Friday, 30 September 2016

வெங்காய பக்கோடா!!

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு சமையல் குறிப்பு! எல்லோருக்கும் பிடித்த குறிப்பு என்பது தான் இதில் ஸ்பெஷல்! அதுவும் மற்றெல்லா சமயங்களையும் விட மழைக்கால மாலை நேரங்களில் இதை செய்யும்போது ருசி இன்னும் கூடுதலாகவே தெரியும்! அது தான் வெங்காய பக்கோடா!
இதற்கு பெரிய வெங்காயம் தான் நன்றாக இருக்கும். இனி குறிப்பிற்கு போகலாம்!




வெங்காய பக்கோடா:

தேவையான பொருள்கள்:

பெரிய வெங்காயம் நான்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் 3
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிய கோலி அளவு
சோம்பு 1 ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லி 2 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு தேவையான அளவு

செய்முறை:



வெங்காயத்தை நீள நீளமாக, மெலிசாக அரிந்து கொள்ள‌வும்.
பெருங்காயத்தை ஒரு கிண்ண‌த்தில் போட்டு சிறிது வென்னீரை ஊற்றி வைக்கவும். இதை பல மணி நேரங்களுக்கு முன்னாலேயே செய்து கொள்ளலாம். அதனால் பக்கோடா செய்யும்போது பெருங்காயல் நன்கு இளகி இருக்கும்.

வெங்காய‌த்தையும் பச்சை மிளகாயையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு நெரித்துப்பிசையவும்.

இப்போது கடலை மாவை சலித்து வெங்காயத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு பிசிறவும். அதிகமாக போட்டு விட்டால் மெது பக்கோடா ஆகி விடும். கொஞ்சமாக போட்டால் தூள் பக்கோடா ஆகி விடும். அதனால் மாவு வெங்காய‌த்தில் நன்கு ஒட்டுமாறு தேவையான அளவு சேர்த்துப்பிசையவும். பெரும்பாலும் 2 கப் கடலைமாவு சரியாக இருக்கும். இதற்கு 1 கப் சலித்த அரிசி மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சோம்பு தகுந்த உப்பு, பெருங்காய விழுது எல்லாம் கலந்து நன்கு பிசையவும்.நன்கு பிசைந்ததும் நெய்யை சூடாக்கி மாவில் ஊற்றி மறுபடியும் பிசையவும். எண்ணெயை சுட வைத்து மிதமான சூட்டில் சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான வெங்காய பக்கோடா தயார்!

 

Wednesday, 21 September 2016

தற்கொலை மரணங்கள்!!

சில நாட்களுக்கு முன், தொடர் நிகழ்வுகளாக தெரிந்தவர்கள் இல்லங்களில் தற்கொலை மரணங்கள். ஒன்றின் பாதிப்பிலிருந்து மீளுமுன் அடுத்த மரணம். முதலாவது மரணம் கிராமத்தில் நடந்தது. இள‌ம் வயது தம்பதி. ஒரு சின்ன குழந்தை மட்டும் இருந்தது. குடிப்பதற்கு காசு கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவனே ஆத்திரத்தில் மனைவி மீது மண்ணெண்னெய் ஊற்றி எரித்து விட்டான். என்னைக்காப்பாற்றுங்கள் என்று அலறியவாறே உடல் முழுக்க தீ பற்றி எரிய அப்பெண் தெருவில் ஓடி வந்த காட்சியை என் உறவினரால் பல நாட்களுக்கு மறக்க இயலவில்லை. வேதனை என்னவென்றால் கணவன் தன்னை கொல்லவில்லை, யதேச்சையாக நடந்தது என்று மனைவி மரண வாக்குமூலம் தந்தது தான்!



