Sunday 16 February 2014

ஒரு கல்யாணத்தின் கதை!

தெரிந்த குடும்பமொன்றில் ஒரு பிரச்சினை! நடுத்தர வர்க்கம் அவர். அவரின் அண்ணன் மகளுக்குத் திருமணம். வெளி நாட்டில் வேலை செய்பவர் அவரின் அண்னன். அங்கிருந்து தமிழகம் வந்து பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து முடித்து நிச்சயம் செய்து விட்டார்கள். அண்ணனும் நிச்சயம் முடிந்ததும் தன் தம்பிகளை அழைத்து ஒவ்வொருத்தரும் மாப்பிள்ளைக்கு இரண்டு பவுனுக்கு செய்து விடுங்கள் என்று உத்தரவு போட்டு விட்டார். இங்கு தான் நம் நண்பரின் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. தன் அளவான வருவாயில் எப்படி இரண்டு பவுன் போடுவது? இவருக்கோ, தான் அப்படி செய்யாமலிருந்து மற்றவர்கள் செய்தால் சபை நடுவில் தன் மானமும் மரியாதையும் போய் விடும் என்ற குமைச்சல். இவர் மனைவிக்கோ, இதற்கு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் செலவாகும், கடன் தானே வாங்க வேன்டும், இந்த செலவு தேவையா, இப்படி எல்லோருக்கும் கடன் வாங்கி செலவு செய்து கொன்டிருந்தால் தன் குடும்பம் என்னாவது என்ற ஆற்றாமை! பேச்சு வார்த்தைகள் காரசாரமாக போய்க்கொன்டிருந்தாலும் கணவர் தன் பிடியை விடவில்லை. கடன் வாங்கி ஒரு பிரேஸ்லெட் வாங்கி வைத்து விட்டார். திருமணத்திற்கு சொந்த ஊருக்கு கிளம்பும் சமயம் தகவல் வந்தது பெண்ணைக் காணவில்லை என்று!

பிரளயமே வெடித்தாற்போன்ற நிலை! இவர்கள் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க வந்த அண்ணன் இந்த செய்தியை நடுவழியில் கேட்டு, உயிரைக்கையில் வைத்துக்கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து செய்தியைச் சொல்ல தம்பிகள் தவித்துப்போய் விட்டார்கள். இந்தப் பக்கம் அப்பாவும் அந்தப்பக்கம் அம்மாவும் பத்திரிக்கை வைக்க கிளம்பியதும் வீட்டில் இருந்த வயதானவர்கள், வேலை செய்பவர்கள் அத்தனை பேரையும் எப்படி ஏமாற்றி எங்கு சென்றது அந்தப் பெண் என்று அனைவரும் திகைத்துப்போனார்கள். நிச்சயத்தன்று ஒரே சிரிப்பும் அலங்காரமுமாகத்தானே இருந்தது என்ற கேள்வி நண்பருக்குத்திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணனிடமிருந்து கதைகள் வந்தன.

வெளி நாட்டில் வேலை செய்யும் அவரின் அண்ணன் இருக்குமிடத்தில் தூரத்துச்சொந்தத்தில் ஒரு இளைஞன்! அவனுக்கும் இவரின் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக வளர ஆரம்பித்ததும் பெற்றவர்களுக்கு தெரிந்து போனது. தூரத்து சொந்தமென்றாலும் ஜாதியின் உட்பிரிவு இருவருக்கும் ஒன்றே தான் என்பது தெரிந்ததும் பெற்றவர்கள் 'இது அண்னன் தங்கை உறவு போன்றது' என்று சொல்லி, இருவரையும் கண்டித்து மகளையும் அழைத்துக்கொண்டு, மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க தமிழகம் வந்து விட்டார்.



