Wednesday, 31 March 2010

வீட்டு உபயோக குறிப்புகள்

நமது அன்றாட வாழ்க்கையில் சில பிரச்சினைகளை, தொந்தரவுகளை, வீட்டில் புழங்குகையில், உடல் நலக் குறைவில் மேலும் பல வகைகளிலும் சந்திக்கிறோம். சில சமயம் அவற்றை சரி செய்ய பணமும் தேவையில்லாமல் செலவு செய்கிறோம். அந்த மாதிரி நேரங்களில் நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது ரொம்பவும் சாதாரணமாகச் சொல்லும் ஒரு தீர்வு கூட அசந்து போகிற மாதிரி பலன் அளிக்கிறது. அந்த மாதிரி குறிப்புகளைத்தான் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கே எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்..

2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும்.
3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.


4. கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக்குளிர்ந்த நீர் ஊற்றி சிறிது நேரத்தில் மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்.

5. புத்தக பீரோவில் புகையிலைத் துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

6. தூபக்காலில் நெருப்புத் துண்டங்களைப் போட்டு அதன் மீது கிராம்புத்தூளைத் தூவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.

7. உப்பு கலந்த நீரை சமையலறையில் சுவர்களோரம் தெளித்தால் எறும்புகள் வராதிருக்கும்.


8. வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் அரை கப் வினீகரில் 2 ஸ்பூன் சமையல் சோடா கலந்து வாஷ் பேசினின் துவாரங்களில் ஊற்றவும்.
அரை மணி நேரம் கழித்து கொதிக்கும் வென்னீர் 1 லிட்டர் அதில் ஊற்றவும். அடைப்பு நீங்கி விடும்.

9. தேனீ அல்லது தேள் கடிக்கு: புகையிலையை ஒரு சிட்டிகை எடுத்து ஒரு சொட்டு நீரில் கலந்து கடிவாயில் வைத்து ஒரு பாண்ட் எய்டின் உதவியால் அழுத்தமாக ஒட்டவும். வலி உடனடியாக மறையும்.

10. வீட்டில் பல்லிகள் வருகை அதிகமிருந்தால் ஆங்காங்கே மயிலிறைகை போட்டு வைப்பது அவற்றின் வருகையை நிறைய குறைத்து விடும். சுவற்றின்மீது கூட அலங்காரமாக ஒட்டி வைப்பது நல்ல பலனைத் தரும்.









மூட்டு வலி பற்றி!

மருத்துவப் பகுதியில் இந்த பிரச்சினையைத்தான் முதலில் எழுத வேண்டுமென நினைக்கிறேன். இன்று பலரையும் பாதிப்பது மூட்டு வலிதான். மூட்டுக்களில் ஏற்படும் வலிகள் மெல்லப்பரவி தீராத முதுகு வலிக்கும் காரணமாகி விடுகின்றன. பெரியவர்களுக்குத்தான் என்றில்லை. சிறியவர்களையும் தற்போது இது அதிகமாகவே பாதிக்கிறது. மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்களையும் எனக்குத் தெரிந்த மருத்துவக் குறிப்புகளையும் எழுதியுள்ளேன். இவை பலரையும் சென்றடைய வேண்டுமென்பதுதான் என் நோக்கம். இவை போக, சகோதர சகோதரிகள் தங்களுக்குத் தெரிந்த வைத்தியங்களையும் இங்கு எழுதினால் மற்றவர்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.

மூட்டுவலிக்கான காரணங்கள்:
எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிவதாலும் மூட்டுகளில் நோய் தொற்று ஏற்படுவதாலும், எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவதாலும் மூட்டு எலும்புகளுக்கிடையே சுரக்கும் திரவம் குறைவதாலும் மூட்டு வலி ஏற்படுகிறது.
இதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோருக்கு, "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்' மூட்டு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

கருத்தடை, கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பெண்களுக்கும் மிக அதிகமான வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதைப் பழக்கமாகக் கொண்ட ஆண்கள், பெண்களுக்கும் உடல் எடை அதிகமானவர்களுக்கும் மூட்டு வலி சீக்கிரமாகவே வந்து விடுகிறது.

