Monday, 15 August 2011

இட்லி மாவில் பாக்டீரியா!!!

சில மாதங்களுக்கு முன் தினசரியிலும் மாத இதழ்களிலும் சில விழிப்புணர்வுச் செய்திகளைப் படிக்க நேர்ந்தது. எல்லாமே அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் தாம். இவை அனைவருக்கும் பயன் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றை இங்கே பதிவிடுகிறேன்.

முதலாவது முத்து:
 
சமீப காலத்தில் ரெடிமேட் தோசை, இட்லி மாவு சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன ஜோராக விற்பனையாகி வருகிறது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அவசரத்தேவைக்கு இது வரப்பிரசாதமாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு செய்தி மனதை அப்படியே கலக்கியது. பெண்களுக்கு இந்த அவசர யுகத்தில் பல விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம் தேவைப்படுகின்றது. ஆனால் இட்லி மாவு விஷயத்தில்கூட விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதை நம்பவே முடியவில்லை. 

இன்று சில வகை ரெடிமேட் தோசைமாவு உயிருக்கே உலை வைக்கக்கூடிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

சிலர் மாவு தயாரிக்கும்போது ஏரி, குளம் போன்ற பொது இடத்தில் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்களாம். சுத்தமில்லாத அந்த நீரில் விலங்குகளின் கழிவுகள் அதிக அளவில் கலந்திருக்கும். இந்தக் கழிவுகள் ஹைட்ரஜன் சல்பைடு தன்மை உள்ள பாக்டீரியாவை உண்டாக்குகின்றன. இந்த பாக்டீரியாக்க்களால் தீவிர வயிற்று வலி, வாந்தி, குமட்டல், கடும் வயிற்றுப்போக்கு போன்றவை தொடர்கதையாகி, அதோடு வேறு ஏதேனும் நோயும் சேரும்போது உயிரே போகக்கூடிய விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விபரங்களைக் கூறிய கன்ஸ்யூமர் அமைப்பைச் சேர்ந்த திரு.தேசிகன், சமீபத்தில அவர்கள் சென்னையில் நடத்திய சோதனையில் கடைகளில் விற்கும் 55 சதவிகித இட்லி, தோசைமாவில் இந்த பாக்டீரியாக்கள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்லுகிறார்.

இரண்டாவது முத்து:


குன்னூரில் உள்ல தேயிலை வாரியம் தேயிலையின் தரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்பட்டு வருகின்றது. இவர்கள் சமீபத்தில் நடத்திய பரிசோதனைகளில் ஆந்திரா, தமிழகத்தில் உள்ள பல தேயிலை தோட்டங்களில் தேயிலையில் கலப்படம் செய்து விற்று வருவதாக கண்டுபிடித்திருக்கின்றனர். புற்று நோயை உண்டாக்கும் ஜிலேபி பவுடரை அதில் கலக்கி விற்கிறார்கள். ஒரு ஸ்பூன் கலப்பட தேயிலையில் 4 கப் தேனீர் தயாரிக்க முடியுமென்பதால் இந்தக் கலப்பட தேயிலை அமோகமாக விற்பனை ஆகிறது. பல பெரிய நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்த வாரியம் சட்ட உதவியுடன் தேயிலை வியாபாரத்தில் இந்த மாதிரி நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாதபடி செய்து விட்டாலும் அவர்கள் ஹைகோர்ட்டில் தடை வாங்கி தொடர்ந்து இந்த வியாபாரத்தை செய்து வருகின்றார்களாம்.

நல்ல தேயிலையை எப்படி கண்டு பிடிப்பது என்பதையும் அவர்களே சொல்லித் தருகிறார்கள். தேயிலையை சாதாரண நீரில் போட்டால் உடனேயே சிவந்த கலர் வந்தால் அது கலப்பட தேயிலை. நல்ல தேயிலையை சாதாரண நீரில் கலந்தால் கலர் மாறாது. வெந்நீரில் போட்டால் மட்டுமே நல்ல தேயிலை சிவந்த கலருக்கு மாறும்.

மூன்றாவது முத்து:

இதுவும் ஒரு மாத இதழ் செய்தி தான்! சமையல் செய்யும்போது ஸ்டவ் அருகே ஓடிய கரப்பான் பூச்சியைக் கொல்ல ஸ்ப்ரே செய்ததால் உடனேயே காஸ் சிலிண்டர் வெடித்து அந்த வீட்டுப் பெண்மணி பலத்த காயமடந்து உயிருக்குப் போராடி வருவதாக தகவல். இந்தத் தகவலையொட்டி இந்த இதழ் ரிப்போர்ட்டர் தீயணைப்பு அதிகாரியிடம் விபரம் கேட்ட போது ‘கரப்பான் பூச்சிக்கான ஸ்ப்ரே என்றில்லை, செண்ட், பாடி ஸ்ப்ரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருள்களை சமையலறையில் பயன்படுத்தவே கூடாதென்றும், அனைத்து ஸ்ப்ரேக்களுமே 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திலேயே வெடிக்ககூடியவை என்றும் அவர் தெரிவித்தாராம்.

பொதுவாக இந்த மூன்று விஷயங்களிலுமே பெண்கள் கவனமாக இருப்பது மிக நல்லது.