Saturday 6 June 2020

உன் உயிர் உன் கையில்!

சில நாட்களுக்கு முன் மருத்துவர் அமுதகுமார் எழுதிய ' பயனுள்ள மருத்துவ செய்திகள்' என்ற புத்தகம் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு அத்தியாயத்தின் பெயர் " போலி மருந்துகளை தவிர்க்கும் வழி ". அதைப்படித்த போது ஒரு சுவாரஸ்யமான செய்தியை அறிய முடிந்தது.

இந்தப்புத்தகம் 2004ல் எழுதப்பட்டிருக்கிறது. ' போலி மருந்துகளையும் போலி மருந்துகள் தயாரிப்பவர்களையும் தரக்குறைவான மருந்துகளையும் கண்டு பிடிக்க வழியில்லாததால் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்களின் தேக ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருக்கிறது ' என்று ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார மையத்தின் மருந்துகள் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் லெம்பிட் ராக்கோ கூறியுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். 15 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட புத்தகம் இது. அப்போதே போலி மருந்துகளின் பரவலை தடுக்க முடியவில்லை என்னும்போது, இப்போதைய நிலைமைஎப்படியிருக்கிறது? என்னவென்று தெரியவில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மலேரியா நோய்க்கு உலகெங்கும் கொடுக்கப்படும் ' குளோரோகுயின்' மாத்திரைகளுக்காக டிரம்ப் நம் பிரதமர் மோடியிடம் முதலில் யாசித்து, பின் பயமுறுத்தி தனக்கு இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வைத்தார். கொரோனா வாராமல் தடுப்பதற்காக ஏராளமானவர்கள் மருத்துவருடைய சீட்டு இல்லாமல் குளோரோகுயின் மாத்திரைகள் உட்கொண்டதை நானே பார்த்திருக்கிறேன்.
இந்த மருத்துவர் அதே குளோரோ குயின் மாத்திரைகள் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உலகெங்கும் மலேரியா நோயினால் சுமார் 30 கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக கொடுக்கப்படும் குளோரோகுயின் மாத்திரைகள் மிகவும் கசப்புத்தன்மை உடையவை என்றும் போலி மருந்துகள் தயாரிப்பவர்கள் இந்த கசப்பு கொடுப்பதற்காக வேறு ஏதேதோ சேர்ப்பதாகவும் 200 மில்லி கிராம் குளோரோகுயின் சேர்க்க வேண்டியதற்கு பதில் வெறும் 41 மில்லி கிராம் குளோரோகுயின் மருந்தை சேர்த்து மாத்திரைகள் தயாரித்து மார்க்கெட்டில் விற்று விடுகிறார்கள் என்று சொல்லியிருப்பதைப்படிக்கும்போது பகீரென்கிறது.

காலாவதியான மருந்தை சாப்பிட்ட ஒருவர் எந்த அளவு உயிருக்கு போராடினார் என்பதை, 2011 ல் பதிவிட்டிருந்தேன். அதை மீள் பதிவாக இங்கே மறுபடியும் போடுவது எல்லோருக்கும் உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

இதோ அந்த மீள் பதிவு:

உன் உயிர் உன் கையில் !!!

வீட்டிலுள்ள என் சிறிய நூலகத்தில் பழைய நாவல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தற்செயலாக பழைய வார இதழ்த் தொகுப்பு ஒன்றில் இந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது. மருத்துவ உலகத்தில் எத்தனை எத்தனையோ புரட்சிகள், புதிய கன்டு பிடிப்புகள் என்று தினம் தினம் ஏற்பட்டுக்கொன்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தி எனக்கு மிகவும் புதிய செய்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற உண்மை சம்பவம் இது. இந்த சிகிச்சை இன்னும் நடைமுறையில் இருக்கிறதா, இந்த சிகிச்சையில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. யாராவது ஒரு மருத்துவர் இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். மயிர்க்கூச்செரியும் இந்த அனுபவத்தை நான் இங்கே என் அன்புத் தோழமைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். எந்த வியாதியும் துன்பமும் வெறும் நிவாரணங்களினால் மட்டும் தீர்ந்து விடாது. அதற்கு மேல் மனதில் தைரியமும் தளராத நம்பிக்கையும் இருக்க வேன்டும். அப்போதுதான் துன்பங்களையும் வியாதியையும் எதிர்த்து ஒரு மனிதனால் போராட முடியும். அப்படி போராடிய மனிதன் கதை இது.

