Monday, 4 July 2011

தஞ்சை பெரிய கோவில்- இரண்டாம் பகுதி



தஞ்சை கோவில் இரு கோட்டை சுற்று சுவர்களும் இடையே அகழியும் சூழப்பெற்றது. இவை பிற்காலத்தில் செல்வப்ப நாயக்க மன்னனால் உருவாக்கப்பட்டன என்று ஒரு ஆராய்ச்சியாளரால் சொல்லப்பட்டாலும் ராஜராஜனின் தெய்வீகக் குருவான கருவூர் சித்தர் தனது காலத்திலேயே தன் திருவிசைப்பாவில் அகழியைப்பற்றியையும் அதிலிருந்த முதலைகளைப்பற்றியும் பாடியிருக்கிறார் என்று மற்றொரு ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்.


கிழக்கு வாயிலும் அதிலுள்ள சுதை சிற்பங்களும் மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இது தான் முதல் வாயில். தற்போது இதன் வழியே உள் நுழைந்ததும் அரசினால் பதிக்கப்பெற்ற தெளிவான தஞ்சை கோவிலின் வரவேற்பும் குறிப்புகளும் நம்மை வரவேற்கின்றன!


கோவிலின் நுழைவு வாயில் கேரளாந்தகன் திருவாயில். இது சற்று உயரம் குறைந்த அகலமான கோபுரம். கேரள மன்னன் ரவி பாஸ்கரனை வென்றதன் நினைவாக தனக்கு விருதாய் நிலைத்த கேரளாந்தகன் என்ற பெயரையே இந்த வாயிலுக்கு கேரளாந்தகன் வாயில் என்று ராஜ ராஜ சோழன் சூட்டினான்.



ஒரே கல்லினாலான இரு நிலைக்கால்கள் இந்த வாயிலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஐந்து அடுக்குகளாலான இந்த கோபுரத்தில் ராஜ ராஜன் காலத்து சிற்பங்கள் சிலவும் பிற்கால மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பல அழகான சுதைச் சிற்பங்களும் அழகுற காட்சியளிக்கின்றன.



அடுத்தது ராஜராஜன் திருவாயில். இது சற்று உயரம் குறைந்த முன் வாயிலை விடவும் அகலமான வாயில்.



அதில் நுழைந்து உள்ளே புகுந்தால் நந்தியும் நந்தி மண்டபமும் கோவிலும் அதைச்சுற்றி பெரிய பிரகாரமும் பிரகாரத்தை ஒட்டிய திருச்சுற்று மாளிகையும் கண்ணுக்குப் புலப்படுகின்றது. நந்தி மண்டபமும் நந்தியும் அம்மன் மண்டபமும் நாயக்க மன்னர்களின் கொடை.


ஒரே கல்லினால் செய்யப்பட்ட நந்திகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லினால் செய்யப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை உள்ளது. ராஜராஜன் நிர்மாணித்த நந்தி தற்போது நந்தி மண்டபத்துக்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் உள்ளது.



கோவிலின் தெற்குப்புறம் இருக்கும் வாயின் மேல் “விக்கிரம சோழன் திருவாசல்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்களை மறைத்துக் கொண்டு இப்போது ஒரு மின் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

வடக்குப்புறம் இருக்கும் வாயில் அரசனின் மாளிகைக்கு அருகே இருந்ததால் அணுக்கன் திருவாயில் என்று அழைக்கப்பட்டது.
அணுக்கண் வாயில் ராஜராஜன், தெய்வீகப் பணியாளர்கள், ஆடல் மகளிர் நுழைய ஏற்படுத்தப்பட்டது. செம்பு, பொன் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளைகளினாலும் படையெடுப்புகளினாலும் அழிந்து விட்டன.



கோவிலைச் சுற்றி 800 அடி நீளமும் 400 அடி அகலமுமான மதில் சுவரில் நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பிரகார சுற்றுத்தளத்தில் கருங்கல், செங்கற்களினால் தளங்களை இரண்டாம் சரபோஜி 1803ல் அமைத்தார்.