இதன் தொடர்பு வலிகளான இடுப்பு வலி, முதுகு வலி, தோள் பட்டை வலி முக்கியமாக பெண்களை மிகவும் பாதிக்கிறது.

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தினமும் அதை உணராமலேயே செய்வது, குதிகால் செருப்புகளைப் பயன்படுத்துவது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உனராமலேயே அவற்றை உபயோகிப்பது, தவறான posture- அதாவது நிற்கும்போது ஒரு காலில் மட்டும் எடை அதிகாகுமாறு மறுகாலை மடித்தோ, சாய்த்தோ நிற்பது, அதிக நேரம் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பது, காலை மடித்து அடிக்கடி சம்மணம் போட்டு உட்காருவது, நிமிர்ந்து உட்காராமல் அதிகம் சாய்ந்த நிலையிலேயே எப்போதும் அமர்ந்து பழகுவது, கூன் போட்டு உட்காருவது-இதெல்லாம் மூட்டு வலியை மேலும் மேலும் அதிகரிக்கின்றன.

மூட்டு வலிக்கான தீர்வுகள்:
1. கடுகு எண்ணெய் மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது. சில பூண்டு பற்களுடன் மிதமான சூட்டில் அதைக் காய்ச்சி, சற்று ஆற வைத்து மிதமான சூட்டில் பாதிப்பு இருக்குமிடத்தில் தினமும் இரண்டு முறை தேய்த்து வந்தால் வலி நிறைய குறையும்.
2. முருங்கைக்கீரை, கொள்ளு, முடக்கத்தான் கீரை, மீன், பூண்டு இவற்றை தினமும் சாப்பாட்டில் எந்த முறையிலாவது அதிகம் எண்ணெய் சேர்க்காமல் தயாரித்து உண்ணுவது மூட்டு வலிக்கு மிகவும் நல்லது.

3.வெதுவெதுப்பாக சுட வைத்த தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

4. மூட்டு வலி, முதுகு வலிக்கு அக்குப்ரஷர் வைத்தியம் சிறந்த பலனைக் கொடுக்கிறது. பாதிக்கப்பட்ட இடத்திலோ அல்லது பாதிக்கப்பட்ட உறுப்புகள் இருக்கும் புள்ளிகளிலோ கை விரல்களால் அழுத்தம் கொடுக்கும்போது வலி நிறைய குறைந்து விடுகிறது. இந்த முறை எனக்கும் மிகவும் பலனளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
4. என் சினேகிதி சொன்ன வைத்தியம் இது.
ஒரு கை நொச்சி இலை, ஒரு கை பச்சை துளசி இலை, ஒரு கை முருங்கைக்கீரை, ஒரு கை வேப்பிலை, ஒரு கை புதினா இலை-இவற்றை மையாக அரைத்து நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளை கரு ஒன்றை ஊற்றி பிசைந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்தால் நல்லது.

5. ஒரு கப் வேப்பெண்ணெயில் ஒரு கைப்பிடி நொச்சி இலை, சிறிது கஸ்தூரி மஞ்சள், சில பூண்டு பற்கள் அரைத்துச் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் வலி நிறைய குறைகிறது.



மூட்டு வலி ஏற்படாமலிருக்கவும் அதிகரிக்காமலிருக்கவும் நம் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்வதாலும். நல்ல பலன் கிடைக்கும். இதைத்தான் அலோபதி மருத்துவர்களும் வற்புறுத்திச் சொல்கிறார்கள்.. அதிக நேரம் உட்கார்ந்தபடி பணியாற்றுபவர்கள், அவ்வப்போது எழுந்து காலார நடந்துவிட்டு வந்து உட்கார்ந்து வேலைகளைச் செய்ய வேண்டும்.