1985ம் வருடம் நடந்த கதை இது. இவர் பெயர் காந்தி சாமுண்டீஸ்வரன். இளைஞர். ஒரு புத்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் ஆட்டோ விபத்தில் சிக்கி, தோள் சதை பிய்ந்து மருத்தவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சைக்ள் செய்தும் காயங்கள் ஆறாமல் இருக்கவே, பல்வேறு சோதனைகளின் முடிவில் மருத்துவர்கள் அவருக்கு ' பிளாஸ்டிக் அனிமியா' இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய 'பிளேட்லெட் ' ரத்த அணுக்கள் அவருக்கு மிகவும் குறைவாக இருந்தன. சராசரியாக ஒரு கனமில்லி மீட்டரில் இருக்க வேன்டிய 1.5 லட்சம் பிளேட்லெட்டுக்களுக்கு பதிலாக சுமார் 35000 தான் இருந்தன. ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜையும் இறுகி விட்டது. பல வித சிகிச்சைகள் அளித்தும் சரியான பலன் அளிக்காமல் மீதமிருக்கிற ஒரே ஒரு வழியைத்தான் மருத்துவ நிர்வாகம் அவருக்குச் சொன்னது.

20 நாட்களுக்கு ஒரு முறை அவர் இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. காந்திக்கு ரத்தம் ஏற்றிக்கொள்வது வழக்கமாகிப் போனது. உடலில் ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் குறையும்போது,கண்கள் இருண்டு மயங்கி கீழே விழுவார்.பிறகு மருத்துவமனையில் கண் விழிப்பார். யாராவது ரத்தம் ஏற்றிக்கொண்  டிருப்பார்கள். இதற்கு தீர்வும் முறையான சிகிச்சையும் கிடையவே கிடையாதா எனப் பார்க்காத மருத்துவமும் தேடாத மருத்துவரும் எதுவுமே இல்லாமல் போயின. கடைசியில் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையின் குருதியல் துறை மருத்துவர், டாக்டர் மாமன் சான்டி, ஒரு மருந்து இருப்பதாகச் சொன்னார். 'இந்த மருந்துக்கு நோய் தீர்க்கும் உறுதி 50 சதவிகிதம்தான் என்பதையும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதையும் மருந்து வெளி நாட்டிலிருந்துதான் தருவிக்க வேண்டுமென்பதையும் சொன்னார்.

குதிரையின் சீரம்தான் அது!




காந்திக்கு வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. மருந்து பற்றி விசாரித்தபோது, அது அன்றைய தேதியில் 1700 டாலர்கள் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே கைக்கு மீறிய செலவுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்க்கு நண்பர்கள், தந்தை, புத்தக வெளியீட்டார்கள் என்று பலரும் உதவினார்கள். மருந்தும் ஒரு விமானி மூலம் தில்லி வந்து சேர்ந்தது. ஆனால் அதை வெளியில் எடுத்து வர போராடினார்கள். சுங்க வரி 24% கட்ட வேண்டும் என்றார்கள். இங்கிலாந்து மருத்துவர்களும் இந்திய மருத்துவர்களும் அது உயிர் காக்கும் மருந்து என்று சான்று கூறினாலும் அரசின் உயிர் காப்பு மருந்துப்பட்டியலில் லிம்ப்போகுளோபின் என்ற இந்த மருந்து இல்லை. ஒரு மத்திய அமைச்சர் உதவியுடன், உத்தரவாதம் அளித்து படாத பாடுபட்டு மருந்தை வெளியில் கொன்டு வந்தார்கள்.

