Monday, 27 May 2013

முத்துக்குவியல்-20!!

அஞ்சலியாய் சில முத்துக்கள்!!



நேற்று மறைந்த பின்னணிப்பாடகர் திரு.டி.எம்.எஸ் செளந்திரராஜன் கணக்கிலடங்காத நினைவலைகளையும் அதிர்வலைகளையும் பல்லாயிரக்கணக்கான இதயங்களில் தனது மறைவிற்குப்பின்னால் ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேன்டும். நவரசங்களில் எத்தனைப் பாடல்களை அவர் பாடியிருக்கிறார்! அவரது குரலினால் நடிகர்களின் நடிப்பு சிறப்படைந்ததா அல்லது நடிகர்களின் நடிப்பினால் அவரின் இசைக்கு மெருகேறியதா என்று அந்தக்காலத்திலேயே பட்டிமன்ற ஸ்டைலில் விவாதங்கள் நடந்ததுண்டு.

துன்பமான நேரங்களிலும் மன அமைதி இழந்து தவிக்கும் காலங்களிலும் அருமருந்தாய் இதமளிக்கும் சக்திகளில் இசைக்கே முதலிடம் இருக்கிறது. மகிழ்வான வேளைகளிலும் மனதை மெய்மறக்க வைக்கும் சக்தியும் அதே இசைக்கே இருக்கிறது.

ஒரு முறை நாங்கள் இங்கே லக்ஷ்மண் ஸ்ருதி தலைமையில் பின்னணிப்பாடகர்கள் ஹரிணி, மனோ, சுஜாதா, ஸ்ரீனிவாஸ் கலந்து கொள்ளுமாறு ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அந்த சமயம், நான் திருமதி. ஹரிணியிடம் பேசிக்கொண்டிருந்த போது
 ‘ துன்பங்களினால் துவளுபவர்களுக்கு உதவி செய்ய பல வழிகள் இருக்கின்றன. ஆனால் மனதை அமைதிப்படுத்தி துன்பங்களை மறக்கச் செய்யும் சக்தி இசைக்கு மட்டுமே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இதயத்திற்கு அமைதியையோ மகிழ்ச்சியையோ தருகிறீர்கள்!’ என்றேன். அதற்கு அவர் ‘ உங்களை மாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதங்களினால் தான் இந்த மாதிரி பாக்கியம் கிடைத்திருக்கிறது’ என்று தன்மையாக பதிலளித்தார்!

அது போல அமரர் டி.எம்.செளந்திரராஜனின் பல்லாயிரம் பாடல்கள் இன்றைக்கும் சாகாவரம் பெற்று ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன!

அவர் பாட ஆரம்பித்த சமயத்தில் நல்லதங்காள் என்ற படத்தில் ‘பொன்னே புது மலரே’ என்ற பாடலைப் பாடியிருந்தார். ரொம்ப நாட்களாய் தேடிக்கொண்டிருந்த அந்தப்பாடல் சமீபத்தில் கிடைத்து பதிவு செய்ததும் அப்படியொரு மகிழ்ச்சியேற்பட்டது!

அண்னன் தங்கை பாசப்பிணைப்பில் பாடிய
‘ மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் எத்தனைக் கண்களைக் குளமாக்கியது அன்று! மயக்கும் இசையமைப்பிற்காக, தெளிவான, தேனிசைக்குரல்க‌ளுக்காக, தமிழின் இனிமைக்காக நான் எப்போதும் ரசிக்கும்
ஒரு பாடல் இது!!


 


அவரின் ஒரு பாடல் சொன்னது போல ‘ இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா!’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன! அவரின் தேனிசைக்குரல் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழும்!

ரசித்த ஒரு ஆங்கில வாசகம்!

It is greater to give a handful of rice
with love and honesty
than to give a thousand dollars
with the desire for name and fame!!

வெற்றி முத்து!



ஒரு வழியாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முடிவிற்கு வந்தது. நேற்று இரவு இந்த நேரம் இரவு 11.30 வரை [ இந்திய நேரம் ஒரு மணி] அமர்ந்து என் மகனுடன் பார்த்து ரசித்ததில் பதிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது! மும்பை இந்தியன்ஸ் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த 10 நாட்களில் மாட்ச் ஃபிக்ஸிங் காரணமாக இந்திய கிரிக்கெட் ஆடிப்போயிருப்பதும் சென்னை அணியைப்பற்றி சரமாரியாக தவறான தகவல்கள் வந்து கொண்டிருப்பதும்கூட சென்னையின் தோல்விக்குக் காரனங்களாக இருக்கலாம் என்பது  பலருடைய கருத்து!! எங்களுடைய உணவகத்தில் இரவு சாப்பிட வந்தவர்கள் முகங்களில் அத்தனை சோகம், சென்னை தோற்று விட்டதில்!!

