Friday 21 February 2020

சர்க்கரை நோய்க்கான உணவு முறை- பகுதி-3


இதுவரை மதியம் உணவு வரை சர்க்கரை நோய்க்கான உணவு முறைகளை எழுதியிருந்தேன். இனி இரவில் என்னென்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் வாரம் ஒரு முறை தயிர் வடை சாப்பிடலாம் [ இரண்டு வடைகளை தயிரில் மூழ்கடித்து ] சாப்பிடலாம் என்று சொன்னார். காராமணி, கருப்புக்கொண்டகடலை,முழுப்பயிறு இவைகளை ஊறவைத்து முளைகட்ட வைத்து உப்பு, தண்ணீர் தெளித்து ஆவியில் வேக வைத்து அல்லது குறைந்த நீரில் இலேசான வேக்காடு வைத்து நீரெல்லாம் சுண்டியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து ஒரு கிண்ணம் சாப்பிடலாம். கூடவே ஒரு சிறிய ஆரஞ்சுப்பழம் அல்லது பாதி ஆப்பிள் பழம் சாப்பிடலாம். வயிறும் நிரம்புவதுடன் சத்தான ஆகாரமும்கூட! மாவுச்சத்து இல்லாததால் உடல் இலேசாக இருப்பதை உணர முடியும்.
கொள்ளு அல்லது பாசிப்பயிறு கால் கப், கோதுமை ரவா கால் கப் என்று சம அளவில் எடுத்து வெங்காயம் தக்காளி சீரகம் பூண்டுப்பற்கள் மல்லித்தழை சேர்த்து கஞ்சி செய்து தேங்காய்த்துருவல் அல்லது சிறிது தேங்காப்பால் சேர்த்து கஞ்சி குடிக்கலாம்.
முன்பு எழுதியிருந்த கீன்வா விதைகளை சாலட் அல்லது தக்காளி சாதம் போல செய்து சாப்பிடலாம். அதன் செய்முறைகளை கீழே எழுதுகிறேன்.
கீன்வா தக்காளி சாதம்:

அரை கப் கீன்வாவை 1 கப் நீர், ¼ ஸ்பூன் எண்ணெயில் சமைக்கவும். 1 மே.க எண்ணெயில் ஒரு கிராம்பு, ஒரு சிறு துண்டு பட்டை தாளித்து 1 மே.க நறுக்கிய பூண்டு, 1 வெங்காயம், 2 தக்காளி 1 பச்சை மிளகாய் வதக்கவும். 1/2 ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து நன்கு குழைய வதக்கி கீன்வாவை சேர்த்து மல்லி சேர்த்து கிளறவும். 
கீன்வா சாலட்:
இது கீன்வா சேர்க்காத கொண்டக்கடலை காய்கறி சாலட்
பொதுவாய் இந்த கீன்வாவை நான் முன்பே சொன்னபடி சமைத்து இலேசாக உப்பு எண்ணெய் சேர்த்து கெட்டியானதும் ஆற வைத்து ஃபிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். இதில் எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்து காரட் வெள்ளரி வெங்காய்த்துண்டுகள் வேக வைத்த கொண்டக்கடலை சிறிது 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் தேவையான உப்பு எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் கலந்து உண்ணலாம். தயிர் சாலட் செய்ய வேண்டுமென்றால் கீன்வா கால் கப் எடுத்து போதிய தயிரில் கலந்து அதில் சில மாதுளை முத்துக்களை சேர்க்கவும். சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு வேர்க்கடலை பொட்டுக்கடலை தலா ஒரு ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தக்காளியைப்பொடியாய் அரிந்து போட்டு  துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அதையும் வதக்கிக்கொட்டவும். எல்லாம் நன்றாக கலக்கவும். இதுவும் ஒரு முழு உணவிற்கு சமமானது.
பயிறு ஓட்ஸ் கலந்து பணியாரம் செய்து சாப்பிடலாம். அரிசி அல்லது கோதுமை அதிகம் சேர்க்காமல் எண்ணற்ற சமையல் குறிப்புகள் கிடைக்கின்றன. நமக்கு வேண்டியதெல்லாம் ஆர்வம் மட்டும்தான்.
சகோதரர் தனபாலன் கால் மதமதப்பு பற்றி கேட்டிருந்தார். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நாளடைவில் வரும் பிரச்சினை இது. சில சமயம் இது சர்க்கரை நோயால் தான் என்று நினைத்து அசட்டையாக விட்டிருப்போம். கால்களில் வரிகோஸ் என்ற நரம்பு பிரச்சினையினாலும் இந்த மதமதப்பு ஏற்படும். அதனால் முதலில் இந்த மதமதப்பு எதனால் வந்திருக்கிறது என்பதை ஒரு மருத்துவரிடம் சென்று தான் கண்டு பிடிக்க வேண்டும்.. ஒரு வஸ்குலர் சர்ஜன் நம் நரம்புகளில் வரிகோஸ் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டு பிடித்து அதற்கான தீர்வும் சொல்வார்.
சர்க்கரை என்றாலும் வரிகோஸ் என்றாலும் கால்களில் மதமதப்பு குறைய நல்ல மூலிகை எண்ணெய் தேய்ப்பதிலும் முறையான யோகப்பயிற்சி மருத்துவர்களிடம் அதற்கான பயிற்சிகளைக்கற்றுக்கொள்வதிலும் சில நல்ல ஹோமியோபதி மருத்துவத்திலும் அக்குபங்க்ச்சர் மருத்துவத்திலும் நிறைய வாய்ப்பிருக்கின்றன. முயற்சி செய்து பாருங்கள் சகோதரர் தனபாலன்.
இந்த பதிவுகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவியாய் இருந்தால் அதுவே இந்தப்பதிவுகளை எழுதியதற்கான பலன் என்று நம்புகிறேன்.



