Sunday, 31 March 2013

பாலையில் ஒரு சரணாலயம்!!

இங்கு ஷார்ஜாவில் ஒரு புகழ் பெற்ற வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த சரணாலயத்திற்கு அடிக்கடி போக வேண்டுமென்று நினைப்போமே தவிர அதை செயல்படுத்தியது கிடையாது. என் பேரனுக்காக என் மகனும் மருமகளும் நண்பர்களுடன் சென்று ரசித்து வந்து விட்டு எங்களையும் அழைத்துப்போக வேண்டுமென்று நச்சரித்துக்கொண்டேயிருந்ததால் ஒரு வழியாக இரன்டு நாட்களுக்கு முன்னால் நானும் என் கணவரும் அவர்களுடன் கிளம்பினோம்.

ஷர்ஜாவிலிருந்து 28 கிலோ மீட்டர்  தூரத்தில் அல் தாய்த் என்னும் நகரம் செல்லும் வழியில் அரேபிய பாலைவன பூங்கா அமைந்துள்ளது. 1999ம் ஆண்டு நிறுவப்பட்ட இது அரேபிய நாடுகள் முழுமைக்கும் சிறந்த சரணலயமாகக் கருதப்படுகிறது. இதில் இந்த வன விலங்குகள் சரணாலயம் தவிர, குழந்தைகளுக்கான பண்ணை, இயற்கை வள, வரலாற்று ஆய்வு மியூஸியம் ஆகியவையும் அமைந்துள்ளன.

குழந்தைகளுக்கான பண்ணையில் காட்சிப்பொருளாக பற‌வைகளின் முட்டைகள்!
நெருப்புக்கோழியின் முட்டை மிகப்பெரியது!
முதலில் குழந்தைகளுக்கான பண்ணையில் ஒட்டகம், ஆடு, மாடு, குதிரை, வாத்துக்களை கம்பி வேலித்தடுப்பிற்குப்பின்னால் பார்க்கலாம்.

வாத்துக்கள் மேயும் ஓடை!
இங்கு வேண்டும் மட்டும் புகைப்படங்கள் எடுக்கலாம்.



கட்டு கட்டாகக் கிடைக்கும் புற்களை விலங்குகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குதிரை சவாரி செய்யலாம். குழந்தைக‌ளுக்கு ஒரே குதூகலம் தான் இங்கு!

வாத்துக்களுக்கு பாப்கார்ன் போடும் பேரனும் மகனும்!
பெரியவர்களும் குழந்தைக‌ளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்!!

ஒட்டகத்துக்கு புற்களை உண‌வாககொடுக்கும் என் மருமகள்!!
பல ஏக்கர்கள் பரவிய இன்னொரு கட்டிட‌த்தில் கொடிய விலங்குகள், பாம்புகள், புலி, ஓநாய்களை முற்றிலும் குளிரூட்டப்பட்ட பாதை வழியே நெடுகிலும் நடந்த‌வாறே பார்க்கலாம்.

குளிரூட்டப்பட்ட விலங்குகள் சரணாலய முகப்பு!!
இங்கு புகைப்படங்கள் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பாம்புகள், பல்லிகள் முதலியவை கண்ணாடித்தடுப்பிற்குப்பின்னால் செடிகள், வேர்கள் போன்ற இயற்கை சூழ்நிலைப்பின்னணியில் கண்ணாடிக்கூண்டுகளில் பாதுகாப்புடன்  வைக்கப்பட்டுள்ளன. பறப்பன, ஊர்வன என்று ஒவ்வொன்றுக்கும் முன்னால் அதன் வாழ்க்கைப்பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கூகிள் மூலம் பெற்ற புகைப்படம்- இது பறைவைகள் இருக்குமிடம்!
முயல்கள், பறவைகள் பரந்த வெளியில் செய‌ற்கைக்கூரை வேயப்பட்ட இடத்தில் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு கம்பி வேலித்தடுப்பிற்குப்பின்னால் ஓடிக்கொண்டும் பறந்து கொண்டும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மணிக்கணக்காய் அமர்ந்து பார்த்து ரசிக்க இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

