Saturday 15 August 2015

பழமொழிகளும் அவற்றுள் மருத்துவமும்!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!

வயதானவர்கள் அதுவும் கிராமத்துப்பெண்மணிகள்  சாதாரணமாகப் பேசும்போதே அழகழாய் பழமொழிகளை இடையிடையே உதிர்ப்பார்கள். அத்தனைக்கும் நமக்குப் பொருள் விளங்காது. அதுவும் சிறிய வயதில் சுத்தமாகப்புரியாது. வயதாக வயதாக அவைகளின் அர்த்தங்கள் ஆழமாகப்புரியும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். இவர்களெல்லாம் எங்காவது பள்ளி சென்று படிக்கவா செய்தார்கள்? அனுபவ மொழிகள் தான் அவை. அப்படியான‌ பழமொழிகளும் அவற்றுக்கு மருத்துவ பலன்கள், அர்த்தங்கள் அடங்கிய புத்த‌கம் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது.

புத்தகத்தின் பெயர்: வாய்மொழி இலக்கியமும் பாரம்பரிய மருத்துவமும்.

ஒரு மருத்துவர் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். படிக்கப்படிக்க அத்தனையும் பிரமிப்பாக இருந்தது எனக்கு! அதில் சில துளிகள்....



தென்னை வைத்தவன் தின்னு சாவான்
பனை வைத்தவன் பார்த்து சாவான்


பண்டைய காலத்தில் கோவில்களைக் கட்டிய போது அதனுள் ஸ்தல விருட்சங்களாக மூலிகை மரங்களையும் நட்டு வைத்தார்கள் நம் முன்னோர்கள். அதன் காரணங்களை அறிந்தால் வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மரத்திற்கும் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்ற கணக்கு இருக்கிறதாம். அதை வைத்து இந்தக் கோயில் கட்டி முடித்து இத்தனை ஆண்டுகள் ஆயின என்பதைப் பிற்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள‌வும் ஒவ்வொரு மரத்திலிருந்தும் பிராண‌ன், வியானன் போன்ற உயிர் சக்திகக்ள் கிடைப்பதால் அதை சுவாசித்து மக்கள் நலமுடம் பெரு வாழ்வு வாழ வேண்டுமென்பதற்காகவும் இப்படி ஸ்தல விருட்சங்கள் நட்டு வளர்க்கப்பட்டதாம்! உதாரணத்திற்கு தாளிப்பனை என்ற ஒரு வகை பனை மரம் 1000 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மையுடையதாம். விதை ஊன்றியதிலிருந்து அது வளர்ந்து மரமாகி காய்த்து பலன் கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆயிரம் ஆண்டுகள் ஆகி விடுமாம். இந்த வகை பனை ஓலைகளில் தாம் நம் முன்னோர்கள் ஓலைச்சுவடிகளாய் பயன்படுத்தி அற்புதமான பாடல்களையும் வைத்திய முறைகளையும் எழுதி விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் தென்னை குறுகிய காலத்தில் ஐந்து ஆண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் பூத்து காய்க்கத்தொடங்கி விடும். ஆனால் பனை மரமோ பூத்து காய்க்க பதினைந்து முதல் இருபது வருடங்களாகி விடும். அதனால் தான் தென்னை குறுகிய காலத்தில் பலன் தருவதால் அதன் பலனைப்பெற்று தின்று சாவான் என்றும் பனை பல ஆண்டுகள் கழித்து பலனைத்தருவதால் பலனை அடைய முடியாமல் பார்த்து சாவான் என்றும் வந்தது பழமொழி!

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்.


அக்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் நாம் உண்ணும் முறை, உறங்கும் காலம், அவற்றை நெறிப்படுத்துதல் போன்ற பல விந்தையான விஷயங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள். நாம் உண்ணும் உணவு சீரணமாக எவ்வளவு நேரத்தை உடல் எடுத்துக்கொள்ளும், ஒரு கரு உண்டானால் அது வளர்வதற்கு எத்தனை காலம் எடுத்துக்கொள்ளும் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளார்கள். நாம் பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை எட்டு பருவங்களாகப்பிரித்து ஒவ்வொரு பருவத்துக்குமான சிறப்பையும் விளக்கிக் கூறியுள்ளார்கள். முப்பது வயது வரை உடல் செல்கள் வளர்ச்சிக்காலம் என்பதால் முப்பதிற்குள் திருமணம் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள்.
முப்பது வ‌யதிற்குள் செரிமானமாகாத உணவுகள் சாப்பிட்டாலும் கூட செரித்து விடுமாம்.  ஆ+நெய் என்பது பசு நெய். இது ஒன்று முதல் முப்பது வயது வரை உண்டு உடலை பலமுடையதாக வளர்க்கலாம். பூ+நெய் என்பது தேன். இதை முப்பது வயது முதல் 50 வயது வரை உண்டு உடல் ஆரோக்கியத்தை சரியாக வைத்துக்கொள் என்பது தான் இதற்கு அர்த்தமாகுமாம்.

விட்டதடி உன்னாசை விளாம்பழத்தின் ஓட்டோடு!

