Sunday, 26 July 2020

ஒரு கேள்வியும் ஒரு சாதனையும்!!!!

ஒரு கேள்வி!

சென்ற திங்களன்று ஒரு விவாதம். வீட்டில் வேலை செய்யும் பெண் வேலைகளை முடித்து விட்டு கிளம்பும்போது ' சாப்பிடுகிறாயா?' என்று கேட்டதும் இன்றைக்கு ஆடி அமாவாசை என்பதால் விரதமிருந்து சமைக்கணும்மா. அப்புறம் தான் சாப்பிடனும்.' என்றது. கூடவே ஆண்கள் தான் தர்ப்ப்ணம் பண்ணனும் என்கிறார்கள். பெண்கள் அதைச் செய்ய முடியாது. அதனால் விரதமாவது இருந்து சமைக்கலாம் என்று வருஷா வருஷம் இப்படித்தான் செய்கிறேன்' என்றது. அது சென்றதும் அதைக்கேட்டுக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுப்பெண்,  ' இது தப்பும்மா.கணவர் இருக்கும்போது இறந்து போன பெரியவர்களுக்காக இந்த சுமங்கலிப்பெண் விரதம் இருக்கக்கூடாது' என்று சொன்னது. ' அதற்கு காரணம் என்ன? ' என்று நான் கேட்டதும் ' எனக்கு அதற்கெல்லாம் பதில் தெரியாது' என்றது. அதன் பிறகு என் சினேகிதியை தொலைபேசியில் அழைத்துக்கேட போது அவரும் ' காரணம் தெரியாது' என்றே சொன்னார். காரணம் கீதா சாம்பசிவம் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

இளம் வயதில் என் தந்தை காவல் அதிகாரியாய் பணியாற்றிய சமயங்களில் ஆடிப்பெருக்கு, சரஸ்வதி பூஜைக்குக்கூட பத்தாடைகள் அணிந்து சாமி கும்பிடுவோம். ஆனால் பெரியாரின் அடிபணிந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டபோது பூஜை புனஸ்காரங்கள் நின்று போயின. என் மாமியார் நான் உள்பட தன் ஏழு மருமகள்களுக்கும் எந்த சீரும் கேட்கவில்லை. ஜாதகம் என்ற ஒரு விஷயமே நடந்ததில்லை. திருமணச்செலவும் மணமகன் வீட்டினர் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்களை மனங்குளிர வரவேற்று உணவருந்தித்தான் செல்ல வேண்டும் என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அது போலவே எங்களையும் பழக்கி வைத்திருந்தார்கள். எங்கள் வீட்டில் சின்னக்குழந்தைகள்கூட வந்தவர்களை சாப்பிட்டுப்போகச்சொல்வார்கள். இப்படி எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்கள் இருந்த போதிலும்  மேற்சொன்ன நாளுங்கிழமையுமான பழக்க வழக்கங்கள் என் அம்மா வீட்டோடு நின்று போய் விட்டதென்றே சொல்லலாம். அம்மா வீட்டிலுமே ரொம்பவும்  முறைமைகளைப்பார்க்க மாட்டார்கள்.

சென்ற திங்கட்கிழமை தான் என் நெருங்கிய சினேகிதியும் இறந்த நாள். சென்ற வருடம் இறந்தார்கள். அவர்களின் மகன் தன் 27ம் வயதில் சாலை விபத்தில் இறந்து போனான். 2003ம் வருடம் என்று நினைக்கிறேன். அன்றிலிருந்து அவர்களின் மலர்ந்த முகம் மறைந்து விட்டது. கணவர் நோய்வாய்ப்பட்டு 10 வருடங்கள் கழித்து இறந்து போனார். பெண் வீட்டில் தான் கடைசி வரை இருந்தார்கள். அவர்கள் கணவர் இறந்ததும் கொள்ளி வைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் சகோதரிகள் வழியில் நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொள்ளி போட உரிமையில்லையென்றும் அவர்கள் கணவர் வழி சகோதரர்கள் பிள்ளைகளில் யாராவது தான் கொள்ளி போட வேண்டுமென்று சொல்லவே, என் சினேகிதி தன் மகளையே தன் அப்பாவுக்கு கொள்ளி வைக்கச் சொல்லி விட்டார்கள். இப்போது அம்மாவும் இறந்த போது அதே பெண் தான் அவர்களுக்கும் கொள்ளி வைத்தது. சென்ற திங்கள் அன்று நான் ஒரு வருட பூர்த்தியில் திவசம் எப்படி நடந்தது என்று அந்தப்பெண்ணை விசாரிக்கையில் ‘ நான் தான் செய்தேன் அத்தை. ஐயர் வைத்து நொய்யலாற்றங்கரையில் அம்மாவுக்கு தவசம் செய்தேன்.’ என்றது. காலம் மாற மாற பழக்கங்கள் மாறுகிறதா? அப்படியென்றால் அமாவாசை அன்று அந்தப்பெண் தானே விரதமிருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்?