அதன் பின்னர் நரிகள், முள்ள‌ம்பன்றிகள் போன்றவை ஒரு வளாகத்தில் 'இருட்டு மிருங்கங்கள்' என்ற தலைப்பில், முற்றிலும் இருட்டாக்கப்பட்டு மங்கலான ஒளியில் பின்னணித் தடுப்புகள் தாண்டி அலைந்து கொண்டிருக்கின்றன! அதை விட்டு வெளியே வந்தால் காடு போன்ற பின்னணிச் சூழலில் புலிகளும் சிறுத்தகளும் ஓநாய்களும் குரங்குகளும் தனித்தனித் தடுப்புகளில் உலவிக்கொன்டிருக்கின்றன.

இங்கேயும் நம் இந்திய சகோதரர்கள் விதி மீறல் செய்தார்கள். புகைப்படம் ரகசியமாக எடுத்தவர்களை காவல்காரர்கள் வந்து அப்புறப்படுத்தி காமிராவைப் பிடுங்கி வைத்துக்கொண்டு உள்ளே மறுபடியும் அனுமதித்தார்கள். மனசில் ஒரு நிமிடம் வேதனை எழாமலில்லை. வருகிற வெளிநாட்டினர் எல்லாம் பேசாமல் விதிகளின் படி நடந்து கொள்ளும்போது, இவர்கள் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள்?

சுத்தமான சூழ்நிலை! ரசிக்கும்படியான அமைப்புகள்!!
 இது ஒரு வித்தியாசமான அனுபவமக அமைந்து விட்டது!!!



 

Monday, 25 March 2013

அன்பென்பது....!!!



சகோதரர் வெங்கட் நாகராஜ் இந்த ஓவியத்தை வெளியிட்டு, இதற்குப்பொருந்துமாய் கவிதை புனையச்சொல்லி அனைத்துப்பதிவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த ஓவியத்தைப்பார்த்ததும் சொக்கிப்போனேன். நிறைய சிந்தனைகளை, பழைய நினைவலைகளை, இளம் வயதில் படித்தவற்றை அந்த ஓவியம் கிளறி விட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்!

சங்க இலக்கியங்களில் காதலர்க்கு இடையில் இந்த அன்னம் மட்டுமல்ல, தும்பியும் குயிலும் வண்டும் மயிலும் பறவைகளும் தூதுவர்களாய் புனையப்பட்டார்கள்.

நளவெண்பாவில் நளன் அனுப்பிய அன்னம் தமயந்தியிடம் தூது வந்ததை ரவிவர்மாவின் ஓவியம் பிரபலமாக்கியது.



'நாராய் நாராய் செங்கல் நாராய்' என்று நாரைகள் கூட தலைவனுக்கு தூதாய் அனுப்ப தலைவிக்கு பயன்பட்டன!
 
சுவை மிக்க சங்க காலப்பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது! நாயகி மதுரை சொக்கநாதர் பால் மையல் கொண்டவள். அந்த இறைவனிடம் தூதாய்ச் செல்ல யாரை அனுப்புவது என்று யோசிக்கிறாள். அன்னம் என்றால் முன்னதாக நான்முகன் அன்னமாக வந்து பொய்யுரைத்த கதை நினைவுக்கு வந்து விட்டதாம். தும்பி என்றால், பாண்டியன் அவையில் நக்கீரனாரிடம் சென்ற இறைவன் எழுதிய பாடலில் 'தும்பியே, உண்மையைச் சொல் என்று அதட்டி கவி பாடியது நினைவுக்கு வரவே தயக்கம் வந்து விட்டதாம். மானை அனுப்பலாமென்றால், இறைவனின் உடலில் இருக்கும் புலித்தோலைப்பார்த்து மான் மருண்டோடி விட்டால் என்ன செய்வது என்று தலைவிக்கு குழப்பமாகி விட்டதாம். அப்புறம் தான் ஒரு யோசனை வந்ததாம். தமிழையே தூது அனுப்பினால் என்ன, தமிழ் பால் என்றுமே மனம் வசப்பட்டிருக்கும் இறைவனுக்கு தமிழை விட வேறு பொருத்தமான தூதுவர் இருக்க முடியுமா என்ன' என்று அந்த தலைவிக்கு முடிவேற்பட்டதாம். இப்ப்டி கடவுளுக்கு தமிழையே தூது அனுப்பிய கதையும் நம் சங்க காலப் பாடலில் இருக்கிறது.

