Sunday 8 September 2013

பாஸஞ்சர்!

ஒரு பாஸஞ்சர் ரயில் பயணத்தில் பயணிக்கும் பயணிகள் இடையே ஏற்படும் சந்திப்பில் நிகழும் அசாதாரணங்கள், மனித நேயம் பற்றிய திரைப்படம் இது. 2009லேயே வெளி வந்துள்ள இந்த மலையாளத் திரைப்படத்தை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. படம் முடிவடைந்த பின்னும் மனதில் ஏற்பட்டிருந்த நெகிழ்ச்சி அத்தனை சுலபத்தில் மறையவில்லை.


மம்தாவாக நடிகை மம்தா மோகன்தாஸ், நந்தனாக நடிகர் திலீப், சத்யாவாக நடிகர் சீனிவாசன்
வாழ்க்கையில் எத்தனையோ சுவாரசியமான பயணங்கள் நிகழ்கின்றன. ஆனால் பஸ் பிரயாணங்களோ, விமானப்பயணங்களோ ரயில் பயணம் போல அத்தனை சுவாரசியமாக இருந்ததில்லை. உறவுகள் பிறப்பதும் இறப்புக்கள் நிகழ்வதும் சாதாரண விசாரிப்புகள் தொடர்கதைகளாக பின் தொடர்வதும் என்று அனுபவங்கள்   அதில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதில் இரண்டு கதாநாயகர்கள். முதலாமவர் சத்யா. தினமும் பாசஞ்சர் ரயிலில் தன் கிராமத்திலிருந்து கொச்சிக்கு வேலைக்குப்போகும் பல நூறு ஆட்களில் அவரும் ஒருவர். சமூக நல சிந்தனை கொண்டவர்.
அடுத்தவர் வழக்கறிஞராகப்பணி புரியும் நந்தன். உண்மையையும் அடுத்தவர் நலனையும் நேசிப்பவர். அவர் மனைவி மம்தா ரைட் தொலைக்காட்சி ரிப்போர்ட்டர். நாட்டு நலனுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும் சீரழிவுகளையும் எதிர்த்து தைரியமாகப்போராடுபவர். அவற்றிற்குக் காரணமானவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரத் துடிப்பவர்.
அப்போதும் அது போல ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. கிராமம் ஒன்றில் கனிமப்பொருள்களைத்தோண்டி எடுக்கும் உரிமையை தனக்கு வேன்டிய ஒருத்தருக்குக்கொடுக்கிறார் அமைச்சர். அது போதாதென்று அந்தக்கிராமப்பெண் ஒருத்தியை பலவந்தமாகத் தன்வயப்படுத்தவும் செய்கிறார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தைரியமாக நியாயம் கேட்கிறாள். இதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி, அமைச்சரிடம் அந்தப்பெண் பற்றிய கேள்விகளை மம்தா கேட்பது நேரடி ஒளிபரப்பாகிறது. ஆத்திரமடைந்த அந்த அமைச்சர் அந்த கிராமத்தையே வெடிகுண்டு வைத்துத் தகர்க்கத் திட்டம் போட, அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து விடுகிறாள் மம்தா! அமைச்சர் அதைக்கண்டு பிடிக்க, அவருடைய ஆட்கள் மம்தாவிற்கு வலை வீசுகிறார்கள். ஒளிந்து மறைந்து ஓடிக்கொன்டிருக்கும் அவளைப் பிடிக்க முடியாமல் அமைச்சர் தன் ஆட்களுக்கு நந்தனைப்பிடிக்க உத்தரவிடுகிறார்.
ஓடிக்கொண்டிருக்கும் மம்தா தன் கணவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் தவிக்கிறாள். இங்கிருந்து தான் கதை பரபரப்பாக ஆரம்பிக்கிறது.அலுவலகத்திலிருந்து திரும்பும் சத்யா புகைவண்டியிலேயே உறங்கி விடுகிறார். கண் விழித்துப்பார்க்கும்போது தன்னையும் சக பிரயாணி ஒருத்தரையும் தவிர வேறு யாருமே இல்லையென்பதையும் தான் நெடுந்தூரம் உறங்கியே வந்து விட்டதையும் உணர்கிறார். சக பிரயாணியிடம் பேசும்போது அவர் ஒரு பிரபல வழக்கறிஞர் என்பதையும் அவர் மனைவி தான் பிரபல ரைட் டிவி ரிப்போர்ட்டர் என்பதையும் தெரிந்து கொள்கிறார். அந்த நகரத்தில் இருவரும் சேர்ந்து இறங்கும்போது, நந்தன் தன் மனைவிக்காகவும் தனக்குமாய் எடுத்திருக்கும் ஹோட்டல் அறையில் தற்போது தன் மனைவி வரவில்லையென்பதால் தன்னுடன் வந்து தங்குவதற்கு அழைக்க, சத்யா அதை மறுத்து தான் ரயில் நிலையத்திலேயே தங்கி விடியற்காலை ரயிலில் தன் இல்லம் திரும்புவதாகச் சொல்ல, இருவரும் விடைபெற்று தத்தம் வழியில் நடக்க ஆரம்பிக்கும்போது, அமைச்சரின் ஆட்கள் நந்தன் முன் தோன்றி அவரை அடித்து ஒரு காரில் தூக்கிப்போட்டு பறக்கிறார்கள். அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த சத்யா ரயில் நிலையத்திற்குள் சென்று காவல் நிலையத்திற்கு ஃபோன் செய்கிறார். காரின் நம்பர் தெரியாததால் விரைந்து செயல்பட இயலாத நிலையை அவர்கள் தெரிவிக்க, சத்யாவால் அப்படியே அதை விட்டு விட்டு தன் வழியே போக முடியவில்லை.


