Sunday 17 January 2021

வேங்கையின் மைந்தன்!!!! பல நாட்கள் கழித்து, உண்மையில் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு முறை ‘ வேங்கையின் மைந்தன் ‘ என்னும் வரலாற்று புதினத்தைப்படித்து முடித்தேன்.  இளம் வயதில் ஆதர்ஸ எழுத்தாளர்களாக இருந்த  எழுத்தாளர்கள் கல்கி, நா.பார்த்த சாரதி, அகிலன், ஜெகச்சிற்பியன், ஜெயகாந்தன், கிருஷ்ணா முதலியோர்தான் என் தமிழார்வத்தை வளப்படுத்தினார்கள் என்று சொல்ல வேண்டும். கூடவே இவர்கள் எழுத்தாற்றலில் தொடர்ந்து வந்த நேர்மையும் உண்மையும்  சத்தியமும் கண்ணியமும் நம் மனதுக்குள்ளும் வளர பெரிய காரணிகளாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மை! கல்கிக்கு மணியம், அகிலனுக்கு வினு, நா.பார்த்தசாரதிக்கு விஜயா, வினு என்று வரையப்பட்டிருந்த ஓவியங்கள் அந்த வயதில் பிரமிப்பை ஏற்படுத்தி ஏகலைவனாக என்னையும் ஓவியராக்கின. பதின்மூன்று வயதிலேயே நான் வரைய ஆரம்பித்ததற்கும் இவர்கள் தான் காரணம்!


வேங்கையின் மைந்தனின் முக்கிய சிறப்புகள்:

வேங்கையின் மைந்தன்’ எழுத்தாளர்  அகிலன் எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் ஓவியர் வினு  வரைய, மூன்று பாகங்கள் கொண்ட தொடர்கதையாக வெளி வந்தது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜி கணேசனால் நாடகமாக நடத்தப்பட்டுள்ளது.  அகிலன் அவர்களது மகன் அகிலன் கண்ணன் அவர்களால் நாடக வடிவமாக்கப்பட்டுச் சென்னை வானொலி நிலையத்தாரால் (AIR) தொடர் நாடகமாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

மூன்று பாகங்கள் கொண்ட  இந்த வரலாற்றுப்புதினம் 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதை பெற்றுள்ளது.  அகாதமியின் சின்னத்துடன் இந்தியப் பிரதமராக அப்போதிருந்த ஜவஹர்லால் நேருவின் கையொப்பம் பொறிக்கப்பட்டச் செப்பேட்டினை, மார்ச் மாதம் 1964 ஆம் ஆண்டு, 15 தேதியில் இந்திய உதவி குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் கையால் பெற்றதைத் தன் வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக அகிலன் குறிப்பிட்டுகிறார்.

ரொம்பவும் முக்கியமான, ஆச்சரியபப்டும் விஷய்ம் இந்தக்கதையின் முடிவு! கல்கியில் வெளி வந்த போது இறுதி அத்தியாயத்தில் கதாநாயகி ரோஹிணி தான் செய்த தவறை உணர்ந்து தீயில் குதித்து உயிர் துறப்பதாகத்தான் கதையை முடித்திருந்தார் அகிலன். ஆனால் வாசகர்களின் கோபத்தையும் எதிர் விமர்சனங்களையும் தாங்க முடியாமல், இந்த நாவல் முதல்  பதிப்பாக வெளி வந்த போது, ரோகிணி பிழைத்துக்கொண்டதாக கதையை முடித்து விட்டார். இந்த மாதிரி ஒரு சம்பவம் எனக்குத்தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் நேர்ந்ததில்லை!!

இனி கதையைப்பற்றி!! 

வேங்கையின் மைந்தன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் என்றாலும் அது நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழல்வதாக அமைகிறது.

முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1012), அவரது மகன்   இணை அரசனாகப் பொறுப்பேற்றுப் பின் இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். அவன் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக் கொண்டான். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான். ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.

