Friday, 1 March 2019

கம்போடியா-முதல் நாள் !!!

கம்போடியாவைப்பற்றி சிறு முன்னோட்டம்:

கிபி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சென்லா என்னும் தமிழர் வழி வந்த பேரர‌சு கம்போடியாவை சிறப்பாக ஆட்சி செய்தது. அதன் பின் வந்த கெமர் பேரர‌சு [ KHMER DYNASTY ] பல்லவ வழித்தோன்றல்களுடன் மிகச்சிறப்பாக செல்வச் செழிப்புடன் ஆட்சி செய்தது. கெமர் பேரரசின் மன்னர்கள் தான் வரலாற்று சிறப்பு மிக்க கலைக்கோவில்களை கம்போடியாவில் உருவாக்கினார்கள்.

கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் , அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் இவற்றுடனான போர்களினால் கம்போடியா தன் சுயம் இழந்தது.
1683 ஆம் ஆண்டு முதல் பிரஞ்சு காலனியாக இருந்த கம்போடியா 1915ல் ஜப்பானியர்களால் ஆக்ரமிக்கப்பட்டது. 1945ல் ஜப்பானியர்கள் வெளியேற்றப்பட்டு மீண்டும் பிரெஞ்சு காலனியின் ஆதிக்கம் வந்தது. மீண்டும் 1953ல் பிரெஞ்சு அரசாங்கம் கம்போடியாவுடன் சேர்ந்திருந்த வியட்நாமை தனி நாடாகப்பிரித்து, பின் கம்போடியாவிற்கு முடியாட்சியின் கீழ் சுதந்திர ஆட்சியைக்கொடுத்து விலகிக்கொண்டது. அதன் பின் தொடர்ந்து வந்த 20 வருடங்கள் முடியாட்சி, கம்யூனிஸ்ட் ஆட்சி, அதன் குழப்பங்கள், அதன் தொடர்பான அடக்குமுறைகளால் கம்போடியா பெரும் அழிவை ச்ந்தித்தது. 1975 முதல் ஆட்சி செய்த பால் பாட் என்னும் கம்யூனிச அரசனால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். மூன்று வருடங்களுக்குப்பிறகு, 1978ல் வியட்நாமிற்கும் கம்போடியாவிற்கும் ஏற்பட்ட போரில் கம்போடியா தோற்றது.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து தற்போது மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, ஆகிய நாடுகள் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இங்கிலாந்து முறைப்படி மன்னரும் பிரதம மந்திரியும் கொண்ட அரசாட்சி நடக்கிறது. நெல் உற்பத்தியும் சுற்றுலாவும் நாட்டின் பிரதான வருவாயாக விள‌ங்குகின்றன.

கம்போடியாவின் ஆட்சி மொழி கெமர் மொழியும் பிரெஞ்சு மொழியும் ஆகும்.
கம்போடியாவின் தலநகரம் நாம் பென் [ Phnom Penh ] என்றாலும் இன்னொரு நகரான சியாம் ரீப் [ SIEM REAP ] தான் அனைத்து கோவில்களும் உறையும் நகர்!

இனி எங்கள் பயணம் தொடங்குகிறது.....

எங்களின் கம்போடியா பயணம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 18ந்தேதி
[ இரண்டு மாதங்களுக்கு முன் ] தொடங்கியது. அன்றிரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு மறுநாள் விடியற்காலை தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் சென்றடைந்தோம். அங்கிருந்து 2 மணி நேரத்தில் கம்போடியாவின் சியாம் ரீப் நகரை சென்றடைந்தோம்.

அங்கிருந்த 3 நாட்களும் எங்களுக்கென ஒரு வழிகாட்டியும் தனியான காரும் தன் தொடர்பிலுள்ள வியட்நாம் சுற்றுலா நிறுவனம் மூலம் எங்கள் மகன் ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் தங்கியிருந்தது ' சோமாதேவி '[ SOMADEVI RESORTS ] என்ற நான்கு நட்சத்திர விடுதி.

DHAKSHIN RESTAURANT
ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்த போதே மதியம் 2 மணி ஆகி விட்டதால் முன்னதாக என் மகன் பேசி வைத்திருந்த ' DHAKSHIN 'என்ற தமிழ் உணவகத்துக்குச் சென்றோம். சாம்பார், பொரியல் வகைகளுட்ன் சாப்பாடு அருமையாக இருந்தது. உணவக உரிமையாளர் பன்னீர் செல்வம். சிங்கப்பூர் வாழ் தமிழர். நன்கு பேசியதுடன் சில உதவிகளும் செய்து, நல்ல யோசனைகளையும் தந்தார்.
அதன் பின் எங்கள் ஹோட்டலுக்குச் சென்றோம்.

கலையழகு மிகுந்த அந்த ஹோட்டலைப்போல் இது வரை நான் பார்த்த நாடுகளிலோ அல்லது துபாயிலோ நான் பார்த்ததில்லை. வரவேற்பறையில் அத்தனை அழகழான சிற்பங்கள்!

