ரொம்ப நாளாகிறது ஒரு சமையல் குறிப்பு போட்டு. அதனால் ஒரு இனிப்பான குறிப்பாக ‘ ரஸமலாய்’ பற்றி பதிவு பண்ணலாம் என்று நினைத்தேன்.
இனி ரஸமலாய் பற்றி:
ரஸமலாய் ஒரு பிரசித்தி பெற்ற பெங்காலி இனிப்பு. பொதுவாக எந்த CHEFம் பாலை திரைய வைத்து வடிகட்டி பனீராய் திரட்டி பிசைந்து உருட்டி செய்வார்கள். பாலைத்திரைய வைக்க வினீகர் அல்லது எலுமிச்சை சாற்றை உபயோகிப்பார்கள். சிலர் ரிக்கோட்டா சீஸ் உபயோகித்து செய்வார்கள். இது தான் பொதுவான முறை. இங்கு நான் கொடுத்திருப்பதோ முற்றிலும் வேறு முறை. இது மிகவும் சுலபமானதும் கூட. பாலைக்காய்ச்சும் வேலையுமில்லை. திரைய வைக்கவும் தேவையில்லை. ஒரு அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். 35 வருடங்களுக்கு முன் என் சகோதரியிடம் கற்றுக்கொண்டது இந்த குறிப்பு. அன்றிலிருந்து இன்று வரை ரஸமலாய் செய்ய வேறு எந்த குறிப்பையும் நான் பயன்படுத்துவதில்லை இதைத்தவிர!
இனி குறிப்பிற்கு போகலாம்.
ரஸமலாய்:
தேவையானவை:
FULL CREAM பால் பவுடர் -1 1/4 கப் [ 315 ml ]+ 12 மேசைக்கரண்டி
மைதா- 1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் -1 ஸ்பூன்
சீனி- 8 மேசைக்கரண்டி
குங்குமப்பூ- கால் ஸ்பூன்
முட்டை- 1
சமையல் எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி- அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பு 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1 1/4 கப் பால் பவுடர், மைதா, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்று சேர்த்து மூன்று தடவைகள் சலிக்கவும். பின் சலித்த பால் பவுடரை ஒரு தட்டில் கொட்டி எண்ணெய் சேர்த்து பவுடர் முழுவதும் கலக்குமாறு பிசிறவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி பிசைவும். பிசைந்த பிறகு ஒரு முறை கையை கழுவி நீரில்லாமல் துடைத்து பின் பிசைந்தால் நன்கு பிசைய வரும். பிசைந்த மாவு மெழுகு போல இருக்க வேன்டும். அது தான் பதம். ஒரு ஈரத்துணியால் மூடி வைக்கவும். பிறகு பலிங்கி சைஸுக்கு உருண்டைகள் உருட்டி மூடி வைக்கவும். உருண்டைகள் உருட்டும்போது அழுத்தி உருட்டக்கூடாது. இலேசாக அழுத்தி உருட்ட வேண்டும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் 4 கப் வெதுவெதுப்பான நீரைக் கொட்டி பாக்கியுள்ள பால் பவுடரையும் சீனியையும் கொட்டி நன்கு கலக்கவும். கட்டியில்லாமல் ஆனதும் அதிலிருந்து கால் கப் பாலை எடுத்து வைத்துக்கொண்டு பாக்கியை அடுப்பிலேற்றி கொதிக்க வைக்கவும். கால் கப் பாலில் மேலும் கால் கப் கொதிக்கும் நீர் கலந்து குங்குமப்பூவை அதில் போட்டு ஊற வைக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்தததும் ரஸ மலாய்களை ஏழெட்டு எடுத்து அதில் போடவும். ஐந்து நிமிடத்தில் அவை மேலெழும்பியதும் அடுத்த பாட்ச் போடவும். இதே போல எல்லா உருண்டைகளையும் போட்டு முடிக்கவும். எல்லா உருண்டைகளும் அளவில் பெரியதாகி மேலே மிதக்க ஆரம்பிக்கும். இலேசாக தீயைக்குறைத்து குங்குமப்பூ கலந்த பாலையும் ஏலப்பொடியையும் சேர்த்து கவனமாக கிளறவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி மேலே பிஸ்தாவைத்தூவவும். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பரிமாறவும்.