ஈழத்திலிருந்த பாண்டியர் முடியை, இராஜராஜ சோழன் காலத்தில் மீட்டுவர முடியவில்லை. அவர் இறக்கும் போது தனது வாழ்நாளில் தன்னால் செய்து முடிக்க முடியாத அக்காரியத்தைத நிறைவேற்ற வேண்டுமெனத் தன் மகன் இராஜேந்திர சோழனைக் கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் தான் தனது தந்தையின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், தமிழர் மானம் காக்கப்படும் எனவும் உறுதியாய் இருந்த இராஜேந்திரர், தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே அதே குறிக்கோளுடன் செயல்பட்டார்.  முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் மீட்டெடுக்கும் நோக்கோடும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது கி.பி. 1018ல் மீண்டும் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றி சிங்கள பட்டத்து அரசன் ஐந்தாம் மகிந்தன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மஹா வம்சமும்" கூறுகிறது.


இந்தக் காலகட்டத்தைத்தான் அகிலன் தன்னுடைய வேங்கையின் மைந்தன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சங்க காலம் முதல் பிற்கால வரலாற்றிலும் அழியா இடத்தைப் பெற்றது கொடும்பை மாநகரம். சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்குச் செல்லும் சாலையில் இரு நாடுகளுக்கும் எல்லை வகுத்து விட்டு இடையில் வளர்ந்த சிற்றசர் நகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டுவந்த வேளிர்கள் தம் வீரத்துக்குப் பேர் போனவர்கள். பிற்காலச் சோழர்களுடன் நெருக்கமான மண உறவு கொண்டிருந்த குலம் அது. முதலாம் இராஜராஜனின் மனைவியும் இராஜேந்திர சோழனின் தாயுமான வானதி கொடும்பாளூர்க் குலப்பெண். இக்கதையின் நாயகன் இளங்கோ கொடும்பாளூர் குலத்தோன்றல். இராஜேந்திரன் பாண்டிய நாட்டு முடியை ஈழத்திலிருந்து மீட்டு வந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு அதற்கு முன்னும் பின்னுமாக இப்புதினத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

அவர் ஈழத்தின் மீது படையெடுப்பதற்காக செய்த ஏற்பாடுகளையும் ஈழத்துப் போரையும் அதில் அவர் அடைந்த வெற்றியையும் ஈழத்து அரசர் மகிந்தரை சோழநாட்டிற்கு சிறைபிடித்து வந்ததையும் இப்புதினத்தின் முதல் பாகமான முடிகொண்ட மாவேந்தன் சுவையுடனும் விறுவிறுப்புடனும் விவரிக்கிறது. இச்சாதனையில் கதைநாயகன் இளங்கோவின் பங்கும் வீரமும், ஈழத்து இளவரசி ரோகிணி பகைநாட்டைச் சேர்ந்தவளாய் இருந்தும் இளங்கோவிற்கு உதவியதும் அவர்கள் இருவருக்கும் இடையில் மலரும் காதலும் இப்பகுதியில் அழகுறப் புனையப்பட்டுள்ளது.

ஈழத்திலிருந்து வெற்றியுடனும் பாண்டியர்களின் முடியுடனும் திரும்பிய இராஜேந்திர சோழன் ஈழப் படையெடுப்புக்கு வீரர்களைத் தந்த பழையாறை நகருக்குச் சென்று போரில் தமது உறவுகளை இழந்த மக்களிடம் தன்னையே அவர்களின் உறவாகக் கொள்ளும்படி ஆறுதல் கூறி, இனிமேல் தனது தலைநகரை தஞ்சையிலிருந்து அவர்கள் ஊருக்கே மாற்றப்போகும் ஆனந்தமான செய்தியையும் அவர்களுக்களிக்கிறார். 


