Tuesday 20 August 2013

அதிரடி மருத்துவரும் அருமையான மருத்துவ உதவி அமைப்புகளும்!!!


முதலில் ஒரு அருமையான மருத்துவ சிகிச்சை பற்றியும் ஒரு மருத்துவத் தொண்டு பற்றியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரு மாத இதழ்களில் இந்த விபரங்களைப்பற்றி படித்து அசந்து போன போது, இந்த விபரங்கள் நிறைய பேரைச் சென்றடைந்தால் அது எத்தனன பயனுள்ளதாக இருக்குமென்று தோன்றியதால் ஏற்பட்டதன் விளைவே இந்தப் பதிவு!  

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர்கள் சிறுநீரகப்பழுதினால் உயிரிழக்கிறார்கள். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை சிகிச்சைகள் அவசியம். ஆனால் அந்த சிகிச்சைக்கு வசதியில்லாமலேயே பலர் உயிரிழக்கிறார்கள். இத்தைககய மக்களுக்காக தொடங்கப்பட்டது தான்  

THE TAMILNADU KIDNEY RESEARCH[TANKER] FOUNDATION,
17, wheatcrofts road, Chennai-34.
[PHONE NO: 044 2827 3407/28241635/044 4309 0998] 

பல நல்ல உள்ளங்கள் சேர்ந்து 20 வருடங்களுக்கு முன்பு இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறர்கள். சிறுநீரகப்பழுதின் கடைசிக் கட்ட சிகிச்சை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. அதற்கு முந்தைய கட்டமான டயாலிஸிஸ் மனம், உடல் இரண்டையும் நோகடிக்கிற சிகிச்சை. வாரம் 2 அல்லது 3 தடவைகள் செய்ய வேண்டிய டயாலிஸிஸ் சிகிச்சையின் ஒரு முறை கட்டணமே ஆயிரம் முதல் 2500 வரை. இந்தத் தொண்டு நிறுவனம் தன் உறுப்பினர்களுக்கு அதை வெறும் 375 ரூபாயில் செய்து கொடுக்கிறது. மாதம் 2 டயாலிஸ்ஸை இலவசமாக செய்தும் தருகிறது. 6 டயாலிஸிஸ் மெஷின்களுடன் இது வரை ஒரு லட்சத்துக்கு மேல் டயாலிஸிஸ் செய்து முடித்திருக்கிறார்கள் இவர்கள். இவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் வரியே ‘ வருமுன் காப்போம்’ என்பது தான்! சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைப்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவைத் தொடர்வது, டாய்லட் தேவைகள் வரும்போது அதை அடக்கி வைப்பதை நிறுத்துவது, டென்ஷன் தவிர்ப்பது, உடற்பயிற்சியைக் கட்டாயமாகத் தொடர்வது-இவையெல்லாம் இவர்களின் தாரக மந்திரங்கள்!!                                  

                        -------------------------------
 
HEALTH OPINION!

உள் நாட்டு நோயாளிகளுக்கு வழி காட்டுவது மட்டுமல்லாமல் வெளி நாட்டு வாழ் நோயாளிகளுக்கும் அவசர ஆலோசனைகள், உதவிகளைச் செய்கிறது இந்த நிறுவனம், அதுவும் கட்டணமில்லாமல்! 

இளைஞர்கள் சீனிவாசனும் கிருஷ்னகாயாவும் சப்தமில்லாமல் ஒரு அருமையான தொண்டை செய்து வருகிறார்கள்.  

எங்கேயோ ஒரு விபத்து நடக்கிறதா, சம்பவம் நடக்கும் இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரேனும் துடித்துக்கொண்டிருகின்றார்களா-இவர்களை உடனேயே அழைத்தால் இவர்கள் அந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு நல்ல மருத்துவ மனையை உடனேயே பரிந்துரைக்கிறார்கள். இவர்கள் தருவது 24 மணி நேர சேவை என்பது மிகவும் பாராட்டத்தக்க அம்சம்! ஆரம்பித்த மூன்றே மாதங்களில் 40 வெளி நாட்டு நோயாளிகளுக்கும் 120 உள் நாட்டு நோயாளிகளுக்கும் வழி காட்டி சாதனை படைத்திருக்கிறார்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால் எந்த மருத்துவ மனைக்குச் செல்வது, எந்த மருத்துவரைப்பார்ப்பது, எத்தனை செலவாகும், சென்னை அல்லது வேறு ஒரு நகரில் நோயாலிகளைச் சேர்க்க யார் உதவி செய்வார், நீண்ட நாட்கள் தங்கி ச்கிச்சை பெற வேண்டி வந்தால் யார் உதவியை நாடுவது-இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக தங்கள் அமைப்பை பெருமையுடன் சொல்கிறது இந்த நிறுவனம்!! குழம்பியிருக்கும் நோயாளிக்கு சிக்கலைப் போக்கி நல்ல முடிவை வழிகாட்டுகிறது இந்த நிறுவனம்! மருத்துவ மனைகளை அமைக்கவும் இவர்கள் ஆலோசனைகள் தருகிறார்கள். முக்கியமக என்னைப்போன்ற வெளி நாட்டு வாழ் தமிழருக்கு இந்த அமைப்பு ஒரு வரப்பிரசாதம்!!  