ராஜராஜன் காலத்தில் கோவில் என்பது வழிபாட்டுக்கூடம் என்பது மட்டுமல்லாமல் மக்கள் கூடிக் கொண்டாடும் இடமாக அமைந்திருக்கிறது. நடனம், சிற்பம், இசை, ஓவியம், சிற்பம் இவற்றில் ஆற்றல் மிக்கவர்கள் தங்கள் திறமைகளை பொது முக்கள் முன்னிலையில் பறை சாற்ற ஒரு முக்கிய இடமாக திகழ்ந்தது கோவில்.






நந்தி மண்டபத்தைக் கடந்ததும் கோவிலின் முக மண்டபம் வரும். நடுவிலும், இரு புறமும் இருக்கும் படிகள் வழியே மேலே ஏறிச் சென்று மண்டபத்தை அடைய வேண்டும். சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்களின் வரிசையைக் கடந்ததும் முன்மண்டபத்தை ஒட்டியபடி மகாமண்டபம் இருக்கிறது. வாயிலின் இரு புறமும் இரு மாபெரும் காவலர்கள் (துவாரபாலகர்கள்) நிற்பதைக் காணலாம். ராஜராஜன் பாணியில் அமைக்கப்பட்ட இந்த காவலர்களின் 18 உருவங்கள் கோவிலின் பிற்பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருகின்றன.

மகாமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே இருப்பது அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் வடக்கு, தெற்குப் புறங்களில் இருக்கும் வாயில்கள் வழியாகவும் உள்ளே வரலாம். கோவிலின் தாங்குதளம் மிக உயரமாக இருப்பதால் அர்த்த மண்டபமும் கருவறையும் தரைமட்டத்திற்கு 20 அடி உயரத்தில் இருக்கின்றன. எனவே தெற்கு, வடக்கு வாயில்களைச் சென்றடைய இரு நிலைகளில் உள்ள படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். படிகளின் பிடிச்சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருகின்றன. இரு வாயில்களிலும் காவலர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது.

கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தியபோது. மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்கு கேட்டு, ராஜராஜ சோழரும் கருவூர்த்தேவரை ஒரு சித்தர் உதவியுடன் அழைத்து வந்து தனக்கு உதவுமாறுவேண்டினார். கருவூராரும் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் அகமகிழ்ந்து, அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோவிலுக்கு மேற்குப்புறம் அவருக்கு ஒரு சந்நதியை ஏற்படுத்தினார்.



இன்றைக்கும் வியாழன் தோறும் கருவூர்த்தேவருக்கு அங்கே சிறப்புப்பூஜைகளும் அன்னதானங்களும் செய்யப்படுகின்றன.

கருவறையைச் சுற்றி 11 அடி அகல சுற்றுச் சுவரும் 19 அடி அகல சுற்றுச் சுவரும் உள்ளன. இந்த சுவர்களின் இடைவெளியில் 13 சித்திரக்கூடங்கள் அமமக்கப்பட்டு. இதில்தான் ராஜராஜன் காலத்து மகத்தான ஓவியங்களும் நாயக்கர்கால ஓவியங்களும் நம்மை பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழ்கின்றன. உண்மையில் சோழர் காலத்து ஓவியங்கள் மீது பிற்காலத்தில் வந்த நாயக்கர்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டு முன்னையது மறைக்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் கால ஓவியங்கள் சில இடங்களில் உதிர்ந்து போக பழைய மூல ஓவியங்கள் காட்சி தந்திருக்கின்றன. இந்த மூல ஓவியங்களைக் கண்டுபிடித்தவர் திரு ச.க. கோவிந்தசாமிப்பிள்ளை என்பவர். மேலறையில் நடராசரின் நடன சிற்பங்களையும் இடம் பெறச்செய்திருக்கிறார் ராஜராஜன். 108 கரணச் சிற்பங்களில் 81 நடன சிற்பங்களே பூர்த்தியாகி இருக்கின்றன.

