Wednesday 26 May 2021

ருசி!!!!

 இதை எழுத ஆரம்பிக்கும்போது ' கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்' பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் எந்த கல்யாண வீட்டில் சாப்பாடு நன்றாக இருக்கிறது?

சுவை என்பது நாவின் ருசி நரம்புகளுக்குப் புரிவது. அதுவே, அந்த சுவையில் உணவை அளிப்பவர் மனதின் அன்பும் அக்கறையும் தெரிகிறபோது அந்த சுவை பன்மடங்காகத்தெரியும். அதனால் தான் தன் அம்மாவின் கைப்பக்குவத்தை எந்த மகனும் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை 

சமைப்பவன்  கலைஞன் என்றால் அதை ருசித்து சாப்பிடுபவன் மகா கலைஞன் என்று ஒரு இதழில் படித்தேன். ர்சித்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சமைத்தவர்களை மனந்திறந்து பாராட்டும் மனம் எத்தனை பேருக்கு  இருக்கிறது?அதில் மனம் சுருங்கிப்போகும் பெண்களில் ஏராளமானோர் ஏதோ சமைத்தோம் ஏதோ பரிமாறினோம் என்பதைத்தான் தன் வாழ்க்கையில் செய்கிறார்கள்.


மறக்கமுடியாத சுவை கொண்ட உணவுகளை நம் வாழ்நாளில் சில சமயங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொருத்தருக்கும் அது சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மாறுபடுகிறது. பல வருடங்களுக்கு முன்நான் தாய்மையுற்றிருந்த சமயம் எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, நகரின் மையப்பகுதியில் என் அம்மா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். எட்டாம் மாதம் நடந்து கொண்டிருந்த போது, 1977ம் வருடம் அது, தஞ்சைப்பகுதியில் பலத்த புயல் அடிக்க ஆரம்பித்திருந்தது. மின்சாரமில்லை. ஊரெங்கும் வெள்ளக்காடாக இருந்தது. அந்த வீட்டுக்காரம்மா, என் அம்மா சமையல் செய்யும் வரை காத்திராமல் என்னை அழைத்துச் சென்று அமர வைத்து நிறைய தயிர் ஊற்றி பிசைந்த சாதமும் புளியும் வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்து செய்திருந்த நார்த்தங்காய் ஊறுகாயும் தருவார்கள். அன்போடு அளித்த அந்த தயிர் சாதத்தின் சுவையை என்னால் எப்போதுமே மறக்க முடிந்ததில்லை.

என் புகுந்த வீடான கிராமத்தில் என் மாமியார் பொங்கல் அன்று சர்க்கரை பொங்கலும் வெண் பொங்கலும் காய்கறி குழம்பும் தன் பிள்ளைகளுடன் பெரிய பானைகளில் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரிசியும் பசும்பாலும் தேங்காய்த்துருவலும் சிறிது உப்பும் சேர்த்து செய்வார்கள். இரவு அந்த வெண் பொங்கலில் நீர் ஊற்றி வைத்து விடுவார்கள். கிராமம் என்பதால் கட்டித்தயிருக்கு பஞ்சமில்லை. காலையில் அந்த சாதத்தில் பசும்பாலில் உறைய வைக்கப்பட்ட தயிர் கலந்து மீதமிருக்கும் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி சுகம். 

தஞ்சாவூரில் எங்களுக்கு ஒரு பழைய வீடு இருந்தது. பின்னால் கிணறும் பக்கவாட்டில் முருங்கை, கொய்யா, தென்னை, நெல்லி மரங்களுடன் கீரைப்பாத்திகளுமிருக்கும். கீழ் வீட்டில் வாடகைக்கு விட்டு விட்டு, மேல் வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். ஒரு சமயம் வெளியே போய் விட்டு திரும்பும்போது அவர்களை அழைக்க யாரையும் காணவில்லை. கிணற்றுப்பக்கம் பேச்சுக்குரல் கேட்டதூ. அங்கே சென்று பார்த்தால் கீழே குடியிருந்தவரின் அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது, இருவரும் இலை வடாம் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பெரியவருக்கு 85 வயதிற்கு மேலாம். அவரின் மனைவிக்கு 80 வயதிருக்கும். கணவர் இலை வடாம் மாவை சிறு சிறு தட்டுகளில் வட்டமாக எழுத, அவரின் மனைவி சுறுசுறுப்பாக அவற்றை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து தாம்பாளத்தில் பரப்புகிறார். [ பிறகு அவற்றை வெய்யிலில் காய வைக்க வேண்டும்.] என்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நாற்காலி போட்டு அமர வைத்து பேசியவாறே தங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் மீது மற்றவர் காட்டிய அக்கறையும் பகிர்ந்து கொண்ட புன்னகைகளும் அவர்களின் சுறுசுறுப்பும் இருவருக்குள்ளும் இருந்த புரிதலும் என்னை கட்டிப்போட்டன. இலை வடாமை அவர்கள் தயாரிப்பதைப்பார்ப்பதை விட அவர்களையே நான் ரசித்துக்கொண்டிருந்தேன். சில நாட்களில் பொரித்த இலை வடாம்கள் எனக்கு கொண்டு வந்து த‌ந்தார்கள். அவை அத்தனை ருசி! 