அந்த மருந்து இந்தியாவிற்கும் புதிது. மருத்துவர்களுடன் சேர்ந்து காந்தியும் அந்த மானுவல் புத்தகத்தைப் படித்தார்.
இந்த மருந்தில் ஒரு மில்லி மீட்டர் அளவு எடுத்து ஒரு பாட்டில் சலைனில் கலந்து முதலில் பரிசோதனைக்காக செலுத்த வேண்டும். செலுத்திய சிறிது நேரத்தில் தலைமுடி, உடலிலுள்ள முடிகள் விறைக்கும்.பயங்கரமாக உடல் அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வரும். கடுமையாகக் குளிரும். குதிரையின் சீரத்தை உடம்பு ஏற்றுக்கொண்டதும் மீண்டும் உடலில் வெப்பம் கூடி, நாடித்துடிப்பு சீரான நிலைமைக்கு வரும். அதன் பின் நாள்தோறும் 5 எம்.எல் மருந்து செலுத்த வேண்டும்.

காந்திக்கு இது எப்படியும் முடியலாம் என்று புரிந்தது. 'எனக்கொரு ஆசை. நான் என் இதயத்துடிப்பை கண்ணால் பார்த்துக்கொன்டே இருக்க வேன்டும்' என்றார். அவரது ஆசையை ஒத்துக்கொண்ட டாக்டர் மாமன் சாண்டி அவர் அருகில் ஒரு மானிட்டரை வைக்க ஏற்பாடு செய்தார். நர்ஸ் அதைப்பற்றி விளக்கிச் சென்றார்.

அவர் கூறியவை காந்தியின் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

" பாருங்க, இந்த மானிட்டரில் உங்க இதயத்துடிப்பின் கிராஃபிக் தெரியும். எழுபது இருந்தா நார்மல். மருந்து சாம்பிள் டெஸ்டில் பல்ஸ் 40க்கு கீழே இறங்கும். அதுக்கும் கீழே போனால் மூச்சு திணறும். கீழே நேர்க்கோடாகி விட்டதுன்னா கொஞ்ச தூரம் அப்படியே போய் புள்ளியா நின்னுடும், அவ்வளவு தான்"

காந்திக்கு அந்த மருத்து மனை முழுவதும் ஒரு நண்பர் கூட்டமே இருந்தது. அவரது தந்தையின் பல்கலைக் கழகப்பணியால், வேளாண்மை மருத்து மாணவர்கள் நிறைய பேர் புதிதாய் ரத்தம் கொடுக்கக் காத்திருந்தார்கள். மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு ரத்த அணுக்கள் உடலில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் அவர் வைக்கப்படார். மருத்துவ மனை முகப்பிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. காந்தியுடன் அவரைப்போலவே நோய் கொண்ட 42 வயது, 25 வயது ஆண்கள், 12 வயது சிறுமி என்று மூன்று பேர் இந்த சாம்பிள் டெஸ்டிற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள். காந்திக்காக வரவழைக்கப்பட்ட மருந்தில் பரிசோதனைக்காக தயாரானார்கள்.

குதிரையின் சீரம் கலக்கப்பட்ட சலைன் காந்தியின் உடலில் செலுத்தப்பட்டது. என்னென்ன நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்ததோ, அத்தனையும் நடக்க வேண்டும்னெறு மனசு பிரார்த்தனை செய்தது. உடல் அணுக்களிலெல்லாம் இந்த மருந்தை ஏற்றுக்கொள் என்று மனசு கெஞ்சி அலைந்தது.

சிறிது நேரத்தில் முடி ஜிவ்வென்று விறைத்து குத்திட்டு நின்றது. காந்தி சந்தோஷம் தாங்காமல் விறைத்து நின்ற முடியைத் தடவினார்.