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தளம் 25 அடி சதுரமானது. சிகரம் கூம்பு வடிவில் செதுக்கபட்டு நுனியில் 12 1/2 அடி உயரமான கலசத்தைத் தாங்குகிறது. ராஜராஜனின் 25 ம் ஆட்சி ஆண்டின் 275ம் நாள் கோவிலுக்கு அளிக்கப்பட்ட இக்கலசம் அக்காலத்தில் தங்கத்தால் கவசமிடப்பட்டிருந்தது. இப்போது இல்லை. இதன் பிரமரந்திரத்தளக்கல் ஒரே பாறையால் ஆனது என்றும், 80 டன் எடையுள்ளது என்றும் எல்லாரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.

இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள விநாயகர் கோவில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.


வட மேற்கு மூலையில் பிரமிக்க வைக்கும் அழகுடன் காணப்படும் முருகன் கோவில் செல்வப்ப நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.

அதன் பிறகு வரும் சண்டீஸ்வரர் கோவில் ராஜராஜனால் கட்டப்பெற்றது. உலகிலேயே மிகப்பெரிய சண்டீஸ்வரர் ஆலயம் இது. நந்தி மண்டபத்திற்கு வடக்கே காணப்படும் அம்மன் கோவில் பாண்டிய மன்னன் ஒருவனால் எழுப்பப்பட்டது. அதன் முகப்பு மண்டபம் விஜய நகர அரசர்களால் கட்டப்பட்டது. இப்படி ராஜராஜ சோழனுக்குப்பிறகு ஆண்ட பல மன்னர்கள் தங்களின் கலைத்தாகத்தை அங்கங்கே தீர்த்துக்கொண்டிருந்தாலும் ராஜ ராஜ சோழத்தேவனால் மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட பெருவுடையார் பெரிய கோவில் இன்றளவும் கம்பீர அழகுடன் தனித்து பெருமிதமாய் நிற்கிறது.

இக்கோவிலின் சமகாலத்திலும் அதன் பிறகும் எத்தனையோ கோவில்கள் எழுந்தன. ஆயினும் எந்தக் கோவிலையும் தஞ்சை ராஜராஜீஸ்வரம் கோவிலோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவுக்கு இத்திருக்கோவில் எழுந்து நிற்கிறது. இக்கோவில் போன்று உலகின் வேறு எந்தக் கோவிலோ, வரலாற்றுச் சின்னமோ தன்னுடைய வரலாறு பற்றிய விளக்கமான சாசனங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இந்தக் கோவிலின் தாங்குதளக்கற்களிலும், குமுதவரிகளிலும், வேறு பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுகள் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்ட கதையையும் அது நிறுவப்பட்டபோது இருந்த மகோன்னத நாட்களின் சமுதாய அமைப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களையும் சொல்கின்றன. மேலும் கோவிலுக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளின் பட்டியல்கள், வழிபாடு செவ்வனே நடைபெற செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், கோவிலுக்கு அளிக்கப்பட்ட உலோகத்தாலான சிலைகள், சிலைகளுக்கு உரிய தங்கம் வெள்ளியிலானா அணிகலன்கள், கோவிலின் அதிகாரிகள், அலுவலர்கள், ஏனைய பணியில் இருப்போரின் பெயர்கள், முகவரிகள், சம்பளங்கள் (400 தளிப்பெண்டிர் உட்பட) முழுவதுமே சிறிய சிறிய விவரங்களைக்கூட விட்டுவிடாமல் துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆனாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பெரிய கோயில் பலவிதத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறது. கோவிலின் திருச்சுற்று மாளிகை, தெய்வத்திருவுருவங்கள், மகா மண்டபம் சிதைந்துள்ளன. ஆனாலும் அதன் அழகு கொஞ்சமும் குறையவில்லை. ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.

மாலை மயங்கும் நேரத்தில் நாதஸ்வர இசை, தவழ்ந்து வரும் தென்றல், பாலொளிக்கீற்றுக்களுடம் மெல்ல எழும்பி வரும் நிலவு, கருவூர் சன்னதியில் மங்கலகரமாக ஒலிக்கும் அமர்க்களமான பாடல்கள்-இவற்றையெல்லாம் ரசிக்க நீங்களும் ஒரு முறை தஞ்சை வாருங்களேன்!!