Tuesday 19 November 2013

வலிகள்!!....!!

பொதுவாய் நம் எல்லோருக்குமே தினம் தினம் விதம் விதமாய் அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. சில மகிழ்ச்சியில் துள்ள‌ வைப்பதாய், சில ஆழ்ந்து யோசிக்க வைப்பதாய், சில தனிமையில் விழி நீர் சிந்த வைப்பதாய்.. எத்தனை எத்தனை அனுபவங்கள் வாழ்க்கை நெடுக நம்மைப்புடம் போடுகின்றன! நம் வாழ்க்கையில் வந்து கடந்து செல்கின்ற சில அனுபவங்கள் தான் வலியைக்கொடுக்கின்றன என்பதில்லை, யாருக்கோ வலித்தால் கூட நமக்கும் சேர்த்தே வலிக்கின்றது. யாருக்கோ கண்கள் கலங்கினால் கூட நம் விழிகளும் ஈரமாகின்றன. வாழ்க்கை முழுமைக்கும் நம் கூடவே இந்த வலிகளும் பயணம் செய்கின்றன!

இரன்டு அனுபவங்கள் இந்த வாரம்! இரண்டுமே மனதில் வலியைக் கொடுத்தவை.

முதலாம் அனுபவம் தெரிந்த ஒரு பெண்ணைப்பற்றியது. சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு யதேச்சையாகச் சந்தித்தேன். வீட்டிற்கு வந்தவர் வழக்கமான சுறுசுறுப்பின்றி சோர்வாகக் காணப்பட்டார். பிறகு பேச முற்பட்டவரின் கண்கள் கலங்கிப்போயிருந்தன. அதுவரையிலும் அவரைப்பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு அதிகம் தெரிய வந்ததில்லை. ஒரு முறை, தன் பாட்டி வீட்டிலிருந்து 7 கல் தொலைவிலுள்ள ஹோட்டலிலிருந்து ரவா தோசை வாங்கி வரும்படி கேட்டதற்காக இரவு 10 மணிக்குச் சென்று வாங்கி வந்ததாகக்கூறி வீட்டில் அப்படிப்பட்ட தீராத நிர்ப்பந்தங்கள், தொல்லைகள் இருப்பதாகக்கூறி நொந்து கொண்டார். சொந்தமான சிறு தொழில் நடத்தியும் இடைப்பட்ட நேரத்தில் வெளியில் சென்று வேலை பார்த்தும் இவர் தான் குடும்பத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கிறார். இதைத்தவிர வேறு எதுவும் எனக்கு அவரைப்பற்றித் தெரிந்திருக்கவில்லை.

தளர்ந்து போய் அமர்ந்திருந்தவர் மெதுவாக தன்னைப்பற்றிக் கூற ஆரம்பித்தார்.
  
இவரது தாத்தாவிற்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் பிறந்திருக்கிறார்கள். வீட்டின் முத்த மகள் தான் இவரின் தாயார். தாயாரின் சிறிய தம்பியையே இவர் மணந்திருக்கிறர். முதல் குழந்தை உதடுகள் இல்லாமல் பிறந்ததாம். எப்படியிருந்திருக்கும் இவருக்கு! மூன்று முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து குறையை சரி செய்திருக்கிறார். இரண்டாவது குழந்தை கருத்தரித்த போது, அதுவும் அப்படி பிறந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து மருத்துவர்களிடமும் ஸ்கான் செய்து பார்த்து விவாதித்திருக்கிறார். கருக்கலைப்பு செய்து விடவும் முடிவு செய்திருக்கிறார்.  மருத்துவர்கள் ஸ்கானில் குழந்தை நன்றாக இருப்பதாகக் கூற, தாய்மையை மறுபடியும் எதிர்கொள்ள‌ முடிவு செய்திருக்கிறார். குழந்தை பிறந்த போது தான் ஸ்கான் செய்து பார்த்தவர்கள் சொன்னது தவறு என்பதை உணர்ந்திருக்கிறார். அந்தக்குழந்தையும் உதடுகள் இல்லாமலும் தொண்டையில் உள்ளே ஒரு துளையுடனும் பிறந்தது. திடப்பொருள்கள் எது சாப்பிட்டாலும் அது சாப்பிட்டதும் மூக்கின் வழியே உடனே வெளியில் வந்து விடும். அதைப்பார்த்துப் பார்த்து எந்த‌ அளவிற்கு வேதனைப்பட்டிருப்பார் இவர்!  இந்தக்குழந்தைக்கும் இரு அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதாம். மூன்றாவது பாக்கியிருக்கிறதாம்.




