Thursday, 24 October 2019

45 வருடங்களுக்கு முன்!

இது நாங்கள் 1975ல் மும்பையை அடுத்த பன்வேல் என்னும் கிராமத்திலிருந்த போது வரைந்தது. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்!!! திருமணமான புதிது. அங்கு தான் ஹிந்தி, மராத்தி மொழிகள் பழக்கமாயின!

ஹிந்தி திரைப்படங்கள் புரிந்து ரசிக்க ஆரம்பித்த காலம். பக்கத்து வீடு கேரளத்தினர். எதிர் வீடு பீஹாரைச்சேர்ந்த குடும்பம். முன் மதிய நேரங்களில் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் வீட்டில் தான் சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டேன். தினமும் சப்பாத்தி தானென்பதால் அது அவர்களுக்கு அனாயசமாக செய்ய வரும். நிறைய கோதுமை மாவை ஒரு பெரிய கல்லில் கொட்டி நடுவில் ஒரு பள்ள‌ம் பறித்து உப்பும் தண்ணீரும் ஊற்றி ஒரு நீளமான கட்டையால் அந்த காலத்தில் குளத்தில் குளிக்கும்போது துணிகளை அடித்து துவைப்பது போல அந்த கட்டையால் மாவை அடிப்பார்கள். அந்த மாவு அப்படியே திரண்டு உப்பி வரும். அதில் போடும் சப்பாத்தியோ பூரி போல உப்பி வரும். தொட்டுக்கொள்ள நெத்திலி மீன் கறி செய்வார்கள். அதையும் கற்றுக்கொண்டேன். சமையலில் அங்கே தான் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சற்று தள்ளி மராத்தி குடும்பம் இருந்தது. அங்கே இனிப்பு சாதம், பேடா என்று கற்றேன். சமையலுக்கு எல்லைகள் ஏது?



இது அப்போது வெளி வந்து கொண்டிருந்த ஃபிலிம் ஃபேர் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தைப்பார்த்து வரைந்தேன். பென்சில் ஓவியம். 

Tuesday, 1 October 2019

துபாய் ஃபிரேம்’!!!!



துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. 250 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமுள்ள இரண்டு டவர்கள் , 305 அடி அகலமான பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்திலிருந்து ஒரு பக்கம் நவீன துபாயையும் இன்னொரு பக்கம் பழமையான துபாயையும் பார்க்க முடியும். கீழ்த்தளத்தில் ஒரு மியூசியம் உள்ளது. இங்கே பல்லாண்டுகளுக்கு முன்னதான அரேபியரின் வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் நாம் உணர்ந்து ரசிக்கும்படி வீடியோக்கள், நிழற்படங்கள், பொருள்கள் என்று அனைத்தும் உள்ளன. இவற்றை பார்த்து முடித்ததும் மின் தூக்கி நம்மை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. வெளியேறுமுன்பு வருங்கால துபாய் எப்படி இருக்கும் என்பதை 3D மூலம் அசத்துகிறார்கள். உண்மையிலேயே மனம் பிரமித்துப்போகிறது. சட்டென்று அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்ட துபாய் பிரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம். இந்த கட்டிடம் உலகின் மிக பிரம்மாண்டமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையை அடைந்துள்ளது.


தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டத்திற்குள் துபாய் நகரம் உள்ளதுபோல தெரியும். இது இரும்பு தளவாடங்கள் மற்றும் கான்கிரீட் போன்றவற்றால் முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது.



பழங்கால அரேபிய வீடு
பழங்கால அரேபியர்களின் பொருள்கள்


மேற்புறத்தில் தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் ‘லிப்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.



old dubai
new dubai
RULER OF DUBAI
RULER OF ABU DHABI AND THE PRESIDENT OF UAE
உட்புறத்தில்!!





இதன் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். பெரியவர்களுக்கு 50 திரஹம்ஸ் என்றும் 3லிருந்து 12 வயது குழந்தைகளுக்கு 20 திரஹம்ஸ் என்றும் நுழைவுச்சீட்டு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்குத்துணையாக வருபவர்களுக்கும் நுழைவு சீட்டு இலவசம்.