 படங்கள்: கூகிளுக்கு நன்றி!!

Sunday, 19 May 2013

வீட்டுக்குறிப்புகள்!!!

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதற்கேற்ப, சின்னச் சின்ன வீட்டுக்குறிப்புகள் சில சமயங்களில் பெரிய அளவில் பலனைக்கொடுக்கிறது.

பல வருடங்களுக்கு முன், என் வலது கை ஆள்காட்டி விரலில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. ஃப்ரீஸரிலிருந்து மீனை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பக்கவாட்டிலிருந்த பெரிய முள் ஒன்று சரேலென்று விரலினுள் நுழைந்து அடுத்த பக்கத்தில் வெளி வந்து நின்றது. வலியில் துடிதுடித்து உடனேயே மருத்துவரிடம் சென்றதில் அவர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்றார். அடுத்த சில மணி நேரங்களிலேயே முள் முழுவதுமாக விரலினுள் சென்று விட்டதால், இன்னொரு மருத்துவரோ, ' ' குத்தி வெளியில் வந்து விழுந்திருக்கும், நீங்கள் உள்ளேயே இருப்பதாக கற்பனை செய்கிறீர்கள்’ என்றார். அடுத்த மருத்துவர் ‘அறுவை சிகிச்சை செய்தால் முள்ளும் வெண்மை, நரம்புகளும் வெண்மை என்பதால் நரம்புகள் ஏதேனும் அறுபட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி ஒரு திரவத்தை ‌ கொடுத்து அதை தினமும் தடவி வந்தால் நாளடைவில் முள் உள்ளுக்குள்ளேயே கரைந்து போய் விடும் என்றார். அந்த சமயம் ஊரிலிருந்து என் சினேகிதி ஒருத்தர் ‘சிறிது அரிசி மாவை மஞ்சள் தூள், சிறிது நல்லெண்ணெய் கலந்து பசை போல ‌காய்ச்சி பொறுத்துக்கொள்கிற சூட்டில் குத்திய இடத்தில் வைத்து ஒரு துணியால் அதன் மீது தினமும் கட்டி வந்தால் முள் வெளியே வந்து விடும்’ என்று எழுதியிருந்தார். அந்த கை வைத்தியத்தை தினமும் செய்து வர, அடுத்த நான்காம் மாதத்தொடக்கத்தில் முள்ளின் ஒரு பகுதி குத்திய பக்கத்திலிருந்தும் எட்டாம் மாதம் முள்ளின் அடுத்த பகுதி அடுத்த துவாரத்திலிருந்தும் வெளியே வந்தது. கை வைத்தியத்தின் பெருமை அப்போது முழுமையாக மனதில் பதிந்தது. அது போலவே தான் இந்த சின்னச் சின்ன குறிப்புகள் எதிர்பாராத சமயங்களில் பெரிய உதவிகளாய் கை கொடுக்கும்!!

இனி வீட்டுக்குறிப்புகள் சில!

1. பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதைத்  தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.



2. வேப்பிலை போட்டு ஊற வைத்த நீரை செடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் பூச்சி அரிப்பு எதுவும் இல்லாமல் இருக்கும்.

3. புதுப்புளி வாங்கி கொஞ்ச நாட்கள் கழித்து கருக்க ஆரம்பித்து விடும். இதை தவிர்க்க புதுப்புளி வாங்கியதும் ஒரு மண் பானையில் கொஞ்சம் புளியைப்போட்டு அதன் மீது கொஞ்சம் கல் உப்பைத்தூவி அதன் மீது மீண்டும் புளியை வைத்து மறுபடியும் உப்பைப்போட்டு இப்படியே புளி, உப்பு என்று மாறி மாறிப்போட்டு மூடி வைத்தால் அடுத்த சீசனுக்கு புளி வாங்கும் வரை கருக்காமல் இருக்கும்.



4. மாம்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, நெருப்பிலிட்டால் அதன் புகையில் கொசுக்கள் வராது.

5. பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவி விட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.



6. தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்து விட்டால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டு வேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.