குழந்தை வளர்ப்பு, தன் சகோதரியையும் தாயையும் கவனித்தல் என்ற எதிலுமே பட்டுக்கொள்ளாமல் இருக்கும் கணவரை நினைத்துப் பொருமுகிறார் இவர். 'தன் சொந்த தாயாரையும் சகோதரியையும் கூடவா கவனிக்க மனம் வராமலிருக்கும் ஒருத்தருக்கு? என் அம்மாவிற்கு இரவு நேரங்களில் ஆஸ்த்மா தொந்த‌ரவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும் கூட நான் தான் அந்த‌ நேரத்திலும் மருத்துவரிடம் ஓட வேண்டும்!' என்று குமுறுகிறார் இவர். ஒன்பது குழந்தைகளைப்பெற்றும் யாருக்கும் தன் தாயை வைத்து பராமரிக்க மனமில்லையாம். 'எங்கள் வீட்டில் வைத்து திடீரென்று இறந்து போனால் என்ன செய்வது? வீட்டு உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?' என்கிறார்களாம். இத்தனைக்கும் தற்போது அந்த மூதாட்டிக்கும் இரண்டு கண்களும் தெரிவதில்லையாம். 'வாழ்க்கை போராட்டம் நிறைந்தது தான். ஆனால் போராட்டம் மட்டும் தான் வாழ்க்கை என்றால் எப்படி இந்த வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழ்வது?' என்று கண்ணீர் விட்டு அழுத அவருக்கு, மனம் முழுவதும் ரணங்களை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும் அவருக்கு  என்னால் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியவில்லை!! நல்ல நேரமும் காலமும் அவருக்கு சீக்கிரமே வரும் என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது!!

                                              ***************************************

  சச்சின் டெண்டுல்கரைப்பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. எனக்கும் எழுத சில அனுபவங்கள் பாக்கியிருக்கிறது. 1989ம் வருடம் அவர் முதன் முதலாக பாகிஸ்தான் சென்று விளையாட ஆரம்பிக்கும் முன் இந்தியாவில் ஒரு எக்ஸிபிஷன் மாட்சில் விளையாடினார். ஆறுகள் தொடர்ந்து பவுண்டரியைத் தாண்டி பல முறை பறந்து சென்றன. அப்படியே பிரமித்து உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீகாந்த் அவரை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப்பிளந்தது. இது தான் அவரை முதன் முதலாகப்பார்த்தது. அப்புறம் பாகிஸ்தான் சென்று விளையாடியதையெல்லாம் பார்க்க முடியவில்லை. நாளிதழ்களில் படித்ததுடன் சரி. ஷார்ஜாவில் இருந்தபோது சச்சின் 17 வயதில் இங்கிலாந்து சென்று அவர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். அப்போதெல்லாம் இப்போது போல நேரடி ஒளிபரப்பு என்பது இல்லையென்பதால் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு படுத்தவாறே ரேடியோவில் லைவ் கமெண்ட்ரியைக் கேட்டது நினைவுக்கு வருகிறது. ஒரு டெஸ்ட் மாட்சில் இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப் சச்சினின் பந்து பவுண்டரியை நோக்கிப்பறந்ததை தடுக்க முடியாமல் ' வாட் எ செவ‌ன்டீன்!' என்று சொல்லி வியந்து போனது மிகவும் புகழ் பெற்ற‌ வாசகம்.



ஷார்ஜாவில் தான் இந்தியா அதிக ஒரு நாள் போட்டிகளை விளையாடியுள்ள‌து. அது போன்ற கூட்டத்தையும் ரசிகர்களையும் விண்ண‌திர எழுந்த ஸ்லோகன்களையும் வேறு எங்கேயும் அதுவரை யாரும் பார்த்ததில்லை. புழுதிப்புயலில் ஆவேசத்துடன் விளையாடிய சச்சினை மறக்க முடியுமா? தோற்றாலும்கூட, 237 ரன்களை இந்தியா அடைந்தால் இறுதி விளையாட்டிற்குத் தகுதி பெறும் என்ற நிலையில் அந்த புழுதிப்புயல்கூட அவரின் ஆவேசத்திற்கு முன் பறந்தோடியது. இந்தியா 237 ரன்களை பெற்றதும் ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஆனந்தக் கூத்தாடியதைப்பார்த்து ஆஸ்திரேலிய காப்டன் ஸ்டீவ் வாஹ் சொன்னார்,' தோற்றுப்போன ஒரு டீம் இப்படி சந்தோஷப்படுவதை நான் இப்போது தான் பார்க்கிறேன்!''  என்று!! அது தான் சச்சின் டென்டுல்கர்! அடுத்த நாள் இறுதிப்போட்டியில் சச்சின் அதே போல ஆவேசத்துடன் விளையாட, இந்தியா ஜெயித்தது. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே சொன்னார், ' தூங்கும்போது கூட சச்சின் பந்துகள் என் தலைக்கு மேல் ஆறுகளை நோக்கிப் பறந்தன!' என்று!!