தூது சொல்லுவோருக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டுமென்று திருவள்ளுவரும் அழகாய்
'அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.' என்ற குறளில் சொல்லுகிறார்.

அதற்கப்புறம் புறாக்கள் சாமானியர்களுக்குத் தூதாய் வந்தன. அரசர்களுக்கிடையில், காதலர்க்கிடையில் தூதாய் வந்தன.

காலம் செல்லச் செல்ல ஓலைச்சுவடிகள் மாறி, கடிதங்களும் தபால்காரரும் தூதுவர்களாய் பயன்பட்டார்கள். தபால்காரரின் வருகையை வழி மேல் விழி வைத்துக்காத்திருந்த உள்ளங்கள் எத்தனையோ! தூது செல்லும் முறைகள் மாறினலும் கவிஞர் கண்ணதாசனும் மற்ற கவிஞர்களும் சங்க காலப் புலவர்களுக்கு இணையாக மறுபடியும் பறவைகளையும் நிலவையும் மலர்களையும் தூது செல்லச் சொல்லி மறக்க முடியாத பல கவிதை மழையில் நனைந்தார்கள்.

'படகோட்டி' திரைப்படத்தில்
‘ பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?
துள்ளி வரும் மெல்லலையே, நீ போய் தூது சொல்ல மாட்டாயோ?’ என்று அலைகளைத் தூதாக மக்கள் திலகம் அனுப்பினார்.

‘ பச்சை விளக்கில்’ ‘ தூது செல்ல ஒரு தோழி இல்லையென்று துயர் கொண்டாயோ?’ என்று தலைவியிடம் தோழி பாடுகிறாள்.

திரைப்படப்பாடல்களில் இப்படி தூது சொல்லப்போய் நம் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன!

காதல் மட்டுமல்ல, மனம் நிறைந்த அன்பை, அக்கறையை, கவலையைப் பகிர்ந்து கொள்ள கடிதங்கள் மட்டுமே அன்று பெருமளவு உற்ற துணையாய் இருந்தன. என் மாமியார் உயிருடனிருந்த வரை அவரின் கடிதங்கள் எப்போதுமே பல பக்கங்களுடன் வரும். நலம் விசாரித்தல் மட்டுமே முழுசாய் ஒரு பக்கம் இருக்கும். என் தாய் வழிப்பாட்டியின் தகப்பனார் அவர் பெண் திருமணமாகி புகுந்த வீடு செல்லும்போது பல காகிதங்களில் தன் புத்திமதிகள் எல்லாவற்றையும் பொக்கிஷமாக எழுதிக்கொடுத்தார்.

இப்படி காதலையும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்திய விதம் அன்று அருமையாக இருந்தன.

இன்றோ! கடிதங்களுக்கு பதிலாக தொலைபேசி வந்து, அதன் பின்னால் கைபேசியும் வந்து விட்டது. ஆனால் எதையும் வெளிப்படுத்த இன்றைக்கு நேரம் தான் இல்லை! ஈமெயிலும் குறுகி எஸ்.எம்.எஸ் இன்னும் மிகச்சுருக்கமாகச் சொல்ல வைக்கிறது! ஆழ்ந்த உணர்வுகள்தான் அவற்றில் இல்லை!! முழுமையாகப் புரிதலும் பகிர்தலும் செயல்க‌ளிலும் சிந்தனைகளிலும் ஒருமித்து உணர்தலுமே அன்பு! அது இன்று முழுமையாக, நிறைவாக எத்தனை பேரிடம் இருக்கிறது?

Tuesday, 19 March 2013

சமையலறையில் மருத்துவம்!!