சோழபுரம் என்றொரு பிரம்மாண்டமான ஊரும், அங்கு தஞ்சை பெரிய கோவிலை ஒத்த ஒரு பிரம்மாண்டமான சிவாலயமும் ஊருக்கு எல்லையில் கடலென ஓர் ஏரியும் அமைக்கப்படும் என உறுதியளிக்கிறார். பாண்டியர்களால் எழுந்த சலசலப்புகளையும் சதிகளையும் ஒடுக்கிய பின்னர் தன் இளைய மகனான சுந்தரசோழனுக்கு, சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரால் மதுரையில் முடிசூட்டி, புதியதொரு பாண்டியப் பரம்பரையை ஆரம்பித்து வைக்கிறார். மீட்கப்பட்ட வாளும் மகுடமும் நாட்டை ஆளும், அவைகளுக்கு பாதுகாவலராக சுந்தர சோழ பாண்டியனாக இருப்பார் என்று சொல்கிறார். ஈழத்தில் மீண்டும் முளைவிட்ட அமைச்சர் கீர்த்தியின் சதிகளை நாயகன் இளங்கோவை அனுப்பி முறியடிக்கிறார். இத்தொல்லைகளுக்கு முடிவு கட்டி முடிக்க, வடக்கே மேலைச் சாளுக்கியர் வாலாட்டுகின்றனர். அவர்களை முறியடிக்கப் படையெடுத்துச் செல்கிறார். தனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றிக் கொண்டாட்டமாக சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டு பெரியதொரு சிறப்பு விழா அமைய வேண்டும் என்ற நோக்கோடு நகர், கோவில், ஏரி இவற்றின் அமைப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டே படையெடுப்பைத் தொடங்குகிறார். அரசரின் வெற்றிகளில் எல்லாம் தோள்கொடுத்து நிற்கும் இளங்கோவின் வீரம் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டத்தில் இளங்கோவிற்கும் ரோகிணிக்கும் இடையே தோன்றிய காதல் தஞ்சையிலும் கொடும்பாளூரிலுமாக வளர்கிறது. ரோகிணி தன் பிறந்த நாட்டுப் பாசத்திற்கும் பகை நாட்டு இளவரசனிடம் மனதைப் பறிகொடுத்து விட்ட தனது காதலுக்கும் இடையிலான போராட்டத்தில் படும் அவதியும், அவளது மனப்போராட்டங்களால் அவளுக்கும் இளங்கோவிற்கும் இடையே நிகழும் கசப்பான அனுபவங்களும், இருவரது வேறுபட்ட குணாதிசியங்களால் எழும் முரண்பாடுகளையும் மீறி ஒருவரையொருவர் விட்டுவிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பும் வாசிப்போரையும் தவிப்புக்குள்ளாக்குகிறது.

சாளுக்கியரை ஒடுக்குவதற்காக படையெடுத்துச் சென்ற இராசேந்திரர் சாளுக்கியரின் கொட்டத்தை அடக்கி வென்றபின், சாளுக்கிய நாட்டோடு நில்லாது மேலும் வடதிசை நோக்கிச் சென்ற சோழ படைகள் வடதிசை மாதண்ட நாயகர் அரையன் இராஜராஜன் தலைமையில் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டுவதும், கங்கை நீரைக் குடங்களில் அடைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு சோழ நாடு திரும்பிய வெற்றி ஊர்வலமும், புதிதாக அமைக்கப்பட்ட சோழபுர நகரம் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயர்சூட்டப்பட்டப் பெருவிழாவும் இம்மூன்றாம் பாகத்தின் முக்கிய நிகழ்வுகள்.