7. சாயம் போகக்கூடிய துணிகளை புதியதாக இருக்கும்போது நேரடியாக தண்ணீரில் நனைக்கக்கூடாது. கல் உப்பு கரைத்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்திருந்து பிறகு வழக்கம்போல துவைத்தால் அதிகப்படியான சாயம் நீங்கி விடும். அடுத்தடுத்து துவைக்கும்போது சாயம் போகாது.
வீட்டு சுவர்களில் விரிசல் இருந்தால் வெள்ளை சிமிண்டுடன் சிறிதளவு பேக்கிங் பெளடரைக்கரைத்து ஊற்றினால் விரிசலே தெரியாதவாறு ஒட்டிக்கொள்ளும்.




8. வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

9. இரவு சுண்டலுக்கு ஊறவைக்க மறந்து விட்டால் காலையில் அதை ஹாட்பாக்ஸில் போட்டு வென்னீர் ஊற்றி மூடி வைத்தால் 2 மணி நேரத்தில் நன்கு பெரிதாக ஊறி விடும்.
 

Sunday, 12 May 2013

காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2

அன்றைய காலத்தில், பெண் பார்க்க மாப்பிள்ளைகள் வரும்போது, அவர்கள் வந்து விட்டுச் சென்றதும் வீட்டில் பெற்றோர்கள் கேட்பார்கள், ‘மாப்பிள்ளையைப்பிடித்திருக்கிறதா’ என்று! அதற்கு பதிலே வராது. அப்படி பதில் வந்தாலும் ‘ உங்களுக்குப்பிடித்திருந்தால் சரி !’ என்ற பதில் தான் வரும்.
இன்றைக்கோ இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி மாறி விட்டன! ‘ எனக்கேற்ற மாப்பிள்ளையை சரியாக கணித்துப்பார்க்க என் பெற்றோருக்குத் தெரியவில்லை’ என்று தொலைக்காட்சி  விவாதங்களில்கூட பெண்கள் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் சொல்கிறார்கள். இது நல்ல மாற்றம் தானா?

வீட்டில் அம்மாக்கள் அன்றைக்கு ‘ நீ ஒன்றுமே தெரியாமலிருந்தால் உன் மாமியார் என்னைத்தான் வறுத்தெடுப்பார்கள்’ என்று புலம்பிக்கொண்டே வேலைகளைப் பழக்கி விடுவார்கள். கூடவே திட்டுக்களும் விழுந்து கொண்டே இருக்கும்!
இன்றைக்கு அம்மாக்கள் பெண்களை வேலைகள் செய்யப் பழக்குவதில்லை.
 ‘ போகும் இடத்தில் தான் கஷ்டப்பட்டாக வேண்டும். கல்யாணமாகிப்போகும் வரையாவது என் பெண் இங்கே சுகமாக இருக்கட்டுமே!’ என்கிறார்கள்.

.திருமணமாகி பெண் புகுந்த வீட்டிற்குப்போகும்போது, ‘ எங்கள் பெயரை நீ காப்பாற்ற வேண்டும். அந்த வீட்டு செய்தி எதுவும் இங்கு வரக்கூடாது’ என்று சொல்லியனுப்புவார்கள். இன்றைக்கு அந்த மாதிரி புத்திமதிகள் எதுவுமே இல்லை! ‘ உனக்கு அங்கே ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையென்றால் ஒரு ஃபோன் பண்ணு போதும், நான் உடனேயே வந்து அழைத்துப்போகிறேன்’ என்று ஒரு தகப்பனார் தன் பெண்ணிடம் சொன்னதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

அன்றைக்கு தாய்மையடைந்த பெண்ணை பிரசவத்துக்குப்போகும்வரை குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் நன்றாகப் பழக்குவார்கள். ஏழாம் மாதத்தில் குனிந்து வாசலில் கோலம் போட வேண்டும். நன்றாக எப்போதும் போல நடந்து, அடுப்படி வேலைகள், அம்மி அரைப்பது என்று சகலமும் செய்ய வேண்டும்.  குழந்தையும் எந்த வித அறுவை சிகிச்சையுமில்லாமல் சுகப்பிரசவத்தில் பிறந்தது. இன்றைக்கோ, முதலில் சில பெண் மருத்துவர்களே,
 ‘ தளர்ச்சியாக இருந்தால் பெட் ரெஸ்ட் எடு. மூன்று மாதம் வேலை செய்யாதே’ என்கிறார்கள்! அப்புறம் மாமியார் எந்த விதத்தில் புத்திமதி சொல்லி பயத்தை போக்க முடியும்? இன்னும் சில மருத்துவர்களோ ‘ நல்ல நாளாகப் பார்த்து அறுவை சிகிச்சையை ஃபிக்ஸ் பண்ணி விடுங்கள்’ என்று சொல்கிறார்கள்! 