நம் சமையலறையில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் எத்தனையோ பொருள்கள் மருத்துவ நன்மைகளை அதிகமாய்த் தரக்கூடியவை.
நமக்கு அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, உடனேயே மருத்துவரிடம் செல்லாமல் நமக்கு நாமே கை வைத்தியம் செய்து கொள்ள‌க்கூடிய மருத்துவ முறைகள் ஏராளமாய் வெந்தயம், ஏலம், மிளகு, எள், சீரகம், உளுந்து போன்ற பொருள்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில முத்துக்கள் இங்கே!

மருத்துவ முத்துக்கள்!!

அரிசித்திப்பிலியும் 10 சீரகமும் பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் தொடர் விக்கல் சரியாகும்.



உஷ்ணத்தால் வரும் வயிற்றுப்போக்குக்கு சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைப்போட்டு குடித்தால் உடனேயே வயிற்றுப்போக்கு சரியாகி விடும்.

சளியினால் தலைகனம் வரும்போது:



7,8 கிராம்பை சந்தனக்கல்லில் மையாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் பலன் கிடைக்கும்.



முருங்கைப்பூவை பொரியல், சூப் என்று செய்து சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

நாலைந்து செம்பருத்திப்பூக்களை 2 கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் சாறை காலையும் மாலையும் பருகி வந்தால் இதய சம்பந்தமான பிணிகள் அத்தனையும் நீங்கும்.



வாசனைப்பொருள்களின் அரசி என்ற‌ழைக்கப்படும் ஏலக்காய் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் எளிதில் ஆவியாகக்கூடிய பல எண்ணெய்கள் இருப்பதால் இதன் ம‌ருத்துவ குணங்கள் அதிகம்.

ஜலதோஷத்தால் மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படும் குழந்தைகளுக்கு 4 ஏலக்காய்களை நெருப்பிலிட்டு அந்தப் புகையை முகரச்செய்தால் மூக்கடைப்பு பிரச்சினை உடனே சரியாகும்.

டீ தயாரிக்கும்போது டீத்தூளுடன் நிறைய ஏலக்காய்கள் சேர்த்து த‌யாரிக்கும் தேனீர் மன அழுத்தத்தைக்கூட சரியாக்குகிறது.  4 ஏலக்காய்களையும் சிறு துண்டு சுக்கையும் நீர் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பருகினால் தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் சரியாகும்! நெஞ்செரிச்சலும் வாயுத்தொல்லையும் இருக்கும்போது, சில ஏலக்காய்களை மென்று தின்றால் வாயு பிரிந்து நெஞ்செரிச்சல் குறைகிறது.

தொண்டை கட்டி பேச குரல் எழும்பாதபோது, மஞ்சள், தேன், சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து தொண்டையிலும் கால் பெருவிரலிலும் தடவவும்.



எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.



விடாத விக்கல் ஏற்படும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை விழுங்கவும். சீனி கரையாது உடனேயே விழுங்கி விட வேண்டும். உள்ளே மணலாய் செல்லும் சர்க்கரை தொண்டையிலுள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, முக்கியமாக விக்கல் தொடரக்காரணமான ஃப்ரிபினிக் என்னும் நரம்பை அமைதிப்படுத்தி, விக்கலை நிறுத்தி விடுகிறது.

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!


Sunday, 10 March 2013

பயணங்கள்- தொடர்ச்சி!!


மறக்க முடியாத பயண அனுபவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அது மகிழ்வான அனுபவமாக அமைந்து விட்டால் மனதுக்கு எப்போது நினைத்தாலும் நிம்மதியையும் மலர்ச்சியையும் தருவதாக அமைந்து விடும். அதுவே மோசமானதாக, பல வித பிரச்சினைகளும் சமாளிக்க முடியாத இடர்ப்பாடுகளையும் கொண்டதாக அமைந்து விட்டால் எப்போது நினைத்தாலும் சஞ்சலமடைய வைத்து விடும். சில சமயம் அதுவே பல படிப்பினைகளுக்கு காரண‌மானதாக அமைந்து விடும்.



