சாதனை முத்து
ஷ்ரேயா சித்தனாகெளடர்
2016ல் இவர் மணிப்பாலில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போது எல்லா இளம் பெண்களைப்போல இவருக்கும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஆயிரம் இருந்தன.
ஆனால் இவர் வாழ்க்கையில் நடந்தேறிய விபரீதங்கள் இவர் கனவுகளை மட்டுமல்ல, எதிர்காலத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் புரட்டிப்போட்டு தன் காலடியில் மிதித்து நசுக்கியது.
அதே 2016ம் வருடம் பூனாவிலுள்ள தன் பெற்றோரிடம் சென்று தன் விடுமுறையை சந்தோஷமாகக் கழித்து விட்டு மணிப்பாலுக்கு ஒரு பஸ்ஸில் ஏறினார் ஷ்ரேயா.
விடியற்காலையில் ஓட்டுனருடைய தவறினால் பஸ் தலை குப்புற புரண்டு விழுந்து சற்று தூரம் இழுத்துக்கொன்டே போனதால் ஷ்ரேயாவின் இடது முன்னங்கை மோசமாக நசுங்கி நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்க, வயிற்றிலும் வலது முழங்காலிலும் சதை கிழிந்து தோலுரிந்து தொங்கிகொண்டிருக்க, முகமும் தலையும் கூட காயங்களால் நிரம்பியிருந்தன. மணிப்பாலில் கஸ்தூரிபாய் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே தன் இரு முன்னங்கைகளும் வெட்டி எடுக்கப்பட்டதை இவரால் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சாப்பிட்டதை விழுங்குவதும் மூச்சு விடுவதும் நடப்பதும் தவிர கழிவறை செல்வது உள்பட மற்றெல்லா செயல்களுக்கும் அவர் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார் ஷ்ரேயா.
' கைகள் தானே போயின, கால்கள் நன்றாக இருக்கின்றன, மன உறுதியும் இருக்கிறது ' என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னிரக்கத்திலிருந்தும் தாங்க இயலாத சோகத்திலிருந்தும் வெளியே வர ஆரம்பித்தார் ஷ்ரேயா. சில நாட்களிலேயே தன் கால் விரல்களால் தொலைபேசி, டிவி ரிமோட், லாப்டாப் முதலியவற்றை இயக்க ஆரம்பித்தார். உலோகத்திலான கைகள், மரத்திலான கைகள் உபயோகித்து பார்த்தாலும் அவற்றின் கனமும் அவற்றால் ஏற்பட்ட இடர்ப்பாடுகளையும் அவரால் தாங்க முடியவில்லை. முடிவில் பெற்றோர் கொடுத்த ஊக்கத்திலும் தைரியத்திலும் கைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். சுற்றி இருந்தவர்கள், உறவினர்கள், மருத்துவர்கள், நண்பர்கள் என்று பலரும் அவரது முடிவு தவறானது என்று உறுதியாகச் சொன்னாலும் இவர் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் கடுமையான பக்க விளைவுகள் தரும் மருந்துகளை எடுக்க வேண்டுமென்பதும் புதிய கைகள் முழுவதுமாக இயங்க கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இவருக்கு தெரிந்த உண்மை! ஆனாலும் அந்த கடுமையான சோதனைகளைத்தாங்க அவர் தன் மனதை தயார்ப்படுத்திக்கொண்டு, 2017ல் கொச்சியிலுள்ள அம்மா மருத்துவ மனையில் மருத்துவர். சுப்ரமணிய ஐயரிடம் தனக்கு கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்தார்.
பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் கைகளை மட்டும் தானம் செய்வதில்லை. அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று சொல்லும் இவர் பொதுவாக நிறைய சமூகப்பிரிவுகளில் கைகளை தானமாகக் கொடுப்பது மட்டும் சரியானதில்லை என்ற நம்பிக்கை உலவுவதாக குறிப்பிடுகிறார்.
கைகளுக்காக இவர் பதிவு செய்த அன்றே, அன்றைய தினம் இறந்து போன இளைஞர் ஒருவரின் கைகள் தானமாகக்கிடைக்கவும் 2017, ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி 14 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடந்து மணிக்கட்டிலிருந்து முழங்கை வரையிலான கைகள் தானம் பெற்ற ஆசியாவின் முதல் பெண்ணாகவும் ஆண்களின் கைகளை தானமாகப்பெற்ற உலகின் முதல் பெண்ணாகவும் இவர் மாறினார். தனக்கு தன் மகனின் கரங்களை தானமாகக் கொடுத்த இளைஞர் சச்சினின் பெற்றோரை இவர் அடிக்கடி சந்தித்து நன்றி கூறியிருக்கிறார்.
ஆண்களின் கரங்களைப்பெற்றிருந்தாலும் சில மாதங்களுக்குப்பிறகு கைகள் பெண்ணின் கரம் போல மாறத்தொடங்கியது. கருமையான கரங்கள் தற்போது ஷ்ரேயாவின் கைகளுக்குத்தகுந்தாற்போல சிவப்பாகவும் மாறத்தொடங்கியுள்ளன. இந்த மாறுதலுக்கான காரணங்கள் புரியாமல் மருத்துவ உலகே வியக்கிறது!!
இசை முத்து:
ராகங்களில் ' மோகனம்' மனதை மயக்கும் ராகம் எனச்சொல்லப்படுகிறது. எல்லா ராகங்களும் எந்தெந்த வேளைகளில், நேரத்தில் பாடப்பட வேண்டும் என்ற நியதியும் உள்ளது. மோகனம் மட்டும் எந்த நேரத்திலும் பாடக்கூடிய புகழை பெற்றிருக்கிறது. அதனால் தானோ என்னவோ திருவாசகம் கூட ' மோகன ராகத்தில்' தான் பாடப்படுகிறது. இத்தகைய பெருமை பெற்ற மோகன ராகத்தை புகழ் பெற்ற வயலின் மேதை திரு. கார்த்திக் ஐயர் எப்படி ஆலாபனை செய்கிறார் என்பதை கேட்டு ரசியுங்கள்!