இந்நிகழ்வுகளின்போது நடைபெறும் வீரதீரச் செயல்களும், நேர்கொள்ளப்பட்ட இன்னல்களும், அவற்றைச் சமாளித்த திறமையும் கற்பனை நயம் கலந்து விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் வாசகர்களின் ஆவலைத் தூண்டும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இளங்கோ ரோகிணி காதல் வளரும் விதமும் ரோகிணியின் தவிப்பான காதலும், தான் விரும்பும் நாயகன் வேறொரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தும் அப்பெண்ணைத் தங்கையாக நினைத்து அவர்கள் காதலுக்கு உறுதுணையாக நிற்கும் அருள்மொழி நங்கையின் தியாகமும் நாட்டுப்பற்றும் அவர்களுக்கிடையேயான உறவுக்கு பெரியோர்களால் தரப்படும் தீர்வும் சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது.

இராசேந்திரரின் கடாரத்தின் வெற்றியும் அதில் இளங்கோ ஆற்றலும் முடிவுரையில் தரப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் என் மனங்கவர்ந்த புதினங்களில் இதுவும் ஒன்று!


14 comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு அற்புதமான வரலாறு.
1960க்கே சென்று விட்டேன்.
அப்போது கல்கியில் வந்த அட்டைப்படம்.,
என் எட்டாம் வகுப்பில் இருந்த போது வந்தது.

அத்தை வீட்டில் அப்போது விடுமுறைக்காகச் சென்ற
போது அடுத்த வாரக் கல்கி கிடைக்காமல்
அவதிப் பட்டதும் நினைவில்.

இளங்கோவைப் பிடிக்காத சினேகிதிகளே கிடையாது. எல்லோருக்கும் அருள் மொழி நம்கையிடம் தான் பாசமும் கூட.
ரோஹிணிக்கு திரு வினு வரையும் பிம்பங்கள் கண்ணில்
கொஞ்சம் கோபத்துடன் இருக்கும்.
அகிலன் அவர்கள் இரண்டு கதா நாயகிகளோடு நிறுத்திக் கொண்டாரே
என்று தோன்றும்:)

அன்பு மனோ!! அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.
எத்தனை அருமை.!!! நீங்கள் விவரித்திருக்கும் விதம்
மனம் சிலிர்க்கிறது.
மிக மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

நல்ல நினைவோடை.  இந்தக் அஃதை இதுவரை படித்ததில்லை.  உண்மையில் கல்கி, சாண்டில்யன் தவிர பிற சரித்திர புதினங்கள் படிக்கத் தோன்றியதில்லை.  நாபாவின் மணிபல்லவம் உட்பட சில கதைகள் படிக்க ஆர்வம் உண்டு.  இதையும் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். என்னுடம் இந்த நாவல் இருக்கிறது என நினைக்கிறேன். இன்னும் படித்ததில்லை. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளீர்கள்.

இன்னும் கங்கை கொண்ட சோழபுரத்தைக் காணும் வாய்ப்பு அமையவில்லை. தஞ்சை பெரியகோவில் கொடுத்த அதே சிலிர்ப்பு அங்கும் இருக்கும்.

நெல்லைத்தமிழன் said...

தஞ்சுப் பகுதியில் சோழர் சம்பந்தப்பட்ட கோவில்களைக்குப் போயிருக்கிறீர்களா?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான அழகான விமர்சனம்...

Geetha Sambasivam said...

