Wednesday, 13 April 2016

முத்துக்குவியல்-41!!!

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும்
இனிய‌     தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


முத்துக்குவியல்-41!!!
உயர்ந்த முத்து:

பார்வையற்றோருக்கு இது ஒரு விடியல்! ஆந்திர மாநிலம் திருச்சானூருக்குப்போகும் வழியில் இயங்கி வரும் ' நவஜீவன் சென்டர் 'ஆதரவற்ற, முக்கியமாக பார்வையற்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறது. கிட்டத்தட்ட பத்தாயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. 200க்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைத்திருக்கிறது! வயது முதிர்ந்தோருக்கு மாத வருவாயும் தொழுநோயாளிகளுக்கு நிதி உதவியும் செய்திருக்கிறது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ உதவி செய்திருக்கிறது. முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்திருக்கிறது.

இதன் நிறுவனர் ஸ்ரீதர் ஆச்சார்யா ராணுவத்தில் பணி புரிந்தவர். ஒரு நாள் சூரிய கிரகணத்தை நேருக்கு நேர் பார்த்த போது இவரது விழிகள் பார்வை இழந்து விட்டன. சிகிச்சைகள், பிரார்த்தனைகள் மூலம் தன் பார்வையை திரும்பப்பெற்றதாகக் கூறும் இவர், சிந்து நதிக்கரையில் நின்று கொண்டிருந்த போது பார்வையற்றவர்களுக்காகவும் ஆதரவற்றவர்களுக்காகவும் நல்லது செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து  1979ம் ஆண்டு இந்த ஸ்தாபனத்தைத்தொடங்கியவர்!

குறிப்பு முத்து:

தேளைக் கொல்வத‌ற்கு:

வீட்டில் எங்காவது தேளைப்பார்த்து விட்டால் நாம் பதட்டத்துடன் எதையாவது தேடி எடுத்து வந்து அடிப்பதற்குள் தேள் விரைவாக நகர்ந்து சென்று விடும். இதைத்தவிர்க்க, அதனிடமிருந்து அரை அடி தூரத்தில் இருந்து கொண்டு வாயினால் ஊதவும். ஊதும்போது அதில் இருக்கும் ஆவி தேளின் மீது பட்டதும் தேளால் அசைய முடியாது. கால் மணி நேரத்திற்கு அதால் நகர முடியாது. அடையாளத்திற்கு அருகில் ஒரு விளக்கையோ அல்லது டார்ச் லைட்டின் ஒளியையோ வைத்து விட்டு பின் எதையாவது எடுத்து வந்து கொல்லலாம்.

சிந்தனை முத்து:

ஆறு மாதங்கள் முன் மும்பை செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் நுழைந்த போது நிறைய வித்தியாசங்கள் கண்களில் புலப்பட்டன. கடைகளுக்கிடையே மாமல்லபுர சிற்பங்களை நகலெடுத்த மாதிரியான சில சிற்பங்களுடன் கூடிய ஒரு அழகிய மண்டபம் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நம் நாட்டுக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாய் தென்பட்ட அந்த கோபுரத்தின் அழகைப் பார்த்து பெருமையுடன் நகர்ந்தேன். கண்ணில் தென்பட்டது தமிழ் தினசரிகள் தொங்கிய ஒரு ஸ்டால். விடியற்காலையிலேயே ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டதால் வழியில் எந்த் தினசரியும் வாங்க முடியவில்லை. ஏதேனும் தமிழ் தினசரி வாங்கலாம் என்று அருகில் சென்று கேட்டபோது தான் அவை பிரயாணிகளுக்கான இலவச தினசரிகள் என்று தெரிந்தது. என் கணவர்
' நாம் கொச்சின் ஏர்ப்போர்ட்டில் தான் முன்பு இலவச தினசரிகள் பார்த்திருக்கிறோம். பரவாயில்லை. சென்னையிலும் வந்து விட்டது.' என்று சொன்னார்கள். உடனேயே ' என்ன இது, கொச்சினைப்பற்றி பெரிதாகச் சொல்கிறார்கள். அங்கே என்ன இருக்கிறது!!' என்ற கிண்டல் பின்னால் கேட்டது. அந்த ஸ்டாலின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு இளைஞன் தான் அந்த தினசரிகளுக்குப் பொறுப்பாளராக இருந்த இன்னொரு இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தான். நாங்கள் கவனிப்பது தெரிந்ததும் மேலும் கிண்டலாக ' கேரளாவில் அப்படி என்ன சார் இருக்கிறது?' என்று கேட்டார். என் கணவர் ' முன்பு சென்னை விமான நிலையத்தில் இந்த மாதிரி வசதிகள் இல்லை.
இப்போது இருப்பதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அதில் என்ன பிரச்சினை?" என்றார்கள். ' கேரளாவில் என்ன சார் இருக்கிறது? சென்னை மாதிரி ஐடி கம்பெனிகள் அங்கே இருக்கிறதா? அந்த வேலைக்கெல்லாம் அவர்கள் சென்னையைத்தேடித்தானே வருகிறார்கள்?' என்று அந்தப் பையன் சொன்னார். அவரின் குறுகிய அறிவு எனக்கு ஆச்சரியமாக இருந்தது! என் கணவர் சொன்னார்கள், ' பல வருடங்களுக்கு முன் மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாக இருந்தபோது கொச்சின் ஏர்போர்ட்டை விரிவுபடுத்த அப்போதைய நிலையில் 11 கோடி தேவைப்பட்டது. அதற்காக மொரார்ஜி தேசாய் தயங்கியபோது வளைகுடா வாழ் கேரள மக்கள் எல்லாம் ஒன்று கூடி நாங்களெல்லாம் அந்தப்பணத்தைத் திரட்டித்தருகிறோம் என்று சொன்னார்கள். அதற்கு 'அப்படி ஒத்துக்கொள்வது எனக்கு இழுக்காகி விடும்' என்று அவர் சொல்லி விரிவாக்கம் செய்த ஏர்போர்ட் அது. எங்கெல்லாம் திறமையும் நல்லவையும் இருக்கிறதோ, அதையெல்லாம் பாராட்ட மனப்பக்குவம் வேண்டும் தம்பி' என்றார்கள். அப்புறம் அந்தப்பையன் பேசவேயில்லை.

