Thursday 16 July 2020

முத்துக்குவியல்-57!!!

ரசித்த முத்து:

கவிஞர் கருணானந்தம் அவர்கள் ஒரு பாவலர் ஆவார். இவரின் படைப்புகளை 2007 - 08 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது. கருணானந்தம் அவர்கள் 15.10.1925 இல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். தஞ்சை மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் ஊரைச் சார்ந்தவர். அஞ்சலகப் பணியாளராகத் தொடங்கிப் பின்னாளில் தமிழக அரசுச் செய்தித் துறையில் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். மிகச்சிறிய தலைப்புகளை வைத்து கருத்து மிக்க பாடல்கள் இயற்றியவர். ' படி ' என்னும் தலைப்பில் ஒரு பாடல் இங்கே!!!


படி படியென்றே தலையில் அடித்துக்கொண்டார்;
     பள்ளி விட்டுக் கல்லூரிப்படி மிதித்தேன்!
" ஏற்றிவிடும் ஏணிக்குப் படிகள் உண்டா"
     ஏறிய பின் இப்படியும் சில பேர் கேட்பார்!
போற்றியவர் குளறுபடிக்கொள்கையாலே
     புளுகுகின்ற படியாகிப்புழுதி வாரி
தூற்றிடுவார் பெரும்படியாய்! மாடி மீதில்
     தூக்கி விடும் மின் தூக்கி பழுதாய்ப் போனால்
மாற்று வழி சுழற்படி தானன்றோ? என்றும்
    மறவாதபடியிருப்போம் படிக்கட்டைத்தான்!
கரும்படி உன் சொல்லெனக்குக் காரிகையே,
    கண்டபடி உளறாதே! கடைக்கண் வீசித்
திரும்படி என் கன்னத்தில் இதழ் படிந்தே
    தித்திக்கும்படியாக படித்தேன் ஊறி
வரும்படியாய் முத்திரையும் தருவாய் என்றால்
    வளைவாயிற்படி வரைக்கும் வருவாள், செல்வாள்
" துரும்படி என் மாற்றாரின் பகைமையெல்லாம்!
     தூளாகும் படிமுறிப்பேன், பார் பார்" என்பான்!

ஆச்சரிய முத்து:

சமீபத்தில் எங்கள் தண்ணீர் தொட்டியில் அரையடி நீளத்தில் ஒரு பாம்பு நீச்சலடித்துக்கொண்டிருந்தது. தண்ணீரின் அளவைப்பார்க்க தொட்டியின் கதவைத்திறந்த என் கணவர் பாம்பைப்பார்த்ததும் அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக்கொண்டு வாளி, கம்பு, என்று ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பல முயற்சிகள் செய்தும் பாம்பை பிடிக்க முடியவில்லை.மாடியில் வேலை செய்து கொண்டிருந்த கொத்தனாரை அழைத்ததும் அவர் கையாலேயே அதைப்பிடித்து கொஞ்சம் தூரம் சென்று அதை விட்டு விட்டு வந்தார். அதன் பெயர் செவிட்டு பாம்பாம். மனிதர்கள் காதில் புகுந்து கொண்டு ஒரு வழி பண்ணி விடுமாம். என் கணவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால் இப்படியொரு பாம்பைப்பற்றி கேள்விப்பட்டதில்லை என்றார்கள்! யாராவது இந்தப்பாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

அசத்தும் முத்து:


ஆட்டோமியம் என்ற இந்த கட்டிடம் பெல்ஜியத்தின் தலைநகரான Brussels-ல்  அமைந்துள்ளது. 1958ல் அங்கே உலகப்பொருட்காட்சி நடந்த போது அதற்கு சில வருடங்களுக்கு முன் நடந்த உலகப்போரில் அணுகுண்டுகள் ஜப்பானில் வீசப்பட்டதை ஒட்டி ‘ அணுவை’ மூலப்பொருளாக வைத்து இந்த கட்டிடத்தை வடிவமைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.  அதன்படி இதில் ஒன்பது கோளங்கள் சேர்க்கப்பட்டது. இது இரும்புத்தாதில் உள்ள 9 அணுக்களைக்குறிக்கும். ஒவ்வொரு அணுவும் பல கோடி மடங்கு பெரிதாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 60 அடி விட்டமுள்ளது. குழாய்கள் மூலம் இவற்றை இணைத்தனர்.

அணுகுண்டு ஜப்பானை அழித்ததால் இதைக்கட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதாம். ஆனாலும் அணுவை ஆக்கப்பூர்வமாகக்காட்டவென்றே இதைக்கட்டுவதாக பெல்ஜியம் கூறி இதைக்கட்டியது. இதில் ஒரு கோளத்திலிருந்து இன்னொரு கோளத்திற்கு செல்ல எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோளமும் ஒவ்வொரு உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்டது. உயரத்தில் உள்ல கோளத்தில் அங்கிருந்தே ப்ரஸ்ஸல்ஸ் நகரை முழுவதும் பார்க்கும்படியாக உணவகம் அமைக்கப்பட்டிருக்கிறது.  மக்கள் தங்குவதற்கேற்ற அறைகள் இன்னொரு கோளத்தில் அமைக்கப்பட்டன. 120 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் கட்டி முடிக்க 3 வருட்ங்கள் தேவைப்பட்டன். கண் கவரும் ஒளி விளக்குகள் சுற்றுலாப்பயணிகளின் கவர்வதெற்கென்றே நிர்மாணிக்கப்பட்டுடுள்ளன.