திருமணங்களில் விவாகரத்து சதவிகிதம் இன்று கணிசமாக உயர்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதுவும் தமிழ் நாட்டில் அதிகமாம்! என் மகனுடன் திருமணமான அவரது நண்பர்களில் இதுவரை பதினோரு பேர்களுக்கு விவாகரத்து நடந்திருக்கின்றன!
பெண்கள், திருமண வாழ்வு-இவற்றில் வந்த மாற்றங்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!
 
35 வருடங்களுக்கு முன்பு, இங்கே திருமணமான புதிதில் நான் வந்தபோது எங்கேயுமே வானுயர்ந்த கட்டிடங்களோ, வளம் மிக்க காட்சிகளோ கிடையாது. ஒரு மகப்பேறு மருத்துவர்கூட‌ கிடையாது. சாப்பிடுவதற்கு ஏதேனும் ஓரிரண்டு கடைகள் இருக்கும். எப்படியாவது பொருளீட்டி தாய்நாட்டிலிருக்கும் குடும்பம் வாழ வேண்டுமென்று, முறையான விசா கிடைக்காமல் ‘லான்ச்’ எனப்படும் கள்ளத்தோணியில் வந்திறங்கி கிடைக்கிற வேலையில் இறங்கியவர்கள் எத்தனையோ பேர்! கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, இந்தப் பாலையின் சூட்டிலும் குளிரிலும் வதங்கி அன்று தன் குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

எங்கள் உணவகத்திலேயே 25 வருடங்களாக வேலை செய்து வரும் சமையல்காரர்கள், சப்ளையர்கள் எல்லோரும் இன்று தன் பிள்ளைகளை, பெண்களை மேற்படிப்பு படிக்க வைத்து, ஊரில் நிலங்களும் வீடுகளும் வாங்கி நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு வேலையில் அமரும் சிறு வயது பிள்ளைகளுக்கோ எந்த விதப்பொறுப்பும் இல்லை. ‘ நிறைய சம்பாதிக்க வேண்டும், ஆனால் வேலைகள் அதிகம் இருக்கக்கூடாது’ என்ற நினைப்புடன் இருப்பவர்கள் அதிகம் பேர்!!

சென்ற வருடம் எங்கள் உணவகத்திற்கு சமையல் செய்ய ஒரு இளைஞனை தேர்ந்தெடுத்தோம். ஊரில் அப்பா இல்லாமல் அம்மா வேலை செய்து மகனை ஓரளவு படிக்க வைத்திருந்தார்கள். அந்த பையனும் நன்கு சமைத்துக்காட்டியதால் செலவெல்லாம் செய்து அந்தப்பையனை இங்கு வரவழைத்தோம். ஒரு வாரம் வேலை செய்தான். அதற்கப்புறம் மருத்துவ சோதனைகள் எல்லாம் அவனுக்கு செய்து பாஸ்போர்ட்டில் விசா அடிக்க வேண்டும். என் கணவர் மருத்துவ சோதனைக்கு அவனைத் தயாராக இருக்கச் சொன்ன போது, அவன் சொன்னான், ‘ சார் நான் ஊருக்குத்  திரும்ப‌ப் போகிறேன்!’

அதிர்ச்சியடைந்த என் கணவர் காரணம் கேட்டபோது, அந்த 28 வயது பையன், அம்மாவை உட்கார வைத்து காப்பாற்ற வேண்டியவன்  ‘ எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!’ என்று சொன்னான்! எத்தனையோ சொல்லிப்பார்த்தும் உபதேசங்கள் செய்தும் அவன் தலையில் ஒன்றும் ஏற‌வேயில்லை! இந்த விபரத்தை அவன் அம்மாவிடம் சொன்னால் பாவம், ‘ என் மகனுக்கு எப்போது தான் பொறுப்பு வரப்போகுதோ தெரியவில்லை!’ என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள் தொலைபேசியில்! வேறு வழியில்லாமல் அவனைத் திருப்பி அனுப்பினோம். அதுவரை செலவு செய்த தொகையையெல்லாம் தானே தந்து விடுவதாக அவன் அம்மா சொன்னதோடு, நாங்கள் ஊருக்குப்போன போது அந்த மகனிடமேயே அனுப்பி வைத்தார்கள்! பெற்றோர்கள் நெருப்பில் வாழ்ந்தாலும் எத்தனையோ மகன்கள் இன்றைக்கு இப்படித்தான் குளிர் காய்கிறார்கள்!!