ரசித்த முத்து:

இந்தப்பாடல் கேட்கும்போதெல்லாம் மனதை கனமாக்கி விடும். அதன் காட்சிகளும் அப்படியே.மருத்துவ முத்து:

பத்திரிகையில் படித்த இந்த செய்தியை என் தோழி கூறினார். பலருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.

பல் வலிக்கு பத்தே நிமிடத்தில் தீர்வு!!!

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை (இலங்கை தமிழர்கள் சீனி என்று பயன்படுத்துவார்கள் )வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள்.  
 

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உயர்ந்த முத்து மிக உயர்வானதும் பாராட்டத்தக்கதுமாகும்.

தேள் பற்றிய குறிப்பு முத்து வியப்பளிப்பதாக உள்ளது. நாம் வெளிவிடும் வாய்க்காற்றில் உள்ள ஆவி, விஷமுள்ள தேளையே ஆடாமல் அசையாமல் செய்துவிடுமா!

சிந்தனை முத்தும் சிறப்பாக உள்ளது.

ரசித்த முத்து வீடியோ காட்சி அழகாக மிகவும் ரசிக்க வைப்பதாகவே உள்ளது.

மருத்துவ முத்து, பல்லுள்ள + அதில் வலியுள்ள பலருக்கும் பயன்படக்கூடும்.

பயனுள்ள பல்சுவை முத்துக்களின் பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

துரை செல்வராஜூ said...

தேர்ந்தெடுத்துத் தொடுத்திருக்கும் முத்துகள் அனைத்தும் - அருமை..

வாழ்க நலம் என்றென்றும்..

KILLERGEE Devakottai said...

பயனுள்ள தகவல் களஞ்சியம் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

அருள்மொழிவர்மன் said...

அனைத்தும் நல்ல பயனுள்ள முத்துக்கள்..
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நிலாமகள் said...

நலம்தானா தோழி...

அப்பா வீடு ஓட்டு வீடாக இருந்த காலத்தில் நாங்கள் விவரம் தெரிந்த வயதிலேயே கோடை காலத்தில் மேலே வாரையிலிருந்து தேள் விழுவது சகஜம். பெரியவர்கள் மூன்று முறை வாயால் ஊதிவிட்டு பிறகு விளக்குமாறு எடுத்து வந்து அடிப்பார்கள். பார்த்துப் பார்த்து நாங்களும் பயமின்றி ஊதி அடிப்போம். அது சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிற்கும் என்றதை நம்பிய காலம் அது.

திறமையும் நல்லதும் எங்கிருந்தாலும் மதித்துப் பாராட்ட வேண்டுமென்ற தங்கள் கணவரின் கருத்தும் அதை ஆணித்தரமாக சொன்னதும் அழகு.

பல் வலிக்கு வாயினுள் சிறு வெல்லத் துண்டு வைத்துக் கொண்டும் இந்த வைத்தியம் செய்யலாமெனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

தங்களின் பாராட்டுக்களுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுரைக்கு அன்பு நன்றி அருள்மொழிவர்மன்!

மனோ சாமிநாதன் said...

எப்படியிருக்கிறார்கள் நிலாமகள்? உங்களுக்கும் இந்தத் தேள் வைத்தியம் பற்றித் தெரிந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இனிய பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!