கண்ணாடி ஓவியம்

இதற்குத்தேவையான பொருள்கள்:


கண்னாடியில் வரையக்கூடிய பல வண்ணங்கள்
கருப்பு லைனர்
தங்க நிற லைனர்
வெள்ளி நிற லைனர்
மெல்லியதும் கூர்மையான ப்ரஷ்-2
சிறிது பட்டையடிக்கக்கூடிய ப்ரஷ்-2
வணங்களைக் கலக்க சிறு பாலெட்
ஒரு அழகான ஓவியம் ட்ரேஸிங் பேப்பரில் வரைந்தது

கருப்பு கார்ட்போர்ட் ஷீட்-1
தேவையான அளவில் கண்ணாடி ஒன்று
வரையும் முறை:
கருப்பு கார்ட்போர்ட் ஷீட்டை ஒரு பேப்பரின் மீது விரித்து அதன் மேல் ஒவியத்தை சீராக வைக்கவும்.
அதன் மீது கண்ணாடியை சரியான முறையில் வைக்கவும்.
கருப்பு லைனைரை எடுத்து ஓவியத்தின் அனைத்துக்கோடுகளையும் கண்ணாடியில் மெல்லியதாக வரையவும்.
அரை மணி நேரம் காய விடவும்.
வெள்ளை வண்ணத்தை மீடியமாக வைத்துக்கொண்டு அனைத்துக் வண்ணங்களிலும் ஷேட்ஸ் கொடுக்க முடியும். அதுபோல கற்பனைக்கேற்ப எல்லா இடங்களிலும் வண்ணம் தீட்டவும்.

தங்க நிற லைனராலும் வெள்ளி நிற லைனராலும் மின்னும் உடைகளையும் நகைகளையும் அழகாக வரைய முடியும். நம் கறபனைக்கேற்ப தீட்டும் வண்ணக்கலவைகள் அழகான ஓவியத்திற்கு மேலும் மெருகூட்டும்.

சமையலுக்கு முன்..

இங்கே சுவையான சமையல் குறிப்புக்கள் எழுத ஆரம்பிக்கும் முன்னர் சமையலை ஒட்டிய சில கருத்துக்களை முதலில் எழுத வேண்டியிருக்கிறது.
முதலில் சமையலறை. இது வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் சுத்தமாகவும் இருப்பது அவசியம். எல்லோருக்கும் வெளிச்சமான சமையலறை அமைந்து விடுவதில்லை. பெரிய ஜன்னல்கள் இல்லாத பட்சத்தில் சுவரின் வண்னங்கள் வெளிர்நிற வண்னங்களில் அமைக்கலாம். வெளிச்சம் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
அப்புறம் சுத்தம். பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி வைப்பது, கடுகு முதற்கொண்டு எல்லா சமையலுக்கான பொருள்களையும் கையால் எடுக்காமல் எல்லா பாட்டில்களிலும் ஸ்பூன் போட்டு வைப்பது, கைப்பிடித்துணியை தினம் அலசி காய வைப்பது, காய்கறிகளை அழுகாமல் சுத்தமான பைகளில் போட்டு குளிர் சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது, வாரமொரு முறை பினாயில் ஊற்றி அலசி சமையலறையை சுத்தப்படுத்துவது -என்று எல்லாமே சுத்தத்தில் அடங்கும். ஒரு குடும்பத்தலைவியை எடை போடுவது அவளது சமையலறை வைத்துத்தான் என்பது மிகச் சரியான உண்மை.