கடைசி கடைசியாக இன்றைய வயதானவர்களின் வாழ்க்கையையும் சொல்ல வேண்டும். அன்றைக்கு, ஓரளவு ஐம்பது வயதைத் தாண்டி விட்டாலே பெண்களுக்கு வீட்டில் ஓரளவு ஓய்வு கிடைத்தது. மருமகள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் செய்வதும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவதுமாக அமைதியாக அவர்களின் பொழுது கழிந்தது. ஆண்களுக்கும் வேலையிலிருந்து பணி ஓய்வு கிடைத்ததும் ரிட்டைய்ர்ட் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடிந்தது. இன்றைக்கோ அவர்களுக்கு 50 வயதைத்தாண்டிய பிறகு தான் பொறுப்புக்கள் அதிகமாயிருக்கின்றன! உடலும் மனமும் ஓய்வைத்தேடித்தேடி கெஞ்சுகின்றன! நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளின் அல்லது பெண்களின் குழ்ந்தைகளை சமாளிக்கவும் சமைத்துப்போடவும் அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளுக்கு அடிக்கடி செல்வது இன்றைக்கு சர்வ சாதாரணமாக இருக்கிறது!, அவர்களின் குழந்தைகள் தங்களின் குழந்தைகளை இவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு சந்தோஷமாக அங்கே பொருள் ஈட்டுகிறார்கள்! இன்னும் சில பெற்றோர்கள் வேறு மாதிரி! பெற்றோர்கள் வேறு எங்காவது உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ பணியில் இருக்க, நம் ஊரிலேயே தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளை படாத பாடு பட்டு வளர்க்கிறார்கள்! காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் உழைத்துச் சோர்ந்து போயிருக்கும் வயதானவர்களில் அநேகம் பேருக்கு இன்னுமே ஓய்வு என்பதே கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய நிஜம்!

காலங்கள் வரைந்தவை அன்று அழகிய கோலங்கள்! இன்று வரைந்திருப்பதோ நிறைய சமயங்களில் கிறுக்கல்கள்தான்!


 

Monday, 6 May 2013

காலங்கள் வரைந்த கோலங்கள்!!!!




வெளியே சென்று திரும்பிய என் கணவரின் கைகளில் இரண்டு திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. ' தபால் பெட்டியில் கிடந்தன. எடுத்து வந்தேன்' என்றார்கள். யாரென்று கவனித்ததில் இரண்டுமே தூரத்து உறவினர்களின் பெண்களின் திருமணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தன. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தகவலுமில்லை. எந்தக் கடிதமோ, அழைப்போ எதுவுமேயில்லை. உலகம் தான் எத்தனை சுருங்கி விட்டது!

அந்தக் காலத்தின் திருமணங்கள் நினைவுக்கு வந்தன. எத்தனை குதூகலம்! இரன்டு நாட்களுக்கு முன்னரேயே விருந்தினர்கள் வருகையாலும் வீடெங்கும் புன்னகைக்கும் மாக்கோலத்தாலும் உற்சாகம் ஆரம்பமாகி விடும். பலகாரங்களின் சுவையும் வெல்லப்பாகின் மணமும் குழந்தைகளின் கூக்குரலும் விளையாட்டுமாக கல்யாண வீடே களை கட்டும். மாமன் பத்திரிக்கை எப்படி வைப்பது, அழைப்பிதழுடன் என்னென்ன வரிசைப்பொருள்கள் வைத்து அழைப்பது என்று பார்த்துப் பார்த்து செய்வார்கள். இப்போதோ, கோலம் போடக்கூட காண்ட்ராக்ட் வந்து விட்டது. உறவினர்களெல்லோரும் கூடி மகிழும் விசேடமாக இல்லாமல் மொய் எழுதி கணக்குப்பார்க்கும் சம்பவமாகவே மாறி விட்டது இன்றைய திருமணங்கள். அதுவும் அவை ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, போகக்கூடிய குறைந்த அளவு தூரமாக இருந்தால் மட்டுமே குடும்பத்தோடு போவது இன்றைய வழக்கமாகி விட்டது. அழைப்பிதழ் கவரின் மேலே பெயர் கூட எழுதாது கொண்டு வந்து கொடுத்து விட்டு, ‘ இந்த அழைப்பிதழுக்கு மட்டும் எத்தனை செலவு செய்திருக்கிறேன் ’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளுபவர்கள் தான் இன்று அதிகம்!  ' இது என் வீட்டு கல்யாணம். நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது எனக்கு மிகவும் நிறைவையளிக்கும் விஷயம்' என்று சொல்வது இன்றைக்கு மிகவும் அரிதாகி விட்டது.

