Tuesday 30 March 2010

இளம் அன்னையர்க்கு!

மார்ச் 15, 2010

முதல் முத்தாக என் எண்ண முத்துக்களை இங்கே இளம் தாய்மார்களுக்கு காணிக்கையாக்க ஆசைப்படுகிறேன்.
சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்குழந்தை ஐந்து வயதாவதற்குள்ளேயே கண்ணாடி போட நேர்ந்ததுதான் என்னை இங்கே எழுத வைத்திருக்கிறது. அந்தக் குழந்தை சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சியில் ‘ரேஞ்சர்ஸ்’ பார்ப்பதை கவனித்திருக்கிறேன். கம்ப்யூட்டரில் விளையாடுவதாகத் தெரிந்து கவலைப்பட்டிருக்கிறேன். முதலில் இது சிறு ஆரம்பம்.தான். அப்புறம் இதுவே சாப்பாடாகவும் விளையாட்டாகவும் ஆகி விடுகிறது. விருந்தினர் வீட்டுக்குப்போகும்போதுகூட குழந்தை பழக்கத்தின் காரணமாக டிவி பார்க்க அடம் பிடிக்கிறது. கண் பாதிப்பு மட்டுமல்லாமல், நல்ல பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
அடுத்த பழக்கம் மொபைல் உபயோகிப்பது. ஒரு மொபைல் ஃபோனில் சார்ஜ் குறையும்போது அதன் கதிர்வீச்சு பல மடங்கு அதிகரிக்குமாம். ஏற்கனவே இதயப்பகுதியில் உள்ள பாக்கெட்டில் கைபேசியை வைப்பதால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் பாண்ட் பாக்கெட்டில் வைப்பதால் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்றும் பல செய்திகள் வந்து விட்டன. ஒரு சிறு குழந்தை உபயோகிப்பதால் அதற்கு ஏற்படும் பாதிப்புகளை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.
அந்த காலத்தில் குழந்தைகளுடன் ஒருவருக்கொருவர் கூடி விளையாடுவது, உறவினர் வீட்டுக்கு விடுமுறை நாட்களில் சென்று கொட்டம் அடிப்பது, நீச்சல் அடிப்பது, செடி கொடிகள், ஆடு, மாடு, பூனைக்குட்டி என்று ரசிப்பது-இப்படி எத்தனையோ விதம் விதமாய் இளமைப்பருவம் கழிந்தது. வயதளவில் மால நேர வெய்யிலில் இருக்கும் எத்தனையோ பேருக்கு நாவினடியில் நெல்லித்துண்டு போல இன்று நினைத்தாலும் சிறு வயதுப் பருவம் இனிக்கிறது. இந்த காலக் குழந்தைகளோ, பாடச்சுமைகளுடன் டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் பாதிப்புகளுடன் வீட்டிலிருக்கும் மற்ற உறவுகளுக்கிடையே ஏற்படும் வாக்கு வாதங்கள், அளவுக்கு மீறிய செல்லக் கொஞ்சல்கள், சண்டை சச்சரவுகளை கவனித்துக் கொண்டு வளர்கிறது.
நவீன மயமாகிவிட்ட தற்போதைய உலகில் மொபைல், டிவி, கம்ப்யூடர், மற்ற மின்சாதனங்களின் பாதிப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் நம் குழந்தைகள் அவற்றை எந்த அளவிற்கு உபயோகிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். எதை கவனிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எந்த வகையில் அன்பையும் பரிவையும் கவனிப்பையும் கண்டிப்பையும் கலந்து தர வேண்டும் என்ற எல்லாவற்றையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஆசிரியை டிஸ்கவரி சானல் தமிழில் சில மணி நேரங்கள் தன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்த பிறகு, குழந்தைகள் ‘ரேஞ்சர்ஸ்’ ரக கார்ட்டூன்களை பார்ப்பது குறைந்து விட்டது என்றும் இது மிகவும் வரவேற்கக்கூடிய விஷயம் என்றாலும் டிஸ்கவரியிலும் சில சமயங்கள் உண்மைகள்கூட அருவருப்பான முறையில் காட்டப்படுகின்றன என்றும் நல்ல நிகழ்ச்சிகளைப்பார்க்கும்போது கூட சில வரை முறைகளை வைத்துக்கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
அன்னம் தண்ணீரை விட்டு பாலை மட்டுமே பருகுமாம். அதுபோல நாம் தான் குழந்தைகளுக்கு நல்லது எது கெட்டது என்பதையும் எவை எவை பாதிக்கும் என்பதையும் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் தூய்மையான பனித்துளிக்கு சமமானவை. எல்லாவற்றிற்கும் நம்மையே அது எதிர்பார்க்கிறது. நம்மிடம்தான் அது அனைத்தையும் கற்றுக்கொள்கிறது. பச்சை மண்ணான அதில் நல்ல, சிறந்த விதைக்ளை மட்டுமே நாம் ஊன்ற வேண்டும்.

