Sunday 25 September 2011

எது நியாயமான தீர்ப்பு?

“என்ன நடேசா, ஊருக்குக் கிளம்புகிறாயே, உன் அப்பாவுக்கு என்ன வாங்கப் போகிறாய்?”

ஆட்கள் வேலை செய்வதை கவனித்து நடந்து கொண்டிருந்த
நான் சட்டென்று நின்றேன். தொழிலாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்து அறையிலிருந்து தான் அந்த கேள்வி வந்தது. நடேசன் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னையும் பற்றிக்கொண்டது.

“ அவருக்கா? இரண்டு விஸ்கி பாட்டில்கள் தான் வாங்கிப்போக வேண்டும்.”

என் மனதில் தீக்கங்குங்கள் விழுந்த மாதிரி தகித்தது.

“ என்னடா இப்படி சொல்கிறாய்? இந்த வேலையே அவர் முதலாளியிடம் சொன்னதால்தானே கிடைத்தது?”

“ அவரால் ஒன்றும் இந்த வேலை கிடைக்கவில்லை. என்னைப் பார்த்து, என் திறமையைப் பார்த்து வேலை கொடுத்தார்கள்”

அதிர்ந்து போன மனது மெல்ல சம நிலைக்கு வந்தது. ஆனாலும் கசப்பு மட்டும் தொண்டையை விட்டு நீங்காமலேயே இருந்தது.. அதற்கப்புறம் சில மணி நேரம் ஆகியும்கூட சரியாகவில்லை.

நடேசன் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உடம்பில் சதை போட்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் தன் தந்தையுடன் என்னிடம் வேலைக்காக வந்து, பயந்த முக பாவங்களுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த தோற்றம் நினைவுக்கு வந்தது. அந்த பய பக்தியோ, மருளும் முகமோ இன்றில்லை. சம்பாதிக்கும் காசும், அந்தக் காசில் ஊறிய உடம்பும், அந்த உடம்பினால் வந்த அலட்சியமும் அவனை நிறையவே மாற்றியிருந்ததை உணர முடிந்தது. இவன் என்றில்லை, இந்தப் பாலைவனத்துக்கு வேலை தேடி அலையும் எல்லோருமே சொல்லும் முதல் வார்த்தையே, ‘ எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். எப்படியாவது துபாய்க்குக் கூட்டிக்கொண்டு போங்கள்’ என்பது தான். காசும் உடம்பும் நன்றாகத் தேறியதும் ‘ உங்களால்தான் நான் இங்கு வந்தேனா? எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்!

இவனுடைய அப்பா ராமன் என் முன்னாள் மாணவராக இருந்தார். கிராமத்தலைவரின் மகன் அவர். நல்லொழுக்கங்களும் பணிவுமாய் இருந்தவர் அவர். காலச் சுழற்சியில் அவரைப் பல வருடங்களாக நான் பார்க்க முடியாமல் போயிருந்தது. பார்க்காமலிருந்தாலும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் எதுவுமே நன்றாக இல்லை.
குடிபோதையில் நிலை தடுமாறிக்கொண்டிருந்த அவரைப் பார்க்கவும் பிறகு விருப்பமில்லாமல் போயிற்று!

அப்புறம் சில வருடங்கள் கழித்து, அவரின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி மிகவும் துன்பப்படுவதை அறிந்ததும் மனம் இளகிப் போயிற்று.

அவரை வரச்சொல்லி, அவருடைய மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தருவதாகச் சொன்னேன். மிகுந்த சந்தோஷத்துடன் தன் மகனைக் கூட்டி வந்து அறிமுகம் செய்தார்.

‘ இவன் உங்களுக்கு உண்மையாக இருப்பான். என்றைக்கு உங்களுக்கு இவனால் வருத்தம் வருகிறதோ, அன்றைக்கு அவனைத் திருப்பி அனுப்பி விடுங்கள் ’ என்றார்.

அவன் இங்கு வந்த நான்கு வருடங்களில் குடும்பம் நிதான நிலைக்கு வந்தது. வயிறார சாப்பிட முடிந்தது.

அப்புறமும்கூட ராமனுக்கு குடிப்பழக்கம் குறையவில்லை என்று அறிந்த போது என்னுள் சீற்றம் அதிகரித்தது. அடுத்த முறை பார்த்த போது சொன்னேன்.

‘ உனக்கு ஐம்பது வயதாகப்போகிறது. திட்டியோ, அறிவுரை சொல்லியோ பிரயோசனம் ஏற்படப்போவதில்லை. உனக்கு என்னுடைய அன்பு நிலைக்க வேண்டுமானால் இந்தப் பழக்கத்தை உடனேயே நிறுத்து. முடியவில்லையென்றால் இனி இங்கே என்னை வந்து பார்ப்பதை நிறுத்தி விடு!’

பேசாமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்த ராமன், சில நிமிடங்களில் சொன்னார்:

’ இனி குடிக்க மாட்டேன்’!

அதற்கப்புறம் அவருடைய மனைவியும் ஃபோன் செய்து, ‘ இவர் குடிப்பதையும் குடித்து விட்டு வந்து என்னை அடிப்பதையும் நிறுத்தி விட்டார். இந்த நல்ல செய்தியை என் மகனிடமும் சொல்லி விட்டேன். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நீங்கள் தான் என் வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்’ என்று நாத்தழதழுக்க சொன்னபோது மனதில் நிறைவு ஏற்பட்டது.

அப்புறமும்கூட, பண விஷயங்களையோ, சேமிப்பைப்பற்றியோ தன்னிடம் எதுவும் மகன் சொல்வதில்லை என்றும் தன் அம்மாவிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிப்பகிர்வது வழக்கம் என்றும் ராமன் சொல்லியிருக்கிறார்.

இப்போது எப்படி இந்த விஷயத்தை சொல்வது? கையிலேயே பார்த்துப் பார்த்து வளர்ந்த பிள்ளை, காசைப்பார்த்ததும் மாறியதை எப்படி சொல்வது?
மனசு வலிக்கும் என்றாலும் சொல்லாமல் மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மறுபடியும் ஊருக்குச் சென்ற போது ராமனை வரவழைத்து செய்தியைச் சொன்னேன். வலியினால் முகம் சிறிது சுருங்கிப் போனாலும் அதற்கப்புறம்தான் அவரின் இதயக்கபாடம் மெல்ல மெல்லத் திறந்தது.

திருமணம் ஆனதிலிருந்தே மனைவி எதற்குமே ஒத்துப்போகாமல் இருந்தது, அவளால் சகோதரர்களை, பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றது, ஆத்திரமும் அசிங்கமுமாய் குடும்ப வாழ்க்கை பலர் முன்னிலையில் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல முறைகள் அடிக்க நேர்ந்தது, அதற்கும் அவள் திருந்தாதைப் பார்த்து, வேதனைகளை மறக்க சில சமயங்களில் குடிபோதையில் இறங்கியது – என்று வேதனையான அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல அவிழ்ந்தன.

‘ பிள்ளைகள் இல்லாத போது தான் என்னிடம் சண்டை போடுவதெல்லாம். நான் கோபத்தில் அடிக்க நேரும்போது, பிள்ளைகளை வரவழைத்துக் காண்பிப்பாள். குடித்து விட்டு கிடக்கும்போது, பிள்ளைகளை அழைத்து வந்து காண்பிப்பாள். இப்படிச்செய்தே சிறு வயதிலிருந்தே என்னிடம் அவர்களை ஒட்டாமல் செய்து விட்டாள். எனக்கும் இது இப்போதெல்லாம் பழகி விட்டது. மனைவியின் அன்பு, பிள்ளைகளின் பாசம் இதெல்லாம் இல்லாமலேயே வாழப்பழகி விட்டேன். ..”

மேலும் தலை குனிந்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ உங்களிடம் இதையெல்லாம் நான் எப்போதோ சொல்லியிருப்பேன். உங்களிடம் சில மணி நேரங்கள் இருக்கும்போது தான் மனம் நிம்மதி என்ற ஒன்றை அனுபவிக்கிறது. அப்போது போய் இந்தக் குப்பைகளை சொல்வதற்கு மனம் வந்ததேயில்லை. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. உண்மையிலேயே நான் நல்லவன் என்றால் இதற்குள் எனக்கு மரணம் வந்து நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்.. ..”

அந்த வேதனை மிகுந்த கண்களைப் பார்த்தபோது எனக்கும் மனம் வலித்தது.

“ பைத்தியம் போலப் பேசாதே. நாம் விரும்பும் போதெல்லாம் மரணம் வருவதில்லை. நம்மால் ஏதோ ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அதனால் தான் மரணம் வரவில்லை என்று நினைக்கப் பழகு.. துன்பங்களைத் தாங்க மன வலிமை தான் முக்கியமே தவிர, குடிப்பதோ, மரணிப்பதோ அதற்குத் தீர்வாகாது.”