ஒரு சாதனை

ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையைப்படித்ததனால் வந்த தாக்கம் மிகப்பெரிது என்பதை பிரசாந்த் கேட் உணர்த்தியிருக்கிறார். அந்த செய்தி இது தான்.
ஒவ்வொரு வருஷமும் சுமார் 40000 மக்களுக்கு சாலை விபத்துக்களில் கைகள் இல்லாமல் போகின்றன. சிலர் பிறப்பிலேயே கைகள் இல்லாமல் பிறக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்ததினால் உருவானது தான் " இனாலி கைகள்"!



கைகள் இல்லாதவர்களுக்கு ரோபோட்டிக் முறையில் கைகளை இவர் எந்த செலவுமில்லாமல் தன் அறக்கட்டளை மூலம் வழங்கி வருகிறார்.
இவரது முயற்சிக்கு வித்திட்டவர் பிரான்ஸ் நாட்டு நிக்கோலச் ஹட்செட். அவர் பயோனிக் முறையில் தனக்குத்தானே கைகளை உண்டாக்கிக்கொண்டவர்.
அவரை முன்னுதாரணமாக மனதில் ஏற்றுக்கொண்டார்.  பிறவியிலேயே கைகளை இழந்த ஒரு சிறுமிக்கு கைகள் வழங்க முயற்சி செய்த போது உலக நாடுகளில் அதற்கான விலையைப்பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். சாதாரண, எளிய மக்கள் எப்படி கைகளைப்பெறுவார்கள் என்ற கேள்வியும் மற்றவர்களின் கிண்டலையும் புறக்கணிப்பையும் பொருட்படுத்தாத மன உறுதியும் இவரது இலக்கை, ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேற வைத்தன. இடை விடாது நிதி திரட்டி ஆயிரம் கைகளை இவர் முதன் முதலாக தயாரித்தார். இதில் 700 கைகளை இலவசமாகவும் மீதமுள்ள 300 கைகளை விற்று வந்த பணத்தில் மறுபடியும் கைக‌ள் செய்து அவற்றையும் இலவசமாக கொடுத்தார்.

இலவசம் என்றால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதால் இப்போது ஒரு விலையும் இதற்கு மதிப்பிட்டு விற்பனை செய்கிறார்.
எப்படி மூளையின் உத்தரவிற்கு ஏற்ப கைகள் செயல்படுகின்றனவோ, அதேபோல இந்த செயற்கை கைகளும் செயல்படும். இந்த ரோபோட்டிக் கைகள் மூலம் 10 கிலோ எடை வரை தூக்க முடியும்.

தனக்கு முழுமையாக தைரியமும் ஊக்கமும் கொடுத்த தன் மனைவி பெயரான " இனாலி "யையே இந்தக்கைகளுக்கு பெயராக வைத்திருக்கிறார். மற்றவர்களின் நிதி, உதவிகளால் இவரின் இந்த இயக்கம் சிறப்பாக இயங்கி வருகிறது.

https://inalifoundation.com/

Thursday, 16 July 2020

முத்துக்குவியல்-57!!!

