Monday, 28 April 2014

இதயத்திற்கும் வயிற்றிற்கும் நலம் காண...!!

இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் காக்க நாம் வீட்டிலேயே ஒரு ஜூஸ் தயார் செய்து தினமும் அருந்தலாம். என் கணவரின் சகோதரர், இரு முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதை தினமும் அருந்துவதை வழக்கமாகக் கொன்டிருக்கிறார்கள். அவ்வப்போது செய்து கொள்ளும் அவர்களுடைய இரத்தப் பரிசோதனைகள், மற்ற‌ இதய பரிசோதனைகள் அனைத்தும் சீராகவே இருந்து வருகிறது. இந்த ஜூஸ் செய்யும் முறையை இப்போது விளக்கமாக எழுதுகிறேன். இதை அனைவரும் தினமும் அருந்தலாம்.






தேவையான பொருள்கள்:

இஞ்சி சாறு‍ 1 கப், பூண்டு சாறு‍ 1 கப், ஆப்பிள் சிடார்  வினீகர்‍ 1 கப், எலுமிச்சை சாறு‍ 1 கப்

செய்முறை:

1 கப் இஞ்சி சாறு செய்ய இரண்டு கப் துருவிய இஞ்சி எடுத்து போதுமான நீரை சேர்த்து மையாக அரைக்க வேண்டும். அரைத்த பேஸ்ட்டுடன் 1 கப் அளவு வரும் வரை நீர் சேர்த்து ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, அந்த இஞ்சி சாற்றை அரை மணி நேரம் தெளிய விடவும். மேலே தெளிந்து கீழே வெண்மை படிந்திருக்கும். தெளிந்த இஞ்சி சாறு மட்டுமே ஒரு கப் அளந்து எடுத்துக்கொள்ள‌வும்.

பூண்டு சிறியதாய் இருப்பது நல்லது. தோல் உரித்து அல்லது தலையை மட்டும் கிள்ளி எடுத்துக்கொன்டு தோலுடன் மையாக அரைக்கவும். போதுமான நீர் கலந்து மெல்லிய துணியில் வடிகட்டினால் தெளிந்த பூண்டு சாறு கிடைக்கும்.

1 கப் எலுமிச்சை சாறு எடுக்க ஐந்து அல்லது ஆறு எலுமிச்சம் பழங்கள் தேவைப்படும்.

அனைத்து சாறுகளுடன் ஆப்பிள் சிடார் வினீகர் கலந்து சிறு தீயில் அரை மணி நேரம் காய்ச்சவும். 3 கப்பாக குறையும் வரை காய்ச்ச வேண்டும். பின் அதை நன்றாக ஆற வைத்து 3 கப் சுத்தமான தேன் கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

இதை தினமும் காலை உணவுக்கு முன் ஒரு மேசைக்கரண்டி சாப்பிட்டு வர வேண்டும்.

ACIDITY எனப்படும் நெஞ்செரிச்சல்:

இந்தப்பிரச்சினை இன்றைக்கு பலரையும் பாதிக்கிற‌து. வாயில் சுரக்கின்ற அமிலம் உண்வுப்பாதையில் திரும்ப வருவதால் வயிறு அல்லது நெஞ்சில் வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, உப்புசம் ஏற்படுகிறது. சரியான உனவுப்பழக்கத்தின் மூலம் இந்தப்பிரச்சினையை சரியாக்கிக்கொள்ல முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சில் சமயங்களில் மன‌ அழுத்தம், மாத்திரைகள் இவற்றாலும் கூட இந்த அசிடிட்டி உருவாகிறது.

பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெயின் ஆகிய என்சைம்க‌ள் அதிக அளவில் உள்ள‌ன. எனவே இந்தப்பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். முட்டைக்கோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப்பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் என்னும் அமினோ அமிலம் முட்டைக்கோசில் நிறைய உள்ளது. எனவே முட்டைக்கோஸை சாறகவோ அல்லது சாலட் ஆகவோ அல்லது சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இஞ்சி டீ குடிப்பது நல்லது. செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி இது விடுகிறது.

அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மசாலா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அமிலத்தன்மை நிறைந்த உண‌வுகளான தக்காளி, சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும். காப்பி, டீ போன்ரவைகளை கண்டிப்பாக தவிர்த்து, க்ரீன் டீ குடிப்பது நல்லது. கொழுப்புச்ச்த்துள்ள‌ பால், அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். சீரகம், சோம்பு, புதினா இவற்றை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.