1994ஆம் ஆண்டு நாங்கள் தாய்லாந்து, ஹாங்காங், மலேஷியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து, முதலில் தாய்லாந்து சென்றடைந்தோம். துபாயில் உள்ள நண்பர், தனக்கு மிகவும் நெந்ருங்கிய உறவினரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார். தாய்லாந்து சென்றடைந்த்துமே அவருக்கு ஃபோன் செய்து பேசினோம். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கி அனைத்தும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தோம். பாங்காக்கில் எங்கள் சுற்றுலா முடிந்து மறு நாள் ஹாங்காங் கிளம்ப வேண்டும். முதல் நாளிரவு அந்த நண்பரும் அவருடைய நண்பர்களுமாக எங்களை வந்து பார்த்து, அவர்கள் இருப்பிடத்திற்கு வந்து சாப்பிட வரவேண்டுமென்று அழைத்தார்கள். மறு நாள் காலையே நாங்கள் ஹாங்காங் செல்ல வேண்டுமென்பதால் அந்த அழைப்பை ஏற்க முடியாததற்காக வருந்தினோம்.

மறு நாள் விமான நிலையம் செல்ல பஸ் தயாராக நின்று கொண்டிருந்த வேளையில் எங்கள் வழிகாட்டியுடன் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பவே கையில் உள்ள பொருள்கள், கைப்பை  எல்லாவற்றையும் அவரவர் காலடியில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொன்டோம். அதை முடித்து, கீழே குனிந்த போது தான் தெரிந்தது, என் கைப்பை அங்கே இல்லாதது! ஒரு நிமிடம் உலகமே சுற்றுவது போல இருந்தது. அதில் தான் எங்கள் மூவருடைய பாஸ்போர்ட்டுகள், மேற்கொண்டு செல்வதற்கான பயணச்சீட்டுகள், சில லட்சங்கள் பெருமானமுள்ள டாலர்கள், காமிராக்கள் இருந்தன! விபரம் தெரிந்ததும் ஒரே கூக்குரல்கள், விசாரிப்புகள் என்று அந்த இடமே அதகளமாகியது. நேரம் நேரம் செல்ல செல்ல, எங்களுடன் பயணித்தவர்கள் எங்களை விட்டுக் கிளம்பினார்கள். நாங்கள் அந்த நண்பருக்கு தொலைபேசி மூலம் தகவல்  தெரிவிக்க, அவர் ஓடோடி வந்தார். அவர் பெயர் காமில்.

வந்ததும் எங்களுக்கு முதலில் ஆறுதல் சொன்னார். பாங்காக் நகரம் பாஸ்போ  ர்ட்டுகள் திருட்டுக்குப் பெயர் போனது என்றும், உடனடியாக காவல் நிலையம் சென்று இந்த திருட்டை பதிவு செய்ய வேண்டுமென்றும் கூறினார். அப்போதே வேறொன்றும் கூறினார். 'இப்படி பதிவு செய்வதால் உங்களுக்கு உடனேயே திருட்டுப்போன பாஸ்போர்ட்டுகள் கிடைத்து விடுமென்று நினைத்து விட வேன்டாம். அவர்கள் தரும் ரசீதை வைத்துக்கொன்டு தான் நாம் புதிய தற்காலிக பாஸ்போர்ட்டுகளுக்கு முயற்சி செய்ய வேண்டும்.'!



காவல் நிலையத்தில் வேலைகள் முடியும்போது மதியம் ஆகி விட்டிருந்தது. இன்னும் அதிச்சி நீங்காமல் சோர்வுடன் நின்று கொண்டிருந்த எங்களை அவரின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர்கள் அத்தனை பேரும் எங்களுக்கு ஆறுதல் கூறி அமர வைத்து, பிரமாதமாக தயார் செய்து வைத்திருந்த உணவைப் பரிமாறி அன்புடன் கவனித்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் காமில் ஒரு நடுத்தரமான தமிழ் விடுதியில் எங்களைத் தங்க வைத்தார். இருபதாயிரம் பாட்டுகள்[ தாய்லாந்து நாட்டு நாணயம்] கையில் தந்தார். கூடவே மறு நாள் இந்தியன் எம்பஸி சென்று பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிக்க வந்து அழைத்துச் செல்வதாகக்கூறிச் சென்றார்.