அடுத்ததும் குடியால் வந்தது தான். மனைவி குடிக்க காசு தராத கோபத்தில் 'இப்போது உன் கண்ணெதிரேயே சாகிறேன் பார்' என்று சொல்லி கணவன் விஷத்தைக் குடித்து விட்டான். அவன் நண்பர்கள் அலறிப்புடைத்துக்கொண்டு, பைக்கில் அவனை ஏற்றிக்கொண்டு தஞ்சை மருத்துமனைக்கு பறக்க, வழியில் பைக் விபத்துக்குள்ளாகி அவனது கதையும் அங்கேயே முடிந்து போனது.

அடுத்தது, இளம் கணவன் மனைவிக்குள் தகராறு. வீட்டிலிருந்து அனைவரும் பல‌ அலுவல்கள் காரணமாக வெளியே போகும் வரை காத்திருந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது.

30 வருடங்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதி தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் குழந்தைகள் பத்து வயதிலும் ஐந்து வயதிலும் ஒரு வயதிலுமாக இருந்தன. அதிலும் மூத்த பெண் கால் ஊனமான பெண் வேறு! கணவனின் அதிகமான குடிபோதை, அவர் கொடுத்த அடி, உதைகள், அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் சில தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டபோது நானே அவரைக் காப்பாற்றி இருக்கிறேன். பெண் குழந்தைகளை சுட்டிக்காண்பித்து நான் திட்டும்போதெல்லாம் அழுவார். நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர் இற‌ந்து விட்டார். தற்கொலை என்றார்கள். கணவன் தான் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார் என்றார்கள். ஆனால் மரண வாக்குமூலத்தில் அவர் தன் கணவன் தான் தன்னைக் கொளுத்தினார் என்று சொல்ல அவர் கணவர் சிறைக்குச் சென்றார். ஆனால் அவர்கள் மேல்தட்டு வர்க்கம், மிகுந்த பணக்காரர்கள் என்பதால் விரைவில் அவர் ஜாமீனில் வெளி வந்தார். உடனே குழந்தைகளை கவனிக்க‌ என்று திருமணமும் பண்ணிக்கொண்டார்!



35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நல ஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில் இருக்கிறது. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் தற்கொலைகள் நிகழ்கின்றன.

தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே யந்திரத்தனமாக, எந்தவித உன்னத குறிக்கோளுமில்லாமல் வளருகிறார்கள்.  இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது தாங்கிக்கொள்ள‌ முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பது அவர்களுக்குப்புரிவதில்லை.

முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள்,குழந்தைகளுக்கு பாசத்தையும் விட்டுக்கொடுத்தலையும் சொல்லிக்கொடுத்தல் போன்ற அணுகு முறைகளை இன்றைய பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

பள்ளிகளிலும் தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது, மாணவ சமுதாயத்திற்குப்பயன்படும் வகையில் ஆரோக்கியமான பட்டிமன்றங்களை அடிக்கடி நடத்தி அவர்களின் சிந்தனைகளை கூர்மைபப்டுத்துவது,சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இளம் தளிர்களை நல்வழிக்கு, நல்லுலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வளரும் பருவத்தினராவது இத்தகைய மன அழுத்தங்களுக்கு ஆட்படாமல் வளமாக வாழ வேன்டும்.


 

Sunday, 4 September 2016

குளோபல் விபாஸனா பகோடா!

Which two persons are rare in the world? One who serves others selflessly without expecting anything in return; and one who is grateful toward anyone who does one a kindness. These two persons are rare in the world. -‍ கெளதம புத்தா

சென்ற வருடம் மும்பை சென்றிருந்தபோது அமைதியான ஒரு இடத்திற்குச்  சென்றிருந்தோம்.அது தான் குளோபல் விபாஸனா பகோடா!



அமைதியான, அழகான, அசத்தலான இந்த பகோடாவை ரசித்தபோது மனதின் பிரமிப்பு ஒவ்வொரு நிமிடமும் அகலேவேயில்லை. அத்தனை அழகு! இந்த பகோடாவைச்சுற்றி பொன்னிற வண்ணத்தால் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களைப்படித்த போது மனதில் சொல்லவொண்ணாத அமைதி ஏற்பட்டது.









