Tuesday 7 November 2017

மரவள்ளிக்கிழங்கு அடை!!

இந்த முறை நல்லதொரு சமையல்குறிப்பை பதிவிடலாம் என்ற யோசனை வந்தபோது வீட்டில் தயாராகிக்கொண்டிருக்கும் மரவள்ளிக்கிழங்கு அடையின் நினைவு வந்தது. மரவள்ளிக்கிழங்கில் வடை, பொரியல் எல்லாம் செய்வதுண்டு என்றாலும் இந்த அடை தான் எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் மாமியார்  தண்ணீரை  கொதிக்க வைத்து மரவள்ளிக்கிழங்குத்துண்டங்களைப்போட்டு வேக வைப்பார்கள். அதில் உப்பு, நசுக்கிய‌ பூண்டு பற்கள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைப்பார்கள். அத்தனை சுவையாக இருக்கும் அப்படி வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு!! காலை நேரத்தில் இது தான் சில சமயம் உணவாக இருக்கும். ஆனால் சர்க்கரை நோய்க்காரர்கள் இந்த சுவையிலிருந்து கொஞ்சம் தள்ளித்தான் நிற்க வேண்டும். காரணம் 88 சதவிகிதம் இதில் மாவுச்சத்து இருப்பது தான்!!



பிரேசிலில் பிறந்த மரவள்ளிக் கிழங்கு மெதுவாக பல நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா, இலங்கை என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. இதிலிருந்து தான் ஜவ்வரசி போன்ற உணவுப்பொருள்கள் தயாராகின்றன. பாஸ்பரஸ், கால்சியம் நார்ச்சத்து என சத்துக்கள் அடங்கிய மரவள்ளிக்கிழங்கு இரத்த ஓட்டத்தையும் சிகப்பு இரத்த அணுக்களையும் அதிகரிப்பதால் இதை குழந்தைகளுக்கு கஞ்சி மாவாக தயாரித்துக்கொடுப்பது வழக்கம். கேரளாவில் பச்சிளங்குழந்தைகளுக்கு கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். வேக வைத்து வெல்லப்பாகு கலந்து கொடுப்பார்கள். என் அனுபவத்தைப்பொருத்தவரை கேரளாவிலும் இலங்கையிலும் விளையும் கிழங்கிற்கு சுவை மிக அதிகம்!!

இப்போது மரவள்ளிக்கிழங்கு அடையைப்பார்க்கலாம்.



மரவள்ளிக்கிழங்கு அடை:

தேவையான பொருள்கள்:

மரவள்ளிக்கிழங்குத் துருவல்- 4 கப்
பச்சரிசி                    -  2 கப்
துவரம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய்- 8
சின்ன வெங்காய்ம் அல்லது பெரிய வெங்காயம் மெல்லியதாய் அரிந்தது- 1 கப்
பெருங்காயம்- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை -2 ஆர்க்
தேவையான உப்பு
சோம்பு-1 ஸ்பூன்

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளை போதுமான நீரில் வற்றல் மிளகாயுடன் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அரிசியை மிளகாய், பெருங்காயம், சோம்பு, போதுமான நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மெல்லிய அடைகளாய் வார்த்தெடுக்கவும்.

தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு பொருத்தமான பக்கத்துணையாக இருக்கும்.

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி...

ஸ்ரீராம். said...

அடடே... அடைடே!

துரை செல்வராஜூ said...

தஞ்சாவூர் பக்கம் இதனை சவாரிக்கட்டை கிழங்கு என்பார்கள்..
பட்டுக்கோட்டை பேராவூரணி கீரமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பாரவண்டிகளில் ஏற்றி வந்து விற்பனை செய்வார்கள்..

ஊரில் இருந்தவரைக்கும் மரவள்ளி கிடைக்கும் காலத்தில் தவறாது இந்த அடை உண்டு..
மரவள்ளி காரக்குழம்பும் வைப்பார்கள்..

இங்கே குவைத்தில் மரவள்ளி கிடைத்தாலும் செய்வதற்கு அரிது..