தாய்நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கற்கள் தொலைவில் அனைத்தையும் இழந்து நின்ற அந்த நேரத்தில் அந்த தமிழ் நண்பர் செய்த உதவி மகத்தானது.  முகம் தெரியாத அந்த நண்பர்  பசியறிந்து உணவளித்து, மனச்சோர்விற்கு ஆறுதல் கூறி, கையிலிருந்த பணத்தை செலவுக்கும் கொடுத்து, மேன்மேலும் உதவிகள் செய்து வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாவண்ண‌ம் செய்து விட்டார்!!

அடுத்த நாளிலிருந்து தான் சோதனைகள் ஆரம்பமாயின. பாங்காக்கில் உள்ள இந்தியன் எம்பஸியின் தலைவர் மருந்துக்குக்கூட கனிவு வார்த்தைகளைப் பேச வில்லை.

தினமும் இந்தியன் எம்பஸி சென்று வருவது வாடிக்கையானது. எங்களின் பழைய பாஸ்போர்ட்டுகளின் காப்பிகளை எம்பஸி கேட்டது. அவை துபாயிலிருந்து வர தாமதம் ஆன போது, காமில் ' இனி இழக்க உங்களிடம் ஒன்றும் இல்லை. அறையிலேயே அடைந்து கிடக்க வேண்டாம். விட்டவற்றையெல்லாம் சுற்றிப்பாருங்கள். மனதுக்கு நிச்சயம் மாறுதலாக இருக்கும். மகனின் முகம் மிகவும் மிகவும் வாடிப்போய் விட்டது' என்றார். அவர் சொன்னது போலவே சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு வழியாக பதினைந்து நாட்கள் கழித்து எங்களுக்கு தற்காலிக பாஸ்போர்ட்டுகள் கிடைத்தன!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொலைந்து போன பயணச்சீட்டுகளுக்காக புதிய பயண‌ச்சீட்டுகள் கொடுத்தன. கிரெடிட் கார்டுகள் மூலம் காமில் கொடுத்த பணத்தையெல்லாம் திரும்பத் தந்தோம்.

ஒரு வழியாக விமானம் துபாய் நோக்கி மேலே பறக்க ஆரம்பித்த போது, அனுபவித்த அத்தனை சோகங்களையும் மீறி, அந்த முகமறியாத நண்பரின் அன்பும் அக்கறையுமே மனதில் நிறைந்து நின்றன!!

பயணங்கள் என்றுமே முடிவதில்லை!

இப்படி பலதரப்பட்ட பயண அனுபவங்கள் அனைவருடைய வாழ்விலும் நடந்திருக்கும்! அவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள, பயணங்களைத் தொடர்பதிவாக்கி, இந்த தொடர்பதிவில் கலந்து கொள்ள,

சகோதரி ஆசியா,
சகோதரி இள‌மதி,
சகோதரி வேதா,
சகோதர் தனபாலன்,
சகோதரர் தமிழ் இளங்கோ,
சகோதரர் பாலகணேஷ்

ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்!!

படங்கள்: கூகிளுக்கு நன்றி!!
 

Sunday, 3 March 2013

பயணங்கள்...!!!




இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருச்சிக்கு மலைக்கோட்டை விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. நானும் என் கணவரும் பத்தரைக்கு கிளம்ப வேண்டிய ரயிலில் ஏற ஒன்பதரைக்கே ரயில்வே ஸ்டேஷன் சென்று விட்டோம். பத்தரை ஆனதும் தான் தெரிந்தது வண்டி 2 மணி நேரம் தாமதம் என்று! குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட பயணிகள் அறையில் கட்டணம் செலுத்தி ஒரு மணி நேரத்தைப்போக்கினோம். ரயில் உடனே வருகிறது என்று யாரோ சொன்னதை நம்பி அந்த இருக்கையைக் காலி செய்து வந்து விட்டதில் பின்னர் அதிலும் இடம் கிடைக்க வில்லை. பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்ந்து  பிளாட்பாரத்தில் படுக்க ஆரம்பித்தார்கள். சிலர் அரட்டை! சிலர் லாப்டாப்பில்! ஒரு வழியாக ரயில் 12.30க்கு வந்து பதினைந்து நிமிடங்களில் கிளம்பியது. டிக்கெட் பரிசோதகர் ' 2 மணி நேர தாமதம் என்பதால் ஐந்தரைக்குப்போக வேண்டிய வண்டி 7 மணிக்கு முன்னால் நிச்சயம் போய்ச்சேராது’  என்றார். அப்படி கொஞ்சம் முன்னால் போய்ச்சேர்ந்து விட்டால் அனைவரையும் எழுப்புகிறேன் என்றார்.