மெதுவாகப் படியிறங்கிச் செல்லும் ராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடேசனின் நினைவு வந்தது. கூடவே ‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற புகழ் பெற்ற பாடலும் நினைவுக்கு வந்தது. .பெற்ற தந்தையையே துச்சமாக மதித்து, கேவலமாகப் பேசும் நடேசனை- அந்த நிமிடமே வேலையை விட்டு அனுப்ப மனம் துடித்தது. செய்நன்றி கொன்றதற்கு அது தான் சரியான தண்டனை என்று தோன்றியது. அதே சமயம், ராமனையும் சேர்த்து அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது. எது சரியான தீர்ப்பு என்று எனக்குப் புரியவில்லை!

43 comments:

ஸாதிகா said...

//உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்! //எல்லா இடங்களிலும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்களுக்கு பஞ்சமில்லையக்கா.

//‘ பிள்ளைகள் இல்லாத போது தான் என்னிடம் சண்டை போடுவதெல்லாம். நான் கோபத்தில் அடிக்க நேரும்போது, பிள்ளைகளை வரவழைத்துக் காண்பிப்பாள். குடித்து விட்டு கிடக்கும்போது, பிள்ளைகளை அழைத்து வந்து காண்பிப்பாள். இப்படிச்செய்தே சிறு வயதிலிருந்தே என்னிடம் அவர்களை ஒட்டாமல் செய்து விட்டாள்.// இது போன்ற தாய்களையும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.இவர்களையெல்லாம் தாய் என்பதா?அல்லது பேய் என்பதா?

//அதே சமயம், ராமனையும் சேர்த்து அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது. எது சரியான தீர்ப்பு என்று எனக்குப் புரியவில்லை!
// எனக்கும்தான் புரியவில்லையக்கா.

மொத்தத்தில் ராமனைப்போன்றோர் பரித்தாபத்துக்குறியவர்கள்.

ஹுஸைனம்மா said...

இதில் ராமனின் தரப்புமட்டுமே தெரிகிறது. அவர் மனைவியின் தரப்பு என்னவென்று தெரியவில்லை - ராமனின் நிலைக்குக் காரணம் அவ்ர் என்று சொல்லப்படுகிறதே தவிர, ஏன் அப்படி என்பது புரியவில்லை. என்ன குடும்பப் பிரச்னையென்றாலும், குடிப்பதும், மனைவியை அடிப்பதும் தவறுதான். அந்த நிலையில், ஆதரவற்று நிற்கும் மனைவிக்கு ஆறுதல் குழந்தைகள்தான். அதனால்தான் குழந்தைகளிடம் தந்தையைக் காண்பித்து, தன்னைத் துன்புறுத்துவதையும், அவர்களும் இதுபோலக் குடிகாரர்களாக ஆகிவிடக்கூடாதென்பதையும் உணர்த்துகீறாள்.

சிறுவயதில் பட்ட வடு ஆழப்பதிந்துவிட்டது நடேசனின் மனதில். அதைக் களைய ராமன் என்ன முயற்சி மேற்கொண்டார்? நடேசன் சம்பாதிக்கும்வரை, குடும்பம் கஷ்டப்பட்டது என்றால், ஒரு குடும்பத்தலைவனாக ராமன் தன் கடமையச் சரிவர நிறைவேற்றவில்லை என்றுதானே அர்த்தம்?

இதில் நடேசன், வேலை தந்தவர்களிடம் நன்றிமறந்து நடந்ததுபோலக் கதையில் இல்லையே? தன் தந்தைமீதுதானே குடிப்பழக்கத்தால்தானே தன் குடும்பத்தை வறூமைக்குள்ளாக்கினார், தன் தாயைத் துன்புறுத்தினார் என்ற கோபம்?

எனினும், அது எடுத்துச் சொல்லப்பட்டால் திருந்திவிடக்கூடிய தவறுதான் என்று தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை, இந்தக் கதை, ஒருவனின் குடிப்பழக்கம் அவன் குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை விளக்கும் நீதிபோதனையாகவே காண்கிறேன்.

கதம்ப உணர்வுகள் said...

கணவனின் செயல்கள் நியாயமானவை என்றபோது மனைவி அதற்கு உறுதுணையாக இருந்துவிட்டால் வீட்டில் பிரச்சனை ஏற்பட வழி இல்லாமல் போய்விடும்...சுயநலமான வழியை ராமனின் மனைவி ஏற்படுத்திக்கொண்டதால் தான் வலி ராமனுக்கு வந்துவிட்டது.....

என்ன ஒரு வக்கிர எண்ணம்.. கூட்டுக்குடும்பம் வேண்டாம். தானும் தன் கணவன் பிள்ளைகள் மட்டும் நன்றாயிருந்தால் போதும் என்று கணவனை பிரித்து தனியே வந்ததும்....