அடுத்தது பொருள்களை வாங்குவதும் சேமிப்பதும். முன்பெல்லாம் வற்றல் மிளகாய், புளி, பருப்பு வகைகள் எல்லாம் வருடக்கணக்கில் பெரியவர்கள் வாங்கி சுத்தம் செய்து சேமித்து வைப்பார்கள். ஆனால் இப்போதோ மிளகாய் மூன்று மாதமானால் கருப்பாகி விடுகிறது. புளியும் கறுத்து விடுகிறது. அதனால் அவ்வப்போது பார்த்து வாங்குவதுதான் இப்போது சரியாக இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவதற்கும் மார்க்கெட்டில் கடையில் வாங்குவதற்கும் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய்வரை வித்தியாசம் இருக்கிறது. அதனால் மிளகாய், புளி, பருப்பு வகைகள், உளுந்து இதெல்லாம் மார்க்கெட்டில் இருக்கும் கடைகளில் வாங்குவது நல்லது. புளி, மிளகாய், உளுந்து, பருப்பு இவையெல்லாம் தை மாசத்திலிருந்து 4 மாதம் வரை புதியதாய் கிடைக்கும். நான்கு மாதங்களுக்கு வாங்கி சேமித்து வைத்துக்கொள்லலாம். வற்றல் மிளகாய் நல்ல சிவப்பாகவும் புளி இளம் பழுப்புக்கலரிலும் இருந்தால் சமையல் மிகவும் ருசியாக அமையும். இதுபோல அனைத்து தானிய வகைகளையும் தேடிதேடி தரம் பார்த்து, அதிக செலவில்லாமல் வாங்கி சுத்தம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்வது குடும்பத்தலைவின் முக்கிய பொறுப்பாக அமைகிறது.
அதேபோல கோதுமையைப் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக பஞ்சாப் கோதுமையை சுத்தம் செய்து கழுவி வெய்யிலில் ஒரு நாள் காய வைத்து அரைக்கக்கொடுத்து வாங்கி அதில் சப்பாத்தி, பூரி வகைகள் செய்வது எப்போதுமே சுவையாக இருக்கும். ஒரு கிலோ கோதுமையுடன் ஒரு கை சோயா பீன்ஸ், ஒரு கை வெள்ளை கொண்டகடலை சேர்த்துக் கழுவி காய வைக்கலாம். இது உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தைத் தரும். கோதுமையில் உள்ள க்ளூட்டன் சிலருக்கு அஜீரணத்தை கொடுக்கும். செரிமானம் ஆவதில்லை. பொதுவாக சப்பாத்தி வகைகளை மதிய நேரம் உண்பது ஜீரணத்திற்கு உதவும். இரவு நேரச் சாப்பாடு எப்போதுமே உடலுக்கு ஜீரணமாகும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது. பொதுவாக நம் உடலில் காலை எழுந்ததிலிருந்து மதியம் வரை அதிக சக்தி இருக்கும். பிறகு மதியத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த சக்தி குறைந்து வரும். அதனால் காலை நேரம் நன்கு உடலாலுழைக்க முடியும். அப்போது வயிறும் நல்ல சாப்பாட்டை ஏற்றுக் கொள்ளும். மதியம் மிதமாகவும் இரவு எளிமையாகவும் சமையல் இருக்க வேண்டும்.
காய்கறிகளை பசுமை நிறம் மாறாமல் சமைப்பதும் ஒருமுறை வெந்த பொருள்களை மறுபடியும் வேக வைக்காமல் சமைப்பதும் சமையலில் சுவையை கூட்டும்.
சமையல் என்பது ஒரு அருமையான கலை. அதில் எத்தனைக்கெத்தனை ஆர்வம் இருக்கிறதோ அத்தனைக்கெத்தனை சமையல் சுவையாக அமையும். அதில் அன்பும் அக்கறையும் கலந்து சமைக்கும்போது ருசி இன்னும் அற்புதமாக அமைந்து விடும்.