எல்லோருக்கும் ஒரே குழப்பம், தவிப்பு!! சின்னப் பெண், அது யாருடன் எங்கே போனது என்று புரியாமல் தெரியாமல் அந்த பெண்ணைப்பெற்ற‌வர்கள் தவித்த தவிப்பு! ஒரு கடிதமில்லை, விளக்கமில்லை. என்ன நினைக்க முடியும், எதைக்கற்பனை செய்ய முடியும்? தமிழ் நாட்டில் தான் இருக்கிறதா? யாராவது அதைக் கடத்திச் சென்றார்களா? யார் இதற்கு உதவி செய்ய முடியும்? பத்திரமாக இருக்கிறதா? அங்கங்கே எத்தனை சீரழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன? அசட்டுத்துணிச்சலுடன் கிளம்பிச்சென்ற இந்த பெண் காயங்கள் எதுவும் படாமல் தப்பிக்குமா? எங்கே, எந்த திசையில் போனது? கேள்விகளுடன் அழுகையுடன் தன் சகோதரர் அழுவதைப்பார்க்க சகிக்காமல் நண்பரும் அழுகிறார்.

எல்லோரும் மதுரையிலிருந்து 200 கல் தொலைவில் இருக்கும் அவர்களின் கிராமத்தில் உட்கார்ந்து ஒன்றும் புரியாமல் அந்த இரவு நேரத்தில் குழம்பித் தவிக்கிறார்கள்..  அப்போது வருகிறது அந்த தொலைபேசி அழைப்பு!

தான் சென்னையிலிருந்து பேசுவதாகவும் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும் சொல்லி தொடர்பைத்துண்டித்து விட்டது அந்தப் பெண்! ஒரு வழியாக இவர்களுக்கு நிலைமை புரிந்தது. அந்தப் பெண் தான் நேசித்த அந்தப்பையனிடம் சென்றிருக்குமோ என்று சந்தேகித்து அவளின் உடமைகளை சோதித்துப்பார்த்தால் பாஸ்போர்ட் இல்லையென்பது புரிந்த‌து. டிக்கட் வாங்குவதில் இப்போதெல்லாம் எந்த பிரச்சினையில்லை. யார் வேண்டுமானாலும் யாருக்காகவும் ஆன்லைனில் டிக்கட் வாங்க முடியும். டிக்கட் வாங்கியதும் அந்தக் கம்பெனியே அவர்களின் ஈமெயில் விலாசத்துக்கு டிக்கட் காப்பியை அனுப்பி விடுகிறது. அதை அந்த ஈமெயில் விலாசமும் கடவு எண்ணும் தெரிந்தால் எங்கிருந்தாலும் ஒரு இண்டர்நெட் சென்டருக்குச் சென்று பிரிண்ட் எடுத்துக்கொள்ள‌ முடியும். மேலும் விசாரித்ததில் இந்தப் பெண் வீட்டிற்குப் பின்னால் உள்ள‌ வாய்க்காலைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்று மதுரைக்குப்போகும் பஸ்ஸைப்பிடித்து மதுரை சென்று அங்கிருந்து சென்னைக்கு அதே போலவே பஸ்ஸில் சென்றிருக்கிறது!

சென்னைக்கு உடனேயே தெரிந்தவர்களை அழைத்து மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு சென்று கண்காணிக்கச் சொல்லி விட்டு, எந்த விமானம்  அவர்கள் வசிக்கும் நாட்டிற்கு அந்த சமயம் செல்கிறது என்று ஆராய்ந்தால் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது! விடியற்காலை வரை நான்கு விமானக்கள் பறந்து போகின்றன! எந்த விமானத்தில் புறப்பட்டு அந்தப் பெண் பறந்து செல்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது? போலீஸில் தெரிவித்தால் சட்டப்படி புகாரைப் பதிவு செய்ய வேண்டும். நான்கு நாட்களில் திருமணம் என்ற நிலையில் எப்படி காவல் நிலையம் சென்று புகார் தருவது? அப்படியும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்கள். ஆனால் சென்னை வரை, ஏர்போர்ட் வரை இந்த கேஸ் சென்று விட்டதால், ஏர்போர்ட் கன்ட்ரோல் டவர் வரை விசாரிக்க வேண்டுமென்றால் சென்னை போலிஸில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறவே, மாப்பிள்ளை வீட்டிற்கு இந்த செய்தி தெரிந்து விட்டால் என்னாகும் என்ற பயத்தில் அந்த எண்ண‌த்தைக் கை விட்டார்கள்.