பக்கத்தில் படுத்திருந்த 12 வயது சிறுமிக்கு மருந்தின் எதிர் விளைவால் கண், காதுகளில் உள்ள சிறு சிறு நரம்புகள் உடைந்து ரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்பட, அவளை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

காந்திக்கு அரிப்பு ஏற்பட்டதும் கைகள் கட்டப்பட்டன. குளிர் எடுத்ததும் உடலில் போர்வைகள் போர்த்தப்பட்டன. 
இதயத்துடிப்பு குறைய ஆரம்பித்ததும் மூச்சுத் திணறல் ஆரம்பித்தது. மார்புக்குள்ளே ஒரு வெற்றிடம் அழுத்திப்பிடிக்க ஆரம்பித்ததும், காந்தியின் மனது ' எப்படியாவது உயிர் வாழ வேண்டும்' என்று தொடர்ந்து புலம்ப ஆரம்பித்தது.

சில விநாடிகளில் அவரின் மூச்சுத் திணறல் குறையத் தொடங்கி உடலின் வெப்பம் கூட ஆரம்பித்தது. அருகிலிருந்த 25 வயது வாலிபர் கண் திறக்காமலேயே இறந்து போனார். அவர் பக்கத்தில் படுத்திருந்த 45 வயது ஆண்மகன் இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அங்கிருந்து நடந்தே தன் படுக்கைக்கு வந்ததும் அனைவரது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் மூன்றாம் நாள் இறந்து போனார்.

காந்தியின் உயிராசை மட்டும் நிலைத்தது. அதன் பின் தொடர்ந்து ஒரு வாரம் 5 எம்.எல் மருந்து அவரது உடலில் செலுத்தப்பட்டது.

இதற்குப்பிறகு தான் க்ளைமாக்ஸே இருக்கிறது. அவரின் உடல் நிலையில் பல சோதனைகள் நடத்திய டாக்டர் மாமன் சாண்டி, காந்தியின் எலும்பு மஜ்ஜையில் ஒரு ஆண்டி பயாடிக் மருந்தின் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார். கடந்த சில வருடங்களில் அவர் என்னென்ன மருந்துகள் சாப்பிட்டார் என்பது குறித்து காந்தியிடம் விசாரித்தார். எப்போதாவது சளி பிடிக்கும்போதெல்லாம் தானே மருந்துக்கடையில் ஏதேனும் ஆண்டி பயாடிக் மருந்து வாங்கி சாப்பிட்டதாக காந்தி சொன்னார். கடைசியாக எப்போது அது போல ஆண்டி பயாடிக் மருந்து சாப்பிட்டீர்கள் என்று நினைவு படுத்திப்பாருங்கள் என்று டாக்டர் தொடர்ந்து வற்புறுத்தவே, நினைவுகளைக் குடைந்ததில் கடைசியாக காந்திக்கு, தான் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு ஓடுகிற அவசரத்தில், ஒரு மருந்துக் கடையில் தான் கேட்ட மருந்து இல்லாததால் ஏதோ ஒரு ஆண்டி பயாடிக் மருந்து கொடுங்கள் என்று வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளைக் காட்டி இதுவா, அதுவா என்று டாக்டர் விசாரிக்க, கடைசியில் காந்தி சாப்பிட்ட மருந்தை கண்டு பிடித்தார் டாக்டர் மாமன் சாண்டி. அந்த மருந்தையும் எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்டிருந்த வீழ்படிவையும் பரிசோதித்துப்பார்த்ததில் காலம் முடிந்து போன அந்த மருந்தைச் சாப்பிட்டதுதான் காந்தியின் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்பதை டாக்டர் கண்டறிந்தார். தகுந்த சான்றுகள் இலாததால் அவரால் நுகர்வோர் கோர்ட்டில் இது குறித்து வழக்கு போட முடியவில்லை.

அவர் மருத்துவ மனையை விட்டு வெளியேறும்போது, மருத்துவர்கள் அவர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்றும் குழந்தைகள் பிறப்பது அதைவிட நல்லதல்ல என்றும் எச்சரித்தார்கள்.குழந்தை பிறந்தால் அது மூளை வளர்ச்சியற்றுத் தான் பிறக்கும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் அதற்கு முன்பே திருமணம் செய்திருந்த காந்திக்கு, குறைகள் ஏதுமற்ற அழகான குழந்தையே பிறந்தது.