ஹோட்டல் முகப்பு
        சிலைகளும் அலங்காரங்களும்!!






ஒரு அறையின் கதவு!









இது நாங்கள் தங்கியிருந்த எக்ஸிகியூட்டிவ் பிரிவு

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழிகாட்டி சொன்ன அட்டவணையின்படி முதலில் சென்ற இடம் WEST BARAY எனப்படும் மிகப்பெரிய ஏரி. கம்போடியா முழுமைக்கும் தண்ணீர் இங்கிருந்து தான் முன் காலத்தில் சென்றதாகவும் இப்போது அப்படிப்பட்ட உபயோகம் இல்லையென்றும் வழிகாட்டி சொன்னார்.



2 கிலோ மீட்டர் அகலமும் 8 கிலோ மீட்டர் நீளமும் உள்ள இந்த ஏரியின் நடுவே இடிபாடுகளுடன் கூடிய ஒரு ஹிந்து கோவில் உள்ளது. விவசாயத்துக்காக இது அந்தக்காலத்தில் பயன்பட்டதாக சொல்லப்பட்டதை சில ஆராய்ச்சியாளர்கள் தற்போது மறுத்திருக்கிறார்கள். ஏரியின் நடுவே கோவில் இருந்திருப்பதால் இது புனிதமான இடமாக வழிப்பாட்டுக்குரியதாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.இது அரசன் முதலாம் ஜெயவர்மனால் ஆரம்பிக்கப்பட்டு, உதயாதித்த வர்மனால் முடிக்கப்பட்டது.

apsara dance






BUFFET DINNER
இரவு உணவு ஒரு ஹோட்டலில் இருந்தது. பெரியளவில் BUFFET உணவு. இப்படிப்பட்ட மிகப்பெரிய BUFFETஐ நான் இது வரையில் பார்த்ததில்லை. மிகப்பெரிய அளவிலிருந்த அசைவ உணவு வகைகளை விலக்கி, சாலட், பழங்கள், இனிப்புக்கள் என்று ஒரு வழியாக உண்ண ஆரம்பித்தோம்!சாப்பிட்டவாறே அங்கே மேடையில் ஆடிய 'அப்ஸரா' நடனத்தை கண்டு ரசித்தோம். முதல் நாள் அமைதியான உறக்கத்தில் முடிந்தது.

17 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான தகவல்கள். தொடர்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் ஒவ்வொன்றும் அழகு
கம்போடியப் பயணத்தின் அடுத்தப் பகுதிகளையும் அறிய ஆவல்
தொடருங்கள் சகோதரியாரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! என்ன அழகு...!

பிலஹரி:) ) அதிரா said...

ஹம்போடியாப் படங்கள் தொடர்ந்து வரும்தானே மனோ அக்கா?.. அழகு.. அழகிய இடம்..

priyasaki said...

பயணத்தின் தகவல்கள் அருமை. படங்கள் அழகு அக்கா.

unmaiyanavan said...

"//1983 ஆம் ஆண்டு முதல் பிரஞ்சு காலனியாக இருந்த கம்போடியா 1915ல் ஜப்பானியர்களால்//" -
ஆண்டு எழுத்து பிழையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கம்போடியாவைப் பற்றி அருமையான ஒரு முன்னுரையை தந்ததற்கு நன்றி.
எனக்கும் அங்கு செல்ல வேண்டும் என்று நெடு நாள் ஆவல்.
உங்களின் இந்த தொடரை ஒரு வழிகாட்டுதலாக வைத்துக்கொள்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

தகவல்களுடன் படங்களும் பகிர்வும் அருமை.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு, ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி அதிரா! ஆமாம், வெளியுலகத்திற்கு அதிக்ம் தெரியாத கம்போடியா கோவில்கள் பற்றித்தான் தொடர்ந்து எழுதவிருக்கிறேன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!

Anuprem said...

கம்போடியா- ஆஹா தங்கள் வழி நானும் காண வருகிறேன்

மனோ சாமிநாதன் said...

இனிய வருகைக்கும் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டியதற்கும் அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியம்! பிழைகளை உடனேயே திருத்தி விட்டேன். கம்போடியா செல்வதற்கு நிச்சயம் என் பதிவுகள் தங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். ஆனால் நிதான‌மான திட்டம் தேவை! அப்போது தான் முழுமையாக ரசிக்க முடியும்!இதப்பற்றி விரிவாக என் இரண்டாவது பதிவில் எழுதியிருக்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

உங்களின் வலைத்தளத்தை என்னால் பார்வையிட முடியவில்லை. இந்தியாவில் இருந்த‌ போது பிரச்சினியில்லை. ஆனால் துபாயிலிருந்து ஓப்பன் செய்ய முடியவில்லை!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

Thulasidharan V Thillaiakathu said...

அழகான படங்கள். தகவல்களும் அருமை நிறைய தெரிந்து கொண்டோம்.

பல படங்கள் மனதைக் கவர்கின்றன.

துளசிதரன், கீதா