உடனேயே அவர்கள் நாட்டில் வசிக்கும் உறவினரை அழைத்து அங்கிருக்கும் ஏர்ப்போர்ட் வாசலிலேயே காத்திருக்கச் சொல்லி சொல்லவே, சில மணி நேரங்களிலேயே அந்தப் பெண்ணை அங்கே வளைத்துப்பிடித்தார்கள். பலவாறு புத்திமதிகள் சொல்லி அந்த‌ உறவினரே அந்தப் பெண்னை திரும்ப தமிழகத்திற்கு, ஊருக்கு அழைத்து வந்தார். வந்ததுமே பெற்றவர்கள் அழ, அந்தப்பெண்ணும் கண்ணீர் விட, ' நீங்கள் முடிவு செய்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்து கொள்கிறேன்' என்று இறுதியில் சொல்லி முடித்தது அந்தப் பெண்!

எத்தனை தவிப்பு! எத்தனை கண்ணீர்! எத்தனை தேடல்! எத்தனை பதற்ற‌ம்! தொடர்ந்து வந்த நான்கு நாட்களும் மறைமுகமான கண்காணிப்புடன் ஒரு வழியாக திருமணம் நடந்து முடிந்தது! அந்த கண்காணிப்பிற்கு தேவையே இருக்கவில்லை, அத்தனை சடங்குகளையும்  மிகவும் மகிழ்ச்சியுடனேயே அந்தப் பெண் செய்து முடித்ததாக எங்கள் நண்பரின் மனைவி அதிசயித்துச் சொன்னார்!

இதற்கு எங்கள் நண்பரின் வீட்டைப்போல, ஒவ்வொரு வீட்டிலும் முறை செய்யவும் செலவு செய்யவும் விருந்திற்கு பரிசளிக்கவும் எத்தனை எத்தனை போராட்டங்கள்!

அந்த மனமகனை நினைத்த போது தான் ரொம்பவும் பரிதாபமாக இருந்தது எனக்கு! நடந்தது எதுவும் தெரியாமல் எத்தனை க‌னவுகளுடன் இருந்திருப்பார்!

பெற்றவர்களின் பாசமும் அன்பும் பாதிக்கவில்லை. காதலும் பெரிதாகத் தெரியவில்லை! இந்தப் பெண்கள் எங்கே செல்கிறார்கள்?










37 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவசரமாக எடுக்கும் முடிவால் தான் எத்தனை பிரச்சனை... அவரவர் உணர்ந்து திருந்த வேண்டும்...

ஸ்ரீராம். said...

எதை நம்பிப் போனார்? எதனால் வேண்டாம் என்று விட்டார்? புதிர்தான். எந்த நொடியில் எந்தப் பக்கம் மனது சாய்கிறது? நீங்கள் சொல்லியிருப்பதுபோல அந்த மணமகன் பாவம்தான். திருமணத்துக்குப் பின்னாவது வாழ்க்கை ஒரு நிலையில் செல்லட்டும்.

கதம்ப உணர்வுகள் said...

பெற்றோரும் உற்றோரும் இத்தனை சிரமப்பட்டு அல்லல்பட்டு திருமணத்துக்கு பார்த்து பார்த்து செய்ய கல்யாணப்பெண்ணுக்கு தன் காதல் நிறைவடைந்தால் போதும் என்று நினைத்துவிட்டது போலும். பாவம் பெற்றோர். பாவம் அந்த மணமகன்.

படிக்கும்போது எனக்கும் அந்த டென்ஷன் தொற்றிக்கொண்டதுப்பா..