என் சினேகிதி ஒருவர் மணத்தக்காளிக்கீரையும் சின்ன வெங்காயமும் நிறைய போட்டு நல்லெண்ணையில் அருமையாக ஒரு புளிக்குழம்பு செய்வார். சுடு சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். பொதுவாய் மணத்தக்காளி கீரையில் என் மாமியார் சாறு செய்வார்கள். ரசம் மாதிரி இருக்கும் அது ரொம்பவும் ருசியாக இருக்கும். அதைத்தவிர கூட்டு செய்வேன். ஆனால் புளிக்குழம்பு இந்த மாதிரி செய்ததில்லை. என் சினேகிதியிடம் கற்ற பிறகு அடிக்கடி செய்ததில் அது மிகவும் புகழடைந்து விட்டது. 

என் பாட்டி நாக்கடுகு துவையல் செய்வார்கள். பிரமாதமாக இருக்கும். இப்போது நாக்கடுகு கிடைக்குமா என்பது தெரியவில்லை. 

இப்படியெல்லாம் நம் வாழ்க்கை முழுக்க பல விதமான ருசிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. சில ருசிகளைத்தந்தவர்கள் காற்றோடு கலந்து விட்டாலும் ருசிகள் மனதில் அப்படியே தேங்கி நின்று விட்டன!


19 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
அன்புடன் நம்மை நினைத்துக் கொடுத்த எந்த உணவின் ருசியையும் நாம் மறப்பதில்லை.
அதைத்தான் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
உங்களை அழைத்துத் தயிர் சாதமும், நார்த்தங்காய் புளி சேர்த்த ஊறுகாய் அளித்தது
மிக மிக அருமை.

சொல்லும் போதே காட்சி கண்ணில் விரிகிறது.
அன்பும் அன்னமும் சேர்ந்த ருசியான பதிவுக்கு வாழ்த்துகள். இலை வடாம் தம்பதிகள் உங்களை ஆசீர்வதித்தபடி இருப்பார்கள்.

ஸ்ரீராம். said...

மிக அருமை.  சுவைத்துப் படித்தேன்.  ஒவ்வொருவருக்கும் சில சுவைகள் ட்ரேட்மார்க் போல மனதில் தங்கிவிடுகின்றன.  அதற்கு அன்பும், அது தரப்பட்ட சூழ்நிலையும் கூட காரணம்.  நாக்கடுகு என்றால் என்ன?  மணத்தக்காளி வற்றலில் குழம்பு செய்திருக்கிறோம்.  நீங்கள் சொல்வதுபோல கீரையில் வெந்தயக்குழம்பு செய்ததில்லை.  மசியல் போலதான் செய்வோம், பாசிபருப்பு, தேங்காய் போட்டு.  நீங்கள் சொல்லி இருப்பது போல ஒருமுறை செய்துபார்க்க வேண்டும்.

Geetha Sambasivam said...

நாய்க்கடுகு நானும் கேள்விப் பட்டிருக்கேன். சமைப்பார்கள் என்பது இப்போது தான் தெரியும். மணத்தக்காளிக்கீரை நானும் புளி சேர்த்தும்/சேர்க்காமலும் பண்ணி இருக்கேன். ஆனால் என் அம்மாவின் ரசமும்/சுட்ட அப்பளமும் போல் வராது. அம்மா வீட்டிலேயே அப்பளம் தயாரிப்பார். அரிசி/உளுந்து இரண்டிலும் செய்வார். வடாம் வகைகளும் வீட்டில் போடுவது தான். இலை வடாம் அம்மா சின்னதாக இட்டு ஆவியில் வைத்து நிழலிலே உலர்த்தி எடுப்பார். பொரித்தால் பெரிதாகப் பொரியும். நீங்கள் சொல்வது போல் அம்மாவின் அன்பு இருந்ததால் அம்மா சமையல் மறப்பதே இல்லை.

Yaathoramani.blogspot.com said...

எழுத்தின் ருசி மிக மிக அருமை சமையலின் ருசியைச் சொன்னதைப் போலவே..வாழ்த்துகளுடன்..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... மணத்தக்காளி கீரையும் மிகவும் பிடிக்கும்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
படிக்கப் படிக்க சுவைத்த உணர்வு கூடுகிறது

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா நாய் கடுகு இப்பவும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது. மூலிகை மிக நல்ல மருத்துவ குணங்கள் கொண்டது. சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனைகள், தூக்கமின்மை எல்லாத்துக்கும் நல்ல மருந்துதான்... ஆன்லைனில் கிடைக்கிறது மனோ அக்கா. இங்கு நான் நடைப்பயிற்சி செய்யும் இடங்களில் தெரு ஓரங்களில் இந்தச் செடியைப் பார்க்கிறேன் மஞ்சள் பூக்களுடன்...நிறைய இருப்பதைப் பார்க்கிறேன்...ஆனால் இங்கு பங்களூரில் கிடைக்குமா தெரியவில்லை. சென்னையில் இருந்தப்ப நாட்டு மருந்து க்டையில் வாங்கியதுண்டு. காட்டுக்கடுகு ந்னும் சொல்வாங்கல்லியா..
எங்கள் ஊரிலும் நிறைய பார்க்கலாம்..துவையல், குழம்பு செய்வதுண்டு..