பிள்ளைகள் எதிரே நல்லவர் போல் நடித்து பிள்ளைகள் இல்லாதபோது இவர் உயிரை துடிக்கும் வகையில் சண்டைப்போட்டு அதன் வேதனை தாங்கமுடியாமல் ராமன் குடிக்க ஆரம்பித்தது.....

பிள்ளைகளுக்கு அதனாலேயே அப்பா மேல் வெறுப்பு வந்ததும்....

என்றோ ஒரு காலத்தில் ஒழுக்கமாக இருந்தார் என்ற உணர்வில் அவர் குடும்பம் ஏழ்மையில் உழலுவதை கண்டு பரிதாபப்பட்டு மகனுக்கு வேலை போட்டு கொடுத்தால்....

இங்கே தான் ஆரம்பிக்கிறது நன்றிக்கெட்டத்தனம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள்....

இது போன்ற நன்றி கெட்டவர்கள் எங்கும் இருக்கிறாங்க மனோ அம்மா....

நம் அனுபவங்களை தொகுத்தாலே தினம் ஒரு கதை என்ற விகிதத்தில் வலைப்பூவே கதறிவிடும் இவர்களின் செயல்களை சொல்ல ஆரம்பித்தால்....

அருமையான அனுபவத்தை கதைப்பகிர்வாய் பகிர்ந்திருக்கீங்க... குடிக்கிறதை நிறுத்தி வீட்டுக்கு விளக்கேத்தி வெச்சிருக்கீங்க நீங்க என்று சொன்ன வரிகளில் ஒரு சின்ன திருத்தம் இருக்கு அதை பண்ணிருங்க மனோ அம்மா.. குடிப்பதும் நிறுத்தியாச்சு.... என்று நினைக்கிறேன்....

அருமையான நடை... மனித மனங்களின் அசல் முகங்கள் எப்போது வெளிப்படுகிறது என்பதை மிக அருமையா சொல்லி இருக்கீங்க..

ஒருவர் நல்லவராய் இருக்கிறார் என்பதாலேயே அவர் குடும்பம் நலமுடன் இருக்கட்டும் என்று நல்லது செய்தால் அதை நன்றியுடன் நினைத்து பார்க்கும் மனிதர்கள் வெகு குறைவே....

அருமை மனோ அம்மா அருமை... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

இமா க்றிஸ் said...

இதனைக் கதையாகப் பார்க்க இயலவில்லை அக்கா.

தப்பு அந்தப் பையனது அல்ல. மனதில் பதிந்த, பதியவைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் அப்படி. பாவம், இந்த மாதிரி வீட்டுச் சூழலில் அவனும் மனதளவிலே நிறையவே பாதிக்கப்பட்டு இருந்திருப்பான்.

கதையில் வரும் தாய்... அப்படி நடந்ததற்கு ஏதோ வலுவான காரணம் நிச்சயம் இருந்திருக்கும். எதுவும் இல்லை என்பது போல் எமக்குத் தோன்றினாலும், அவர் மனதில் ஏதோ பெரிய பாதிப்பு இருந்து அதன் வெளிப்பாடாக அப்படி நடந்திருக்கலாம்.

அந்தத் தகப்பனாரும் எப்போதோ ஒரே ஒரு முறையாவது ஆனால் ஆழமாக மனைவியைப் புண்படுத்தி இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அதற்குப் பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும்.

மனிதமனம் விசித்திரமானது. பிரச்சினைகள் முட்செடி மாதிரி; முளையில் பிடுங்காவிட்டால் பிறகு கட்டுப்படுத்த முடியாது.

மூன்று பேருமே பரிதாபத்துக்குரியவர்கள்தான்.

enrenrum16 said...

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல ராமன் இப்போது திருந்தியது முன்னமே திருந்தியிருந்தால் அவரது குழந்தைகள் அவரை விட்டு விலகியிருக்க மாட்டார்கள். இப்போதைய அவருடைய நிலைமை வேதனைக்குரியது. திருந்திய தந்தையை மகன் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்வான்.

அநேக குடும்பங்களின் நிலைமை இது என்பதால் இதை வாசிக்கும்போது கதை என்ற உணர்வேயில்லை. கதையின் தாக்கம் எளிதில் நீங்காது.நல்ல கதை அக்கா.

MANO நாஞ்சில் மனோ said...

பாலைவனத்தில் வேலை பார்ப்பவர்களின் உண்மை நிலையை சரியாக சொன்னீர்கள்...!!!!

RAMA RAVI (RAMVI) said...