காலை ஐந்தரைக்கு யதேச்சையாக எழுந்து உட்கார்ந்தோம். பாத்ரூம் சென்ற என் கணவர் அவசரமாகத் திரும்பி வந்து ' திருச்சி டவுன் கடந்து சென்று விட்டதாம். சில நிமிடங்களில் திருச்சி ஜங்ஷன் வருகிறதாம்' என்றார்கள்! திருச்சிக்கு அடிக்கடி வருகிற பயணிகள் நிறைய பேர் ஷாக் ஆகி விட்டார்கள்! ' அது எப்படிங்க அதற்குள் திருச்சி வரும்?' என்று பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓட, அந்த இடம் ஒரே களேபரமானது! எழுப்பி விடுகிறேன் என்று சொன்ன டிக்கெட் பரிசோதகரை அந்த எல்லையிலேயே காணோம்! தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திணறலுடன் அவசரம் அவசரமாக  பெட்டிகளை மேலிருந்து இறக்க, ' நல்லா தெரியுமாங்க?' என்று ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக்கொள்ள, ' ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் எப்படிங்க இத்தனை வேகமாய் வந்தது? நம்ம ராக்ஃபோர்ட்டா?' என்று சரமாரியாய் கேள்விகள் புறப்பட்டதில் நிறைய முகங்களில் புன்னகை!    

பயணங்கள் வாழ்க்கை முழுவதும் நம்மைப் பல அனுபவங்களுக்கு அழைத்துச் சென்று கொன்டே இருக்கின்றன. சில பயணங்கள் நமக்கு மறக்க முடியாத அனுபவங்களை அள்ளித் தருகின்றன என்றால் சில பயணங்களோ ஆழ்ந்த படிப்பினைகளை வழங்குகின்றன. எதிர்பாராத நட்பு, இறுதி வரை கூடவே பயணம் செய்யக்கூடிய இனிமையான உறவு, மறக்க விரும்பும் பிரிவுகள்- இப்படி இதய உணர்வுகளின் பல வித ராகங்கள் பயணங்களுடன் பின்னிப்பிணைந்து கொண்டே செல்கின்றன.

சின்ன வயது பயண‌ங்கள் இனிமையை மட்டுமே தந்திருக்கின்றன. பஸ்ஸில் ஜன்னலோரம் அமர்ந்து கொள்ள‌ எத்தனை போட்டி அப்போதெல்லாம்! நெடுக கூடவே பயணித்து வரும் மரங்கள், செடி கொடிகள், பசும் வயல்கள்!! புலர்ந்தும் புலராத விடியற்காலைப் பொழுதின் அழகை அப்படியே மனம் உள் வாங்க, பனித்துளிகள் ஈர மணத்தை காற்றோடு சேர்த்து நாசி உள் வாங்க, மலர்களும் ஓடைகளும் சலசல‌த்துச் செல்லும் ஆறுகளும் நெற்பயிர்களும் அள்ளித்தெளிக்கும் அழகுகளை அப்படியே விழிகள் உள் வாங்க‍ அது ஒரு மறக்க முடியாத பிஞ்சுப்பருவம்!

வயது ஏற ஏறத்தான் அனுபவங்களின் ஆழங்கள் இதயம் உணரும் அழகுகளை புறத்தே தள்ளி விடுகின்றன!



பொதுவாய் ரயில் பயணங்களில் தான் வேடிக்கையான அனுபவங்கள் கிடைக்கும்! ஒரு முறை என் அக்காவும் அவர் கணவரும் தங்கள் மகனை விட்டு விட்டு ரயிலில் ஏறி எல்லோருக்கும் டாடா காண்பித்து, கடைசி நிமிடத்தில் தான் மகனைக் கீழேயே விட்டு விட்டு ஏறியது நினைவில் வந்து அவசரம் அவசரமாக பிள்ளையை உள்ளே வாங்கினார்கள்.

