அசத்திய முத்து:
சமீபத்தில் 'சிந்துடாய் சப்கல்' என்ற பெண்மணி பற்றி படித்தபோது மனம் நெகிழ்ந்து, கனமாகியது. வாழ்க்கை முழுவதும் ஒரு பெண் பல அவலங்களையும் துன்பத்தையும் மட்டுமே சந்தித்திருந்தாலும் அவளின் கருணை அழிவதில்லை, அவள் தன்னம்பிக்கை இறப்பதில்லை. அவள் என்றுமே தன் தாய்மை உணர்வை இழப்பதில்லை. இந்தப்பெண்மணியும் அந்த மாதிரி காருண்யம் மிக்கவளாக இருக்கிறாள். இந்தப்பெண்மணியைப்பற்றி அறிகையில் மனம் நிறைவை உணர்கிறது. அவரைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வர்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மாகே என்ற கிராமத்தில் கால்நடைகளை மேய்த்து பிழைக்கும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சிந்துடாய் சப்கல். இவர் பிறந்ததே வேண்டாத ஒன்றாய் இருந்ததால் இவர் குடும்பத்தாரால் 'சிந்தி' என்றழைக்கப்பட்டார். மராத்தியில் 'சிந்தி' என்றால் கிழிந்த துணி என்று அர்த்தமாம்! எப்படிப்பட்ட கொடுமை இது! நான்காம் வகுப்பு வரை தான் இவரால் படிக்க முடிந்தது. தன் பன்னிரண்டாவது வயதில் தன்னை விட 20 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று ஆண் குழந்தைகளுக்கு தாயானார். மீண்டும் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும்போது கணவனால் எட்டி உதைக்கப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டார். அரை மயக்க நிலையில் மாட்டுத்தொழுவம் ஒன்றில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் வீட்டாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தெருக்களிலும் ரயில்வே பிளாட்பாரங்களிலும் பாட்டு பாடி பிச்சையெடுத்து வாழ ஆரம்பித்தார். பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் சுடுகாட்டில் தங்கிக் கொள்வார். இறுதிச் சடங்குகளில் வாரி இரைக்கப்பட்ட தானியங்களை சேகரித்து அதை மாவாக்கி ரொட்டி செய்து எரிந்து கொண்டிருக்கும் சிதைகளிருந்த நெருப்பில் அதை சுட்டுத்தின்னும் அவல வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். எத்தனை அவலமான வாழ்க்கை அவருக்கு!
அதன் பின் தான் அவர் வாழ்க்கையில் திருப்பம் வந்தது. தன் பெண்ணை அநாதை பராமரிப்பு நிலைத்தில் விட்டு விட்டு, அநாதைக்குழந்தைகள் பலருக்காக இன்னும் கடுமையாக பிச்சையெடுக்க ஆரம்பித்தார். கிடைத்த பணம், நன்கொடைகளைக்கொண்டு அனாதை இல்லங்களை உருவாக்கினார். தன் வாழ்க்கையையே அநாதைகளைப் பராமரிக்க அர்ப்பணித்தார். 1050க்கும் மேற்பட்ட அநாதைக்குழந்தைகளுக்கு இவர் அடைக்கலம் கொடுத்தார். விருது பணத்தில் மேலும் மேலும் நிலம் வாங்கி அநாதை விடுதி பராமரிப்பு பணிகளை விரிவு படுத்தி வருகிறார். தன்னால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்தக்கால்களில் நிற்கும் வரை அடைக்கலம் கொடுத்து வருகிறார். இவரால் வளர்க்கப்பட்ட பலர் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக இருக்கின்றார்கள்.
இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மராத்தி மொழியில் ' Mee Sindhutai Sabkal’ என்ற திரைப்படம் 2010 ஆம் அண்டில் வெளியானது. இந்த திரைப்படம் 54வது லண்டன் திரைப்பட விழாவில் திரையிடத்தேர்வானது. ' 1050 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் 'மாயி' [அம்மா] என்றழைக்கப்படும் சப்கலுக்கு 2016ம் ஆண்டு DY Patil Institute of Technology and research foundation கெளரவ டாக்டரேட் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது. அன்னை தெரசா விருது, பத்மஸ்ரீ விருது உளபட 500க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு இவர் கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார். ஃபீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து எழுவது போல குப்பைமேட்டிலிருந்து எழுந்து ஆயிரக்கணக்கான அனாதைக்குழந்தைகளை வாழ்க்கையில் உயர்த்தி மகத்தான சாதனை படைத்திருக்கும் இந்த உயர்ந்த பெண்மணியை வணங்குவோம்
இசை முத்து:
ஏ.ஆர்.ரஹ்மானின் ' கண்ணாமூச்சி ஏனடா' பாடல் வயலினில் இங்கே இழைகிறது. அதுவும் நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் பிரபல வயலின் கலைஞர் ரூபா ரேவதி கரங்களால்! கேட்டு ரசியுங்கள்!