1999 என்று நினைக்கிறேன். தஞ்சை வந்திருந்த போது, என் சகோதரி இல்லத்தில் கிரிக்கெட் மாட்ச் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்த வீட்டிலிருந்த குடும்பத்தினர் வந்து அவசரமாக வெளியில் செல்வதாகவும் திரும்பி வர நாலைந்து மணி நேரமாகும் என்றும் சொல்லி அவர்கள் பிள்ளையைப்  அதுவரையில் பார்த்துக்கொள்ள‌ச் சொல்லி என் சகோதரியிடம் சொல்லிச் சென்றனர். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதிருக்கும்‍, என் அருகில் வந்து உட்கார்ந்தவன் தான்! உண‌ர்ச்சிப்பெருக்குடன் கூக்குரல்கள், விமர்சனங்கள், எனக்கு இடை இடையில் விளக்கங்கள் என்று துல்லியமாக ரசித்த அவனைப்பார்த்து அசந்து போயிருந்தேன் நான்!! ஐந்து வயதுக் குழந்தை முதல் தள்ளாடும் வயதில் முதியவர்கள் கூட சச்சினின் ரசிகர்கள் தான்!!

இந்தியாவையும் ஒவ்வொரு இந்தியனையும்  பெருமையடையச் செய்தவர் அவர். கடந்த 15ந்தேதி அவர் உணர்ச்சிப்பெருக்குடன் விடை பெற்ற போது, பிட்சைத்தொட்டு வணங்கிய போது ஆயிரமாயிரம் கண்கள் கலங்கிக்கொண்டேயிருந்தன. என் கண்களும் கலங்க, மனதில் ஒரு இனம் புரியாத வலி!!

32 comments:

ஸ்ரீராம். said...

முதல் சம்பவம் மனத்தைக் கஷ்டப்படுத்தியது.

சச்சினின் அந்த புழுதிப்புயல் மேட்ச் என்னாலும் மறக்க முடியாதது. அப்போது ஆட்டத்தை வர்ணனை செய்த சேப்பல் உணர்ச்சி வசப்பட்டுப் பெரிய குரலில் வர்ணனை செய்தது இன்னும் என் நினைவில்.

pudugaithendral said...

சச்சின் சின்னப்பையனாக ஆட ஆரம்பித்தது இன்னமும் நினைவிருக்கிறது. இனி அவருடையா ஆட்டத்தை பார்க்க முடியாது என நினைத்தாலும் புகழின் உச்சியில் இருக்கும்போதே விலகியது நல்லது என்று தோன்றுகிறது.

முன்னம் சொல்லியிருக்கும் வலிக்கு :((

Seeni said...

muthal thakaval valiyai thanthathu thaaye...!

வெங்கட் நாகராஜ் said...

முதல் அனுபவம் மனதைத் தொட்டது......

சச்சின்.... என்ன சொல்வது - அவரின் சாதனைகள் பலப்பல.... பல ஆண்டுகள் ஆனாலும் முறிவடிக்க முடியாதவை....

RajalakshmiParamasivam said...

நீங்கள் சொன்ன பெண்மணியின் சோகம் மனதைப் பிசைகிறது. கடவுள் நல்ல வழி காட்டட்டும்.

சச்சின் ஒரு நல்லகிரிகெட்டற் மட்டுமல்ல ஒரு உன்னதமான மனிதரம் கூட

'பரிவை' சே.குமார் said...

முதலாவது மனதைத் தொட்டது...

சச்சின்... ஷார்ஜா ஆட்டம் மறக்க முடியுமா என்ன...

சச்சின் சாதித்துக் காட்டியவர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் சொல்லியுள்ளது மறுக்க முடியாத வேதனை + சோதனை.

அடுத்தது மறக்கவே முடியாத சாதனை.

சச்சின் புகழ் என்றும் நம் நினைவில் நிற்கும்.

இளமதி said...

அக்கா... முதலில் கூறிய சம்பவம் உணர்வை உருக்கியது.
சொந்தத்தில் செய்த திருமணத்தின் எதிர்வுகள் எத்தனை கொடுமையானதெனத் தெரிகிறது!

அந்தப் பெண்னிற்கு அதற்குமேல் குடும்பநிலை... கொடூரமாயுள்ளது. விரைவில் நல்ல காலம் கிட்டட்டும்.....

திண்டுக்கல் தனபாலன் said...

போராட்டம் மட்டும் தான் வாழ்க்கை என்றால்... என்றாவது ஒரு நாள் மாறும்... மாறட்டும்...

