Tuesday, 17 January 2012

குழந்தையென்னும் பொக்கிஷம்!!

சமீப காலமாக, குழந்தையின்மை என்ற பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அது தொடர்பான பிரச்சினைகள், ஏசல்கள், கண்ணீர்கள், சிகிச்சைகள் என்று ஒவ்வொருத்தரின் கதைகளை கேட்கும்போது மலைப்பாக இருக்கிறது. எல்லோருக்கும் தாய்மை என்ற வரம் உடனேயே கிடைத்து விடுவதில்லை. அந்தக் காலத்தில் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி, பல இடர்கள் தாங்கி கதாநாயகன் பொக்கிஷத்தைக் கைப்பற்றுவது போல முடிவு வரும். அது போல ஒரு குழந்தை பெற ஒவ்வொரு பெண்ணும் பல சோதனைகளை இந்த காலத்தில் தாங்க வேண்டியிருக்கிறது.





அப்படி அற்புதமாய்க் கிடைத்த அந்தக் குழந்தையென்னும் பொக்கிஷம் இன்றைக்குக் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்படுகிறதா? மலர் போன்ற குழந்தையின் மனசுக்கு பாதுகாப்பும் அன்பும் புரிகிற மாதிரி நம்பிக்கை ஊட்டப்படுகிறதா? ? அது தான் இந்தப் பதிவின் கேள்வி!!

நான் வசிக்கும் இந்த ஐக்கிய அரபுக் குடியரசில் பலதரப்பட்டவர்கள், பல நாட்டவர்கள் எல்லோருமே வசிக்கிறார்கள். இங்கே பெரும்பாலான கணவர்கள் அலுவலகத்தில் வேலை செய்ய, பொருளாதாரச் சிக்கல்களை முன்னிட்டோ, அல்லது தேவைகளை முன்னிட்டோ அவர்களின் மனைவிகள் வெளியில் வேலை செய்கிறார்கள். நம் ஊரைப்போலத்தான் இது என்றாலும் நம் ஊரைப்போல தனியே இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள உற்ற உறவுகள் அருகிலிருப்பதில்லை. ஊரிலிருந்து பெற்றவர்களையோ, உற்றவர்களையோ வரவழைத்துக்கொள்ள எல்லோருக்கும் பொருளாதார வசதிகள் இங்கே இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் முக்கியமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.  தனிமை பல மன மாறுதல்களை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. பல விபரீத எண்ணங்களையும் ஏற்படுத்துகிறது. வேலை செய்து வந்த அலுப்பில் கணவனும் மனைவியும் சோர்ந்து படுத்து விட, அப்போதும் குழந்தைக்குத் துணை தனிமை தான் அல்லது தொலைகாட்சி தான். தொலைக்காட்சியின் பாதிப்பு அவர்களை பல விதங்களில் மாற்றி ஆழ்மனத்தில் சிக்கல்களை உண்டாக்குகிறது.



சமீபத்தில் இங்கு வசிக்கும் என் சினேகிதியின் பெண் சொன்ன தகவல் மனதை அப்படியே உறைய வைத்தது. அவரின் மகனோடு படிக்கும் 11 வயது மாணவன் அந்தப் பையன். தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிவதால் தினமும் பள்ளியிலிருந்து மகன் வந்து 45 நிமிடங்கள் கழித்துத்தான் அம்மா தன் பள்ளியிலிருந்து வந்து சேருவார். அன்றைக்கும் அதே போல சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்ட பையன் தன் கராத்தே பெல்டை எடுத்து அதன் ஒரு புறத்தை வாசல் கதவின் உள்புறத்திலுள்ள கொக்கியில் மாட்டி [ பொதுவாய் எல்லோரும் ஏதேனும் பைகளை மாட்ட உள் கதவில் கொக்கி பதித்திருப்பதுண்டு.] மறுபுறத்து கொக்கியை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஒரு நாற்காலியில் ஏறி நின்று கொண்டு தான் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் ‘சூப்பர்மேன்’ போல தாவிக் குதிக்க, கழுத்தில் மாட்டியிருந்த கராத்தே பெல்ட்டின் கூர்மையான நுனி அவன் கழுத்தைத் தாக்கி, முக்கால் மணி நேரம் கழித்து அவனின் தாயாரும் மற்றவர்களும் கதவை உடைத்துக் கொண்டு வந்து பார்த்த போது அவன் நினைவிழந்து கிடந்தான். மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் அவன் உயிர் பிரிந்து விட்டது. அவன் தாயாரின் இரத்தக்கண்ணீருக்கு பதிலேது?