இந்த அடைமழைக் காலத்தில் கிழங்கை சுட்டு அதை வெல்லத்துடன் தின்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

முற்றிய கிழங்கின் வேர்ப்பகுதி மட்டும் கொஞ்சம் கசக்கும்..
பால் மணம் மாறாததாக இருந்தால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்..

கொஞ்சம் கவனமாக கையாள வேண்டியது அவசியம்..

ஆனாலும் சுகமான மலரும் நினைவுகளுக்கு உரியது மரவள்ளிக் கிழங்கு..

முற்றும் அறிந்த அதிரா said...

அருமையான குறிப்பு.. உண்மைதான் ஊரில் சாப்பிட்ட கிழன்கின் சுவை இங்கு கிடைக்குதில்லை.

Angel said...

கிழங்கு வேகவைக்கும் எக்ஸ்டரா குறிப்புக்கும் நன்றிக்கா .இது வரை பூண்டு சேர்த்ததில்லை இனி சேர்க்கணும் .
அடை நல்லா இருக்கு ..இங்கே மரவள்ளி கிடைக்குதுக்கா ஆனா மேலே மெழுகு கோட்டிங் போடறதால் எனக்கு பயம் சில நேரம் உள்ளே கருப்பு லைன் போல் இருக்குமா வீசிடுவேன் .

நம்ம ஊரில் பாரிமுனை பக்கம் அப்புறம் மார்க்கெட்டில் எல்லாம் கூடைகூடையாய் இருக்கும் கிழங்கு .
ரெசிப்பிக்கு நன்றி

பூ விழி said...

நசுக்கிய பூண்டுடன் கேள்வி பட்டதில்லை செய்து பார்க்கணும் குறிப்புடன் நல்ல இருக்கு

Johnkennday said...

Do you need to cook or fresh to add for adai. Thanks.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... மரவள்ளிக்கிழங்கில் அடையா? கேள்விப்பட்டதில்லை.

தலைநகரில் கேரளக் கடைகளில் கிடைக்கிறது. வாங்கி செய்து பார்க்க வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா! உண்மை தான் ,இலங்கை, கேரளாவின் மரவள்ளிக்கிழங்கிற்கு தனி ருசி!

மனோ சாமிநாதன் said...

பூண்டு சேர்ப்பதால் வாயு பாதிக்காது என்று சொல்வார்கள். அதோடு பூண்டை தோலோடு நசுக்கிப்போடும்போது மரவள்ளிக்கிழங்கில் அந்த மணமும் ஏறி இன்னும் ருசியாக இருக்கும்!

உள்ளே கருப்பு வரிகள் இருந்தால் நாள்பட்ட கிழங்கு என்று அர்த்தம்! அதை உபயோகிக்கக்கூடாது!

மரவள்ளியிலுமா மெழுகு கோட்டிங் கொடுக்கிறார்கள்? அதிர்ச்சியாக இருக்கிறது!

வருகைக்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

பூண்டுடன் செய்து பாருங்கள் பூவிழி! அருமையாக இருக்கும்! வருகைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

There is no need to cook the tapioca before adding for the adai Mr.Kennday!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் வெங்கட்! மிகவும் சுவையாக இருக்கும்! கிழங்கு இனிப்பாக இருந்தால் அடையின் சுவையும் கூடுதலாக இருக்கும்!!

Thenammai Lakshmanan said...

அருமை மனோ மேம். இருமுறை நீங்கள் எங்கள் பக்கம் வந்தும் பார்க்க இயலாமல் போய்விட்டது குறித்து வருத்தமே.

உங்கள் திருமண நாளுக்கு வாழ்த்த எண்ணியிருந்ததும் மறந்துவிட்டது. தாமதமான அன்பான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு :)

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு மற்றும் தகவல்கள்.

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
நல்ல குறிப்பு.

காமாட்சி said...

நல்ல குறிப்பு. அடைசெய்ய ஆவலைத் தூண்டுகிறது. மும்பையில் தமிழ்க்கடைகளில் கிடைக்கும். இங்கும் கேரளக்கடைகளில் இருக்கும். வாங்கிவரச் சொல்கிறேன். அன்புடன்.

மனோ சாமிநாதன் said...

திருமண நாள் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் காமாட்சி அம்மா! வருகைக்கும் கருத்து தெரிவித்ததற்கும் அன்பு நன்றி!!