Wednesday 31 March 2010

சமையலுக்கு முன்..

இங்கே சுவையான சமையல் குறிப்புக்கள் எழுத ஆரம்பிக்கும் முன்னர் சமையலை ஒட்டிய சில கருத்துக்களை முதலில் எழுத வேண்டியிருக்கிறது.
முதலில் சமையலறை. இது வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம். எல்லோருக்கும் வெளிச்சமான சமையலறை அமைந்து விடுவதில்லை. பெரிய ஜன்னல்கள் இல்லாத பட்சத்தில் சுவரின் வண்னங்கள் வெளிர்நிற வண்னங்களில் அமைக்கலாம். வெளிச்சம் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
அப்புறம் சுத்தம். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைப்பது, கடுகு முதற்கொண்டு எல்லா சமையலுக்கான பொருள்களையும் கையால் எடுக்காமல் எல்லா பாட்டில்களிலும் ஸ்பூன் போட்டு வைப்பது, கைப்பிடித்துணியை தினம் அலசி காய வைப்பது, காய்கறிகளை அழுகாமல் சுத்தமான பைகளில் போட்டு குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வாரமொரு முறை பினாயில் ஊற்றி அலசி சமையலறையை சுத்தப்படுத்துவது -என்று எல்லாமே சுத்தத்தில் அடங்கும். ஒரு குடும்பத்தலைவியை எடை போடுவது அவளது சமையலறை வைத்துத்தான் என்பது மிகச் சரியான உண்மை.
அடுத்தது பொருள்களை வாங்குவதும் சேமிப்பதும். முன்பெல்லாம் வற்றல் மிளகாய், புளி, பருப்பு வகைகள் எல்லாம் வருடக்கணக்கில் பெரியவர்கள் வாங்கி சுத்தம் செய்து சேமித்து வைப்பார்கள். ஆனால் இப்போதோ மிளகாய் மூன்று மாதமானால் கருப்பாகி விடுகிறது. புளியும் கறுத்து விடுகிறது. அதனால் அவ்வப்போது பார்த்து வாங்குவதுதான் இப்போது சரியாக இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதற்கும் மார்க்கெட்டில் கடையில் வாங்குவதற்கும் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய்வரை வித்தியாசம் இருக்கிறது. அதனால் மிளகாய், புளி, பருப்பு வகைகள், உளுந்து இதெல்லாம் மார்க்கெட்டில் இருக்கும் கடைகளில் வாங்குவது நல்லது. புளி, மிளகாய், உளுந்து, பருப்பு இவையெல்லாம் தை மாசத்திலிருந்து 4 மாதம் வரை புதியதாய் கிடைக்கும். நான்கு மாதங்களுக்கு வாங்கி சேமித்து வைத்துக்கொள்லலாம். வற்றல் மிளகாய் நல்ல சிவப்பாகவும் புளி இளம் பழுப்புக்கலரிலும் இருந்தால் சமையல் மிகவும் ருசியாக அமையும். இதுபோல அனைத்து தானிய வகைகளையும் தேடிதேடி தரம் பார்த்து, அதிக செலவில்லாமல் வாங்கி சுத்தம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்வது குடும்பத்தலைவின் முக்கிய பொறுப்பாக அமைகிறது.
அதேபோல கோதுமையைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக பஞ்சாப் கோதுமையை சுத்தம் செய்து கழுவி வெய்யிலில் ஒரு நாள் காய வைத்து அரைக்கக்கொடுத்து வாங்கி அதில் சப்பாத்தி, பூரி வகைகள் செய்வது எப்போதுமே சுவையாக இருக்கும். ஒரு கிலோ கோதுமையுடன் ஒரு கை சோயா பீன்ஸ், ஒரு கை வெள்ளை கொண்டகடலை சேர்த்துக் கழுவி காய வைக்கலாம். இது உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தைத் தரும். கோதுமையில் உள்ள க்ளூட்டன் சிலருக்கு அஜீரணத்தை கொடுக்கும். செரிமானம் ஆவதில்லை. பொதுவாக சப்பாத்தி வகைகளை மதிய நேரம் உண்பது ஜீரணத்திற்கு உதவும். இரவு நேரச் சாப்பாடு எப்போதுமே உடலுக்கு ஜீரணமாகும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது. பொதுவாக நம் உடலில் காலை எழுந்ததிலிருந்து மதியம் வரை அதிக சக்தி இருக்கும். பிறகு மதியத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த சக்தி குறைந்து வரும். அதனால் காலை நேரம் நன்கு உடலாலுழைக்க முடியும். அப்போது வயிறும் நல்ல சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளும். மதியம் மிதமாகவும் இரவு எளிமையாகவும் சமையல் இருக்க வேண்டும்.
காய்கறிகளை பசுமை நிறம் மாறாமல் சமைப்பதும் ஒருமுறை வெந்த பொருள்களை மறுபடியும் வேக வைக்காமல் சமைப்பதும் சமையலில் சுவையை கூட்டும்.
சமையல் என்பது ஒரு அருமையான கலை. அதில் எத்தனைக்கெத்தனை ஆர்வம் இருக்கிறதோ அத்தனைக்கெத்தனை சமையல் சுவையாக அமையும். அதில் அன்பும் அக்கறையும் கலந்து சமைக்கும்போது ருசி இன்னும் அற்புதமாக அமைந்து விடும்.

2 comments:

Thenmozhy said...

enakkum konjam kathu tharingala.....

V Mawley said...

எனக்கு சமையல் குறிப்புக்கள் படிக்க மிகவும் பிடிக்கும் ; தவிரவும் , எத்தனை விதமான கலந்த சாத வகைகள் இருந்தாலும் , எனக்குப்பிடித்தது
தேங்காய் சாதமும் , தயிர் சாதமும் - அதுவும் கோவில்களில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் தயிர்சாதத்தில் ஒரு தனி flovour இருக்கும் ; அதன்
ரகசியம் ( ? ), தங்கள் குறிப்பில் காணப்படவில்லை !
"சமையல் என்பது ஒரு அருமையான கலை. அதில் எத்தனைக்கெத்தனை ஆர்வம் இருக்கிறதோ அத்தனைக்கெத்தனை சமையல் சுவையாக அமையும். அதில் அன்பும் அக்கறையும் கலந்து சமைக்கும்போது ருசி இன்னும் அற்புதமாக அமைந்து விடும்." மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் . அன்புடன் , மாலி .