சமீபத்தில் படித்த வாசகங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

‘ஒரு காக்கை இறந்து விட்டால்கூட மற்ற காக்கைகள் கத்தியபடி கூட்டமாய் வட்டமிடும். பறவையைக் கண்டு விமானம் கண்டு பிடித்த நம்மால் பறவைக்கு இருக்கும் உணர்வை. பின்பற்றக்கூட தோன்றுவதில்லையே!

கூட்டுக்குடும்பங்களில் பிரச்சினைகள் இல்லாமலில்லை. பெரியவர்களிடையே அவ்வப்போது நீரு பூத்த நெருப்பாய் பிரச்சினைகளும் கோபதாபங்களும் வந்து போய்க்கொண்டு தானிருக்கும். ஆனால் குழந்தைகள் பகிர்ந்துண்ணவும் மரியாதை கொடுத்து வளரவும் பணிவையும் அன்பையும் புரிந்தும் தெரிந்தும் வளர்ந்தார்கள் அன்று!

துக்கத்திலும் சந்தோஷங்களிலும் மனப்பூர்வமான உணர்வுகள் அன்றைக்கு இருந்தன! நிலாவையும் காக்கை குருவியையும் காண்பித்து சோறு ஊட்டும்போது, உணவோடு உணர்வுக்கும் சேர்த்து பல நல்ல செய்திகள் கதைகள் வழியாக புகட்டப்பட்டது. இன்றோ குழந்தைகள் லாப்டாப்பில் விளையாடிக்கொண்டும் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டும் சாப்பிடுகின்றன. என் புகுந்த வீட்டில் யார் வந்தாலும் என் மாமியார், கொழுந்தனார்கள் உடனேயே வெளி வந்து வாருங்கள் என்று வரவேற்று முடிந்ததும் வீட்டுக்குள்ளிருக்கும் பெண்கள் அனைவரும் வெளீயே வந்து ' வாருங்கள்' என்று வரவேற்போம். நாங்கள் முடிப்பதற்குள்ளேயே குழந்தைகள் எல்லோரும் வந்து வரவேற்பார்கள். இப்படி பழகி, எங்களையறியாமலேயே குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கித்தருகிறோம் என்பது வெளியில் மற்றவர் இல்லங்களுக்குச் செல்லும்போது கிடைக்கும் பாராட்டுக்களில்தான் புரிந்தது. ஒரு நாள் தெரிந்தவர் இல்லத்திற்குச் என்றிருந்தேன். அந்த வீட்டுக்குழந்தைகள் டிவி பார்த்த வண்ணம் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. என்னைப்பார்த்ததும் ஒன்று ' யார் நீ' என்றது. இன்னொன்று ' அம்மா இங்கே வா, யாரோ வந்து நிற்கிறார்கள்' என்றது. குழந்தைகளை நான் என்றுமே தப்பு சொல்வதில்லை. பிரபல பாடல் சொல்வது போல ' எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!' என்ற வரிகள் தான் நிதர்சனமான உண்மை!

என் மகன் பிறந்த போது, இங்கிருந்த என் கணவருக்கு செய்தி தெரிவிக்க தந்தி கொடுத்தார்கள் வீட்டில். அது என் கணவருக்கு கிடைக்க 10 நாட்களாயின. ஆனால் இன்றைக்கு என் மருமகளுக்கு குழந்தை பிறந்த போது, உணர்வு வந்ததுமே மொபைல் ஃபோனிலிருந்து மகனும் மருமகளும் பேசிக்கொள்ள முடிந்தது! மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள் முடிந்தது.

மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையில்லை! வாழ்வியலுக்கு சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் விஞ்ஞான வடிவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தானிருக்கின்றன. ஆனால் எந்த மாற்றங்களால் நல்லவைகள் தடம் மாறுகின்றனவோ, கலாச்சாரம் அழிகின்றதோ, அவை நல்ல மாற்றங்கள் நிச்சயமாக இல்லை!

தொடரும்!
படங்களுக்கு நன்றி: கூகிள்