இசை முத்து:

ரூபா ரேவதி ஒரு மலையாளி. சிறந்த பாடகி மட்டுமல்ல, அருமையாக வயலின் வாசிப்பவர். சமீபத்தில் வெளி வந்த ' பிகில்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளி வந்த‌ இனிமையான பாட்டான ' உனக்காகவே நான் வாழ்கிறேன் ' என்னும் பாடலை மயங்கும் வித்தத்தில் வாசித்திருக்கிறார். கேட்டு ரசியுங்கள்!


22 comments:

KILLERGEE Devakottai said...

கவிதையின்படி அருமை, பெல்ஜியம் அதை கட்டிடம் என்பதையே நம்ப முடியவில்லை.

வயலினிசை கேட்டேன். அனைத்தும் நல்முத்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

முத்துக்கள் - நன்று.

செவிட்டுப் பாம்பு - கேள்விப்பட்டதில்லை.

இசை முத்து - இனிமை.

திண்டுக்கல் தனபாலன் said...

பாவலர் வரிகள் சிறப்பு...

ஆச்சரிய முத்து - பய முத்து...

ஆட்டோமியம் - வியப்பு முத்து...!

ரசனையான இசை முத்து... ஆகா...!

Yaathoramani.blogspot.com said...

முத்துக்களைக் கோர்த்துத் தந்தவிதம் அருமை...வாழ்த்துகள்..

கரந்தை ஜெயக்குமார் said...

முத்துக்கள் அருமை
பெல்ஜியம் கட்டிடம் வியக்க வைக்கிறது
படி பாட்டும் அருமை
செவிட்டுப் பாம்பு கேள்விப் பட்டிருக்கிறேன்
நன்றி சகோதரி

ஸ்ரீராம். said...

இந்த படி கவிதை போல கோர்ட் படி ஏறும் கவிதை ஒன்று படித்த நினைவு இருக்கிறது.

செவிட்டுப்பாம்பு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்,   பீதியான செய்தி.

ராமலக்ஷ்மி said...

பாவலரின் ‘படி’ பாடல் அருமை. இன்று சர்வதேச பாம்புகள் தினம்:). இவ்வளவு பெரிய பாம்பு காதுக்குள் செல்ல முடியுமா? ஆனால் பூரான் அளவிலான சிலவகை சிறிய ஜந்துக்கள் காதுக்குள் சென்று விடுமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். இசை முத்து இனிமை.

kowsy said...

சிதறிய முத்துக்களை அள்ளிக் கொண்டேன். அடுக்கடுக்காய் கட்டிய படிகளில் படிகளில் ஏறிக் கொண்டேன். நன்றி காற்றை உங்களுக்கு வலி அனுப்புகிறேன்

Thenammai Lakshmanan said...

ப்ரஸ்ஸில்ஸ் சென்று அட்டாமியம் பார்த்து வந்தோம். ஆனால் நேரமின்மையால் மேலேறிச் செல்ல இயலவில்லை. நீங்கள் கொடுத்த தகவல்கள் புதுசு. நன்றி :)

Thulasidharan V Thillaiakathu said...

பாவலரின் படி பாடல் மிக அருமை.

அசத்தும் முத்து அசத்துகிறது.

எல்லா முத்துகளும் அருமை

துளசிதரன், கீதா

மனோக்கா செவிப்பாம்புன்னு சொல்லுவதுண்டு. காதில் புகுந்துவிடும் ஆனால் இங்கு படத்தில் இருப்பது அப்படியாகத் தெரியவில்லை. செவிப்பூரான் என்றும் சொல்லுவதுண்டு அது மிகச் சிறியதாக இருக்கும் மண்புழு போன்று உடல் க்ளாசியாக இருக்கும் இங்கு படத்தில் இருப்பது அப்படியானது இல்லை வேறு வகை நீர்க்கோலி போல இருக்கு

நாங்கள் இப்போது இருக்கும் வீட்டில் செவிப்பாம்பு மண்புழு போல நீட்டமாகக் கொஞ்சம் குண்டாக இருப்பது பாத்ரூம் டைல்ஸில் இடுக்கிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கிறது தினமும் நான் அதை தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். டைல்ஸ் இடுக்கின் மண் எல்லாம் வந்து கொண்டே இருக்கும்.

இசை முத்து அருமை கேட்டிருக்கிறேன் ரூபா ரேவதிபாடியும் கேட்டிருக்கிறேன்.

கீதா

koilpillai said...

படி.. படித்தேன்.தண்ணீர்த்தொட்டிலில் செவிட்டு பாம்பு காதில் புகுமா?… கேட்கவே அச்சமாக இருக்கின்றது. பெல்ஜியத்தில் இந்த அட்டாமிக் அமைப்பை நேரில் பார்த்திருக்கின்றேன். இசை விருந்து சுவைத்தேன்.

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டும் வழங்கியதற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைகும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி! படத்திலுள்ள பாம்பு நான் 'கூகிளில்' எடுத்தது. அந்த நிகழ்வின் போது நான் கிட்டே போய் பார்க்கக்கூட இல்லை. எனக்கு பாம்பு என்றால் மிகவும் பயம். யாரிடமாவது போட்டோ எடுக்கச் சொல்லியிருக்கலாம். அந்த நிமிடம் அது தோன்றவேயில்லை!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கெளசி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்களுக்கு அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைகளுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி துளசிதரன்/கீதா!
கீதா! இந்தப் படம் நான் கூகிளிலிருந்து எடுத்தது. நிஜப்பாம்பை பயத்தில் நான் அருகே போய் பார்க்கவேயில்லை!

மனோ சாமிநாதன் said...

வருகைகும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கோயில்பிள்ளை!