இன்னொரு சமயம், என் சினேகிதியின் இளம் வயதில் நடந்த ஒரு அனுபவம் இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும். அவர் கணவர் அவரையும் குழந்தையையும் சென்னைக்கு ரயிலில் ஏற்றி விட்டு அது சென்ற பிறகு தான் அவருக்கு தன் மனைவி கையில் அவர்களின் டிக்கெட்டுகளைக் கொடுக்காதது நினைவுக்கு வந்திருக்கிறது. என் சினேகிதி அவ்வளவாகப் படிக்காதவர் மட்டுமல்லாது பயந்த சுபாவமானவரும் கூட!! தன் கையில் பயணச்சீட்டுக்ளே இல்லையென்றால் பதறி அழுது விடுவார். கணவருக்கு பதட்டம் அதிகமாகி ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஃபோன் செய்து செய்தியைச் சொல்லி ஒரு வழியாக ரயில் சென்னை சென்றடைந்ததும் நண்பர்கள் உதவியுடன் வெளியே வந்தார்.

அப்போதெல்லாம் கிரெடிட் கார்டுகள் எல்லாம் தோன்றாத காலம். எனக்கு அப்போது ஒரு பயணத்தின் போது சோதனை ஏற்பட்டது. பொதுவாய் சென்னை, திருவனந்தபுரம், திருச்சியிலிருந்தெல்லாம் துபாய்க்கு நேரடி விமானச் சேவை இருப்பதால் 4 மணி நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்பதால் கையில் அதிகம் பணம் எடுத்துச் செல்வதில்லை. அதுவும் அந்தக் காலத்தில் அதிக பணம் எடுத்துச் செல்ல அனுமதியுமில்லை. என் கணவரும் 'எந்த செலவுமே இல்லாத போது ஐந்நூறே அதிகம்' என்பது வழக்கம். ஒரு சமயம் நானும் என் மகனும் தனியே திருவனந்தபுரத்திலிருந்து துபாய்க்கு பயணிக்க நேரிட்டது. என் மகனுக்கு அப்போது 10 வயது தான்.  விமானம் வானில் பறந்து கொன்டிருந்த போது தான் சில இயந்திரக்கோளாறுகள் காரணமாக விமானம் மும்பையில் இற‌ங்கி 8 மணி நேரங்கழித்து வேறொரு விமானத்தில் துபாய் செல்லவிருக்கிறோம் என்று தெரிந்தது. விமானம் மும்பையில் இறங்கிய பிறகு துபாய் விமானத்திற்குக் காத்திருந்த போது தான் ஆரம்பித்தது சோதனை. மதிய உணவு என்ற பேரில் சிறிதளவு சாப்பாடே விமான நிர்வாகம் தந்தது. ஒரு காப்பி அப்போதே 30 ரூபாய் என்றிருந்தது. நேரம் செல்ல செல்ல, என் மகனுக்கு, டிபன், பிரட், ஜூஸ் என்று பணம் குறையக் குறைய என் மனது நிம்மதியில்லாமல் அலைபாய ஆரம்பித்தது. கையில் கடைசியாக 25 ரூபாய் தான் மிச்சம். மகனுக்கு வேண்டுமே என்று நான் பட்டினி கிடந்ததில் சோர்வும் பசியுமாக துறுதுறுப்புடன் இருந்த மகனை கவனித்துக்கொண்டிருந்ததில் அதிக தளர்ச்சியும் பதற்ற‌முமாய் நேரம் கழிய, ஒரு வழியாய் விமானம் ஏற அறிவிப்பு வந்த போது அப்படியொரு நிம்மதி! அன்றிலிருந்து எப்போதும் 5000 ரூபாய்க்குக் குறைந்து பணம் எடுத்துச் செல்வதில்லை. கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் இந்தப் பணமும் கூடவே எப்போதும் பயணிக்கும்!!

பயணங்கள் தொடரும்!!

படங்கள்: கூகிளுக்கு நன்றி!