Tuesday, 10 January 2012

பொங்கலோ பொங்கல்!!!

வழக்கம்போல பொங்கல் திருநாள் 15-1-2012 அன்று வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே கிராமங்களில் பல விதங்களில் சிறப்பாகக் கொண்டாடும் பழக்கங்களும் கொண்டாட்டங்களும்தான் என்றுமே நினைவில் எழும்.




தமிழ்நாட்டில் பல வித சமுதாயங்கள், சமூகத்தினர் பொங்கலை ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறார்கள். அனைத்துமே சிறப்பான கொண்டாட்டங்கள்தான்!

போகிப்பொங்கல் அன்று பெரும்பாலும் பழைய துணிமணிகளைக் கொளுத்திப்போடுவதும் வீடுகளை சுத்தம் செய்து, காரை வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்து மெருகேற்றுவதும் தான் நடக்கின்றது. அசுத்தங்களையும் குப்பைகளையும் ‘ போக்கி’ என்பதுவே காலப்போக்கில் ‘ போகி ’ என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. போகி என்றால் இந்திரனுக்குப் பெயர் என்றும் கூறப்படுகிறது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்ற போது பழைய குப்பைகளளக் கழித்து, வீட்டுக்கு வர்ணம் தீட்டி மெருகு ஏற்றினர் என்று சொல்லப்படுகிறது. கிராமங்கள் சிலவற்றில் இந்த நாள் ‘ காப்பு கட்டும்’ நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, நவதான்யங்கள் இவற்றால் காப்பு கட்டி, துணிகளில் முடிந்து தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் ' காப்பு கட்டுதல்' என்று பெயர். இதனால் கெட்டவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.

பொங்கல் அன்று பொங்கல் பொங்குவதும்கூட பல வீடுகளிலும் பல ஊர்களிலும் மாவட்டங்களிலும் வேறுபடுகின்றன. சிலர் விடியற்காலையே, சூரியோதயம் வரும் நேரம் பொங்கலைப் பொங்குகிறார்கள். சிலர் அந்தி சாயும் நேரம் பொங்கல் பொங்குகிறார்கள். சிலர் நல்ல நேரம் பார்த்து, பெரும்பாலும் உச்சியில் கதிரவனின் கிரணங்கள் மின்னும்போது பொங்கல் பொங்குகிறார்கள்.



கிராமங்களில் மண் அடுப்பில் பொங்கல் பொங்குவது தான் தனிச்சிறப்பு. அதற்கான அடுப்பு தயாரிக்கும் பணி முதல் நாளே நடக்கும். செங்கற்களாலும் களி மண்ணாலும் அடுப்பை தயாரித்து, மெழுகி, அதன்மீது கோலம் போட்டு அழகாக்கி விடுவார்கள். சிலர் வீட்டு முகப்பில் இரண்டு பொங்கல் பானைகள் வைத்து சமைக்கும் அளவிற்கு மண்ணைத் தோண்டி, மேடை கட்டி பானைகள் பதிய கொண்டையும் வைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள்.

பொங்கலுக்கு ஏற்றது கிராமங்களில் தயாராகும் புதிய மண் பானைகள் தான். கழுவி, அதற்கு வெளியே கோலமிட்டு, இஞ்சிக் கொத்துக்கள், மஞ்சள் கொத்துக்கள் வைத்துக் கட்டி, பாலும் தண்ணீருமாய் ஊற்றி அது பொங்கி வந்ததும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவி, புத்தரிசி கொட்டி புது வெல்லமும் புத்துருக்கு நெய்யும் சேர்த்து பொங்கல் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரி சேர்த்து தேங்காய்த்துருவலும் உப்பும் சேர்த்து சமைப்பார்கள். ஏழெட்டு வகைகள் காய்கறிகள் சேர்த்து குழம்பு வைப்பார்கள். சிலர் இதைக் குழம்பாக செய்யாமல் பொரியலாக செய்து பக்க துணைக்கு சாம்பாரும் செய்வார்கள். சில சமூகத்தினர், அவர்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்பது மரபு என்பார்கள்.

அடுத்த நாள் கன்னிப்பொங்கல். திருமணமாகாத பெண்கள் பொங்கல் பொங்குவதால் இது கன்னிப்பொங்கல் என்றும் உறவினர்கள் ஒருத்தருக்கொருத்தர் கண்டு களிப்பது என்பதால் காணும் பொங்கல் என்று பெயர் பெற்றதாகவும் சிறு பிள்ளைகள் கூட்டாஞ்சோறு ஆக்கி கொண்டாடும் நாள் என்பதால் சிறு வீட்டுப்பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. பல வகைக் கட்டு சாதங்களை மாலையில் செய்து எடுத்துக்கொண்டு பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். கோலாட்டம், கும்மி அடிப்பது என்று விளையாடி விட்டு சாத வகைகளைச் சாப்பிட்டு வருவார்கள். இது ‘கணுப்பிடி’ என்றும் கூட அழைக்கப்படுகிறது. கோவை பக்கத்தில் ‘பூப்பறிக்கும் திருவிழா’ என்பது இந்த காணும் பொங்கலன்று தான் நடைபெறுகிறது. மார்கழி மாதம் கோலங்களில் வைக்கும் சாணத்தை [ இதை சாணிப்பிள்ளையார் என்று கூறுவார்களாம்] அடுத்த நாள் வெய்யிலில் காய வைத்து, இது மாதிரி மாதம் முழுவதும் சேர்த்து வைத்திருக்கும் ‘சாணி பிள்ளையார்களை, எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விட்டு, கோவிலில் பொங்கல் படையல் போட்டு கொண்டாடுகிறார்கள். இன்னொரு சமூகத்தில் ‘கணுப்பிடி’ சகோதர, சகோதரிகளுக்காக கொண்டாடப்படுகிறது. முதல் நாளே, சிறிது சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம், அவற்றில் சுண்ணாம்பு கலந்து சிகப்பு சாதம், வெள்ளை சாதம், சர்க்கரைப் பொங்கல் என்று ஒவ்வொன்றிலும் உருண்டை பிடித்து வெளியிலிருக்கும் துளசி மாடத்திற்கருகே இஞ்சி இலைகள், மஞ்சள் இலைகள் பரப்பி அவற்றில் வைத்து, கரும்பு, பழங்கள் வைத்து பூஜை செய்து, வீட்டில் பெரியவர்கள் மற்றவர்களுக்கு ஆசி கூறி, மஞ்சளும் குங்குமமும் தந்து வீட்டினுள்ளே அனுப்புகிறார்கள். சில ஊர்களில் துளசி மாடத்திற்குப்பதிலாக ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் இந்த ‘ கணுப்பிடி’ நடக்கும்.

நமது தமிழர்களின் சிறப்பு மிக்க இந்த பொங்கல் பண்டிகை இப்படி எத்தனையோ சிறப்புகளுடன் ஆனந்தத்துடன் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. சமுதாய மாறுதல்கள், கலாச்சார மாறுதல்கள் எத்தனையோ ஏற்பட்டுக்கொண்டேயிருந்தாலும் இந்த மாதிரியான நம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாச்சார பழக்க வழக்கங்களுக்கும் அவற்றின் சிறப்புக்களுக்கும் என்றுமே அழிவில்லை!!



பொங்கும் பால் போல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அனைத்துச் செல்வங்களும் அனைவருக்கும் நிறைந்து பொங்கி வழிய அன்பின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

படங்கள் உதவி: கூகிள்