எந்த கஷ்டத்திற்கும் குடி பழக்கம் ஒரு தீர்வு இல்லை என்பதை ராமன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.ராமன் மகனிடம் தன்னுடைய மனகஷ்டத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால் அந்த மகனுக்கு தந்தையின் நிலைமை புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.
இது கதை மாதிரியே இல்லை அக்கம் பக்கத்தில் நடைபெறும் சம்பவம் மாதிரி இருக்கு.

'பரிவை' சே.குமார் said...

அம்மா... நீங்கள் சொல்லியிருப்பதில் ராமனின் பார்வையை மட்டுமே காணமுடிகிறது. அவரது மனைவி அவரது பார்வையில் ராமன் எப்படிப்பட்டவர் என்பது நமக்குத் தெரியாது. மேலும் அவரது மகனுக்கு தண்டனை கொடுப்பதால் என்ன கிடைத்து விடப் போகிறது. மீண்டும் அந்தத் தந்தை தண்ணியை நாடுவார்... தாய் அடி,உதை வாங்குவார்... பையன் வேலை தேடி அலைவான்... விடுங்கள் இறைவன் நல்வழிப்படுத்தட்டும்.

Unknown said...

''அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது.''

ஒருவரது தவறுக்காக தரப்படும் தண்டனை அவருக்கு மட்டுமேயான தண்டனையாக இருக்க வேண்டுமே தவிர அவரது குடும்பத்தைத் தண்டிப்பதாக இருக்கக் கூடாது. இப்போது எது சிறந்த மடிவு என சொல்லுங்கள்

மனோ சாமிநாதன் said...

எல்லா இடங்களையும் விட இந்தப் பாலைவனத்தில்தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது அதிகம் என்று நான் எழுதியிருப்பது அனுபவித்த உண்மைகளை ஒட்டித்தான் ஸாதிகா! பொதுவாய் இங்கு எப்படியாவது வ‌ந்து சேர வேன்டும் என்ற ஆசையில் வீட்டையும் நிலத்தையும் பல லட்சங்களுக்கு அடமானம் வைத்து ஏஜெண்டிடம் கொடுத்து வ‌ருபவர்கள்தான் அதிகம். மற்றும் சிலர் இப்படித்தான் மற்றவர்கள் உதவியினால் வந்து பின் ஏறிய ஏணியையே எட்டி உதைப்பது வழக்கம்! மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு சூழ்ந்திருக்கும் தனிமையிலும் வெறுமையிலும் இந்த வலி அடிபட்டவர்களால் இங்கு அதிகமாக உணரப்படுகிற‌து!

கருத்துரைக்கு அன்பு நன்றி!

ஸ்ரீராம். said...

எவ்வளவு கஷ்டமான நிலைமையாய் இருந்தாலும் குடிப்பழக்கம் அதற்குத் தீர்வாகாது என்பது மட்டுமில்லாமல் அது குடிப்பவரை பாதிக்கும் அளவை விட அவரைச் சார்ந்தவர்களை அதிகம் பாதிக்கும்.
தான் தன் சுகம் என்று இருக்கும் அந்த மனைவி செய்த தவறு கணவர் குடிக்கக் காரனாமானார் என்றால் பிள்ளைகளிடம் அதைக் காட்டி வெறுப்புற வைத்ததும் அவர் தவறு.
மகன், சிறுவயதில் தாய் சொல்வதை நம்பி அப்பாவை வெறுக்கலாம். விவரம் தெரிந்த பின் என்ன காரணம் என்று ஆராய்ந்து, தந்தையை மாற்ற முடியுமா என்று பார்ப்பதோடு அவரால்தான் இந்த வேலையில் சேர முடிந்தது, அதனால்தான் தன்னால் தன் திறமையைக் காட்ட முடிந்தது என்று உணர வேண்டும். நன்றி வேண்டும்.
ஒருவர் செய்யும் தவறு அவரை மட்டுமல்லாமல் அவரைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் எப்படி பாதிக்கிறது என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

கீதமஞ்சரி said...

மனச்சிக்கல்கள்! ஒவ்வொரு தரப்பும் தன் நியாயத்தைப் பேசுகிறது. எது நியாயம் என்பது எங்கு நிற்கிறோம் என்பதைப் பொறுத்ததே. பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

//ராமனின் நிலைக்குக் காரணம் அவ‌ர் என்று சொல்லப்படுகிறதே தவிர, ஏன் அப்படி என்பது புரியவில்லை.//

சில பெண்களுக்கு இதற்கெல்லாம் காரணம் இருக்காது ஹுஸைனம்மா! அவர்கள் சுபாவமே எதிரிலிருக்கும் மனிதனை தீயாய் வறுத்தெடுப்பது மட்டும்தான்!