இவர்களின் விலாசம்: 

FRONT ENDERS HEALTH CARE SERVICES PVT.LTD,
NEW NO:31[OLD NO:16], FLAT.NO:4, 3RD FLOOR,
EAST CIT NAGAR, 11 MAIN ROAD, NANDANAM,
CHENNAI-600035. PHONE: 044-2431 0050
                                                   --------------------------------------
 

எப்போதும் மருத்துவர்களிடம் செல்லும்போது ஏதாவது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்காமல் இருப்பதில்லை. இந்த முறையும் தஞ்சை சென்ற போது ஒரு வேடிக்கையான அனுபவம் கிடைத்தது. 

ஒரு பிரபல வங்கி மேலாளருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவர் பேச்சு வாக்கில்  தன் நண்பர் தன்னை ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்றதைப் பற்றி விவரித்தார். அந்த மருத்துவர் இயற்கை முறை மருத்துவர் என்றும் நமது உடல் நலப்பிரச்சினைகள் எந்த உணவினால் ஏற்படுகிறதென்பதைக் கண்டு பிடித்து, அதற்கேற்ப நாம் உண்ணும் உணவு முறைகளை மாற்றிச் சொல்லிக்கொடுப்பதன் மூலம் நோய்களைத் தீர்க்கிறார் என்றார்.  

நான் எப்போதும் செல்லும் ஆட்டோ ஓட்டுனரிடமும் அந்த மருத்துவரைப்பற்றி கேட்டதற்கு அவர் அது பற்றி தனக்கு விபரம் ஏதும் தெரியாது என்றும் ஆனால் நிறைய பேர்களை அங்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் சொன்னார்.  

 


நானும் ஒரு நாள் அந்த மருத்துவரிடம் சென்றேன். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. வெளியில் சென்றிருந்த அந்த மருத்துவர் நான் சென்ற பிறகு தான் வந்தார். வந்ததும் வாசலை ஒட்டிய சின்ன நடையிலிருந்த ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு உட்கார்ந்தார். நோயாளிகளெல்லாம் நின்று கொண்டே தான் பேச வேண்டும். நான் நின்றவாறே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வங்கி மேலாளர் சொன்னதைப்பற்றியும் சொன்னேன். அதற்கு அவர் தான் இயற்கை மருத்துவத்துடன் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் சேர்த்தே பார்ப்பதாகக் கூறினார். என் பிரச்சினைகள் பற்றி கேட்டார். நான் எனக்கு சில ஆண்டுகளாக சர்க்கரை நோயின் பாதிப்பு இருப்பதாகவும் கால் வலி அடிக்கடி இருப்பதையும் கூறினேன். 

அவர் கேட்டார். 

‘ சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியுமா? 

நான் சொன்னேன். 

‘ ‘சர்க்கரை வியாதியை குணப்படுத்த இயலாது. அதை எப்போதும் கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும்.” 

“ அப்புறம் அதற்கு ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும்? இப்போது சாப்பிடும் வைத்தியத்தையே பின்பற்றலாமே?” 

எனக்கு இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மனதுக்குள் உடனேயே கிளம்பி விடலாம் என்று முடிவெடுத்து விட்ட போதிலும் நாகரீகம் கருதி பேசாமலிருந்தேன்.

அவர் அடுத்ததாக ஒரு கேள்வி கேட்டார். 

“உங்களால் காலை 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் மூலிகை சாறு தடவி குளிக்க முடியுமா? காலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் மூலிகை மருந்துகள் சாப்பிட முடியுமா?” 

நான் ஏற்கனவே கிளம்பி விட முடிவு செய்து விட்டதால் ‘ இது எனக்கு ரொம்பவும் கஷ்டம்’ என்றேன். 

“ அப்படியானால் இப்போது என்ன வைத்தியத்தை பின்பற்றுகிறீர்களோ, அதையே தொடர்ந்து கொள்ளுங்கள்!’ 

நன்றி சொல்லி வெளியே வந்த போது கோபம் கூட உடனே வரவில்லை. சிரிப்பு பீரிட்டது.. இங்கே ஒரு மருத்துவர் - அவரிடம் செல்லும்போதெல்லாம் அமர்ந்ததும் நம்மை ஆசுவாசப்படுத்தி, நோயைப்பற்றி விரிவாக அலசிக் கேட்ட பிறகு, நமது பதற்றம் குறைந்த பிறகு தான் நமது இரத்த அழுத்தத்தையே பரிசோதிப்பார். நோயாளியை நிற்க வைத்து பேசும் நாகரீகத்தை இத்தனை வயதில் இங்கு தான் முதன் முதலில் பார்த்தேன். 