ரசித்த முத்து:

கவிஞர் கருணானந்தம் அவர்கள் ஒரு பாவலர் ஆவார். இவரின் படைப்புகளை 2007 - 08 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது. கருணானந்தம் அவர்கள் 15.10.1925 இல் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவர். தஞ்சை மாவட்டம் சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் ஊரைச் சார்ந்தவர். அஞ்சலகப் பணியாளராகத் தொடங்கிப் பின்னாளில் தமிழக அரசுச் செய்தித் துறையில் துறை இயக்குநராகப் பணியாற்றியவர். மிகச்சிறிய தலைப்புகளை வைத்து கருத்து மிக்க பாடல்கள் இயற்றியவர். ' படி ' என்னும் தலைப்பில் ஒரு பாடல் இங்கே!!!


படி படியென்றே தலையில் அடித்துக்கொண்டார்;
     பள்ளி விட்டுக் கல்லூரிப்படி மிதித்தேன்!
" ஏற்றிவிடும் ஏணிக்குப் படிகள் உண்டா"
     ஏறிய பின் இப்படியும் சில பேர் கேட்பார்!
போற்றியவர் குளறுபடிக்கொள்கையாலே
     புளுகுகின்ற படியாகிப்புழுதி வாரி
தூற்றிடுவார் பெரும்படியாய்! மாடி மீதில்
     தூக்கி விடும் மின் தூக்கி பழுதாய்ப் போனால்
மாற்று வழி சுழற்படி தானன்றோ? என்றும்
    மறவாதபடியிருப்போம் படிக்கட்டைத்தான்!
கரும்படி உன் சொல்லெனக்குக் காரிகையே,
    கண்டபடி உளறாதே! கடைக்கண் வீசித்
திரும்படி என் கன்னத்தில் இதழ் படிந்தே
    தித்திக்கும்படியாக படித்தேன் ஊறி
வரும்படியாய் முத்திரையும் தருவாய் என்றால்
    வளைவாயிற்படி வரைக்கும் வருவாள், செல்வாள்
" துரும்படி என் மாற்றாரின் பகைமையெல்லாம்!
     தூளாகும் படிமுறிப்பேன், பார் பார்" என்பான்!

ஆச்சரிய முத்து:

சமீபத்தில் எங்கள் தண்ணீர் தொட்டியில் அரையடி நீளத்தில் ஒரு பாம்பு நீச்சலடித்துக்கொண்டிருந்தது. தண்ணீரின் அளவைப்பார்க்க தொட்டியின் கதவைத்திறந்த என் கணவர் பாம்பைப்பார்த்ததும் அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக்கொண்டு வாளி, கம்பு, என்று ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பல முயற்சிகள் செய்தும் பாம்பை பிடிக்க முடியவில்லை.



மாடியில் வேலை செய்து கொண்டிருந்த கொத்தனாரை அழைத்ததும் அவர் கையாலேயே அதைப்பிடித்து கொஞ்சம் தூரம் சென்று அதை விட்டு விட்டு வந்தார். அதன் பெயர் செவிட்டு பாம்பாம். மனிதர்கள் காதில் புகுந்து கொண்டு ஒரு வழி பண்ணி விடுமாம். என் கணவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால் இப்படியொரு பாம்பைப்பற்றி கேள்விப்பட்டதில்லை என்றார்கள்! யாராவது இந்தப்பாம்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா?

அசத்தும் முத்து:






ஆட்டோமியம் என்ற இந்த கட்டிடம் பெல்ஜியத்தின் தலைநகரான Brussels-ல்  அமைந்துள்ளது. 1958ல் அங்கே உலகப்பொருட்காட்சி நடந்த போது அதற்கு சில வருடங்களுக்கு முன் நடந்த உலகப்போரில் அணுகுண்டுகள் ஜப்பானில் வீசப்பட்டதை ஒட்டி ‘ அணுவை’ மூலப்பொருளாக வைத்து இந்த கட்டிடத்தை வடிவமைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.  அதன்படி இதில் ஒன்பது கோளங்கள் சேர்க்கப்பட்டது. இது இரும்புத்தாதில் உள்ள 9 அணுக்களைக்குறிக்கும். ஒவ்வொரு அணுவும் பல கோடி மடங்கு பெரிதாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 60 அடி விட்டமுள்ளது. குழாய்கள் மூலம் இவற்றை இணைத்தனர்.