எத்தனையோ ஆண்கள் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் தினம் தினம் அழுகிறார்கள்.

குடிப்ப‌தும் ம‌னைவியை அடிப்ப‌தும் த‌வ‌று என்ப‌தில் மாற்றுக்க‌ருத்து இருக்க‌ முடியாது. ஆனால் எதற்கெடுத்தாலும் சப்தம் போட்டு சண்டைக்கு இழுத்து ஒரு பெண் செல்லும்போது, அதைத் தடுத்து நிறுத்த ஒரு ஆண்மகனுக்கு அடிப்பதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் போகிறது! சில சமயம் அது வேறு பெண்ணிடம் அன்பாய் மாறுகிற‌து. சில சமயம் இப்படி குடி வழியில் போகிறது!

இது ஒரு உண்மைக்கதை தான் ஹுஸைனம்மா! ஏழை விவசாயியான ராமனுக்கு வானம் பொய்க்கும்போதெல்லாம் அல்லது அத்து மீறி வானம் பொழிந்தபோதெல்லாம் விவசாயம் செய்ய முடியவில்லை. அதனால்தான் குடும்ப சூழ்நிலை வறுமையென்றானது.

அப்புறம், குடும்பத்தில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அம்மாவின் கருத்துப்படித்தான் வாழ்க்கையின் பார்வை இருக்கும். யாரிடத்தில் ஆளுமை அதிகமோ, அவர்கள் பக்கம்தான் குழந்தைகள் செல்லும். ஆனால் வளர வளர பார்வைகள் மாறும். இந்த குழந்தைகள் பார்வை மாறாமல் இருப்பதற்கு காரணம் அன்னையின் தொடர் போதனையும் தந்தையின் ஒதுங்குதலும்தான்!

மனோ சாமிநாதன் said...

அருமையாய் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி!
நீங்கள் எழுதியிருப்பது போல அனுபவத்தைத்தான் கதைப்பகிர்வாய் கொடுத்திருக்கிறேன். திருமண‌த்திற்கு முன் ஊரெல்லாம் பெருமைப்படும் அளவு நல்லவனாய் நல்ல ப‌ழக்கங்களுடன் இருந்த ஒரு ஆண், மனதிற்கு இசைந்த‌ மனைவி அமையாததால் எப்படியெல்லாம் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கிறான் என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறேன். நீள‌மாய் எழுதினால் ரசிக்க முடியாது என்பதால் சுருக்கமாக எழுத வேன்டியதாகி விட்டது.

இதன் முக்கியமான விஷயமே, தன் தந்தையின் கைப்பிடித்தவாறு சாதுவாய் வந்த அந்த மகன், தந்தை சாப்பிட்ட தட்டைக்கழுவி வைத்த அந்த மகன் எப்படி மாறிப்போனான் கையில் பண‌த்தைப் பார்த்ததும் என்பது தான்!

நீங்கள் குறிப்பிட்டிருந்த இடத்தை மீண்டும் படித்துப் பார்த்தேன். எனக்கு ஒரு தவறும் புலப்படவில்லையே?

மனோ சாமிநாதன் said...

அழகாகக் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள் இமா! அன்பு நன்றி!

நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி, ஒவ்வொருத்த‌ர் ம‌ன‌திலும் ஒவ்வொரு நியாய‌ம் இருக்கும். எது ச‌ரி என்று எப்ப‌டி க‌ண்டு பிடிப்ப‌து? பொதுவான‌ நியாய‌ம் கண‌வ‌ன் ம‌னைவியிட‌ம் அன்பு செலுத்துவ‌தும் ம‌னைவி க‌ண‌வ‌னிட‌ம் அன்பு செலுத்துவ‌தும்தானே?

த‌ன் தந்தையால்தான் வேலை கிடைத்த‌து என்ப‌து ந‌ன்கு தெரிந்திருந்து, அதை ஏற்றுக்கொண்டு அதன் பலன்களை அனுபவித்தாலும் அதன் காரணகர்த்தா தன் தந்தைதான் என்பதை அந்த மகன் ஏற்றுக்கொள்ள மறுத்து, தனக்கு நல்ல வழியைக் காட்டிய தந்தையை துச்சமாகப் பேசுகிறான் என்பது தான் கதையின் மையக்கரு. அதனால் ஒரு தந்தையின் மனம் எப்படி உடைந்து போகிறது என்பதைத்தான் நான் காட்ட முயற்சித்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

//திருந்திய தந்தையை மகன் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்வான்.//

உங்க‌ள் வாக்குப்ப‌டியே ந‌ட‌க்க‌ட்டும். ம‌னைவியால் கிடைக்காத‌ அமைதியை பிள்ளைக‌ளாவ‌து கொடுக்க‌ட்டும்.