Sunday, 13 April 2014

முத்துக்குவியல்-27!!



                               அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்     
                              புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

                                   *************

முத்துக்குவியல்-27!!

மருத்துவ முத்து:



இந்தப்பொடியை செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் காப்பி, தேனீருக்கு பதிலாக பருகி வருவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

உடல் உஷ்ணம் சீராக, இரத்த அழுத்தம் சீராக இருக்க,

100 கிராம் தனியா, 100 கிராம் தோல் சீவிய சுக்கு, 10 கிராம் ஏலம் முதலிய பொருள்களை எடுத்து இலேசாக வறுத்துப்பொடிக்கவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு, பால் தேன் கலந்து பருகவும்.

அசத்தும் சேவை முத்து:

அண்மையில் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்குள்ள‌ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். மருத்துவ மனையின் உரிமையாளரான மருத்துவரும் உறவினரும் பள்ளிக்கால நண்பர்கள். அதனால் அந்த மருத்துவர் சொல்வதை யாராலும் மறுக்க முடியவில்லை. இரத்தம் குறைந்திருக்கிறது, கிரியாடினின் ஏறியிருக்கிறது என்று சொல்லி சிகிச்சை செலவு 60000 வரை ஆகி விட்டது. அப்புறம் இன்னொரு சிறுநீரக சிறப்பு மருத்துவர் அவரும் தெரிந்தவர் தனிமையில் ' சில விஷயங்களை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. அவருக்குப்பெரிதாக எதுவும் பிரச்சினையில்லை, இன்றே அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை என்று எழுதி அனுப்பச் சொல்லி விடுகிறேன்' என்றார். ஒரு வயதான நோயாளியின் குழம்பிய மனநிலையைப்பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எத்தகைய சுயநலமான, கொடூரமான விஷயம்? அதற்கு நேர்மாறான விஷயத்தை இங்கே படியுங்கள்.

சென்னை, அடையாறு இந்திர நகரிலுள்ள ஸ்ரீமாதா கான்ஸர் கேர் காப்பகம் புற்று நோய் முற்றிய நிலையிலுள்ள‌ ஏழை நோயாளிகளுக்காக அருமையான சேவை செய்கிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக செய்கிறது.நோயை ஞாபகப்ப்டுத்தும் சூழல் இல்லாது ஆறுதலும் மருந்துகளும் மன சாந்தியும் தரும் இடமாக இது விளங்குகிறது. இங்கு அடைக்கலமடைய ஒரே நிபந்தனை, நோய் முற்றிய ஏழை புற்று நோயாளியாக இருக்க வேண்டும் என்பது தான்! இப்போது சிறுநீரகப்பிரச்சினைகளால் அவதிப்படும் ஏழைகள் இலவசமாக டயாலிஸிஸ் செய்து கொள்ள‌ புதிய மையமும் தொடங்கப்பட்டுள்ள 2 யூனிட்டுகள் மூலம் மாதம் 100 எழைகள் பயன்பெறும் வகையில் இது செயல்படுகிறது. எத்தனை உன்னதமான சேவை இது! இதன் நிறுவனர் விஜயஸ்ரீயை பாராட்ட வார்த்தைகள் ஏது?

ஆச்சரியப்படுத்திய முத்து:



நாய் வாலை ஆட்டுவது நட்பை உணர்த்தவே என்று நாம் நினைத்திருக்கிறோம். அது உண்மையில்லையாம்! அது தனக்கு வலப்புறமாக வாலை ஆட்டினால் மட்டுமே நட்பு என்று அர்த்தமாம்! தனக்கு இடது புறமாக வாலை ஆட்டினால் வெறுப்பு என்று அர்த்தமாம்! இப்படி ஒரு ஆராய்ச்சி சொல்கிறது!!

ரசித்த முத்து:

ஒழுக்கம் என்பது மரம். புகழ் என்பது அதன் நிழல். நாம் எப்போதுமே நிழலைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறோம். மரத்தை நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்!

சொன்னவர் ஆப்ரகாம் லிங்கன்!

ரசித்த பழம்பாடல்:



ஒளவையாரின் பாடல்கள் என்றுமே எனக்குப்பிடித்தவை. நான் மிகவும் ரசித்த ஒரு பாடல் இது. மனிதர்களுக்கு எப்படிப்பட்ட உவமானக்களைக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்!!

பாடல்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்.