வாழ்க்கையின் இனி வரும் நாட்கள் தான் செய்த தவற்றை திருத்திக்கொண்டு நலமுடன் வாழட்டும் இறைவன் அருளால்.

MANO நாஞ்சில் மனோ said...

பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது எம்புட்டு உண்மை பார்த்தீங்களா ?

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே அவசர முடிவுகளால் வரும் பிரச்சினைகள்தான்...
எப்படி காதலிக்கவும் அப்படியே கழட்டி விட்டுவிட்டு வேறு ஒருவருக்கு துணையாகவும் முடிகிறது...

Seeni said...

என்னத்த சொல்ல...

கரந்தை ஜெயக்குமார் said...

இவ்வுலகமே சுயநலம் பிடித்த உலகமான மாறி வருகிறது சகோதரியாரே.
பெண்கள் பலருக்கு தங்கள் குடும்பத்தைப் பற்றியோ, தாய் தந்தையரைப் பற்றியோ சிறிதும் கவலையின்றி, காதல் என்றால் என்னவென்றே தெரியாமல், பெற்றோரையும், உற்றோரையும் வதைக்கின்றனர்.
அவர்கள் கற்ற கல்வி நல்ல சிந்தனையை அவர்களுக்கு அளிக்கவில்லை.
வருங்கால இளம் தலைமுறையினரை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.

unmaiyanavan said...

உங்களுடைய இந்த பதிவை படிக்கும்போதே, மனதில் காட்சிகள் ஓட ஆரம்பித்து விட்டது. அப்பப்பா, ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம் ஏற்பட்டது.
காதலிக்கலாம் தான், ஆனால் தான் காதலிப்பவன் சகோதர முறையில் இருப்பவன் என்று தெரிந்ததும் அந்த காதலிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும். அந்த பெண்ணை காதலித்த பையனுக்கும் இது தெரிந்திருக்கும் தானே, அவனாவது, அப்பெண்ணிடம் இக்காதல் கைக் கூடாது என்று அறிவுரித்திருக்கலாமே. அவன் சொல்லியிருந்தால், இந்த அளவிற்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது.
நடந்ததை எல்லாம் மறந்து, இனி அப்பெண் தன் கணவனோடு உண்மையான அன்போடு வாழட்டும்.

பெற்றோர்களின் தவிப்பைப் பற்றியும், காதலுக்கு கண்ணில்லை என்பதைப் பற்றியும் பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

மணந்தவருடன் மனம் ஒத்து வாழ்ந்தால் போதும். அதுவே அந்த பெண் தன் பெற்றோர்களுக்கு தரும் நிம்மதி மகிழ்ச்சி.




மனோ சாமிநாதன் said...

ஒரு சிறிய வயது பெண் தன்னிச்சையாக, யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் எங்கோ சென்று விட்டால் அதைச் சேர்ந்த அத்தனை உறவுகளும் எப்படியெல்லாம் தவிப்பார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்தபோது, கொடுக்கப்படும் கல்வியறிவும் சமூக அறிவும் நிறைய இளைஞர்களுக்கு நல்ல வழிகளுக்குப் பயன்படாமல் போவதை நினைத்தால் மிக வருத்தமாக இருக்கிறது தனபாலன்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

ezhil said...

காதலும் ஒரு நுகர்வுக்கலாச்சாரமாகிப் போனதோ எனத் தோன்றுகிறது. இந்தப் பதிவும் அதைச்சார்ந்ததாய் எண்ணுகிறேன்..http://maattru.com/valentines-day/...இதனைப் படித்துப் பாருங்கள்

aavee said...

நல்லபடியா இருந்தா சரி..

pudugaithendral said...

எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவுகள் எடுக்கிறார்களே இந்த பெண்கள் என நான் மருகியதுண்டு....

இனியாவது மனமொத்த தம்பதிகளாய் வாழட்டும்

Unknown said...