மம்தாவின் இல்லத்தை ஒரு டாக்ஸி ஓட்டுனர் உதவியால் கண்டு பிடிக்கிறார்.  அங்கே வீடே கன்னா பின்னாவென்று கலைந்து கிடக்க, அங்கே கிடக்கும் மொபைல் ஃபோன் உதவியால் மம்தாவைக் கண்டு பிடிக்கிறார். பகைவர்கள் துரத்தலுக்கு போக்கு காட்டியபடியே இவர்கள் அலைகிறார்கள். இடையே நந்தனை கொன்று விடுவதாக அச்சுறுத்திய  அமைச்சருக்கு பணிந்து மம்தா தன் வீடியோ தகவல்களை அவரின் ஆட்களிடம் கொடுக்கவும் சம்மதிக்கிறாள். ஆனால் நந்தன் தன் உயிருக்கு அஞ்சாமல் ரகசியமாக ஒரு மொபைல் ஃபோனைக் கண்டு பிடித்து மம்தாவிற்கு ஃபோன் செய்து, ‘ இதில் நம் உயிர் போனாலும் பரவாயில்லை, ஒன்றுமறியாத அந்த கிராமத்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று உசுப்ப, மம்தா தன் தொலைக்காட்சிக்கு எப்படியவது சென்று அந்த வீடியோ தகவல்களைக் கொடுக்க முடிவு செய்கிறாள். அவள் செல்வது ஆபத்து என்று சத்யா அந்தப்பொறுப்பை ஏற்று பல இடர்களை சமாளித்து அந்தத் தகவலை அந்தத் தொலைக்காட்சியின் நிறுவனரிடம் சேர்ப்பிக்கிறாண். நாடெங்கும் அந்த வீடியோ ஒளிபரப்பாக்கிறது. அமைச்சர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.


இடையே மம்தாவின் அலைபேசியை சத்யா வைத்திருந்ததால் அதில் வந்த நந்தனின் குறுஞ்செய்தியைப் பார்க்கிறான். அதிலுள்ள சங்கேத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு நந்தனை அடைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்று காப்பாற்றி அவனை மருத்துவமனையில் சேர்க்கிறான். ஒடோடி வந்து தன் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விடும் மம்தாவையும் தேறுதல் சொல்லி புன்னகைக்கும் நந்தனையும் புன்னகையுடன் பார்த்தவாறே அந்த இடத்தை விட்டு விலகுகிறான் சத்யா!


வீடு திரும்பியதும் நந்தனும் மம்தாவும் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதைப்பார்க்கிறான் சத்யா. ஒவ்வொருத்தருக்கும் குறிப்பாக மனித நேயத்துடன் காசு வாங்க மறுத்த டாக்ஸி ஓட்டுனருக்கும் தன்னைக் கொல்லாது விட்டுச் சென்ற குண்டர்களுக்கும் கூட நன்றி தெரிவித்த நந்தன் சொல்கிறான்..

‘ எல்லாவற்றையும் விட ஆதி முதல் இறுதி வரை தெய்வத்தின் உருவில் வந்த ஒரு சாதரண மனுஷருக்கு நான் எப்படி என் நன்றியைத் தெரிவிப்பது? அவர் யாரென்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்தார். எங்களின் நன்றியைக்கூட வாங்கிக் கொள்ளாமல் எங்கேயோ போய் விட்டார். நம்மில் பலர் எனக்கு நேர்ந்த மாதிரி ஆபத்துகளையோ அல்லது அழிவுகளையோ எதிர்நோக்கும்போது ஒளிந்து ஓடிப்போகவே செய்கிறோம். நமக்கு எதற்கு வம்பு என்று தயங்குறோம் நமக்கு ஏதேனும் ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறோம். நல்லது செய்வதற்கு ஆள் பலம் தேவையில்லை, நல்ல மனம் மட்டும் இருந்தால் போதும் என்பதை அந்த மனிதர் உணர்த்தியிருக்கிறார். அவர் எங்கிருந்தாலும் அவருக்கு எங்களின் இதயத்தின் அடியிலிருந்து பீறிட்டுப்பொங்கும் நன்றியையும் சினேகத்தையும் சமர்ப்பிக்கிறோம்!

சத்யாவின் இதழோரம் ஒரு புன்னகையுடன் படம் நிறைவடைகிறது.. .. 
    