அணுகுண்டு ஜப்பானை அழித்ததால் இதைக்கட்டுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதாம். ஆனாலும் அணுவை ஆக்கப்பூர்வமாகக்காட்டவென்றே இதைக்கட்டுவதாக பெல்ஜியம் கூறி இதைக்கட்டியது. இதில் ஒரு கோளத்திலிருந்து இன்னொரு கோளத்திற்கு செல்ல எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோளமும் ஒவ்வொரு உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்டது. உயரத்தில் உள்ல கோளத்தில் அங்கிருந்தே ப்ரஸ்ஸல்ஸ் நகரை முழுவதும் பார்க்கும்படியாக உணவகம் அமைக்கப்பட்டிருக்கிறது.  மக்கள் தங்குவதற்கேற்ற அறைகள் இன்னொரு கோளத்தில் அமைக்கப்பட்டன. 120 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடம் கட்டி முடிக்க 3 வருட்ங்கள் தேவைப்பட்டன். கண் கவரும் ஒளி விளக்குகள் சுற்றுலாப்பயணிகளின் கவர்வதெற்கென்றே நிர்மாணிக்கப்பட்டுடுள்ளன.

இசை முத்து:

ரூபா ரேவதி ஒரு மலையாளி. சிறந்த பாடகி மட்டுமல்ல, அருமையாக வயலின் வாசிப்பவர். சமீபத்தில் வெளி வந்த ' பிகில்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளி வந்த‌ இனிமையான பாட்டான ' உனக்காகவே நான் வாழ்கிறேன் ' என்னும் பாடலை மயங்கும் வித்தத்தில் வாசித்திருக்கிறார். கேட்டு ரசியுங்கள்!


Tuesday, 7 July 2020

மறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்!!!

சிறு வயதில் அப்போதெல்லாம் வார இதழ்களான ஆனந்த விகடன், கல்கி,குமுதம், தினமணி கதிர் மற்றும் மாத இதழான கலைமகள் இதழ்களில்  சிறுகதைகளுக்கு பிரபல ஓவியர்கள் படம் வரைவார்கள். சிறுகதைகளின் வீரியம் புரியாத சின்னஞ்சிறு வயது. ஆனால் ஓவியங்களின் அழகின் தாக்கம் பாதித்தது. ஏகலைவனாய் நான் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தது அப்போது தான். எல்லா ஓவியர்களும் மனதை கொள்ளை கொண்டார்கள் என்றாலும் கல்கியின் ஓவியர் வினுவும் ஓவியர் நடராஜனும் என் மானசீக குருவானார்கள்.
அந்த கால ஓவியர்கள் சிலரின் ஓவியங்கள் இங்கே..உங்கள் பார்வைக்கு..

1.இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியர் நடராஜனின் ஓவியம்! ' கலைமகளிலும்' தீபாவளி மலர்களிலும் வண்ண ஓவியங்கள் நிறைய வரைந்திருக்கிறார். மற்ற வார இதழ்களில் இவரது ஓவியங்களை நான் கண்டதில்லை!
 

2. ஓவியர் வினு வரைந்த ஓவியம் இது!


3. ஓவியர் சிம்ஹாவின் ஓவியம். இவர் அறுபதுகளில் நிறைய விகடனில் வரைந்துள்ளார்.


4. ஓவியர் ராஜம் வழங்கிய ஓவியம் இது. நிறைய கோடுகளும் வித்தியாசமான வண்ணக்கலவைகளும் இவரின் ஓவியங்களில் நிரம்பியிருக்கும்!


5. இவர் ஓவியர் உமாபதி. நகைச்சுவைத்துணுக்குகள் வரைவதில் வல்லவர். இவர் இத்தனை அழகாய் வண்ண ஓவியம் வரைவாரா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்த ஓவியம்!



6. ஓவியர் ஸுபா வரைந்தது இது!


.  7. ஓவியர் கோபுலுவின் ஓவியம் இது! ஆனந்த விகடனின் மிகச்சிறந்த ஆஸ்தான ஓவியர் இவர். கோட்டு ஓவியங்கள் வரைவதில் வல்லவர். சன் டிவி, குங்குமம் வார இதழ் லோகோ இவர் வரைந்தது தான்!