கோவையில் புத்தக வெளியீட்டு நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் இவர் 18 வருடங்கள் முன் சொன்னது.

" இப்போது என் உடலில் 1.55 லட்சம் பிளேட்லெட்டுக்கள் உள்ளன. என்னுள் இருக்கும் குதிரையின் சீரம் ஒரு குதிரையைப்போலவே என்னைக் களைப்பிலாமல் உழைக்க வைக்கிறது"!

மிகவும் ஆபத்தான நிலையில் உயிர் வாழ்ந்த இவர், அதையும் விட பல மடங்கு ஆபத்தான சிகிச்சை முறையை எடுத்துக்கொண்டது இவரது மன உறுதியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய நடைமுறை உலகில் அவசரத்திற்குக்கூட மருத்துவரிடம் செல்லப் பொறுமையில்லாமல் ஒரு மருந்துக்கடை சென்று கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுபவர்கள் ஏராளம். இப்படி சாப்பிடுவது எந்த அளவு தீவிரமாக உயிரைப் பாதிக்கும் என்று இதைப்படித்த பிறகாவது சிலராவது உணர வேண்டுமென்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். எல்லோருக்கும் டாக்டர் மாமன் சாண்டி போன்ற அருமையான மருத்துவர் கிடைத்து விட மாட்டார்.

நம் உயிர் நம் கையில்தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது!




33 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மாத்திரையால் எத்தனை பின் விளைவுகள்....

குதிரையின் சீரம் - அப்பாடி - என்னென்ன விளைவுகள். படிக்கும்போதே பதறியது.

நெல்லைத் தமிழன் said...

நிறைய அறியாத செய்திகளைச் சொல்கிறது இந்த இடுகை.

வடநாட்டிலிருந்து இரயிலில் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஒரு ஸ்டேஷனில் (அது ஹால்திராம் ஃபேக்டரி இருக்கும் ஊர். அங்குதான் சோன்பப்டி முதலான இனிப்புகளும் தயாராகும்) 'அந்த ஊர் ஸ்டேஷன் தானே' என்று சோன்பப்டி பாக்கெட் வாங்கினேன். ஊருக்கு வந்த பிறகுதான் அது காலாவதியான சரக்கு என்பதைப் பார்க்க நேர்ந்தது.

உணவிலேயே காலாவதி என்றால் தூக்கிப்போட்டுவிடலாம். உயிர் காக்கும் மருந்துகளில் கலப்படமோ, காலாவதியானைதை புதிய தேதியிட்டு விற்றாலோ... நமக்கு என்ன ஆகும்?

முக்கியமான விஷயத்தை மீள் பதிவு செய்தது நன்று.

நெல்லைத் தமிழன் said...

ஏற்கனவே, பார்மசி இண்டஸ்டிரில, 10 ரூபாய் பெறுமானமுள்ள மருந்தை 150 ரூபாய்க்கு விற்கிறாங்கன்னு சொல்றாங்க. இதுல கலப்படமும் சேர்ந்ததுனா, பயன்படுத்துபவர்கள் பாடுதான் திண்டாட்டம். ப்ரெஷர் போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு உருப்படியான மருந்துகளை ரொம்ப செக் பண்ணித்தான் வாங்கணும் போல.

Yarlpavanan said...

தன் (சுய) மருத்துவம்
தனக்கே கேடு தரும்

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்வது உண்மை தான்... இனி அனைத்தும் நம் கையில் தான்...

குளோரோகுயின் மாத்திரைகள் தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது...

துரை செல்வராஜூ said...

படிக்கும்போதே நடுக்கம் ஏற்படுகின்றது...

நோயில்லா வாழ்வு வாழவேண்டும் -
என்றார் வள்ளலார் ஸ்வாமிகள்...

விதி வசத்தால் நோய் வாய்ப்பட்டாலும்
நவீன மருத்துவத்திடம் இருந்து தப்பித்துவிட வேண்டும்...

கழுபிணி இலாத நலம்
அருள்வாய் அபிராமவல்லி!..

ஸ்ரீராம். said...