கருத்து:

சொல்லாமல் உதவி செய்பவர்கள் பூக்காம‌லே காய்க்கும் பலாமரம் போன்றவர்கள். சொல்லிவிட்டு உதவி செய்பவர்கள் பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். உதவுவதாகச் சொல்லிவிட்டுச் செய்யாதவர்கள் பூத்துவிட்டுக் காய்க்காத பாதிரிமரம் போன்றவர்கள்.






Monday, 7 April 2014

நுகர்வோரின் உரிமைகள் பற்றி....!!

அனு தினமும் நுகர்வோருக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சிறிய பொருள் வாங்குவதிலிருந்து பெரிய அளவில் பொருள்கள் வாங்குவது வரை மோசடிகள் நடக்கின்றன. அவற்றைத் தட்டிக்கேட்க முடியாது, தட்டிக்கேட்டாலும் வரும் பிரச்சினைகளுக்கு பயந்து பல நேரங்களில் அமைதியாக இருந்து விடுகிறோம். மருத்துவ மனைகளில் பல மோசடிகள் நடக்கின்றன. வயிற்றைத்திறந்து அறுவை சிகிச்சை செய்யும்போது இன்னொரு உறுப்பையும் நீக்கும் கொடுமைகள் நடக்கின்றன. மானத்திற்கு பயந்து, கேள்விகளை எதிர்கொள்ளும் துணிவு இன்றி நாம் தயங்குவதில் மன சாட்சியின்றி கொடுமைகள் அரங்கேறுகின்றன. சமீபத்தில்  தாய்மையடைய முடியாது தவித்த ஒரு இளம் பெண்ணை செயற்கைக்கரு உண்டாக்கித்தருவதாக கூறி ஒரு மருத்துவர் பல லட்சங்கள் வரை ஏமாற்றி இருக்கிறார். இன்னொரு மருத்துவரிடம் தான் தாய்மையடையவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த பெண் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததால் அந்த மருத்துவரின் மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருவதுடன் அந்த மருத்துவரின் மருத்துவ மனையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாம் செலவு செய்யும் பணத்திற்கான நியாயமான மதிப்பு நமக்கு வழங்கப்பட வேன்டும். அதற்கு பதிலாக அந்த மதிப்பு தரம் குறைந்ததாகவோ, ஏமாற்றம் அளிப்பதாகவோ, மோசடி நடந்திருப்பதாக நமக்கு புரிந்தாலோ நாம் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியும். யாருக்கேனும் எள்ளளவாவது பயன் தராதா என்ற விழைதலில்  ஒரு மாத இதழிலும் வார இதழிலும் நான் படித்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தைப்பற்றிய விபரங்களை இங்கே பகிர்கிறேன்!!
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்:

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 1986ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. நீதிமன்றங்களில் உயர் நீதி மன்றம், கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் இருப்பது போல, மாவட்டங்களில் 'மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள், மாநில அளவில் ' மாநில ஆணையம்', தேசீய அளவில் ' தேசீய ஆணையம்' அமைக்கப்பட்டிருக்கின்றன. 20 லட்ச‌ம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நாம் கேட்கும் நஷ்ட ஈட்டுட்தொகை 20 லட்சத்திற்குள் இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்திலும் 20 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருந்தால் மாநில நுகர்வோர் நீதி மன்றத்திலும் ஒரு கோடிக்கு மேல் நஷ்ட ஈடு கோரப்பட்டால் தேசீய ஆணையத்திலும் நமது புகாரைப்பதிவு செய்ய வேன்டும்.
முதலில் கட்டணம் எதுவுமில்லாமல் தான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் பல‌ பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் தேவையின்றி பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாலும் 2006ம் ஆண்டு கட்டணம் நிர்னயிக்கப்பட்டது.

1 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு 100 ரூபாய் கட்டணம் என்றும் 1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு 200 ரூபாய் கட்டணம் என்றும் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு கட்டணம் 400 ரூபாய் என்றும் 10 லட்சம் முதல் 20 ல்ட்சம் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு 500 ரூபாய் கட்டணம் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
வழக்கு தொடர விரும்புவோர் அவரின் எல்லைக்குள் இருக்கும் நுகர்வோர் நீதி மன்ற்த்தில் தான் வழக்கு தொடர முடியும். பிரச்சினை ஏற்பட்டதிலிருந்து 2 வ்ருடங்களுக்குள் வழக்கு தொடரப்பட வேண்டும். பிரச்சினைக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

