10 நாட்களுக்கு முன் பிரபல சர்க்கரை நோய் நிபுணரைப்பார்க்கப் போயிருந்தேன்.
எடை பார்க்கும் மிஷின் மேல் நிற்கச் சொன்னது வரவேற்பில் இருந்த பெண். அது
எழுதிய எடையைப்பார்த்ததும் திகீரென்றது. 10 நாட்களுக்கு முன் வந்ததற்கும்
இப்போதைக்கும் 4 கிலோ குறைந்திருந்தது. மனசு அப்படியே கலவரமாகி விட்டது. எப்படி
இது 10 நாட்களில் சாத்தியமாகும்? உடலில் ஏதாவது மோசமான பிரச்சினை
இருந்தாலொழிய இப்படி திடீரென்று எடை இறங்காது. குட்டையாய் குழம்பிப்போனது மனது. வேறெதிலும்
மனம் பதியவில்லை. என் முறை வந்ததும் மருத்துவரிடம் பேசிய போது என் சந்தேகத்தைக்கேட்டேன்.
அவர் சிரித்துக்கொண்டே ' இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உயரத்திற்கு சரியான எடையில்
தானே இருக்கிறீர்கள்? இதற்கு மேலும் குறைந்தால் தான் கவலைப்பட வேண்டும்' என்றார்.
அப்போது தான் அவரைக்கூர்ந்து கவனித்தேன். அவரின் வாய் ஒரு பக்கம் கோணியிருந்தது. ஸ்ட்ரோக்
வந்தவர்களுக்குத்தானே அப்படி இருக்கும்? எல்லா சந்தேகங்களும் மனதைக்குடைய
அவர் எழுதிய மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
எடை குறைந்திருப்பற்றி என் புலம்பலைக் கேட்ட என் கணவர்
' வீட்டிற்கு வந்து எடை பார்க்கும் கருவியில் எடையை சரி பார்த்த
பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் உண்டு. அதற்குள் எதற்கு குழம்பிப்போனாய்?' என்று கடிந்து
கொண்டார்கள். அப்புறம் எங்கள் வீட்டு எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தால் பழைய
எடை தான் இருந்தது. ஒரு மாதிரி உயிர் வந்தது. அப்புறம் விசாரித்ததில் நிறைய மருத்துவமனைகளில்
நமக்கு முன் எடை பார்த்தவர்கள் சென்ற பிறகு திரும்ப அதை பழைய நிலைக்கு ஜீரோ செட்டிங்கிற்கு
பணியாளர்கள் சரி செய்வதே இல்லை என்று தெரிந்தது!! இதனால்
எத்தனை மனக்குழப்பம்! எத்தனை தவிப்பு!! அந்த மருத்துவரைப்பற்றியும் விசாரித்தேன். அவருக்கு
சமீபத்தில் தான் ஸ்ட்ரோக் வந்து மருத்துவக்கண்காணிப்பில் இருந்ததாகச் சொன்னபோது திகைப்பாக
இருந்தது. இந்த மாதிரி நிலையில் மருத்துவ பிராக்டீஸ் செய்யலாமா?
நான் பொதுவாக எந்த மருத்துவர் எந்த மருத்து எழுதிக்கொடுத்தாலும்
மருந்துக்கடை வைத்திருக்கும் ஒரு சினேகிதிக்கு ஃபோன் செய்து அந்தந்த மருந்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி
போன்ற பாதிப்புகள் தராமல் இருக்குமா என்று கேட்டுக்கொள்வேன். அதே போல, அவர் எழுதிக்கொடுத்த
மருந்தப்பற்றி கேட்டதும் ' இந்த மருந்தா? இது இந்திய
அரசாங்கம் தடை செய்யப்பட்ட மருந்தாயிற்றே?? இதை சாப்பிடுவதால்
சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று தானே தடை செய்தார்கள்? தடையை நீக்கி விட்டார்களா
என்ன? என்று என்னையே திருப்பிக்கேட்டார். சொரேலென்றது எனக்கு! அதற்கப்புறம்
என் குடும்ப டாக்டரிடம் சென்ற போது, அவர் சிரித்தவாறே ' உங்களுக்கு
மட்டுமல்ல, நான் யாருக்குமே இந்த மாத்திரையை எழுதித் தரமாட்டேன்' என்றார்.
ஒரு வழியாக தப்பித்து விட்டேன் என்றாலும் ஓரளவு கற்ற, படித்த அறிவு இருப்பதாலும், கேள்விகளும் விளக்கங்கள்
கேட்பதாலும் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருக்கிறேன். படிப்பறிவு இல்லாதவர்களும் பொருளாதார
வசதி இல்லாதவர்களும் தான் நம் சுதந்திர இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம்
என்ன செய்வார்கள்?
சமீபத்தில் ஸ்ரீராம் தன் வலைத்தளத்தில் வெளியிட்ட ' மருத்துவ அராஜகங்கள்' என்ற பதிவைப்படித்தேன்.
சிந்திக்க வைத்த பதிவு அது. ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளராய் இருந்த குணால் சாஹாவிற்கே
தன் மனைவியைத் தவறான சிகிச்சையிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை என்றால் நம் நாட்டின்
மிகச் சாதாரண பிரஜைகள் என்ன செய்ய முடியும்? அது போன்ற அராஜகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது.
விடிவு காலம் எப்போது?