உயிருடன் விளையாடுகிறார்கள்.  என்ன ஒரு அபாய வியாபாரம்.  காசு ஒன்றுதான் குறியா?

கோமதி அரசு said...

நிறைய பயனுள்ள தகவல்கள்.
நன்றி பகிர்வுக்கு.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்! 2011ல் இந்தப் பதிவை வெளியிட்டபோது பின்னூட்டம் அளித்த அனைவரையும் இப்போது காணமுடியவில்லை. நீங்களும் அந்தப் பின்னூட்டங்களில் இருந்தீர்கள். மறுபடியும் இதே பதிவிற்கு நீங்கள் பின்னூட்டம் அளிப்பதைக்காணும்போது மகிழ்வாக இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டம் அளித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் நெல்லைத்தமிழன்!
சொன்னால் நம்ப மாட்டீர்கள். என் உறவினரும் ஒரு மருத்துவர் தான். அவரிடம் பரிசோதனை செய்து கிளம்பும்போது மருந்தும் கொடுத்தார். பார்த்தால் அதுவும் காலாவதியான மருந்து. உடனேயே அவரிடமே சொன்னோம். அவர் எந்த வித அதிர்ச்சிக்கும் ஆளாகாமல் ' அப்படியா' என்று பார்த்து விட்டு, அதை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வேறொரு மருந்தைக்கொடுத்தனுப்பினார்!!!!

மனோ சாமிநாதன் said...

அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் சகோதரர் துரை செல்வராஜ்! முதலில் மருத்துவர் நமக்கு நல்லவராய் அமைய வேண்டும்! அப்படியே அமைந்தாலும் நாமும் கண்களையும் செவிகளையும் விழிப்புடன் வைத்திருக்க வேண்டும்!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இந்தக் கேள்வி தான் இப்போதைய விடை தெரியாத கேள்வி சகோதரர் ஸ்ரீராம்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
ஆண்டி பயாடிக் எப்பொழுதும் எனக்கு ஒத்துக் கொள்ளாது.
உங்கள் இடுகையைப் பார்த்த பிறகு என் எண்ணம் மேலும்
உறுதிப் பட்டது.
குதிரையின் சீரம் எப்படி எடுப்பார்களோ.

2011இல் வெளியிட்ட பதிவாக இருந்தாலும்
இப்பொழுதும் உபயோகப் படும் எழுத்து.
நம் ஊர் இன்னும் மாறவில்லை.
வைத்தியரிடம் செல்லாத ஏழை மக்கள் டாப் ஆஃப் த கௌண்டரில்
மருந்து வாங்கி சாப்பிடுவதை நிறையப்
பார்த்திருக்கிறேன்.
போலி மருத்துவர், போலி மருந்து...பயமாகத்தான் இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைக் கோரும் பகிர்வு. 9 ஆண்டுகளில் எதுவும் மாறவில்லை. காலாவதி மருத்துகளால் எவ்வளவு பின்விளைவுகள்!! காந்தியின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

priyasaki said...

நிறைய தகவல்கள்.படிக்கும்போதே பயமாக இருக்கிறது. புதிய விடயங்களும் விழிப்புணர்வு மிக்க பதிவு அக்கா.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் உபயோகமான பதிவு. காலாவதியான மருந்துகளை பயன்படுத்துவதால் ஏர்படும் வபரீதங்கள் அச்சமூட்டுகின்றன. நன்றி

நெல்லைத் தமிழன் said...

இந்த இடுகைக்கான பின்னூட்டமாக என் அனுபவத்தைச் சொல்லலாம்.

