Wednesday, 1 May 2019

வியட்நாம்- முதல் நாள்!!!


தெற்காசிய நாடுகளில் ஒன்றான வியட்நாம் தெற்கு சைனா கடலோரமாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹனோய். வியட்நாமீஸ் மொழி தான் இங்கு பேசப்படுகிறது. இந்த வியட்நாம் நகரை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த கம்யூனிச தலைவர் ஹோ சி மின் நினைவாக வியட்நாமின் பழம்பெரு நகரான சைகோன் ஹோசிமின் சிட்டி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முக்கிய பெரும் வீதிகளில் சைகோன் என்ற பெயர்ப்பலகைகள் இன்னும் இருக்கிறது.

தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலாக போரில் ஈடுபட்டு நிறைய பாதிப்புக்குள்ளான நாடு இது. முதலில் ஆக்ரமித்த சைனா, அதன் பின் பிரான்ஸ், அதன் பின் ஜ‌ப்பான் என்று தொடர்ந்த போர்கள், கம்யூனிச போராளிகளுக்கு எதிராக உள்நாட்டிலேயே போர்களும் போராட்டங்களும், அதன் பின் 1954ல் ஜெனிவா ஒப்பந்தப்படி விய‌ட்நாம் தெற்கு, வடக்கு என்று பிரிந்த பின் தெற்கு வியட்நாமிற்கு உதவுவதாக வந்த அமெரிக்காவின் ஆதிக்கமும் தாக்குதலும் என்று மோசமான பாதிப்பிற்குள்ளான‌து வியட்நாம்.

வியட்நாம் போரின் போது மறைந்து ஒளிந்து தப்பியோடும் மக்கள்
கம்யூனிசத்திற்கு எதிரான அணியில் தெற்கு வியட்நாம், வட அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளும் கம்யூனிசத்தை ஆதரிக்கும் பிரிவில் வடக்கு வியட்நாம், மக்கள் குடியரசு சீனா, சோவித் யூனியன் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளும் ஆதரவு கொண்டிருந்தன.

1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைப்போல ஒரே நாடாக ஆதிக்கம் செலுத்த விரும்பியது வடக்கு வியட்நாம். அதேசமயம் தெற்கு வியட்நாமும் தன்னுடைய சுயாட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக வட அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கை எதிர்க்க விரும்பியது. இந்தப் போரில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக நேரடியாகப் பங்கேற்றனர். சீனா மற்றும் ரஷ்யாவும் வடக்கு வியட்நாமுக்கு அதிகளவில் ஆயுதங்களையும், போர் உத்திகளையும் நேரடியாக கொடுத்து வந்தது. இந்தப் போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் நடந்த இப்போர் வட அமெரிக்காவின் போர்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. வடக்கு- தெற்கு வியட்நாமிற்கு இடையேயான போரானாலும் இதில் வட அமெரிக்காவின் பங்கு அதிகம்.
பெரும் ஆயுதபலம் மற்றும் பணப்பலத்தைப் பிரயோகித்தாலும் இறுதியில் இப்போர் வட அமெரிக்கர்களுக்கு தோல்வியைக் கொண்டு வந்தது. 1973-ல் வட அமெரிக்கா இப்போரில் இருந்து வெளியேறியது. இன்றுவரை வட அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது என்பது வியட்நாமில் மட்டுமே நடந்த ஒன்று.

பல லட்சம் மக்களை பலி கொண்ட இப்போர் 1975-இல் தெற்கு வியட்நாமின் தலைநகரான சைகோன் வடக்கு வியட்நாம் படையால் பிடிக்கப்பட்டப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன்பின் இரண்டு வியட்நாமுகளும் இணைக்கப்பட்டன.
1976ல் தெற்கும் வடக்கும் இணைந்து SOCIALIST REPUBLIC OF VIETNAM என்ற நாடு உருவானது. எங்கள் வழிகாட்டி கல்லூரிப்படிப்பை அப்போது தான் முடித்து வந்ததாக் சொன்னார். அவரைப்போன்ற இளைஞர்களுக்கு அது பழைய சைகோன் தான் என்பதும் புதிய பெயரை அவர்களால் அவ்வளவாக ஏற்க முடியவில்லை என்று புரிந்தது.

கம்போடியாவிலிருந்து வியட்நாமின் HO CHI MINH CITY க்கு ஒன்றரை மணி நேர விமானப்பயணத்தின் மூலம் சென்றடைந்தோம். ஹோட்டலுக்குப் போகும் வழியில் ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை முடித்து எங்கள் அறைக்குள் தஞ்சமடைந்தோம்.

மாலை ஒரு சிறு கப்பலில் 2 மணி நேரம் உல்லாசப் பயணம் சென்றோம். வியட்நாமீய உணவு வகைகள், வியட்நாமீய சங்கீதம்,  நடனம் என்று மெதுவே அந்தக் கடல் கால்வாயிலினூடே சென்ற பயணம் மறக்க முடியாததாக இருந்தது.

கப்பலின் முன் தோற்றம்


கப்பலினுள் மற்ற விருந்தினருடன் நாங்களும்!!
சைவ உணவு
 


மறுநாள் புகழ் பெற்ற 'மெக்கோங் டெல்டா' விற்குச் செல்வதால் சீக்கிரமாகவே உறங்கச் சென்றோம்.

12 comments:

ஸ்ரீராம். said...

வெளியாட்களுடன் சண்டை இடுவதுடன் தனது ஆட்களுடனேயும் சண்டையிட்டுக் கொண்ட வியட்நாம் கதை. அமெரிக்காவின் பெரிய அண்ணன் வேலை செல்லுபடியாகாத ஒரே இடம்... சுவாரஸ்யமான விவரங்கள். நன்றி. தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

வரலாற்று நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்
பயணம் தொடரட்டும்
காத்திருக்கிறோம்

ராமலக்ஷ்மி said...

நெடுங்காலமாக போரில் மாட்டிக் கொண்ட வியட்நாமின் துயரங்கள், இழப்புகள் வருத்தத்திற்குரியது. வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்.

பயணத்தின் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் வரலாறு...

படங்கள் அருமை அம்மா...

கோமதி அரசு said...

வியட்நாமின் கண்ணீர் என்று முன்பு படித்து இருக்கிறோம்.
நீங்கள் சொன்ன வரலாறுகள் படங்கள் எல்லாம் வேதனை.

மற்ற படங்களும் செய்திகளும் அருமை.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வரலாறும் சுற்றுலாப் படங்களும் அழகு...

Yarlpavanan said...

அருமையான தொகுப்பு
பாராட்டுகள்

Kasthuri Rengan said...

அருமையான தகவல், நச் புகைப்படங்கள்
ஜோர்

Kasthuri Rengan said...

தரம்

Anuprem said...

பல தகவல்கள் ...

தகவல்களும் படங்களும் மிக சிறப்பு

மாதேவி said...

போர் வரலாறும் தகவல்களும் கண்டுகொண்டோம்.

Thulasidharan V Thillaiakathu said...

வியட்நாம் வரலாறு வேதனை தரும் ஒன்று.

படங்களும் தகவல்களும் சிறப்பு தொடர்கிறோம்

துளசிதரன், கீதா