பண்டைய காலத்தில் விலைமாதர்கள் புழக்கம் அதிகமிருந்தது. தன்னிடம் வந்து சேரும் ஆண்மகனுக்கு அவர்கள் அறியாமல் உணவோடு இடுமருந்து கொடுத்து விடுவார்களாம் அப்பெண்டிர். அது குடலோடு ஒட்டிக்கொன்டு சதா சர்வ காலமும் வலி ஏற்படுத்தி உணவினை ஒழுங்காக உண்ண‌ முடியாமல் இளைக்க வைத்து பலம் குன்றச் செய்யுமாம். அந்த ஆண்மகனுக்கு வெளியேறிச் செல்லக்கூட தென்பில்லாது போய் விடுமாம். அப்படி உடல் நலம் கெட்டவர்களுக்கு விளாம்பழத்தை தொடர்ந்து கொடுத்து வந்தால் இழந்த பலம் திரும்ப வருமாம். இழந்த பலம் திரும்பும்போதே விலைமாதர்கள் மீது ஏற்பட்ட மோகமும் இந்தப்பழமொழி போல பறந்து விடுமாம்!

எட்டி பழுத்தால் என்ன, ஈயாதவன் இருந்தால் என்ன?

எட்டிப்பழம் அதிக விஷத்தன்மையுடையது. அதனால் யாரும் அதை விரும்பி உண்ண முடியாது. மருத்துவ ரீதியில் அதன் சதைப்பகுதியையும் தோல் பகுதியையும் அந்த கால சித்தர்கள் மருந்தாக உபயோகப்படுத்தி வந்திருந்தாலும் பழமாக அது மனிதர்களுக்கு உபயோகப்பட்டதில்லை என்பது இந்த வரியின் பொருள்.

அது போல மற்ற‌வர்களுக்கு உதவி செய்யாதவர்கள் உயிரோடிருந்து என்ன பயன் என்பதை இங்கே அழகான் ஒரு சிறு கதை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். பசியால் துடித்த ஒருவன் மற்றவர்களின் பசியறிந்து அன்னமிடும் ஒருவன் வீட்டிற்கு செல்லுகையில் வழி தவறி கருமி ஒருவனிடம் சென்று மிகவும் பசிப்பதாகச் சொல்லியிருக்கிறான். அதற்கு அந்தக் கருமியோ, ' நான் சாப்பிடுகையில் காகம் வந்தால்கூட அதை என் சாப்பிடும் கையால் விரட்ட மாட்டேன். காரணம், நான் கையை ஆட்டும்போது ஒரு பருக்கையாவது கீழே விழுந்து விட்டால் அதை அந்தக் காகம் தின்று விடும்' என்று கூறி தன் ஆள் காட்டி விரலால் இன்னொரு வீட்டை சுட்டிக்காண்பித்து ' நீ தேடி வந்திருக்கும் வீடு அது தான். அங்கு போய் சாப்பிடு' என்றானாம். அந்தக் கருமி சில நாட்களுக்குப்பிறகு இறந்த போது, அவன் உயிர் போயும் அவன் விரல் மட்டும் உயிரோடு சில நிமிடங்கள் துடித்துக்கொண்டிருந்ததாம். தான்  தானம் செய்யாவிட்டாலும் தானம் செய்த வீட்டைச் சுட்டிக்காண்பித்ததற்கே இந்தப் பலன் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களின் வாழ்க்கை எத்தனை சிறப்பாக, பயனுடையதாக இருக்கும்?

இப்படி மிக சுவாரசியமாக பல பழமொழிகளை ஆசிரியர் ப.செல்வம் இந்தப்புத்தகத்தில் மருத்துவ விளக்கங்களுடனும் அதன் பயன்களுடன் சொல்லியிருக்கிறார்.

புத்தகம் கிடைக்குமிடம்:
ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவ சேவை மையம், 
629, பேஸ் 2,சத்துவாச்சேரி, வேலூர் 632 009
தொலைபேசி: 94434 22935
விலை: 150






 

19 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

பழமொழிகள் அறிந்ததுதான் ஆனால் அவற்றுக்கு இப்படி விளக்கம் கொடுத்து..அவற்றின் சிறப்பை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

சிறந்த விமர்சனம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பயனுள்ள நூல் அறிமுகம். வாய்ப்பு கிடைக்கும்போது படிப்பேன். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பழமொழி விளக்கம்!நல்ல நூல் அறிமுகம்! நன்றி!

தி.தமிழ் இளங்கோ said...

வழவழ என்றில்லாமல், நூலில் இருந்தே எடுத்துக் காட்டுக்கள் தந்து நல்லதொரு விமர்சனம் செய்தீர்கள். வாய்ப்பு கிடைத்தால் இந்த நூலை வாங்கி படிக்கிறேன்.

Adirai anbudhasan said...

படித்தவரை வித்தியாசமான விளக்கங்கள், புத்தக அறிமுகத்துக்கு நன்றி

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்களுடன் நல்லதொரு புத்தகத்தின் அறிமுகம். சுவாரஸ்யம்.

Iniya said...

wow பயனுள்ள பதிவு புதிய தகவல்கள்.நன்றி வாழ்த்துக்கள் ...!

இளமதி said...

மிக மிக அருமை அக்கா!
தெரிந்திராத விளக்கங்கள். அனைத்தும் சிறப்பு!

நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

Thenammai Lakshmanan said...

பழமொழிகளும் மருத்துவமும் அசத்தல். பகிர்வுக்கு நன்றி மனோ மேம் :)

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

சுதந்திர தின வாழ்த்துக்களூக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி அதிரை அன்புதாசன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி இனியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!