பாராட்டிற்கும் விரிவான‌ க‌ருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி ச‌கோத‌ரி!

மனோ சாமிநாதன் said...

பாலையில் இருப்பதால் அதை நன்றாக உண‌ர்ந்து எழுதியிருக்கிறீர்கள் நாஞ்சில் மனோ! கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

//ராமன் மகனிடம் தன்னுடைய மனகஷ்டத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால் அந்த மகனுக்கு தந்தையின் நிலைமை புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.//

மகன்களை ராமனிடம் அவர் மனைவி நெருங்கவே விடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறேன் ராம்வி!

கருத்துக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு உள‌மார்ந்த நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

//ஒருவரது தவறுக்காக தரப்படும் தண்டனை அவருக்கு மட்டுமேயான தண்டனையாக இருக்க வேண்டுமே தவிர அவரது குடும்பத்தைத் தண்டிப்பதாக இருக்கக் கூடாது.//

அருமையான கருத்து வியபதி! அதனால்தான் அவருக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது! ஆனாலும் தந்தையை இழிவாகப் பேசிய அவனுக்கு தண்டனை த‌ரமுடியவில்லையே என்ற‌ ஆதங்கமும் இருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப‌வும் நடுநிலையில் நின்று அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்!

கருத்துக்கு மனங்கனிந்த நன்றி!

Angel said...

கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாத வாழ்க்கை நரகம்தான். இங்கே மனைவியின் வீம்புபிடிவாதம் பிள்ளையின் மனதில் விஷ விருட்சமாய் இதற்க்கு குடிப்பதால் மட்டும் தீர்வு கிடைக்குமா .பாவம் ராமனை போன்ற தந்தைகள் சகோதரி இமா கூறியதைப்போல ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் சொல்கிறார் "என் அப்பாவை வெறுக்கிறேன் ,அவர் சீட்டாட்டம் சூதாட்டத்துக்கு அடிமையானவர் எல்லா பொருளையும் விற்று சூதாட்டத்தில் போடுவார் என்று என்ன ஆச்சர்யம் என்றால் அவர் தந்தை இறந்த பின்னும் அந்த மகளால் மன்னிக்க முடியவில்லை அப்படியெனில் அவரின் மனதில் என்ன ஒரு hatred,
ஆழப் பதிந்த வடுவாக இருக்கிறது
என்னை பொறுத்தவரையில் தவறான போதனையில் வளர்க்கப்பட்ட மகன், அவனை வளர்த்த தாய் ,இயலாமையால் குடிக்கு அடிமையான தந்தை மூவருமே பரிதாபதுக்குரியவர்கள்தான்நாம் செய்யும் ஒவ்வொன்றையும் நம் பிள்ளைகள் கவனித்து கொண்டே வருகிறார்கள் என்பதை ஒவ்வொரு தாயும் தகப்பனும் உணர வேண்டும் .

ரிஷபன் said...

நாம் விரும்பும் போதெல்லாம் மரணம் வருவதில்லை. நம்மால் ஏதோ ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அதனால் தான் மரணம் வரவில்லை என்று நினைக்கப் பழகு.. துன்பங்களைத் தாங்க மன வலிமை தான் முக்கியமே தவிர, குடிப்பதோ, மரணிப்பதோ அதற்குத் தீர்வாகாது.”

ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.. அவரவர் பார்வையில் ஒரு நியாயம் கற்பித்துக் கொள்வதும், தனக்காக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுமாய் காலம் செல்கிறது.. புத்தி பிறக்கும்போது எல்லாமே புரிகிறது.. அருமையான் கதை.

vettha.(kovaikavi) said...

''....நன்றாகத் தேறியதும் ‘ உங்களால்தான் நான் இங்கு வந்தேனா? எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்!..''
கதை பாதி வாசித்து இதை எழுதுகிறேன். மீதி பின்னர் வாசித்து எழுதும் நோக்கத்தில். இந்த மேலே கூறிய மனப்பாங்கு உலகமெல்லாம் உண்டு. இதை டென்மார்க்கிலிருந்து எழுதுகிறேன். இலங்கையிலிருக்கும் போதும் இதைக் கேட்டேன் சகோதரி. உறவினர் கூறக் கேட்டு மனம் வருந்தினேன். நல்ல உணவும், பணமும் வர, உடலில் சதை பிடிக்க நன்றி உணர்வு மறைய வரும் செய்தி இது.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

கதம்ப உணர்வுகள் said...