17 comments:

ஸ்ரீராம். said...

தான் பெறும் பயன் தேவையானவர்களுக்கு உதவும் என்கிற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் பகிர்வு.   நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இதைப்பற்றி சரியாக கணிக்க எந்த மருத்துவரும் இல்லையோ என்று தோன்றுகிறது... கோவையில் உள்ள ஒரு மருத்துவர் ஓரளவு என்ன பிரச்சனை என்பதை கூறினார்...

ஆறு மாதமாக செய்து கொள்வது : இஞ்சி எண்ணெய்யை காலில் தேய்த்து கொள்வதால், sciatic நரம்பு மாறும் என்று நம்பிக்கை... ஆனால் amazon-ல் மட்டும் அப்படி ஏதோ விற்கிறார்கள்... எங்கள் ஊரில் இல்லை... இங்குள்ள காந்தி கிராம மருந்துக்கடையில், சுக்கு எண்ணெய் கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டு வருகிறேன்...

குறிப்பு : கடந்த 2 வருடங்களாக தான் இந்த பிரச்சனை அம்மா... இனிப்பானவன் என்பதால், இனிப்பு இணைப்பாக வந்து 25 வருடங்கள் ஓடி விட்டது...!

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்

கோமதி அரசு said...

//சர்க்கரை என்றாலும் வரிகோஸ் என்றாலும் கால்களில் மதமதப்பு குறைய நல்ல மூலிகை எண்ணெய் தேய்ப்பதிலும் முறையான யோகப்பயிற்சி//

உண்மை. நன்றாக சொன்னீர்கள். மனவளக்கலையில் கற்றுத் தரும் கால் பயிற்சியை முறையாக நாள்தோறும் செய்து வந்தால் நலம் பெறலாம்.