இதுவாவது பரவாயில்லை ..பெற்றோர் சொன்னவனுக்கு தலையை கொடுத்துவிட்டு ,காதலனுடன் கூத்தடிக்க ,கைப் பிடித்தவன் தற்போது கோர்ட் வாசலில் டைவர்ஸ் வேண்டுமென்று !
ஏன்தான் பெண்ணின் புத்தி இப்படி போகிறதோ ?

நிலாமகள் said...

கற்ற கல்வி பக்குவம் தராமல் அகம்பாவம் தந்தது போல். சுதந்திரமும் சொகுசும் தந்த பெற்றோரை உதாசீனப் படுத்தி தன்னை கெடுக்க வேறு யாரும் தேவையற்று.... காதலின் உன்னதம் புரியாமல் கல்யாணத்தின் தாத்பர்யமும் அறியாமல், இதுகள் அடிக்கும் கூத்துக்கு எல்லோருக்கும் வேதனை. உண்மையில் அந்த காலத்தில் மட்டுமல்ல இந்தக் காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பு கட்டியே அலைய வேண்டியிருக்கிறது.

Priya said...

தனக்கு எது தேவை என்பதை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமையே இத்தனைக்கும் காரணம்...

சாந்தி மாரியப்பன் said...

எங்கே போகிறது உலகம்!! வரவர சுயநலமே எல்லாவற்றிலும் முன்னிற்கிறது..

மனோ சாமிநாதன் said...

தான் நேசித்தவனைத்தேடித்தான் அந்தப் பெண் போனது. ஆனால் உறவினர்களின் அறிவுரையாலோ, அல்லது தன்னந்த‌னியாய் அலைந்த அனுபவ‌த்தாலோ அல்லது தாய் தந்தையின் அண்மையை விரும்பியதாலோ, அல்லது தான் நேசித்தவனால் தன்னை விடுவிக்கமுடியவில்லை என்ற கசப்பாலோ, எது காரணம் என்று தெரியவில்லை, அந்த பெண் மனம் மாறியிருக்கிறது ஸ்ரீராம்! நீங்கள் சொல்வது போல இனி மணந்தவனை மட்டும் நினைத்து நேர்மையுடன் வாழ வேண்டும். அவ்வளவு தான்!!

கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியின் வருகையா? சந்தோஷமாக இருக்கிறது மஞ்சு!

உங்கள் டென்ஷன் போலவே எனக்கும் அந்தப் பெண்ணைத்தேடும்போது டென்ஷன் இருந்தது! நண்பரின் மனைவி அவ்வப்போது தொலைபேசியில் புலம்பிக்கொண்டேயிருந்தார்கள்! கடைசியில் அந்த பெண் திரும்ப வந்து விட்டாலும், இவர்கள் திருமணத்திற்குக்கிளம்பிச் சென்றபோது பழைய‌ உற்சாகம், மகிழ்ச்சி யாருக்கும் இல்லை!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் மனோ! ஆனால் சமீப காலமாக வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்ட மாதிரி தவிப்பது மாப்பிள்ளைகளின் வீடாகத்தான் இருக்கிறது! காலமும் காட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது தான் சரியான வார்த்தை குமார்!! எப்படி அப்படியே மனசை கழட்டிப்போட்டு விட்டு இன்னொருத்தருக்கு மனைவியாக முடிகிறது என்று நானும் பல நேரங்களில் வியந்திருக்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சீனி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒன்றும் புரிபடாமல் இளம் வயதில் இதுபோல அசட்டு தைர்யமாக ஏதாவது செய்து விடுகிறார்கள்.

இதனால் பலருக்கும் எவ்ளோ டென்ஷன் பாருங்கோ.

எப்படியோ திருமணம் ஆன வரை நிம்மதியாகப்போச்சு.