சுவையான பதிவு. ஆம் அக்கா இப்போது கல்யாணங்களில் உணவு நல்லாவே இருப்பதில்லை

பல கைப்பக்குவம் நம் வீடுகளில் செய்வது இன்னும் நாவில். நானும் அப்படிக் கற்றதுதான் அதிகம். அக்கா இலை வடாம் நிழலில் இல்லையா காய வைத்து எடுப்பது...விரிந்து பொரியும்...

அம்மாவின் அன்பு அதற்கு ஈடு இணை உண்டா!! அது தனிதான்..

கீதா

மனோ சாமிநாதன் said...

மிகவும் ரசனையுடன் பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள் வல்லிசிம்ஹன்! அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!
நாக்கடுகு கடுகு போலவே இருக்கும். சாலையோரமாக மஞ்சள் பூக்களுடன் உள்ள செடிகளில் காணப்படும். சின்ன வயசில் பார்த்தது தான். பாட்டியின் கடைசி கால தருணங்களில் நான் இங்கு வெளிநாடு வந்து விட்டேன்.
அவ்வப்போது ஊரில் இருக்கும்போது ஞாபகம் வரும். யாரையாவது விசாரிப்பேன். அந்த துவையல் செய்யத்தெரிந்தவர்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. ஆனல் அந்த சுவை மட்டும் அப்படியே மனதில் தங்கி விட்டது. மணத்தக்காளி கீரை புளிக்குழம்பு எப்போதும் செய்யும் புளிக்குழம்பு போலத்தான். ஆனால் ஒரு ஆரஞ்சு சைஸ் புளி என்றால் ஒரு கட்டு மணத்தக்காளிக்கீரையும் சின்ன வெங்காயம் இரண்டு கைப்பிடியும் உபயோகிக்க வேண்டும். மிகவும் ருசியாக இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

சுவையான கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
அம்மாவின் கைப்பக்குவத்தில் வளர்ந்ததால்தான் அந்தக்கால சமையல் குறிப்புகள் பலவும் உங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது. நானும் வற்றல்கள் செய்வேனே தவிர அப்பளம் செய்ததில்லை. அது கொஞ்சம் க‌டுமையான வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் சினேகிதி வீட்டில் செய்வார்கள்.

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை சுவை.... என்றோ ஒரு நாள் சுவைத்த சில பதார்த்தங்களின் சுவை மறக்கவே முடிவதில்லை.

ரசித்துச் சாப்பிடும் சிலர் தான் சமைப்பவர்களின் மனதை உணர்ந்து பாராட்டுபவர்கள். பலர் ஏதோ சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுபவர்கள் தான் இப்போது.

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மனோ சாமிநாதன் said...

எனக்கும் நாட்டு மருந்து கடைகளில் நாக்கடுகு கிடைக்கும் என்று தெரியும் கீதா! ஆனால் நீங்கள் கூறியுள்ளது போல சர்க்கரை நோய்க்கும் கல்லீரலுக்கும் பயந்தரக்கூடியது என்று தெரியாது. நல்ல தகவல்! இனிமையான பின்னூட்டமும்கூட! அன்பு நன்றி கீதா!

ஸ்ரீராம். said...


//சாலையோரமாக மஞ்சள் பூக்களுடன் உள்ள செடிகளில் காணப்படும்//


ஆமாம்.  நீங்கள் சொல்லி இருக்கும் செடியை சாலையோரங்களில் பார்த்திருக்கிறேன். 

கோமதி அரசு said...

மிகவும் அருமையான சுவையான நினைவுகள்.
ஆசையோடு அன்போடு உணவு சமைக்கும் போது அதில் அதிக ருசி சேர்ந்து விடும்.

சமைத்து வைத்து இருப்பதை கடனே என்று சாப்பிடாமல் ரசித்து சுவைத்து சாப்பிட்டு பாராட்டும் போது மனதும், வயிறும் குளிர்ந்து போய் விடும். மறுமுறை அவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என்று சமைக்க உற்சாகம் வரும்.

நீங்கள் சொன்ன விவரங்கள் காட்சியாக கண்ணில் விரிந்தது.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் சுவையான பதிவு. 80 வயதிற்கு மேல் கணவனும், மனைவியுமாக தயாரித்த இலை வடாம் நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும்.

மாதேவி said...

சுவையான பகிர்வு.