Tuesday, 15 June 2010

முருங்கை கத்தரிக்காய் சாதம்

இந்த முறை சமையல் முத்தில் எந்த குறிப்பைத்தரலாம் என்று யோசித்தபோது முருங்கைக்காயையும் முருங்கைக்கீரையும் பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த கலவை சாதத்தை எழுதலாம் என்று நினைத்தேன். முத்துச்சிதறலில் மட்டும் மிக அதிக சுவையுடைய-ரொம்பவும் வித்தியாசமான குறிப்பைத்தான் அளிக்கவேண்டுமென்று உறுதியாயிருக்கிறேன். அந்த வகையில் இது மிகவும் வித்தியாசமான கலவை சாதம்.



தேவையானவை:

பாஸ்மதி அரிசி- 300 கிராம் [ 2 கப்]
தேங்காய் எண்னெய்- 1 மேசைக்கரண்டி
நெய்- 5 மேசைக்கரண்டி
சன்னமாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 கப்
உரித்த சிறிய பூண்டிதழ்கள்- 2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய்கள்-4
முருங்கைக்கீரை- 1 கப்
நீளமாகவும் சற்று மெல்லியதாயும் அரிந்த பிஞ்சு கத்தரிக்காய்- 2 கப்
சன்னமாக அரிந்த தக்காளி- 2 கப்
சிறு துண்டுகளாய் அரிந்த குடமிளகாய்- 1
சீரகம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 3 கொத்து
சன்னமாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
தேவையான உப்பு
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி

கீழ்க்கண்ட பொருள்களை 2 ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்.

தனியா- 1 ஸ்பூன், கடலைப்பருப்பு- 1 ஸ்பூன், கசகசா- அரை ஸ்பூன்,
வற்றல் மிளகாய்-5, மிளகு- அரை ஸ்பூன், கிராம்பு-1, பட்டை- 1, சோம்பு- 1 ஸ்பூன்

செய்முறை:

1. அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2. சிறிது நெய்யில் வதக்கி பின் தேவையான உப்பும் சேர்த்து 4 கப் நீர் சேர்த்து புலவு போல உதிர் உதிராக சாதம் செய்யவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து சூடு செய்து எண்ணையையும் 3 மேசைக்கரண்டி நெய்யையும் ஊற்றவும்.

4. சீரகம் சேர்த்து அவை பொரிய ஆரம்பித்ததும் சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

5. பிறகு தக்காளி, முருங்கைக்கீரை, கத்தரிக்காய், குட மிளகாய், சிறிய துண்டுகளாய் அரிந்த முருங்கைக்காய்கள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறு தீயில் சமைக்கவும்.

6. முருங்கை நன்கு வெந்து, மசாலா கெட்டியாகி, எண்ணெய் மேலே தெளிய ஆரம்பித்ததும் வறுத்த பொடியைச் சேர்த்து, மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து சிறு தீயில் சற்று வதக்கவும்.

7. இந்த காய்கறி கலவையில் சாதத்தைக் கொட்டி சிறு தீயில் சில நிமிடங்கள் கிளறவும்.

8. தேவையானால் சிறிது நெய் சேர்க்கவும்.

9. முருங்கை கத்தரிக்காய் சாதம் தயார்!

பொருத்தமான பக்க உணவுகள்:

 உருளைக்கிழங்கு வறுவல்,


கோழி வறுவல்,


தயிர் பச்சடி


முதலியவை ஆகும்.