நமக்கு பொருள்கள் விற்பனை செய்யும் த‌னியார் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களும். இதில் எல்லாவித வியாபார நிறுவனங்களும் அடக்கம்.
நம்மிடமிருந்து பணம் வாங்கிக்கொன்டு  சேவைகள் வழங்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள். மின்வாரியம், குடி நீர் வாரியம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்ற அனைத்து நிறுவனங்கள்.
கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது மோசடியான விளம்பரங்கள் மூலம் மக்களை தரமில்லாத பொருள்களை வாங்கச் செய்யும் ஏமாற்றுத்தந்திரங்கள் நுகர்வோர் வழக்கின் கீழ் வராது. ADVERTISING STANDARDS COUNCIL OF INDIA என்ற பெயரில் மும்பையில் இயங்கிக்கொன்டிருக்கும் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

ஒரு முறை ஒருவர் ஒரு சொத்து வாங்க நினைத்து, அதற்குரிய சப் ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வில்லங்க சர்டிபிகேட் விண்னப்பித்தார். எந்த வில்லங்கமும் அந்தச் சொத்தில் இல்லை என்று அவருக்கு வில்லங்க ச்ர்டிபிகேட் தரப்பட்டது. அதை நம்பி சொத்தை வாங்கிய அவருக்கு, அதன் பின்பு தான் அந்தச் சொத்தில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. தனக்கு தவறான வில்லங்கச் சான்றிதழ் கொடுத்ததனால் தனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது என்று கூறி அவர் அந்த அலுவலகம் மீது நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சான்றிதழில் தவறு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட இலாகா பொறுப்பல்ல என்று குறிப்பிட்டே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள‌து என்று அரசு தரப்பில் வாதாடியும் அதை நிராகரித்த நீதி மன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
 
வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம். அதில் போடப்பட்டுள்ள‌ விலைப்பட்டியலுக்கு அதிகமாய் பணம் வாங்கினாலோ, அல்லது அதில் போடப்பட்டிருக்கும் எடை சரியாக இல்லாமல் குறைவாக இருந்தாலோ, தரம் குறைவாக இருந்தாலோ, உடனடியாக அதைப்பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். தன் தவறை அவர் ச‌ரி செய்யாவிடில், அவருக்கு நீங்களே குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை சரி செய்யாவிடில் நுகர்வோர் வழக்கு தொடரப்படும் என்று அத்தாட்சியுடன் கூடிய பதிவுத்தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அந்த நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அதைப்போல் பொருள் வாங்கியதற்கான ரசீது, விலை அச்சடிக்கப்பட்ட பாகிங் கவர் எல்லவற்றையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். எடை சம்பந்தமான பிரச்சினை என்றால் பாக்கிங்கை பிரிக்காமலேயே ஊர்ஜிதம் செய்து கொள்வது நல்லது. பாக்கிங்கை பிரித்து விட்டால் வழ‌க்கு தொடர முடியாது.

நுகர்வோர் பிரச்சினைகள் தனியார்களின் இலவச நிறுவனங்கள் மூலமும் தீர்க்கப்படுகின்றன. CONSUMER ASSOCIATION OF INDIAஎன்கிற தன்னார்வத்தொண்டு நிறுவனமும் நுகர்வோர் பிரச்சினைகளை பெரும் முயற்சி எடுத்து தீர்த்து வைக்கின்றன. கடந்த 11 வருடங்களில் கிட்டத்தட்ட பத்தாயிரம் வழக்குகளை ச்ந்தித்து அவற்றில் 88 சதவிகித வழக்குகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். 044 6633 என்ற எண்ணுக்கு ஒரு நுகர்வோராக உங்கள் புகார்களை தமிழிலோ, ஆங்கிலத்திலோ பதிவு செய்யலாம்.அடுத்த நாளே இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். விரிவான தகவல்களை கேட்டுத்தெரிந்து கொண்டு ஆலோசனைகள் சொல்வதுடன் வழக்கறிஞர்களுடன் விவாதித்து, அந்த வழக்கில் நமக்கு நியாயம் கிடைக்கும் வரை துனையாக இருக்கிறது இந்த நிறுவனம். இந்த சேவைகள் எல்லாம் இலவசமே. விருப்பம் உள்ள‌வர்கள் ஒரு சின்னத்தொகையைக்கட்டி இந்த அமைப்பில் உறுப்பினராகலாம். உறுப்பினர்களுக்கான பிரத்தியேக சலுகைகள் உள்ள்ன.