நல்லதொரு விமரிசனம். என்னிடம் புத்தகம் பைன்டிங்கே இருந்தது. எங்கே போச்சு எனத் தெரியாது. பொழுது கழியக் கஷ்டமாய் இருக்கும் நாட்களில் இவற்றை எல்லாம் எடுத்தூ வாசித்து நினைவுகளை மீட்டுக் கொண்டு இருப்பேன். இப்போதைக்குக் கல்கியும், தேவனும் மட்டுமே அந்த வேலைகளுக்குத் துணை இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் புத்தகமாகப் பதிப்பித்த போது ரோஹிணி, அருள்மொழி நங்கை இருவரையுமே இளங்கோ மணப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும். அகிலனின் "கயல்விழி" நாவலிலும் முடிவு மாற்றப்பட்டதாகச் சொல்வார்கள். நான் எல்லாவற்றையும் கல்கி வாயிலாகப் படித்ததே அல்லாமல் புத்தகங்களாகப் படித்ததில்லை.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி வல்லி சிம்ஹன்!
நீங்கள் சொன்னது போல அந்த இளம் வயதில் ஸ்கூல் போகும் பருவத்தில் தான் நானும் வேங்கையின் மைந்தனைப்படித்தேன். எல்லோரையும் போலவே எனக்கும் அருள்மொழியைத்தான் பிடிக்கும். அருள் மொழி மீது இளங்கோ வைத்திருந்த மரியாதை மிக உயர்வாக சித்தரிக்கப்பட்டிருக்கும்! அந்த கண்ணியமான காதல் கதைகள் போல இனி கதைகள் வருமென்று தோன்றவில்லை!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீதர்!!
நா.பா வின் கதைகளில் அவரது தமிழ் அத்தனை அழகாய் கொஞ்சி விளையாடும்! ' மணிபல்லவத்தில் ' இறுதிக்காட்சியில் கதாநாயகி கதாநாயகனுடன் வாதாடும் இடம் ஒன்றே போதும் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக!! அவசியம் மணிபல்லவம் படித்துப்பாருங்கள்.

மனோ சாமிநாதன் said...

correction: சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!
அவசியம் வேங்கையின் மைந்தனை படித்துப்பாருங்கள்!
தஞ்சை கோவிலின் பிரம்மாண்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்காது. ஆனால் மிக அழகான கோவில். ஒரு தனிமையான உணர்வு இருக்கும். தஞ்சை பெரிய கோவில் என்றைக்குமே நாதஸ்வர இசையின் பின்னணியில் மக்கள் திரளுக்கு மத்தியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும்.
ஆதித்த சோழன் கட்டிய குடந்தை நாகேஸ்வரர் கோவிலையும் விஜயாலய சோழன் கட்டிய விஜயாலய சோழீச்சரம் என்னும் கோவில் உள்ள‌ நார்த்தாமலையையும் சின்ன வயதில் பார்த்தது. சரியாக நினைவில் இல்லை. இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டிய தாராசுரம் ஐராதேஸ்வரர் கோவில் எத்தனை முறை பார்த்தாலும் சரியாக பார்க்காதது போலவே தோன்றும். அத்தனை அழகு அதன் நுண்ணிய சிற்பங்கள்! ராஜ ராஜ சோழன் மனைவியும் பின்னால் ராஜேந்திர சோழன் மனைவியும் பெரும் பங்கு எடுத்து கட்டிய திருவையாறு அய்யாரப்பர் பஞ்ச‌நதீஸ்வரர் கோவிலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் தான் சென்று வந்தேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
நானுமே கல்கியில் வெளி வந்த எல்லா சரித்திர, சமூக நாவல்களை படித்திருக்கிறேன். கயல்விழியில் ஓவியர் வினுவின் ஓவியங்கள் அந்தக்கால இளமையான சரோஜாதேவியின் முகங்களாக இருக்கும்! அத்தனை அழகாக வரைந்திருப்பார். அந்த சின்ன வயதில் புத்தகங்களின் அருமை தெரியாமல் நிறைய பேருக்குக்கொடுத்து, அவை திரும்பி வராமலேயே போய் விட்டன!
என் அக்கா இந்தக் க‌தையின் மாபெரும் விசிறி! அவர்களுக்கும் அகிலனின் முடிவு பிடிக்கவேயில்லை. புலம்பித்தீர்த்தது இன்னும் நினைவில் உள்ளது. சுபமாக புத்தகப்பதிப்பில் படித்ததும் தான் நிம்மதியடைந்தார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம். இப்போது படிக்க ஆவலாக இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வரலாற்றுப் புதினம்
பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன்
தங்களின் விமர்சனப் பதிவை பார்த்தபின், மீண்டும் படிக்க வேண்டும்
என்ற ஆவல் எழுகிறது.
நன்றி சகோதரி