6 comments:

இலா said...

மனோ ஆன்டி ! நலமா?? உங்கள் கருத்து அருமை.... உண்மையில் சொல்லப்போனால் பெற்றோர்கள் அவசரகதியில் இயங்குவதால் இப்படியான நிகழ்வுகள்... Nice Post

ஹுஸைனம்மா said...

அக்கா, இப்பத்தாம் பார்க்கீறேன் இந்தப் பதிவை. (நான் ரீடரில் பதிந்திருந்தேன்; ஆனால் சரியாக வரவில்லை; அதான் பார்க்கலை; இனி சரி செய்கிறேன்)

அக்கா, நான் மகனை வீட்டில் டி.வி., கம்ப்யூட்டர் அதிகம் பயன்படுத்த விடுவதில்லை. ஆனாலும், என் மூத்த மகன் 8,9 வயது முதல் கண்ணாடி போடுகிறான். டாக்டரிடம் கேட்டபோது, நாம் வீட்டினுள்ளேயே பெரும்பாலும் இருப்பதுதான் காரணம் என்றார். அதாவது, எல்லாப் பொருளுமே கிட்டத்தில் இருக்கின்றன் வீட்டில், பள்ளியில். இது கண்களுக்கு சோம்பேறித்தனத்தைத் தந்துவிடுகிறது (Lazy eye) என்றும் சொன்னார். முன்காலங்களில் தெருவில் வீடு இருக்கும்; அடிக்கடி தோட்டம், முற்றம், திண்ணை என்று வெளியே வருவோம். அதனால் பலதரப்பட்ட தொலைவுகளில் பார்வை போகும். இப்போ பக்கத்தில் மட்டுமே பார்க்கிறோம்; அதனால் அப்படி என்றார்!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஹுஸைனம்மா!

சிறு வயதில் கண்ணாடி போடும் நிலைமைக்கு பழக்க வழக்கங்கள், hereditary தவிர, பாருங்கள், இது மாதிரி புதுப்புது காரணங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. தெரிந்த காரணங்களையாவது நாம் சரிப்படுத்திக்கொள்ளலாமே என்பதுதான் என் ஆதங்கம்.

உங்கள் மகனை ஒரு second opinion-க்காக வேறு டாக்டரிடம் அழைத்துச் சென்று விசாரித்தீர்களா?

மனோ சாமிநாதன் said...

இலா! பின்னூட்டம் எழுத மறந்து விட்டேன்!
பதிவிற்கு என் அன்பு நன்றி!

Ranjani Narayanan said...

அன்புள்ள மனோ,
உங்கள் பதிவுகளை முதலிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

குழந்தைகள் மிகவும் சிறிய வயதிலேயே கண்ணாடி போட்டுக் கொள்வதைப் பற்றிய உங்கள் ஆதங்கமே உங்கள் முதல் பதிவு என்பது ரொம்பவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

சமுகத்தின் மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறை தெரிகிறது. தொடரட்டும் உங்கள் முத்து எண்ணங்களின் சிதறல்கள்.

தொடர்ந்து படித்துக் கொண்டு போகிறேன்.

Ranjani Narayanan said...

நானும் இதைப்பற்றி குழந்தைகள் வளர்ப்பு தொடரில் எழுதி இருக்கிறேன். இணைப்பு இதோ: http://wp.me/p2IA60-rs
நேரம் கிடைக்கும்போது படுத்துப் பாருங்கள்.

நன்றி!