Tuesday, 3 April 2012

துபாயில் ஒரு உலகப் பொருட்காட்சி!!

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே துபாயில் இருக்கும் குளோபல் வில்லேஜ் [ GLOBAL VILLAGE ] சென்றிருந்தேன். ஷார்ஜாவிலிருந்து துபாய் 15 கிலோ மீட்டர்தான் என்றாலும் அதன் பின் இந்த துபாய் லாண்டிற்கு 30 நிமிடங்கள் பயணம் செல்ல வேண்டும். 120 கி.மீ வேகத்தில் 40 நிமிடங்களில் இந்த குளோபல் வில்லேஜிற்கு சென்றடைந்தோம்.
வரவேற்பு முகப்பு
துபாய் நகரைத்தாண்டி இந்த பிரம்மாண்டமான பொருட்காட்சி நகரை துபாய்லாண்ட் என்ற இடத்தில் அரசு நிர்மாணித்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும்  பல நாடுகள் பங்கேற்கும் இந்த பொருட்காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஏமன் நாட்டு அரங்க முகப்பு
ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடை பிரதிபலிக்கும். வருடா வருடம் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் முடிய இந்த பொருட்காட்சி நடக்கிறது.
ஸ்பெயின் நாட்டு அரங்க முகப்பு
ஒவ்வொரு நாட்டு ஸ்டாலும் அதன் கலாச்சாரப் பின்னணியில் அமைந்திருக்கும். இந்தியாவிலேயே பல கலாச்சாரங்கள் புதைந்திருப்பதாலும் பல மொழிகள் இணைந்திருப்பதாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக, ஒரு முறை திப்பு சுல்தான் கோட்டை, ஒரு முறை ஆக்ரா கோட்டை- இப்படி பல விதமாக இந்திய அரங்கம் நிர்மாணித்து அசத்தும்.
இந்திய அரங்க முகப்பு
இந்திய கலை நிகழ்ச்சி
இந்திய அரங்கினுள் இருக்கும் கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்தில் கிடைக்கும் சிறப்பான பொருள்களைக் கொண்டு அமைந்திருக்கும். மாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை இந்த பொருட்காட்சி திறந்திருக்கும்.
எகிப்து நாட்டு அரங்க முகப்பில் உள்ள ஓவியம்
திங்கட்கிழமை ஆண்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் குடும்பத்துடன் கூடிய ஆண்களுக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தாய்லாந்து அரங்க முகப்பு க்ரீக் அருகே
கடந்த 15 வருடங்களாக இந்த பொருட்காட்சி வெவ்வேறு இடங்களில் நடந்தாலும் 2006-லிருந்து துபாய்லாண்ட் என்ற இந்த இடத்தில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

உணவு ஸ்டால் ஒன்றில் உருளைக்கிழங்கை ஸ்பைரலாக அடுக்காக வெட்டி எண்ணெயில் வறுத்துத் தருகிறார்கள்.
பல்வேறு விளையாட்டுக்கள், பல நாடுகளின் அழகு அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளின் உணவகங்கள் போன்ற சிறப்புகள் உண்டு.
இந்த முறை  45 நாடுகள் கலந்து கொண்டதாகவும் 4 மில்லியனுக்கு மேல் இங்கிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் வருகை தந்ததாயும் 2 மில்லியனுக்கு மேல் வருமானம் வந்துள்ளதாயும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அத்தனை புகைப்படங்களையும் இங்கே இணைக்க முடியவில்லை. ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இனைத்திருக்கிறேன்.