காலை 9 மணியளவில் உலகின் மிகப்பெரிய கோவிலுக்கு இன்று கிளம்பினோம். நகரத்திற்கு வெளியே எல்லா கோவில்களுக்குமான டிக்கட் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு சென்று டிக்கட் வாங்கினார் எங்கள் கம்போடிய வழிகாட்டி. நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு மாபெரும் கோவில்.
|
from the net |
நகரத்திற்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய கோயிலானது, உலகிலுள்ள மிகப்பெரிய அதிசயமாக காட்சி தருகின்றது. அதன் பெயர்
அங்கோர் வாட் கோயில்
அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.
அங்கோர் வாட் கோயில் உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் . உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.
தொடர் சிதைவுகள், அழிவுகள், போராட்டங்கள், போர்கள், மாறுபட்ட கலாச்சாரங்கள் காரணமாக நெடுங்காலமாக காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கூர் வாட் கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்த பல வருடங்கள் பிடித்தள்ளன. இதை முழுவதுமாய் வெளிக்கொணர்ந்ததில் அமெரிக்காவின் ' நாஸா' வின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் கலாசாரம் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்ததற்கான சான்றாக இந்த கோயில் இடம் பெறுகிறது.
|
எங்கள் வழிகாட்டி வெய்யில் தாங்காமல் துண்டை தலையில் போர்த்திக்கொண்டு நடக்கிறார்!! |
இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த விஷ்ணு கோவில் புத்த கோவிலாக மாறியது. இப்போதும் இந்தக் கோவிலில் மூர்த்தங்கள் இல்லாததால் வழிபாடுகளும் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேன் இல்லை, லாரிகள் இல்லை, அதிநவீன சாதனங்கள் இல்லை, இப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு அமைப்பை உருவாக்க, அந்தத் தலைமுறை மக்கள் தன் நேரம் முழுவதையும் இதற்கே செலவு செய்திருக்க வேண்டும்...!
|
தற்போதைய புத்தர் வழிபாடு! |
இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்ற இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
|
இங்கு கிடைக்கும் இளநீர்! மிகப்பெரிய, வட்ட வடிவ இளநீர்! எங்கள் இரண்டு பேராலும் முழுவதுமாக குடிக்க முடியவில்லை!! |
1.5 கிலோமீட்டர் நீளமும் 1.3 கிலோமீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான அகழி பார்ப்பதற்கே பிரமிப்பூட்டுவதாக இருந்தது. மூன்று தளங்களுடன் அறுபது மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை தூரத்திலிருந்தே காண முடிந்தது. கோயிலின் நுழைவாயிலில் சுமார் 800 மீட்டர் நீளத்தில் செதுக்கப்பட்டிருந்த பல்வேறு சிற்பங்கள் இக்கோயிலின் அழகிற்கு அழகு சேர்த்தன. இடது பக்கம் அசுரர்களும் வலது பக்கம் தேவர்களும் கூடிநின்று பாற்கடலைக் கடைவதையும், தத்ரூபமாக செதுக்கியுள்ளனர்.
|
This is motor cycle rickshaw!! |
பிரதான கோபுரத்தை அடைவதற்கு நீண்ட தாழ்வாரத்தையும் குறுகலான படிகளையும் கடக்க வேண்டியிருந்தது. இக்கோயிலின் சுவர்கள், தூண்கள், நடைபாதைகள், மேல்தளங்கள் என எங்கு பார்த்தாலும் சிற்பங்களே. இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.
வருத்தமான விஷயம் நிறைய இடங்களில் காணப்பட்ட சிதைவுகள் தான். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேன்டிய இந்தக் கோவில்கள் பின்னால் வந்த மன்னர்களால் கவனிக்கப்படவில்லை. அதோடு சில கொடுங்கோல் ஆட்சியளார்களால்தான் நிறைய சிற்பங்கள், கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன.
குறிப்பு:
இந்த அங்கோர் வாட் கோவிலைக்காண ஒரு முழு நாள் வேண்டும். நாம் பயணத்திட்டங்களில் விவரம் புரியாது சுற்றுலா நிறுவனங்கள் போட்டுக்கொடுத்த திட்டங்களை அப்படியே ஏற்கிறோம். ஒரு நாளைக்கு 4 கோவில்கள் என்பது சரியானது தானா என்பதை நாங்களும் யோசிக்கவில்லை. ஆனால் நேரடி அனுபவம் வேறு. இந்த அங்கோர் கோவிலுக்கு மட்டும் ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. ஏனெனில் கோவிலை அடையவே பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அடிக்கடி படிகள் ஏற வேன்டும். அதனால் காலை 7 மணிக்கே சென்றடைவது நல்லது. அப்போது தான் சுட்டுப்பொசுக்கும் வெய்யிலிடமிருந்து ஓரளவாவது தப்பிக்க முடியும்!
இந்த அங்கோர் வாட் கோவிலின் முழு அழகையும் அதனாலேயே சரியாக பார்க்க முடியவில்லை. அதோடு அதன் முழு விபர்ங்களையும் கையில் வைத்துக்கொண்டு பார்த்தால்தான் சரியாக இருக்கும்!