கட்டுரை நல்ல பயனுள்ள கட்டுரை.
நன்றி.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதி அரசு! எனக்கும் மனவளக்கலையில் காலுக்கான பயிற்சி முறைகள் சொல்லித்தருவது தெரியும். தகவலுக்கு அன்பு நன்றி. ஆனாலும் ஒவ்வொரு நோய்க்கும் பிரத்தியேகமாக யோகப்பயிற்சி தரும் மருத்துவரிடம் கற்பது இன்னும் நல்லது. இந்த ஆலோசனையையும் ஒரு மருத்துவர் தான் என்னிடம் சொல்லி அதற்குப்பின் அந்த யோகப்பயிற்சி மருத்துவரிடம் சென்று நான் கற்றேன்.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் தனபாலனுக்கு,

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வரிகோஸ் பிரச்சினை சீக்கிரமே வரும். நீங்கள் சியாடிக் நரம்பு என்று எழுதியிருப்பதால் உங்களுக்கும் வரிகோஸ் பிரச்சினை என்று புரிகிறது. நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், அடுப்படியில் அதிக நேரம் நிற்கும் பெண்களுக்கு வரிகோஸ் பிரச்சினை அதிகமாகி வலியும் மிக அதிகமாகும். சில சமயங்களில் தூங்கும்போதும் வலி வரும். கால்களில் விதம் விதமாக நரம்புகள் இழுத்துக்கொள்ளும். தொடையிலிருந்து பாதங்கள் வரை கடுமையான வலியுடன் இழுக்கும். சில சமயங்களில் முட்டிக்குக்கீழே பின்னால் ஆடுசதைக்கு மேலே உட்புறம் பெரிய கட்டியும் உண்டாகும்.

இதற்கு வலி குறைய சில சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

1. வேலைகள் செய்யும் போதும் படுக்கும் நேரத்தைத்தவிர மற்ற சமயங்களிலும் COMPRESSED STOCKINGS அணிய வேண்டும். இது வலியை வெகுவாக குறைக்கும்.

2. காலை, மாலை HOT AND COLD PACK ஒத்தடம் கொடுக்க வேண்டும். மாறி மாறி கொடுக்க வேண்டும்.
3. கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை நடக்குமிடங்களில் [ பெரும்பாலும் முக்கிய நகரங்களில் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் வைத்தியசாலைகள் இருக்கின்றன.] ' கொட்டாஞ்சுக்கான் எண்ணெய்' என்று கேட்டு வாங்குங்கள். இதை படுப்பதற்கு முன்னாலும் குளிப்பதற்கு முன்னாலும் தடவிக்கொள்ளலாம். ஒத்தடம் கொடுக்கும் போதும் இதைத்தடவி பிறகு கொடுக்கலாம்.

என்னுடைய சியாடிக் நரம்பு பிரச்சினைக்கு நான் இவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப்பிறகு செய்து கொள்கிறேன்.

இந்தத் தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன். மேற்கண்ட சிகிச்சைகளை செய்து கொள்ளாமல் போனால் சியாடிக் பிரச்சினை அடுத்த கட்டத்துக்கு போய் விடும் வாய்ப்பு அதிகம். அதனால் கவனமாக இருக்கவும்.

நான் மார்ச் 10ந்தேதிக்குப்பின் தஞ்சையில் இருப்பேன். ஏதாவது தகவல் வேண்டுமென்றால் என்னை அழையுங்கள். அல்லது உங்கள் ஈமெயில் அட்ரஸ் கொடுத்தால் நான் எழுதுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி அம்மா... மார்ச் மாதம் தொடர்பு கொள்கிறேன்...
9944345233

முற்றும் அறிந்த அதிரா said...

நல்ல பகிர்வு மனோ அக்கா.

நாங்களும் கினோவா சேர்ப்போம் சூப்பாக, கஞ்சியாக, சோறுக்குப் பதிலாகவும்தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பதிவு

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள். பலருக்கும் பயன்படும்.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா! நீங்கள் கீன்வா சாப்பிடுவது மனதுக்கு மகிழ்வாக உள்ளது. கீன்வா சமையல் குறிப்புகள் சிலவற்றை நீங்கள் எழுதலாமில்லையா?

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் இனிய பாராட்டு இன்னும் இது போன்ற பதிவுகள் வெளியிட வேண்டுமென்ற உத்வேகத்தையும் நிறைவையும் கொடுக்கின்றது சகோதரர் ஸ்ரீராம்! அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான பதிவு.

srikanth said...

very useful. thanks madam.