இனியும் அந்தப்பெண் கணவனுடன் ஒத்துப்போய் ஒற்றுமையாக வாழ்ந்தாலே போதும், பெற்றவர்களுக்கும் நிம்மதியாக இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வதில் நான் நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன் சகோதரர் ஜெயக்குமார்! இன்றைய உலகம் சுயநலத்தில் அதிகமாக சுழல்கிறது! பாசமும் அன்பும் கடமையும் கீழே போய் விட்டது. இதில் பொதுவான நியாயங்களுக்கு இடமே இருப்பதில்லை!

மனோ சாமிநாதன் said...


உண்மையிலேயே நீங்கள் சொன்னது போல திரைப்படம் போலத்தான் காட்சிகள் இருந்தன சகோதரர் சொக்கன் சுப்ரமண்யம்!! அந்தப் பெண் எங்கே போனது என்று பல மணி நேரங்கள் தெரியாமல் அந்தக் குடும்பம் தவித்த தவிப்பு இன்னும் அடிக்கடி என் நினைவில் எழுகிறது! இனியாவது தன் தவறுகளை மறந்து தன் காணவனிடம் நேர்மையாக அன்புடன் வாழ்க்கை நடத்தினால் போதும் என்று தான் நானும் விரும்புகிறேன்.

கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

ங்கள் சொல்வது போல மணம் புரிந்தவருடன் மனமொத்து வாழ்தல் தான் தன் பெற்றோருக்கு அந்தப் பெண் கொடுக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்!

கருத்துரைக்கு இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் இணைத்திருந்த பதிவைப் படித்தேன் எழில்! அதன் கருத்துக்கள் யாவும் உண்மை! நீங்கள் சொல்லியிருந்தது போல காதல் நுகர்வு கலாச்சாரமாய் மாறி ரொம்ப நாட்களாகி விட்டது!

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி கோவை ஆனந்த்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி புதுகைத்தென்றல்!

kowsy said...

இப்போதெல்லாம் லாம் பெண்களுக்கு துணிச்சல் ஜாஸ்தி . அது மற்றவர்கள் மனங்களை வேதனைப்படுத்தாது இருந்தால் சிறப்பு .

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி பகவான்ஜீ! பெண்மைக்கென்றே வாய்த்திருந்த அற்புதமான குணங்கள் இன்றைய உலகில் பல பெண்களுக்கு அபூர்வமான விஷயங்களாக மாறி விட்டன! அதனால் தான் இப்படிப்பட்ட அருவருப்பான காட்சிகள் அடிக்கடி தோன்றிக்கொண்டிருக்கின்றன!

மனோ சாமிநாதன் said...

சரியான காரணத்தைக்குறிப்பிட்டிருக்கிறீர்கள் ப்ரியா! இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது போல சுயநலம் முன்னால் நிற்கும்போது அன்பும் கடமை உணர்வும் பின்னால் வெகுதூரம் தள்ளிப்போய் விடுகின்றன சாந்தி! வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

காதலின் உன்னதமும் கல்யாணத்தின் தாத்பரியமும் புரியாதது மட்டும் அல்ல, பெற்ற‌வர்களின் தியாகமும் பாசமும் கூட இந்தக்காலத்தில் நிறைய இளம் பெண்களுக்குப்புரிவதில்லை! அதனால் தான் பெற்ற‌வர்களின் விழிகளிலிருந்து வழியும் கண்ணீருக்கு ஓய்வும் இருப்பதில்லை!

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொன்னது மாதிரி அசட்டுத்தனமாக செய்த தவறை மறந்து கணவனுடன் மனம் ஒன்றி வாழ்ந்தாலே போதுமானது சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சந்திரகெளரி!

வெங்கட் நாகராஜ் said...

//பெற்றவர்களின் பாசமும் அன்பும் பாதிக்கவில்லை. காதலும் பெரிதாகத் தெரியவில்லை! இந்தப் பெண்கள் எங்கே செல்கிறார்கள்?
//

இதே கேள்வி எனக்குள்ளும்..... என்ன தான் நடக்கிறது.