சச்சின்... சச்சின்...

aavee said...

எல்லாமே கண்ணீர் கதையா சொல்லிட்டீங்க.. ஆமாம்மா, சச்சின் பத்தி படிச்சதும் இனி விளயாடமாட்டார் ன்னு நினைச்சப்போ கண்ணீர் துளிர்த்தது..

ராஜி said...

முகமறியா அந்த பெண்ணின் வாழ்வில் வசந்தம் மலர இறைவனை பிரார்த்திப்போம்.

கே. பி. ஜனா... said...

//அவருக்கு என்னால் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியவில்லை!! நல்ல நேரமும் காலமும் அவருக்கு சீக்கிரமே வரும் என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது!!//
காலம் தான் அவருக்கு நல்ல வழி பிறக்கச் செய்யவேண்டும்.எங்கள் பிரார்த்தனைகள் !

Anonymous said...

வணக்கம்
முதல் சம்பவம் மனதை கசக்கி எடுத்தது...

சச்சின் பற்றி கூறுகையில்...அவரின் புகழ் எப்போதும் நிலைத்திருக்குக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

அந்த பெண் செய்த பாவம்தான் என்ன? தாங்க முடியாத வலிதான்.
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த கிரிக்கெட்டில் மற்றவர்களுக்கு இடம் ஏது? சச்சின்! ஓடிக் கொண்டே இருந்த கால்களுக்கு இனி ஓய்வு.

கரந்தை ஜெயக்குமார் said...

மருத்துவனை அணுகி ஸ்சேகன் செய்து பார்த்த பிறகும், உதடுகள் இல்லாமல் குழந்தை பிறந்தது அதிர்ச்சி அளிக்கின்றது சகோதரியாரே, இதுதான் இன்றைய மருத்துவம், நாமெல்லாம் இம்மருத்துவர்களின் பரிசோதனைப் பொருட்கள்...

அம்பாளடியாள் said...

பெற்ற தாயைப் பேணிக் காப்பதும் பிள்ளைகளின் கடமை என்பதை
ஏன் தான் இந்த சமூகம் மறந்து விடுகிறதோ :(( வலி சுமந்து நிற்கும்
இப் பெண்ணினத்துக்கே விடுதலை கிடைக்க வேண்டும் என்று தான்
நானும் பிரார்த்திக்கின்றேன் .பகிர்விற்கு நன்றி அம்மா .

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ஸ்ரீராம்! என்னாலும் சேப்பலின் அந்த வர்ணனையை மறக்க முடியவில்லை! சச்சினின் மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்று பலரும் சொன்னார்கள் அப்போது!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் புதுகைத்தென்றல்! உண்மை தான்! சச்சின் ஆடிய ஆட்டங்களை மறந்து விட்டு அவரை நிறைய பேர் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். புகழ் மங்குவதற்கு முன் அவர் விலகியது சரியான முடிவு தான்!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகை புரிந்து கருத்து சொன்னத‌ற்கு அன்பார்ந்த ந‌ன்றி சீனி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் ராஜலக்ஷ்மி! சச்சின் மதிக்கப்படுவதற்கும் புகழப்படுவதற்கும் முக்கிய காரணமே அவர் உன்னதமான மனிதர் என்பது தான்!

பின்னுரை அருமையாகத் தந்ததற்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கு மனம் கனிந்த நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் இளமதி! சொந்தத்தில் அதுவும் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்வது இத்தகைய கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது! கடைசியில் வாரிசுகள் அதிக துன்பங்களை அனுபவிக்கிறார்கள்!

இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வலிகள் தான் கண்ணீர்த்துளிகளை உற்பத்தி செய்கின்றன ஆனந்த்! ஆனால் இங்கே வலிகள் மட்டும் வேறு வேறானவை!
வருகைக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் மகிழ்வான நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

பிரார்த்தனைகளுக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நிறைந்த நன்றி சகோதரர் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

இனிய பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

நீங்கள் சொல்வது உண்மைதான்! மருத்துவ உலகில் கசப்பு நிறைந்த சம்பவங்கள் தான் அதிகமாக இருக்கின்றன! இவற்றை அடிக்கடி இப்போதெல்லாம் எதிர்நோக்க வேண்டியிருப்பது தான் வேதனையிலும் வேதனை!

மனோ சாமிநாதன் said...

இன்றைய சமூகம் மறந்து போன நல்ல விஷயங்களுள் பெற்ற‌ தாயையும் தந்தையையும் பேணிக்காப்பதும் ஒன்றாகி விட்டது அம்பாளடியாள்! எதிர்காலமாவது இந்தத் துன்பங்களை களைந்தெறியுமா என்பது தெரியவில்லை!

வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் மனங்கனிந்த நன்றி!!