Monday, 1 September 2014

முத்துக்குவியல்-30!!!

குறிப்பு முத்து:

அயர்ன் பாக்ஸில் பழுப்பு நிறக்கறை இருந்தால்:



ஈரத்துணி கொன்டு சோடா மாவை ஒத்தி எடுத்து அந்தக் கரையைத்துடைத்தால்  கறை முழுவதுமாக நீங்கி விடும்.

சிரிக்க வைத்த முத்து:

சமீபத்தில் படித்தது இது! எப்படியெல்லாம் யோசித்து எழுதி சிரிக்க வைக்கிறார்கள் என்று தோன்றினாலும் படித்ததும் புன்னகைக்க்காமல் இருக்க முடியவில்லை!! நீங்களும் படித்து ரசியுங்கள்!




நம்மோட ரெண்டு கண்களுக்கும் உள்ள உறவு உங்களுக்குத் தெரியுமா?
ரெண்டும் ஒண்ணை ஒண்ணு பாத்துக்காது.
ஆனால்
ரெண்டும் ஒன்றாகத்தான் பார்க்கும்.
ஒன்றாகத்தான் சிமிட்டும்.
ஒன்று சேர்ந்து தான் கண்ணீர் விடும்!ஒரேபக்கம் தான் பார்க்கும்.
ஒரே நேரம் தான் கண்கள் மூடித்தூங்கும்!
இரு கண்களுக்கும் உள்ள உறவு அந்த அளவு ஆழமாக வேரோடிய உறவு!
ஆனால்...
ஒரு பெண்ணைப்பார்த்தால் மட்டும் ஒண்ணு மட்டும் தான் கண்ணடிக்கும்.. மற்றது சும்மா இருக்கும்!
இதிலிருந்து ஒரு விஷயம் தெள்ளத்தெளிவா தெரியுது...

ஒரு பெண் நினைச்சா எந்த உறவையும் வெட்டி எறிஞ்சிட முடியும்!!


அபாய முத்து

:
சிகிரெட்டில் புற்று நோயை வரவழைக்கக்  கூடிய 43 காரணிகள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது தற்போது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை காட்மியம், பூச்சிக்கொல்லி மருந்தான டி.பிடி தயாரிக்கப்பயன்படும் பென்சீன், கழிவறை சுத்தம் செய்யப்பயன்படும் அம்மோனியா, இறந்த உயிரினங்களை பாதுகாக்கப் பயன்படுகிற பார்மால்டிஹைடு, மற்றும் விஷ வாயுக்கள், காற்றை மாசுபடுத்தும் துகள்கள் போன்றவை உள்ளன!!

புகைப்பட முத்து:

நாங்கள் ஷார்ஜாவில் பல வருடங்களாக எங்கள் உண‌வகத்திற்காக காய்கறிகள் வாங்கிக்கொண்டிருக்கும் கடையிலிருந்து ஒரு விசேஷ நாளில் அதன் நிறுவனர் எங்கள் இல்லம் வந்து கொடுத்த பழ வகைகள் இவை!!

பழங்களுடன் என் கணவர்
வருத்தப்பட வைத்த முத்து:

சமீபத்தில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பேசிக்கொன்டிருந்த போது, பேச்சு இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் நடைமுறைகள், குழந்தைகளின் படிப்பு சுமைகள் பற்றி சரமாரியாய் அவரவர் தங்களின் அபிப்பிராயங்களை சொல்லிக்கொன்டிருந்தோம். பேச்சுக்கிடையே சமீப காலத்தில் ஒரு ஆசிரியை ஸ்கேலால் அடித்து ஒரு பையனுக்கு கண் பார்வை பிரச்சினை ஆனதைப்பற்றிய செய்தி விவாதமாக வந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த, அரசுப்பள்ளியில் பணி செய்கிற என் உறவுப்பெண்மணி  சொன்னார். ' மன அழுத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. நாங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முன் அவர்களுக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாடத்தில் கவனம் இல்லாத ஒரு மாணவனை தினமும் பார்க்க நேர்ந்தால் அவனை தனியே கூப்பிட்டு விசாரித்து, அவன் மனதிலுள்ள‌தை வெளியே வரவழைத்து, ஆறுதல் அளித்து, உற்சாகத்தை ஏற்படுத்தி அவனை பாடங்கள் படிப்பதில் உற்சாகத்துடன் செயல்படுத்தும்போது நாங்கள் களைப்படைந்து விடுகிறோம். நாங்களும் காலை 4 மணிக்கு எழுந்து சமைந்து, வீட்டில் பெரியவர்களை கவனித்து, எத்தனையோ கிலோ மீட்டர்கள் பயணித்து பள்ளிக்கு வருகிறோம். என் சினேகிதி ஒரு நாள் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் எதற்கோ ஸ்கேலை எடுத்தாராம், உடனே ஒரு பையன் எழுந்து ' என்ன டீச்சர், ஜெயுலுக்கு போக ஆசையாக இருக்கிறதா?' என்று கேட்டானாம். இத்தைகைய மாணவர்களை எப்படி சமாளிப்பது?'  என்றார். எங்களுக்கு உடனேயே பதில் சொல்ல முடியவில்லை!!

மருத்துவ முத்து:

உடம்பில் தோன்றும் மருக்களை நீக்க:

கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அது பசை போல ஆனதும் தினமு அதை மருவில் தடவி வந்தால் சிறிது நாட்களில் அந்த மரு மறையும்.