்த்து
அருமையான விமர்சனம்

திண்டுக்கல் தனபாலன் said...

பல இடங்களில் மனதை கலங்க வைத்த படம்...

உணர்வுப்பூர்ணமான நல்ல விமர்சனம்... நன்றி...

உஷா அன்பரசு said...

நானும் கூட சமீபத்தில்தான் பார்த்தேன் இப்படத்தை. அருமையான படம். படம் பற்றிய உங்கள் பார்வையும் விமர்சனமும் மிக அருமை!

ராமலக்ஷ்மி said...

படத்தைப் பார்க்க எண்ணியிருந்தேன். உங்கள் விமர்சனம் மிக அருமை.

@ ஸ்ரீராம்,

ஆட்டிசம்: சில புரிதல்கள், புத்தக வெளியீட்டுக்கு இயக்குநர் குமாரவேலும் வருகை புரிந்து சிறப்பித்ததாய் வாசித்த நினைவு.

VijiParthiban said...

நான் இந்தப்படம் இதுவரை பார்க்கவில்லை.படம் பற்றிய உங்கள் பார்வையும் விமர்சனமும் மிக அருமை!
படம் பார்க்கும் ஆவலும் மனதில் வருகிறது நன்றி அம்மா .

நிலாமகள் said...

நானும் பார்த்தபோது அனுபவித்ததை அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.

இப்படியான பாதிப்பு நேர்ந்த குழந்தைகளை வளர்த்தெடுக்க பல தாய்மார்கள் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார்கள் படத்தில் ஒரு தந்தை தன வேலையையும் விட்டு அவனை யாரும் பைத்தியம் என்று சொல்லிவிடக் கூடாதென்றும் அவன் தனித்திறனை வளர்க்கவும் பாடுபட்டது பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.

Menaga Sathia said...

உங்களின் விமர்சனத்தை படித்ததும் நல்ல படத்தை பார்க்க தவறியதற்கு வருந்துகிறேன்...நிச்சயம் பார்க்கனும்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!! அவ‌சியம் இந்தப் படத்தைப் பாருங்கள்!‌

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி நாஞ்சில் மனோ! அவசியம் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்!

மனோ சாமிநாதன் said...

அழகாய் பின்னூட்டம் தந்திருப்பதற்கு மனமார்ந்த நன்றி கோமதி! அவசியம் விண்மீன்கள் பார்க்கிறேன். பார்த்து விட்டு சொல்லுகிறேன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்! பாலபாரதி புத்தகம் பற்றி நானும் படித்தேன். அவசியம் அதை வாங்கிப் படிக்க வேண்டும். என் சகோதரி மகனை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் மனதில் வேதனை எழும். அவரின் பிற்காலத்துக்கு என்ன வழி என்ற கேள்வி மனதைக் குடையும்.

ஸ்ரீராம். said...

//ஆட்டிசம்: சில புரிதல்கள், புத்தக வெளியீட்டுக்கு இயக்குநர் குமாரவேலும் வருகை புரிந்து சிறப்பித்ததாய் வாசித்த நினைவு. //

எனக்கும் அப்படிப் படித்த நினைவு இருக்கிறது. நன்றி ரா.ல.... :))

ADHI VENKAT said...

சிறப்பான விமர்சனம் அம்மா. படத்தை பார்க்கத் தூண்டி விட்டு விட்டது.

ஹுஸைனம்மா said...

பதிவுகளில் விமர்சனங்களைப் படித்ததும், கண்டிப்பாகப் பார்த்தேயாக வேண்டும் என்று விரும்பிப் பார்த்த படம். மனம் கனத்துப் போனாலும், இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களாலும் ஏதேனும் (உடல் சார்ந்த) ஒரு துறையில் ஆர்வத்தோடு ஈடுபட முடியும் என்ற எண்ணத்தைத் திண்ணமாக மக்களின் மனதில் விதைத்த படம் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தது.

நல்ல விமர்சனம் அக்கா.

மகேந்திரன் said...

அருமையான தெளிவான கருத்துப் பகிர்வு அம்மா...
ஆட்டிசம் ஆட்கொண்ட குழந்தைகள் பற்றி
தொட்டுச் சென்றிருக்கும் படம்...

Yaathoramani.blogspot.com said...

எப்படியோ பார்க்க விடுபட்டுப் போனது அவசியம் பார்க்க வேண்டிய படம் என தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்.விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

மோகன்ஜி said...

நலம் தானே?
மிக சிறப்பாய் விமர்சித்திருக்கிறீர்கள். கடினமான வேலை. வாழ்த்துக்கள் மேடம்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சிறப்புடன் தந்தீா் திரைப்பட முத்தை!
அறமெனக் கொண்டேன் அணிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் படத்தைப்பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள் ச‌கோதரர் வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்திற்கும் இனிய நன்றி சீனு!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி உஷா!

மனோ சாமிநாதன் said...

அவசியம் படத்தைப் பாருங்கள் ராமலக்ஷ்மி! வருகைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

நீங்களும் இதை மிக ரசித்ததறிந்து மகிழ்ச்சியாக இருந்தது நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் பாருங்கள் மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வருகைக்கும் இனிய நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஹுஸைனம்மா, ஒரு சிலருக்காவது ஆட்டிஸம் பற்றிய விழிப்புண‌ர்வு ஏற்படும் என்பதுட‌ன் ஆட்டிஸம் பாதித்தவர்களை வைத்துக்கொன்டு போராடும் ஒரு சிலருக்காவது அவர்களை எப்படியும் சரியாக்கி விடலாம் என்ற நம்பிக்கையைத் தரும் படம் இது! பாராட்டுக்கு அன்பு ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மகேந்திரன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் அன்பு நன்றி மோகன்ஜி! வெகு நாட்கள் கழித்து உங்களை இங்கு பார்ப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

பாமாலையுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் பாரதிதாசன்!

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவுகளில் விமர்சனங்களைப் படித்ததும், கண்டிப்பாகப் பார்த்தேயாக வேண்டும் என்று விரும்பிப் பார்த்த படம். மனம் கனத்துப் போனாலும், இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களாலும் ஏதேனும் (உடல் சார்ந்த) ஒரு துறையில் ஆர்வத்தோடு ஈடுபட முடியும் என்ற எண்ணத்தைத் திண்ணமாக மக்களின் மனதில் விதைத்த படம்

சித்திரவீதிக்காரன் said...

ஹரிதாஸ் இன்னும் பார்க்கவில்லை. தங்கள் பதிவு அந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. நல்லதொரு பகிர்வு. நன்றி.