 

25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

திரை விமர்சனம் மிகவும் அருமையாக் உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’பாஸஞ்சர்’ என்ற தலைப்பில் ஆனால் ’எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் கதையை சுருக்கமாகவும் சுவையாகவும் வெகு அழகாகச் சொல்லி முடித்துள்ளீர்கள். ;)

ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

பாஸஞ்சர் பட விமர்சனம் பார்க்க ஆவலை ஏற்படுத்தி விட்டது.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான விமர்சனம்...

MANO நாஞ்சில் மனோ said...

உலகத்திலேயே சினிமாவை எதார்த்தமாக எடுப்பதில் கேரளா இயக்குனர்கள் கில்லாடிகள்...!

மலையாளப் படங்கள் நிறைய நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கும் அதில் ஒன்றுதான் இது...!

கார்த்திக் சரவணன் said...

படத்தை அலசிவிட்டீர்கள்... மனிதநேயம் போற்றும் நல்ல படமாகத் தெரிகிறது... முடிந்தால் பார்க்கிறேன்... நன்றி...

இளமதி said...

மனோ அக்கா.. நீங்கள் தரும் விமர்சனமே படத்தைத் தேடிப் பார்த்திடும் ஆவலைத் தருகிறது.
ஒன்லைனில் தரமான வீடியோவைத் தேடவேண்டும்.

நீங்கள் தந்த ப்ரணயம் பட விமர்சனமே என்னை இன்றுவரை எண்ணிகையில்லாமல் எத்தனையோ தடவை அதைப் பார்க்கவைத்தது.
இன்றும் தரமான வீடியோவாக பதிந்து வைத்திருக்கின்றேன்.

சந்தேகமே இல்லாமல் இதுவும் அற்புதமாக இருக்கும். உங்கள் விமர்சனம் அதற்குச் சான்று!

பகிர்விற்கு மிக்க நன்றி மனோ அக்கா!
வாழ்த்துக்கள்!

aavee said...

இது அருமையான படம் அம்மா.. இதே படம் தமிழிலும் சத்யராஜ் நடித்து வெளிவந்ததாக கேள்வி..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான திரை விமர்சனம் நன்றி

Jaleela Kamal said...

மிக அருமையான விமர்சனம்,

மனோ சாமிநாதன் said...

மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான் சகோதரர் மனோ! மிக ஆழமான சிந்தனைகளையும் யதார்த்தமான‌ கலங்க வைக்கும் காட்சி அமைப்புகளையும் குளோசப்பில் உனர்ச்சிகளையும் மலயாள சினிமாவில் மட்டுமே நிறைய பார்க்க முடியும்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

ஸ்ரீராம். said...

கதைச்சுருக்கத்தை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். விறுவிறுப்புக்குப் பஞ்சமிருந்திருக்காது. நல்ல படம் ஒன்றைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

திரைப் படத்தில் அந்தத் தொலைகாட்சி நிலையத்தில் வீடியோவைக் கொடுத்ததும் எல்லாம் நிறைவேறி விடுவது போலக் காட்டப் பட்டாலும் உண்மை வாழ்வில் அதனால் கூட ஒரு பயனும் இருக்காது என்கிற கால கட்டத்திலேயே நாம் இருக்கிறோம். தொலைகாட்சி நிறுவனங்களே விலை போவதும் உண்டு. அல்லது வீடியோ காட்டப் பட்டாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே பரபரப்பான செய்தியாக அது இருக்கும்! தவறு / ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை வருமா...? ஹூம்...!

Asiya Omar said...

அக்கா,எனக்கும் மலயாள மூவி என்றால் அத்தனை இஷ்டம்,எத்தார்த்தமாய் இருக்கும்,இந்த விமர்சனமும் மிக எதார்த்தம்,படம் பார்க்கத் தூண்டும் படியாய் அருமை.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஸ்கூல் பையன்!

மனோ சாமிநாதன் said...

உண்மையில் உங்களின் பின்னூட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது இளமதி! ப்ரணயம் அடிக்கடி பர்ப்பதைப்ப‌ற்றி எழுதியிருந்தது எனது பதிவிற்குக் கொடுத்திருக்கும் மரியாதை! அதற்காக என் இதயம் நிறைந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஆனந்த்![கோவை ஆவி]
இது தமிழிலும் தயாரிப்பதாக‌த்தான் கேல்விப்பட்டேன்.சத்யராஜ் தான் ஹீரோ.. முறியடி என்பது படத்தில் தலைப்பு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

உங்கள் ஆதங்கம் தான் எனக்கும் சகோதரர் ஸ்ரீராம்! ஆனால் சில சமயங்களில் நிதர்சனத்தில் அடைய முடியாத மன நிறைவை இந்த மாதிரியான நல்ல படங்கள் ஓரளவு தருகின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா!

Unknown said...


சினிமா பார்க்காத என் போன்றவர்களையும் பார்க்கத் தூண்டும் அருமையான விமர்சனம்!