மனோ அம்மா நான் தான் படிக்கும்போது தவறுதலாக படித்து அப்படி புரிந்துக்கொண்டேன்..

குடிப்பதையும் குடித்துவிட்டு வந்து அடிப்பதையும் நிறுத்திவிட்டார். நீங்க எழுதியதே சரி அம்மா..

நான் நினைத்தேன் குடிப்பதையும் நிறுத்திவிட்டு வந்திருக்கலாமோன்னு.. இல்லை நீங்க எழுதியது தான் சரி அம்மா...

என் அன்பு நன்றிகள் மனோ அம்மா... உங்க பகிர்வுகளின் ரசிகைகளின் லிஸ்ட்ல ஒன்னு கூடிருச்சு.. அதான் மஞ்சு :)சேர்ந்தாச்சு ...

Yaathoramani.blogspot.com said...

மிக அழகாக கதையை போல
நீங்கள் அறிந்த உண்மையைப் பதிவாக
பதிவு செய்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
அதனால்தான் இதில் படைப்பாளியின் தலையீடோ
புத்திமதி கூறலிலோ அல்லது முடிவைத் தரவேண்டும் என்கிற
நிர்பந்தத்திலோ நீங்கள் சிக்கவில்லை
அதுதான் இந்தப் படைப்பின் சிறப்பெனவே கருதுகிறேன்
படிப்பவர்கள் அவரவர்கள் நோக்கத்தில்
புரிந்து கொண்டதால்தான் இந்தப் படைப்புக்கு
இத்தனை விரிவான பின்னூட்டங்களும் என நினைக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

இது நியாமான தீர்ப்புதான் ..
நன்றாக இருந்தது...

ஜெய்லானி said...

இதில் மூவரில் தனித்தனியே பார்க்கும் போது பரிதாபமே வருகிறது :-( .
சரியான நேரத்தில் செய்யப்படாத உதவி .......... ((அது உபதேசமாக இருந்தாலும் )).

ஆனால் காலம் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிரது .:-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இது கதையல்ல நிஜம்!

vetha (kovaikkavi) said...

பொறுமை தான் இதற்குச் சிறந்த முடிவு சகோதரி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

மோகன்ஜி said...

அருமையான கதை மேடம். குடி பிரச்னைகளுக்கு தீர்வாகாது... உறவு மயக்கம் உரிமைக் குழப்பம்...
நிறைய கேள்விகளுக்கு விடைகள் இல்லை சில வாழ்க்கைகளில்..

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!
உண்மைதான்! க‌டைசியில் புத்தி பிற‌க்கும்போது தான் எல்லாம் தெளிவாகிற‌து. ஆனால் தெளிவாகும்போது சில சமயங்களில் காலம் கடந்து விடுகிறது!‌

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் வேதா! உலகம் முழுதும் தற்போதெல்லாம் இந்த 'செய்நன்றி மறத்தல் அதிகமாகவே இருக்கிறது. பொறுமை தான் நல்ல தீர்ப்பு என்றெழுதியிருப்பதும் நன்றாக இருக்கிற‌து. கருத்துக்கு அன்பு நன்றி!

பத்மநாபன் said...

சுற்றி வர நடக்கும் நன்றியில்லாமையையும் ... குடும்ப சிதைவுகளையும் கோர்த்து .... மனிதர்கள் எளிதில் மறக்கும் விஷயம் செய்நன்றி மறத்தல் ..எளிதில் அடிமையாகும் விஷயம் குடி போதை என்பதையும் சேர்த்து ஒரு நல்ல விழிப்புணர்வு கதை கொடுத்துள்ளீர்கள் ....

மனோ சாமிநாதன் said...

முதல் வ‌ருகைக்கும் இது நியானமான தீர்ப்பு என்று சொன்னதற்கும் என் இனிய நன்றி சின்னத்தூரல்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மனமார்ந்த நன்றி மோகன்ஜீ!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கும் அழகான கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் பத்மநாபன்!

மனோ சாமிநாதன் said...

இண்ட்லியில் இணைந்து ஓட்டளித்த அன்புத் தோழமைகள் திரு.ரிஷபன், நாஞ்சில் மனோ, ants அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி!

R. Gopi said...

இந்தக் கதை பற்றி வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_12.html

Asiya Omar said...

இயல்பான நடை,நட்பிறகாக மகனை வேலையை விட்டு அனுப்பாமை தான் சிறந்த தீர்ப்பு..கரெக்டாக சொன்னீங்க..

இன்னும் ஒரு படி மேலே போனால் சமுதாயத்தில் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..