கண்ணீர் ஓவியம்

புகழ் பெற்ற வெளி நாட்டு ஓவியம் இது. ஒரு தமிழ் வார இதழில் முகப்புப்படமாக வந்திருந்தது. இந்த பிஞ்சு முகத்தில் தெரியும் சோகமும் கண்ணீர்த்துளிகளும் மனதை என்னவோ செய்ய 20 வருடங்களுக்கு முன்னர் அதைப்பார்த்து நான் வரைந்த ஓவியம் இது. வெறும் வாட்டர் கலரில் வரைந்திருக்கிறேன்.


Tuesday, 30 March 2010

இளம் அன்னையர்க்கு!

மார்ச் 15, 2010

முதல் முத்தாக என் எண்ண முத்துக்களை இங்கே இளம் தாய்மார்களுக்கு காணிக்கையாக்க ஆசைப்படுகிறேன்.
சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்குழந்தை ஐந்து வயதாவதற்குள்ளேயே கண்ணாடி போட நேர்ந்ததுதான் என்னை இங்கே எழுத வைத்திருக்கிறது. அந்தக் குழந்தை சிறு வயதிலிருந்தே தொலைக்காட்சியில் ‘ரேஞ்சர்ஸ்’ பார்ப்பதை கவனித்திருக்கிறேன். கம்ப்யூட்டரில் விளையாடுவதாகத் தெரிந்து கவலைப்பட்டிருக்கிறேன். முதலில் இது சிறு ஆரம்பம்.தான். அப்புறம் இதுவே சாப்பாடாகவும் விளையாட்டாகவும் ஆகி விடுகிறது. விருந்தினர் வீட்டுக்குப்போகும்போதுகூட குழந்தை பழக்கத்தின் காரணமாக டிவி பார்க்க அடம் பிடிக்கிறது. கண் பாதிப்பு மட்டுமல்லாமல், நல்ல பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
அடுத்த பழக்கம் மொபைல் உபயோகிப்பது. ஒரு மொபைல் ஃபோனில் சார்ஜ் குறையும்போது அதன் கதிர்வீச்சு பல மடங்கு அதிகரிக்குமாம். ஏற்கனவே இதயப்பகுதியில் உள்ள பாக்கெட்டில் கைபேசியை வைப்பதால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் பாண்ட் பாக்கெட்டில் வைப்பதால் ஆண்மை பாதிக்கப்படுகிறது என்றும் பல செய்திகள் வந்து விட்டன. ஒரு சிறு குழந்தை உபயோகிப்பதால் அதற்கு ஏற்படும் பாதிப்புகளை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.
அந்த காலத்தில் குழந்தைகளுடன் ஒருவருக்கொருவர் கூடி விளையாடுவது, உறவினர் வீட்டுக்கு விடுமுறை நாட்களில் சென்று கொட்டம் அடிப்பது, நீச்சல் அடிப்பது, செடி கொடிகள், ஆடு, மாடு, பூனைக்குட்டி என்று ரசிப்பது-இப்படி எத்தனையோ விதம் விதமாய் இளமைப்பருவம் கழிந்தது. வயதளவில் மால நேர வெய்யிலில் இருக்கும் எத்தனையோ பேருக்கு நாவினடியில் நெல்லித்துண்டு போல இன்று நினைத்தாலும் சிறு வயதுப் பருவம் இனிக்கிறது. இந்த காலக் குழந்தைகளோ, பாடச்சுமைகளுடன் டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் பாதிப்புகளுடன் வீட்டிலிருக்கும் மற்ற உறவுகளுக்கிடையே ஏற்படும் வாக்கு வாதங்கள், அளவுக்கு மீறிய செல்லக் கொஞ்சல்கள், சண்டை சச்சரவுகளை கவனித்துக் கொண்டு வளர்கிறது.
நவீன மயமாகிவிட்ட தற்போதைய உலகில் மொபைல், டிவி, கம்ப்யூடர், மற்ற மின்சாதனங்களின் பாதிப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் நம் குழந்தைகள் அவற்றை எந்த அளவிற்கு உபயோகிக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். எதை கவனிக்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எந்த வகையில் அன்பையும் பரிவையும் கவனிப்பையும் கண்டிப்பையும் கலந்து தர வேண்டும் என்ற எல்லாவற்றையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஆசிரியை டிஸ்கவரி சானல் தமிழில் சில மணி நேரங்கள் தன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்த பிறகு, குழந்தைகள் ‘ரேஞ்சர்ஸ்’ ரக கார்ட்டூன்களை பார்ப்பது குறைந்து விட்டது என்றும் இது மிகவும் வரவேற்கக்கூடிய விஷயம் என்றாலும் டிஸ்கவரியிலும் சில சமயங்கள் உண்மைகள்கூட அருவருப்பான முறையில் காட்டப்படுகின்றன என்றும் நல்ல நிகழ்ச்சிகளைப்பார்க்கும்போது கூட சில வரை முறைகளை வைத்துக்கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
அன்னம் தண்ணீரை விட்டு பாலை மட்டுமே பருகுமாம். அதுபோல நாம் தான் குழந்தைகளுக்கு நல்லது எது கெட்டது என்பதையும் எவை எவை பாதிக்கும் என்பதையும் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் தூய்மையான பனித்துளிக்கு சமமானவை. எல்லாவற்றிற்கும் நம்மையே அது எதிர்பார்க்கிறது. நம்மிடம்தான் அது அனைத்தையும் கற்றுக்கொள்கிறது. பச்சை மண்ணான அதில் நல்ல, சிறந்த விதைக்ளை மட்டுமே நாம் ஊன்ற வேண்டும்.