நான் பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு விடுமுறைக்கு வந்தபோது ப்ரஷருக்காக, தற்போது எடுக்கும் மாத்திரை, அதுல மாறுதல் வேணுமா என்றெல்லாம் ஒரு புகழ் பெற்ற இதயநோய் நிபுணரிடம் கன்சல்ட் செய்தேன். ட்ரெட்மில் டெஸ்ட் போன்றவற்றை எடுத்துவிட்டு அவர் ஹை டோசேஜ் சிபாரிசு செய்தார். அதனையே வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தேன். ஆறு மாதத்துக்குள் லோ பிபி பிரச்சனை அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது. அப்புறம் இன்னொரு டாக்டரிடம் செக் செய்தபோது, உங்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை, சாதாரண மாத்திரை போதும் என்று அதனை ரெக்கெமெண்ட் செய்தார். அதையே தொடர்ந்து, இப்போது பிபி பிரச்சனை அவ்வளவு இல்லாமல் இருக்கேன். பொதுவா பெரிய டாக்டர்கள், சட் என ஹை டோஸேஜ் சிபாரிசு செய்து பிரச்சனையை அமுக்க நினைக்கிறார்கள். ஹை டோஸேஜ் என்பது, பிரச்சனையைத் தீர்க்காது, தீர்த்த மாதிரி காண்பிக்கும். எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை கன்சல்ட் செய்வது நல்லது, அதைவிட, சாதாரண கிளினிக் வைத்திருக்கும் அனுபவஸ்தரிடம் கன்சல்ட் செய்வது இன்னும் நல்லது.

மாதேவி said...

'உன் உயிர் உன் கையில்' விழிப்புணர்வு பகிர்வு.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பதிவு ச்கோதரி. நிறைய நல்ல மருத்துவத் தகவல்கள். விழிப்புணர்வுப் பத்வும் கூட.

துளசிதரன்

மனோ அக்கா குதிரையின் சீரம் ப்ளேட்லெட்ஸ் க்கு கொடுக்கும் போது ஏற்படும் அந்த விளைவுகள், கூடவே அருகில் மூன்று பேர் ஒப்புக் கொண்டு உயிர் பிரிந்தமை...அப்படியென்றால் அது எல்லாருக்கும் ஏற்காது போல. காந்திக்கு எப்படியோ எற்று நல்லபடியாகக் குழந்தையும் பிறந்து இப்போது ப்ளேட்லெட்ஸ் கவுன்ட்ஸ் நார்மலாக இருந்து ஹப்பா எவ்வளவு போராட்டம்.

காலாவதியான மருந்தினால் ஏற்படும் விளைவுகள் ஆம் இங்கு பலரும் மருத்துவரிடம் போகாமலேயே மருந்துக் கடையில் போய் வாங்குகிறார்கள் தான். அதற்கும் சட்டம் வலுவாக இருந்தால் நல்லது.

நல்ல விழிப்புணர்வு பதிவு தகவல் உட்பட

கீதா

இராய செல்லப்பா said...

விழிப்புணர்வை ஊட்டும் பதிவு. நாம் என்னதான் முயன்றாலும் டாக்டர்கள் தங்கள் தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிக்காவிட்டால் நமது விதியை நொந்துகொள்வதைத் தவிர வேறென்ன செய்வது? ஒரு டாக்டர் கொடுத்த hi-dosage மாத்திரைகளை உரிய பரிசொதனைகளுக்குப் பின்னும் low-dosage ஆக மாற்றித்தர வெறெந்த டாக்டரும் முன்வருவதில்லை. ஏன், அதே டாக்டர் கூட ஒத்துழைப்பதில்லை.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வல்லிசிம்ஹன்!
இது 30 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு. இப்போது குதிரையின் ஸீரம் தாராளமாகவே கிடைக்கிறதாம்

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

மனோ சாமிநாதன் said...

மறுபடியும் வந்து பின்னூட்டமிட்டதற்கு இனிய நன்றி நெல்லைத்தமிழன்!
எப்போதும் அனுபவம்தான் நல்ல படிப்பினைகளைத்தருகின்றது!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மாதேவி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி கீதா/துளசிதரன்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நலமாஅம்மா நான் நீண்ட நாள் வலைப்பக்கம் வந்து இனி தொடர்வேன்...

நன்றி
அன்புடன்
ரூபன்

மனோ சாமிநாதன் said...

நெடு நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!

srikanth said...

This is really epic. This has taught many lessons unyielding efforts, faith can move mountains, always look for some other way to tackle problems, if present methods don't work.