இன்னொன்றும் அவர் நேரே பார்த்தது. இங்கேயெல்லாம் பிளாட்பாரங்களில் அங்கங்கே வண்டிகளையும் பெராம்புலேட்டர்களையும் தள்ளிச் செல்வதற்காக சற்று சரிவான வழிகள் உண்டு. சாலையில் இறங்க இது போல வசதி செய்து வைத்திருப்பார்கள். அந்த மாதிரி ஒரு ஸ்லோப் அருகே ஒரு பெராம்புலேட்டரில் ஒரு பச்சிளங்குழந்தை படுத்திருக்க, அதைச் சுற்றிலும் நிறைய பைகள் மாட்டியிருந்தனவாம். யாராவது போகிற போக்கில் இலேசாக இடித்தால் போதும் அந்த வண்டி கீழே சரிவில் இறங்கி சாலைக்கு வந்து விடும். பல கார்கள் வேகமாகப் போகும் அந்த சாலையில் அந்த வண்டி இறங்கினால்.. .. ..நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் எங்கே என்று என் சினேகிதியின் பெண் தேடிப்பார்க்கையில் அவர்கள் சிறிது தூரத்தில் நிற்கும் டாக்ஸி ஒட்டுனரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!! இந்தக் குழந்தையைப்பற்றிய கவலையோ பயமோ இல்லாமல்!! எத்தனை அஜாக்கிரதை! என் சினேகிதியின் பெண் “ எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்! குழந்தையென்பது வரமல்லவா? எல்லோருக்குமா நினைத்தவுடன் குழந்தை பிறக்கிறது? ஒவ்வொருத்தர் எத்தனை சோதனைகளை சந்தித்து குழந்தையைப் பெறுகிறார்கள்?  இப்படி அலட்சியமாக விடுவதற்கா? “ என்று குமுறியது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.



என் உறவினர் சொன்ன மற்றுமொரு தகவல். குழந்தை தூங்கி விட்டதே என்று அப்படியே குழந்தையை காரில் படுக்க வைத்து ஏஸியையும் ஆன் பண்ணி விட்டு, பெற்றோர் சூப்பர்மார்க்கெட் உள்ளே ஷாப்பிங் செய்யச் சென்று விட்டார்கள். கார் பூட்டாது இருப்பதை கவனித்த ஒருவன் குழந்தையை கவனிக்காமல் வேகமாக வெளியே ஓட்டிச் சென்றிருக்கிறான். குழந்தை விழித்துக் கொண்டு சப்தமிட்டதும் அப்படியே காரை விட்டு விட்டு ஓடி விட, அப்புறம் போலீஸ் வந்து, பெற்றோருக்கு தகவல் சொல்லி அவர்கள் வருவதற்குள் அந்தக் குழந்தை எந்த அளவு படாத பாடு பட்டிருக்கும்?

அதேபோல இங்கே வேற்று நாட்டவர்கள் இருந்த ஒரு பிளாட்டில் நெஞ்சைக் கலங்க வைக்கும் ஒரு நிகழ்வு! குழந்தை திறந்திருந்த ஜன்னல் வழியே ஷுவைத் தூக்கி எறிந்திருக்கிறது. அந்த குழந்தையின் மூளையில்லாத தாயார், ஷுவை எடுப்பதற்காக, அப்படியே குழந்தையை விட்டு விட்டு 16ஆவது மாடியிலிருந்து இறங்கி ஷுவை எடுத்திருக்கிறார். எடுத்துக் கொண்டு நிமிரும்போது, திறந்திருந்த ஜன்னல் வழியே அந்த குழந்தை 16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒரு விநாடியில் அவர் கண்ணெதிரே இறந்து போனது.



குழந்தையென்னும் அற்புதமான பொக்கிஷத்தை எத்தனை பேர் தன் உயிருக்கும் மேலாக பாதுகாக்கிறார்கள்? எத்தனை பேர் கண்ணும் கருத்துமாய் அதன் ஒவ்வொரு பருவத்திலும் கவனித்து, நற்பண்புகளை சொல்லிக்கொடுத்து ஒரு முழுமையான மனிதனாக உருவாக்குகிறார்கள்? மனதை மிகவும் வேதனையுடன் யோசிக்க வைக்கிறது இந்த நிகழ்வுகள்!!

படங்கள் உதவி: கூகிள்