Saturday 8 August 2020

கோவைக்காய் துவையல்!!!


கோவைக்காயில் பொரியல், கூட்டு, குழம்பு, பச்சடி என்று பல வகை சமையல் இருக்கின்றன. இப்போது வருவது கோவைக்காய் துவையல். குறிப்பை எழுதுவதற்கு முன்னால், கோவைக்காயைப்பற்றி சில வரிகள்.... 



இரும்புச்சத்து அதிகம் உள்ள கோவைக்காயை வாரத்தில் இருமுறை பொரியல், கூட்டு போலச் செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல்  பிரச்சனை தீரும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக  வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் தடுக்கிறது. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்ஒரே ஒரு கொவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும்   மேலும், சிறுநீரகத்தில் கல் இருந்தால்,  கோவைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும்.  

இப்போது குறிப்புக்குப்போகலாம்:


கோவைக்காய் துவையல்.

தேவையானவை:

கோவைக்காய்-10
சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி
தக்காளி-2
வற்றல் மிளகாய்-4
புளி சிறு நெல்லியளவு
கறிவேப்பிலை இலைகள்-10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 1  மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
காயம் சிறு துண்டு
நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது 

செய்முறை:

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
மிக மெல்லியதாக அரிந்த கோவைக்காய்களை அதில் போட்டு நிதானமான தீயில் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும்.
உளுத்தம்பருப்பு, காயம் இவற்றைப்போட்டு பொன்னிறத்துக்கு வறுக்கவும்.
பின் சின்ன வெங்காயங்களைப்போட்டு மிளகாய் வற்றல்களையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளித்துண்டுகளை கறிவேப்பிலை, மல்லியுடன் சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் வெளியே எடுத்து ஆறவைத்து கோவைக்காய், உப்பு, புளியுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
மிகவும் சுவையான துவையலான இது இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

குறிப்பு: கோவைக்காய் பழமாக, சிவப்பாக இல்லாமல் அரியும்போது பச்சையாக இருப்பது அவசியம். கோவைக்காய் மிக இலேசான கசப்பு சுவையில் இருக்கும். ஆனாலும் சமைக்கும்போதோ, சமைத்த பின்னோ அந்த கசப்பு தெரியாது. ஆனால் சில கோவைக்காய்கள் அளவுக்கு மீறி கசக்கும். அதனால் கோவைக்காய்களை மிக மெல்லியதாய் அரியும்போது நாவில் போட்டு சுவைத்து பார்ப்பது நல்லது. அதிக கசப்பு எந்த விதத்திலும் உதவாது.

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கோவைக்காய் சுவை வித்தியாசமாக இருக்கும்... எனக்கு மிகவும் பிடிக்கும்... செய்முறை குறிப்பிற்கு நன்றி அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

தளத்தின் theme-யை மாற்றி விட்டீர்களா...?

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பு. இங்கேயும் செய்வதுண்டு. நான் செய்த முறை எனது பக்கத்தில் முன்னர் பகிர்ந்திருக்கிறேன்! சுட்டி கீழே....

https://venkatnagaraj.blogspot.com/2016/07/blog-post_12.html

ஸ்ரீராம். said...

கோவைக்காயில் துவையல் இதுவரை முயற்சித்ததில்லை.  செய்து பார்க்கலாம் ஒருமுறை.

கோமதி அரசு said...

கோவைக்காய் துவையலும், அதன் பயன்களும் அருமை.
நானும் கோவைக்காய் துவையல் செய்வேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை சகோதரி

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களாக ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பதால் சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்கு மாற்றினேன் தனபாலன்!குறிப்பை ரசித்ததற்கு அன்பு நன்றி!!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்! நீங்கள் குறிப்பிட்டிருந்த இணைப்பிற்கு சென்று அந்த துவையல் செய்முறையையும் பார்த்தேன். நன்றாக உள்ளது!

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள் சகோதரர் ஸ்ரீராம்! நன்றாகவே இருக்கும்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டியதற்கு இனிய நன்றி கோமதி அரசு! உங்கள் குறிப்பையும் உங்கள் தளத்தில் பகிரலாமே?

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!

Avargal Unmaigal said...

பீர்க்காங்க செள்செள போன்றவற்றில் இருந்து துவையல் செய்வோம் ஆனால் இப்போதுதான் கோவைக்காய் துவையல் குறிப்பை பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர் மனோக்கா!! கோவைக்காயில் எது செய்தாலும் மிகவும் பிடிக்கும். நோட்டட்!! மிக்க நன்றி மனோக்கா.

கீதா

koilpillai said...

கோவைக்காயின் மருத்துவ குணங்கள்பற்றி சொன்ன தகவலுக்கு மிக்க நன்றிகள். அடிக்கடி கோவைக்காயை பொரியல் செய்வது வழக்கம். துவையல் இதுவரை முயற்சி செய்யவில்லை, அடுத்து கோவைக்காய் வாங்கும்போது முயற்சிக்கின்றேன்.

Anuprem said...

கோவைக்காய் துவையல்!!!...மிக சிறப்பு மா

ஆனால் கோவைக்காய் சமையல் எனக்கு பிடிப்பது இல்லை ...அதனால் அதை சமைப்பதும் இல்லை உங்கள் குறிப்பை குறித்துக் கொண்டேன் ...சமயம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன் ..

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் மதுரைத்தமிழன்! கோவைக்காய் துவையல் இந்த முறையில் செய்து பார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்! அவசியம் செய்து பாருங்கள்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் கோயில்பிள்ளை! வருகைக்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அனு!