நாட்டில் எப்படியெல்லாம் மருத்துவர்கள் இருக்கிறார்கள்!

24 comments:

Anonymous said...

சிறப்பான அரியதொரு தகவல்.
பகிர்ந்த நல்ல உள்ளத்திற்கு என் பாராட்டுக்கள்.
உங்கள் மருத்துவ அனுபவம் வினோதம்.
பறவைகள் பல விதம்.
ஒவ்வொன்றும் ஒரு விதம்.
நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு விலாசங்களும் பலருக்கும் பயன் படும் என்பதால் எனது வட்டத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி... "அமர்"க்களமான சம்பவம் தான்...

Yaathoramani.blogspot.com said...

இரு வேறு நிலைகளை
ஒப்பிட்டவிதம் அருமை
நோயாளிகளை நிறக் வைத்துப்பேசும் அந்த
மருத்துவர் நிச்சயம் அப்படித்தான் பேசுவார்
நல்ல வேளை தப்பித்தீர்கள்
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் சொல்லியவையெல்லாம் பயனுள்ள பல தகவல்கள். பாராட்டுக்கள்.

கடைசியில் நிற்க வைத்துப்பேசி அனுப்பிய வைத்தியர் பற்றிக்கேட்க மிகவும் விசித்திரமாகத்தான் உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

உபயோகமான தகவல்கள். முதலிரண்டு செய்தியிலும் இருப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள். உங்கள் அனுமதியோடு இந்தப் பக்கத்தை 'எங்கள்' வாராந்திர 'பாஸிட்டிவ் செய்திகள்' பகுதியில் பகிர்கிறோம். நன்றி.

ezhil said...

கொடுத்துள்ள முகவரிகள் கண்டிப்பாக பயனுள்ளது நானும் பகிர்கிறேன்... டாக்டர்கள் பலவிதம்....:)

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரியாரே. நன்றி, என் முக நூலில் பகிர்ந்துள்ளேன்.

Balasubramaniyan said...

மிகஅருமையான தகவல். மிக்க நன்றி.

நிலாமகள் said...

முதலிரு தகவல்களும் மிக அருமை. சேமித்துக் கொண்டேன்.

அதிரடிக்காரர் போன்றோருக்கும் கூட்டம் சேர்வதை என்ன சொல்ல?

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு அம்மா... வாழ்த்துக்கள்...

Ranjani Narayanan said...

முதல் இரண்டு தகவல்களும் மிகவும் பயனுள்ளவை.இரண்டு அமைப்புகளுக்கும் ஜே!

அடுத்து வந்த தகவல் அதிர்ச்சி! மருத்துவர் ஆவதற்கும், ஆசிரியர் ஆவதற்கும் தேவையான மனநிலை இல்லாதவர்கள் எல்லாம் இந்தப் பணிகளுக்கு வரவே கூடாது. நோயாளிகளையும், மாணவர்களையும் நினைத்தால் ஐயோ பாவம் என்றிருக்கிறது.

தி.தமிழ் இளங்கோ said...

FRONT ENDERS HEALTH CARE SERVICES PVT.LTD – பற்றிய புதிய தகவலுக்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி ஸ்ரவாணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் இப்பதிவின் தகவல்களை உங்கள் வட்டத்தில் ப‌கிர்ந்து கொண்டதற்கும் மன‌மார்ந்த நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் மனந்திறந்த பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் இப்பதிவின் பயனுள்ள‌ விபரங்களை உங்கள் வராந்திர பாசிட்டிவ் செய்திகளில் பகிர்ந்து கொண்டதற்கும் அன்பு ந்ன்றி ச‌கோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இப்பதிவின் தகவல்களை உங்கள் பக்கத்தில் பகிர்வதற்கும் அன்பு நன்றி எழில்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் முகநூலில் இப்பதிவின் தகவல்களைப் பகிர்வதற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் பாலசுப்ரமணியம்!

மனோ சாமிநாதன் said...

அது உண்மை தான் நிலாமகள்! வியாதிகளின் தாக்கம் கொடுமையாக இருக்கும்போது, எதைத்தின்றால் பித்தம் தெளியுமென்ற நிலையில் தான் இந்த மாதிரி வைத்தியர்கள் காட்டிலும் மழை பொழிகிறது!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

நிச்ய‌சம் இந்த மாதிரி அமைப்புகளுக்கு நாம் ஜே போடத்தான் வேன்டும் சகோதரி ரஞ்சனி! வருகைக்கும் இனிய கருத்துரைகளுக்கும் அன்பான நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!