Sunday 21 June 2020

தந்தையர் தினம்!!!

இன்று தந்தையர் தினம்!!எப்போதோ எங்கோ படித்ததை இங்கே பதிவிட்டிருக்கிறேன். இந்த வரிகளை விட நம்மையெல்லாம் காலம் காலமாக சுமக்கும் தந்தையர்களுக்கு அருமையான சமர்ப்பணம் வேறென்ன இருக்க முடியும்?இது அப்பாவை நேசிப்பவர்களுக்காக:

ஆணழகன் அப்பாவிற்கு அழத்தெரியாது!

குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும், பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய்த் தேய்ந்த போதும், என்னடா இது வாழ்க்கை இது என ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்.!

மனைவியை நெஞ்சில் சுமந்து, பிள்ளைகளை தோளில் சுமந்து, குடும்பப்பொறுப்புகளை தலையில் சுமந்து,
போகும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்ற போதும்,
தான் கலங்கி நின்றால் குடும்பம் உடைந்து விடும் என்று கல்லாய் நின்றவர்.

நாம் அவரை-கல்லென்றே நினைத்து விட்டோம் அதனால்!

அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
அப்பாவிடம் எட்டி நிற்போம்!

முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள் சொற்பம் என்போம்!
ஆனால் தோல்வியில் துவளும்போது பிடித்துக்கொள்ள அப்பாவின் கைகளைத்தான் முதலில் தேடுவோம்!

நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும் தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும் ஜீவன் அது!

நாம் தின்னும் சோறும், உடுத்தும் உடையும் படித்த படிப்பும் அப்பாவின் வேர்வையில் தான்!

நேரில் நம்மிடம் நாலு வார்த்தைகூட பேசாதவர்.
ஊர் முழுக்க நம்மைப்பற்றித்தான் பேசித்திரிவார்.

அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம் அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ?

நமக்கு மீசை முளைத்தால் அவர் குதூகலிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் அவரே உயரமானதாக உணர்வார்!

வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்க விட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!

நம் வாழ்க்கையின் பின்னால்-அப்பா எப்போதுமே இருப்பார்!
அப்பாவிற்கு பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாது!
அப்பாவிற்கு கொஞ்சத்தெரியாது!
அப்பாவிற்கு போலியாக இருக்கத்தெரியாது!
அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிகாட்டத் தெரியாது!
அப்பாவிற்கு தானக்காக எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளத்தெரியாது!

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த போதும்,
ஒரு வேளை சோற்றுக்காக மருமகளிடம் வேலைக்காரனாக  மாறிப்போன போதும்,
முதியோர் இல்லத்தில் தூக்கி வீசப்பட்ட போதும்,
அவர் அழுதவரில்லை!

நம் சந்தோஷத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!

பாசமோ, மன்னிப்போ, அழுகையோ, அவரிடம் உனர்வுகளை உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!

ஒரு வேளை உங்களின் நண்பனின் அப்பா மரணமோ அல்லது உங்கள் அப்பா வயதுடைய யாரோ ஒருவரின் மரணமோ உங்களைப்புரட்டிப்போட்டு, அவரின் பாசம் புரிந்து, அப்பாவைத்தேடி ஓடி வரும்போது,
வீட்டில் அப்பா சிரித்துக்கொண்டிருக்கலாம்-புகைப்படத்தில்!
பாவம்-அவருக்குத்தான் அழத்தெரியாதே!!**********************

இது சமீபத்தில் எனக்கு வந்த வாட்ஸ் அப் வீடியோ! சில மாத பிரிவிற்குப்பின் ஒன்று சேரும் அப்பாவும் மகளும் கண்ணீருடனும் சிரிப்புடனும் வார்த்தைகளே இல்லாத பிரியத்துடனும் அணைத்துக்கொண்டிருந்த இந்த காட்சி என் நெஞ்சைப்பிசைந்தது. நீங்களும் பாருங்கள்!

 

11 comments:

நெல்லைத் தமிழன் said...

இந்த தந்தையர் தினத்தை நினைவுகூறுகிறவர்கள் மகள்கள் மட்டும்தான்.

ஏதேனும் ஆண் பதிவர் இதைப்பற்றி எழுதியிருக்காங்களான்னு தெரியலை.

காணொளி ஏற்கனவே பார்த்திருக்கேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் உண்மைகள்...

காணொளி பார்த்து அழுகை வந்து விட்டது...

என்னதான் இருந்தாலும், தனது குழந்தைகளைப் போலவே துணையையும், பலவற்றில் நன்முறையாக மாற்றுவது தாய் தான்...

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட பதிவு.

காணொளி - எனக்கும் வந்திருந்தது. வார்த்தைகளே தேவையில்லாது போகும் நேரம் இது போன்ற நேரம்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பதிவு. காணொளி நெகிழ்த்தியது. தந்தையர் தினத்திற்கான பதிவும் அருமை

துளசிதரன்

கீதா

வல்லிசிம்ஹன் said...

நம் வாழ்க்கையின் பின்னால்-அப்பா எப்போதுமே இருப்பார்!
அப்பாவிற்கு பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாது!
அப்பாவிற்கு கொஞ்சத்தெரியாது!
அப்பாவிற்கு போலியாக இருக்கத்தெரியாது!
அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிகாட்டத் தெரியாது!
அப்பாவிற்கு தானக்காக எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளத்தெரியாது!//////
அன்பு மனோ,
உள்ளம் உருகுகிறது உங்கள் பதிவில். என் அப்பா,
என் கணவரை உங்கள் எழுத்தில்.
என் தம்பிகளை உங்கள் எழுத்தில் கண்டு கண்ணீர்
வந்தது. நன்றி மனோ.

வல்லிசிம்ஹன் said...

காணொளி!!!இது என்ன பாசப்பிணைப்பு. கலங்கி விட்டேன்.

Unknown said...

நல்ல பதிவு. இந்த வீடியோ எனக்கும் வாட்ஸாப்பில் வந்தது. மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ. 

koilpillai said...

அந்த பாச பார்வைகளின் சங்கமத்தை ,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த எந்தப்புலவனும் வர்ணிக்க வார்த்தைகள் தேடி அலைவான். கண்ணீர் துளிகளுக்கிடையில் காணொளி பார்க்க நேர்ந்தது, மகளே! இறுதிவரை அப்பாவை மறவாதே.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!
ஒரு ஆண் வெளியிட்டிருக்கும் ' தந்தையர் தினப்பதிவு இது!
https://nusrathsaleem.blogspot.com/2020/06/blog-post_20.html

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் தனபாலன்! அன்பு நன்றி!
காணொலி என்னையும் மிகவும் பாதித்து விட்டது!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கீதா/துளசிதரன்!