இந்த வாக்கியங்களும் தியானமும் உலகெங்கும் பரவினால் உலகில் எத்தனை பேர் மனத்தெளிவு அடைவார்கள், குரோதங்கள் மறைந்து எப்படியெல்லாம் அன்பினால் இந்தப் பெருவெளி நிறையும் என்று மனது ஏங்கியது. 


நுழைவாசல்
இந்த பகோடா விபாஸனா என்ற தியானம் மேற்கொள்வதற்காகவும் புத்தருடைய கொள்கைகளுக்கு நன்றி சொல்லும் வகையிலும் 2000ஆம் ஆண்டு கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. அரபிக்கடலுக்கும் கோரை என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள‌ இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மிக அருகில் அரபிக்கடலின் அலைகள் சலசலத்துக்கொண்டிருக்கின்றன. இது மும்பாயில் மேற்கு போரிவலியில் கோரை என்னும் கிராமத்தில் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பர்மீய கலைத்திறனும் இந்திய கலைத்திறனுமாய் இணைந்து கட்டப்பட்டிருக்கிறது. 2009ல் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இதைத்திறந்து வைத்தார். இந்த பகோடா கட்டப்பட்டதன் நோக்கம் இது உலக அமைதிக்கு ஒரு சின்னமாக விளங்க வேன்டும் என்பது தான்.

நுழைவாசலிலிருந்து பகோடா! முகப்புக்கட்டிடத்தின் கலைநயமான அழகைப்பாருங்கள்!
இந்திய கட்டடக்கலை நிபுணர் சந்துபாய் சோம்புரா என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது. இதன் உள்ளே அமைந்திருக்கும் சில அரிதான கற்களை பர்மீயர்கள் தானம் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்காத தங்க நிற வண்ண‌ம் பூச தாய்லாந்து மக்கள் உதவினார்கள். ஒரு மாணவர் இந்தக்கட்டிடம் அமைந்துள்ள இடத்தை தானமாக வழங்க, மற்ற மாணவர்கள் இக்கட்டிடம் கட்ட 800 கோடி ரூபாயை திரட்டிக்கொடுத்துள்ளார்கள்.

பகோடா செல்லப் படிகளில் ஏறும்போது



இது உலகிலேயே மிக நீள‌மான கல்லாலான குவிமண்டபத்தை [ DOME ]  தன்னகத்தே அடக்கியுள்ள‌து. எந்த விதமான பில்லர்கள் துணையின்றி இது கட்டப்பட்டிருக்கிறது.

பகோடாவிற்கு ஏறும் வழியில்








பகோடாவின் அழகிய பக்கவாட்டுத்தோற்ற‌ங்களும் கலை நயமிக்க வேலைப்பாடுகளும்!!








பகோடா ஏறுமுன் பக்கவாட்டில் அமைந்துள்ள‌ புத்தர் சிலை!
இதற்குள் சுமார் 8000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய வகையில் மிகப்பெரிய கூடம் அமைந்துள்ளது. சில வகை தியானங்கள் இலவசமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இந்த விபாஸ‌னா தியானம் உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

தினமும் காலை 9.30லிருந்து மாலை 7 மணி வரை மக்கள் பார்க்க அனுமதியுண்டு. மாலை 6.30 வரை நுழைய அனுமதிக்கிறார்கள். நுழைவுக்கட்டணம் கிடையாது. கீழ்க்கண்ட வலைத்தளத்தில் மற்ற தகவல்களை அறியலாம்.

http://www.globalpagoda.org/

இந்த பகோடா ஏகாந்தமான, நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதொரு இடத்தில் அமைந்திருப்பதால் சொந்தமான காரில் அதுவும் நண்பர்களுடன் போவது தான் நல்லது. மாலை நான்கு மணிக்குச் சென்றால் வெய்யிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் எல்லாவற்றையும் ரசித்துப்பார்க்கலாம். மாலை ஐந்தரைக்குத் திரும்பி விடலாம்.